Thursday, May 22, 2008

தமிழன் ஊனமாக்கப்பட்டான்...!!


அதிகார முறைக்கேடுகளுக்கு இச்சம்பவம் ஓர் அத்தாட்சி..! சனநாயக நாட்டில் ஓர் தமிழன் அதிகார வர்கத்தினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு இறுதியில் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளான். சஞ்சீவு குமார் என்ற தமிழனை கடந்த 28 சூலை 2007-இல் வெளிநாட்டிற்கான உளவுத்துறை அதிகாரி என குற்றம் சுமத்தி காவல் துறையினர் அவரை 55 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 நாட்களில் விசாரணை என்றப் பெயரில் சிறைச்சாலை அதிகாரிகள் சஞ்சீவு குமாரை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தியதாக, சஞ்சீவு குமாரின் மனைவி சர்மிளா உதயகுமார் கடந்த 20 மே அன்று டாங்கு வாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டப்பின், 22 செப்டம்பர் 2007-இல் சஞ்சீவு குமாரை மலேசிய மக்கள் அதிகம் வெறுக்கும் இடமான கமுந்திங்கு தடுப்புக் காவல் முகாமிற்குக் கொண்டு சென்றனர். மனித வர்க்கத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் சஞ்சீவு குமார் ஆங்கே சிறைச்சாலை அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக, ஒருக் காவலாளியாகப் பணிப்புரியும் சர்மிளா தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பலமுறை காலணி அணிந்த கால்களால் எலும்புப் பகுதிகளில் உதைக்கப்பட்டும், தலைப்பகுதியில் தாக்கப்பட்டும், மரக்கட்டைகளால் இடதுகாலும், இடது கையும் அடிக்கடி சராமரியாகத் தாக்கப்பட்டும், தண்ணீர் புட்டிகளால் அடிக்கப்பட்டும் இன்று சஞ்சீவு குமார் உருக்குலைந்து போயிருப்பதாக திருமதி சர்மிளா அவர்கள் மனவேதனையோடு கூறியுள்ளார். கடினமான பொருட்காளால் தனது கணவரின் மர்ம உறுப்பு தாக்கப்பட்டதுடன், அவருடையச் சிறுநீரை பருகக் கோரி சிறைச்சாலை அதிகாரிகள் வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11 ஏப்ரல் 2008-இல் சஞ்சீவு குமார் இடது கால், கை வலியால் துடித்ததனால் தைப்பிங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், ஆங்கே முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமல் ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் எனவும் திருமதி சர்மிளா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சஞ்சீவு குமார் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதாகவும், இடது கை,கால் முற்றிலும் நிரந்தரமாகச் செயலிழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளுக்கு நாள் சஞ்சீவு குமார் தனது எடையை இழந்து வருவதாகவும், தினமும் வலுவிழந்து வலியோடு காணப்படுவதாகவும் சர்மிளா தனது புகாரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருமதி சர்மிளாவோடு உடன் புகார் செய்யச் சென்ற "இ.சாவை துடைத்தொழிப்போம்" இயக்கத்தின் தலைவர் திரு. சாயிட்டு இபுராகிமை நிருபர்கள் அணுகி கேட்டதற்கு, திரு.சஞ்சீவு குமாரை வெளிநாட்டிற்காக வேவு பார்த்ததாகச் சந்தேகித்து காவல் துறையினர் கைது செய்ததாகக் குறிப்பிட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கே சட்டத்தில் தமது உரிமைகளைக் காத்துக் கொள்வதற்கு உரிமை இருக்கும் பட்சத்தில், சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களைக் கொடுமைப்படுத்த சட்டத்தில் இடமே இல்லை. ஆனால் நடப்பது என்ன...?

இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு மத்தியில்தான் உங்களுடைய வருங்கால சந்ததியினர் வாழப் போகின்றனரா? இன்று கவலையறியாது உங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு உங்களுடன் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் முகத்தை ஒரு முறைப் பாருங்கள். இக்கொடுமை இன்று தட்டிக் கேட்கப்படாவிட்டால், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள்..! சஞ்சீவு குமாருக்கு நேர்ந்த இந்த கதியானது வருங்காலங்களில் யாருக்கும் நடக்காமல் இருப்பதற்கு நாம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டம் தொடரும்...

Wednesday, May 21, 2008

இன்றைய பதிவிறக்கம்...


"குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்" என்பது மழலைகளுக்குறியச் சிறப்பு. மழலை மொழிக்கு எவ்வளவு இனிமை உளதோ, அதேப்போன்று அமுத மொழியாம் தமிழ் மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உளது. தோண்டத் தோண்ட அமுத சுரபியாய், ஊற்றெடுக்கும் மணற்கேணியாய் விளங்கும் இனிய தமிழில் மழலைகளுக்கு பெயர் சூட்டினால் அது தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய சிறப்பு அல்லவோ.. தமிழர்களாய்ப் பிறந்த நாம் இன்று இனிய தமிழில் பெயர் வைப்பதைத் தவிர்த்து வருவது மிகவும் வருந்தத்தக்கச் செயலாகும்.

இனி வரும் காலங்களில், உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டித்தான் பாருங்களேன். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற மாட்டார்களா என்ன? தமிழில் பெயரிடுவதை ஒரு புரட்சியாகச் செய்வோமே..

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா? கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து தமிழ்ப் பெயர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

"குழந்தைகளின் செல்லப் பெயர்கள்"

Tuesday, May 20, 2008

லீ குவான் யூவின் கீழ் ஒரு தேசம்..


தென்கிழக்காசிய நாடுகளிலேயே மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு எனக் கருதப்படுவது சிங்கப்பூர் எனும் குட்டித் தீவுதான். 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்று, 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது.

இத்தகு வளர்ச்சிகளை அந்நாடு பெற்றிருப்பினும், குடிமக்களின் கருத்து சுதந்திரம் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்வது நம் நாட்டில் வழக்கமாகிவிட்டது என்றாலும், சிங்கப்பூரும் மலேசியாவிற்கு சளைத்தது அல்ல என கடந்த காலங்களில் அது நிரூபித்து வந்துள்ளது. அந்நாட்டிலும் இ.சா சட்டம் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.

லீ குவான் யூவின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கிய நிரூபணங்கள் ஓர் ஆவணப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதோ அதன் படச்சுருள் :-

Monday, May 19, 2008

துன் மகாதீர் 'அம்னோ'விலிருந்து விலகல்...!


(மேலே காணப்படும் படம், துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுவதாக புத்ரா உலக வாணிப மையத்தில் 'அம்னோ' மாநாட்டின்போது அறிவித்தக் காட்சி)

கெடாவில் இன்று நடைப்பெற்ற ஒருக் கருத்தரங்கில் '12-வது பொதுத்தேர்தலுக்கு முன் மலாய்க்காரர்களின் நிலை' எனும் தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்த மலேசியாவின் முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தாம் 'அம்னோ'வை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவித்து வந்திருந்தோரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளார். தம்முடைய விலகல் குறித்து கருத்துரைக்கையில், இந்த விலகலானது நிரந்தரமானது அல்ல எனவும், பிரதமர் அப்துல்லா அகமது படாவி பதவி விலகினால் மட்டுமே தாம் மீண்டும் 'அம்னோ'வில் மீண்டும் இணையப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய தலைமைத்துவத்தின் மீது அதிருப்தி கொண்டிருக்கும் அம்னோ உறுப்பினர்கள் தன்னுடைய அடிச்சுவட்டை பின்பற்றி கட்சி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இவருடைய இந்த அறிவிப்பானது 'அம்னோ'வின் தீவிரத் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12-வது பொதுத் தேர்தலில் பாரிசான் அடைந்த மோசமான நிலைக்கு பிரதமர் அப்துல்லா முழுப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும், இனியும் அப்துல்லாவின் தலைமைத்துவத்தின் மீது தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையெனவும் துன் மகாதீர் மேலும் கூறினார்.

துன் மகாதீர் 1964-ஆம் ஆண்டு முதன் முதலாக 'கோத்தா சிதார்' நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் 1969-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் தனது தொகுதியை இழந்தார். அதே ஆண்டில் அவர் அன்றையப் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரகுமானை தாக்கி பேசியதற்காக 'அம்னோ'விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ல் அப்போதைய பிரதமராக விளங்கிய துன் அப்துல் ரசாக்கின் அழைப்பின் பேரில் மகாதீர் மீண்டும் 'அம்னோ'வில் சேர்த்துக் கொள்ளப்பட்டு குபாங்கு பாசு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளடைவில் அவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அடுத்த நான்காண்டுகளில் கட்சியின் துணணத் தலைவர் பதவியை கைப்பற்றினார். 1981-ஆம் ஆண்டில் துன் மகாதீர் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.

நாளடைவில் 'அம்னோ' உறுப்பினர்களிடையே உட்பூசல் அதிகரித்து அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டபோது, துன் மகாதீர் 'அம்னோ பாரு' எனும் புதுக் கட்சியை பதிவு செய்து, அக்கட்சியின் முதல் உறுப்பினராகச் சேர்ந்தார்.



இதற்கிடையில் கட்சியின் தலைமைத்துவத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில் மகாதீருக்கு எதிராகத் தோல்வி கண்ட தெங்கு ரசாலிக்கு அம்சா 'செமாங்காட்டு 46' எனும் புதுக் கட்சியை தோற்றுவித்தார். 1996-ஆம் ஆண்டு வாக்கில் தெங்கு ரசாலிக்கு மீண்டும் 'அம்னோ'வில் இணைந்தார். இவர் தற்போது கட்சியின் தலைமத்துவத் தேர்தலை வருகின்ற திசம்பர் மாதம் நடைப்பெற வேண்டும் என 'அம்னோ'வை வற்புறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

படச்சுருள்

Sunday, May 18, 2008

உதயாவின் நெகிழவைக்கும் தோற்றம்..

கடந்த 15 மே அன்று தைப்பிங் மருத்துவமனைக்கு திரு.உதயகுமாரை சிகிச்சைக்காக கொண்டு சென்றிருந்தபொழுது எடுக்கப்பட்ட படங்கள்...

சப்பான் காலணியோடு காணப்படுகிறார்.



கிழிந்த கால்சட்டையுடன் காணப்படுகிறார்.





Wednesday, May 14, 2008

பூமாதேவி சீற்றமடைந்தாள்.. உயிர்கள் பல செல்லாக் காசுகளாகின...!


அன்வாங், சீனா - அண்மையில்தான் நர்கீசு சூறாவளிப்புயலால் மியன்மார் புரட்டிப் போடப்பட்ட சம்பவம் நம்மை துயரத்தில் ஆழ்த்தியது. இதற்கு அடுத்தாற்போல் கடந்த திங்கட்கிழமை பூமாதேவியின் சீற்றத்தால் சீனாவில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதைக் கேட்டு மனம் அதிகமாக கனக்கிறது. வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள சீசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தில் தற்போதைய தகவலின்படி 15,000 பேர்களுக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். சீசுவான் மாகாணத்தில் மட்டும் 26,000 பேர்கள் இன்னும் நில மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இன்னும் உயிரோடு சிக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மற்ற நகரங்களின் கணக்கெடுப்பில் இவ்வெண்ணிக்கை இன்னும் உயரும் என சின்சுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மலை அடிவாரங்களில் உள்ள சிறு கிராமங்கள் கடுமையான வானிலையால் வெளியுலக தொடர்பு அற்று இருப்பதால், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகள் இராணுவ விசையுந்தின் உதவியோடு இன்று வானத்தின்வழியாக போடப்பட்டு வருகிறது.



இரண்டு நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்த பலர் இன்று உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். எனவே மற்றவர்களும் உயிரோடு இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மத்திய சீசுவான் மாகணத்தில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 178 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 23 சிறுவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்னும் இதுபோன்ற உயிரிழப்புச் செய்திகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளன. திபேத்து நாட்டிற்கு சீனா செய்துவந்த அடக்குமுறைக்கு பூமாதேவி இப்படி ஒரு கடும் தண்டனையை வழங்கியிருக்கிறாள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் அப்பாவி மக்களின் துயரத்தை பார்த்துச் சகித்துக் கொள்ள முடியவில்லை. உலகில் சமாதானம் அற்றுப்போய் சண்டைகள் உருவெடுக்கும்பொழுது கடவுள் 'இயற்கை பேரிடர்' எனும் அவதாரம் கொண்டு மக்களுக்கு பாடம் கற்பிக்கிறார். அதன்வழி கருணையை பிறர்மீது நாம் பொழிய பாடம் கற்றுத் தருகிறார்.

ஆனால் மனிதர்கள் இதன்வழி பாடம் கற்றுக் கொள்கிறார்களா?

பல கேள்விகள் மனதைக் கேள்வி கேட்டு துளைத்துக் கொண்டிருக்கின்றன...

பல எண்ணங்கள் பூமியை பிளந்த வலியோடு மனதையும் பிளக்கின்றன...

பிளக்கப்பட்ட மனதில் மனிதநேயம் எனும் சொல் மட்டும் பற்றிக் கொண்டுள்ளது..

மனிதநேயம் இல்லையேல்.....???

Monday, May 12, 2008

பினாங்கில் அமைதி ம‌றிய‌ல் (தொட‌ர்ச்சி)

பின்னால் திரும்பிப் பார்த்தேன், ஒரு காவ‌ல்துறை அதிகாரி நின்றுக்கொண்டிருந்தார்.

நான் இங்கு எத‌ற்கு நின்றுக் கொண்டிருப்ப‌தாக‌க் கேட்டார், அத‌ன்பின் என் அடையாள‌ அட்டையை வாங்கிக் கொண்டு என் முழுவிவ‌ர‌ங்க‌ளையும் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். விசார‌ணைக்கு உத‌வ‌ வேண்டும் என‌க் கூறி என்னை அழைத்துச் சென்றார்க‌ள். ந‌ட‌க்கும்பொழுது ஒரு சீன‌க் காவ‌ல்துறை என் முதுகில் கைவைத்து த‌ள்ளிக் கொண்டு வ‌ந்தார். கையை என் முதுகிலிருந்து எடுக்குமாறு சொன்னேன், அத‌ற்கு அவ‌ர் ப‌ரவாயில்லை நீ ந‌ட‌ என‌ப் பிடித்துத் த‌ள்ளினார். என‌க்கு சொந்த‌மாக‌ ந‌ட‌க்க‌த் தெரியும் என‌ அவ‌ர் கையை ஒதுக்கிவிட்டு ந‌ட‌ந்தேன்.

பேர‌ங்காடியிலிருந்து வெளியே வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ என்னை காவ‌ல்துறை வ‌ண்டியில் ஏறுமாறு வ‌ற்புறுத்தினார்க‌ள். நான், எத‌ற்காக‌ என்னை வ‌ண்டியில் ஏற‌ச் சொல்கிறீர்க‌ள், த‌குந்த‌ கார‌ண‌ம் கொடுங்க‌ள் என‌ வின‌விய‌ போது அவ‌ர்க‌ளிட‌மிருந்து ஒரு ப‌திலும் வ‌ர‌வில்லை. வ‌ண்டியில் ஏறு என‌ ஓர் அதிகாரி என்னை பிடித்துத் த‌ள்ள‌ முய‌ன்றார், நான் ந‌கர‌வில்லை. கார‌ண‌ம் சொல்லாமல் நான் வ‌ண்டியில் ஏற‌ப் போவ‌தில்லை என‌க் கூறினேன். இது எங்க‌ள் மேல‌திகாரியின் க‌ட்ட‌ளை என‌ ப‌தில் வ‌ந்த‌து. அந்த‌ மேல‌திகாரியை நான் ச‌ந்திக்க‌ வேண்டும் என்ற‌தும் அங்கிருந்த ஓர் அதிகாரியை அழைத்த‌ன‌ர். இவ‌ரிட‌ம் கேள் என்ற‌ன‌ர். என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்க‌ள், ஏன் வ‌ண்டியில் ஏற‌ச் சொல்கிறீர்க‌ள், த‌குந்த‌ கார‌ண‌ம் கொடுங்க‌ள் என‌ வின‌விய‌த‌ற்கு அதே ப‌தில்தான் வ‌ந்த‌து. இங்கு கேள்விக‌ள் கேட்காதே, ஏதுவாயினும் காவ‌ல் நிலைய‌த்தில் வ‌ந்து பேசிக் கொள் என்று கூறி என்னை வ‌ண்டியினுள் பிடித்துத் த‌ள்ளினார்க‌ள்.

வ‌ண்டியில் என்னுட‌ன் ஆறு காவ‌ல்துறை அதிகாரிக‌ள் அம‌ர்ந்துக் கொண்டார்க‌ள். வ‌ண்டி கிள‌ம்பிய‌தும் சில‌ கைப்பேசி அழைப்புக‌ள் வ‌ந்த‌ன‌.. க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம் உங்க‌ள் பின்னால் நாங்க‌ள் வ‌ருகின்றோம் என‌ சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூறினார்க‌ள். வ‌ண்டி ப‌ய‌னித்த‌து. சில‌ அதிகாரிக‌ள் என்னுட‌ன் பேச்சுக் கொடுத்த‌ன‌ர். நான் ப‌திலுக்கு வ‌சைப்பாடிக் கொண்டு வ‌ந்தேன், இந்திய‌ர்க‌ளைக் க‌ண்டாலே உங்க‌ளுக்கெல்லாம் கைது செய்ய‌ வேண்டும் என‌த் தோன்றுகிற‌தோ, இந்த‌ப் போக்கு என‌க்கு பிடிக்க‌வில்லை என‌ ஏசினேன். ப‌திலுக்கு அவ‌ர்க‌ள் நாங்க‌ள் யாரை வேண்டுமானாலும் பிடிப்போம், நீ அந்த‌ இட‌த்தில் இருந்திருக்க‌க் கூடாது, ஏன் நிழ‌ற்ப‌ட‌ங்க‌ளை எடுத்தாய் என‌ அறிவுசீவிக‌ளாக‌க் கேள்விக‌ளைக் கேட்டுக் கொண்டு வ‌ந்தார்க‌ள்.

வ‌ண்டியின் பின்னால் அம‌ர்ந்திருந்த‌ இந்திய‌ காவ‌ல்துறை அதிகாரியொருவ‌ர், "என‌க்கும் தெரியும்யா, இவ‌னுங்க‌ இப்டிதான், ந‌ம்ம‌ என்ன‌ ப‌ண்ற‌து? ஒன்னும் க‌வ‌ல் ப‌டாதெ ஒன்னும் இல்ல‌, சின்ன‌ மேட்ட‌ர்தான், கேள்வி கேட்டுட்டு விட்டுருவானுங்க‌.. கேட்டா ஃபோட்டோ எடுக்க‌ வ‌ந்தேனு ம‌ட்டும் சொல்லு, ஓகேவா..

அத‌ன் பின் ஒரு ம‌லாய் காவ‌ல்துறை அதிகாரி இடைம‌றித்து நான் கூறிய‌தை ஆட்சேபித்தார், தாங்க‌ள் இந்திய‌ர்க‌ளை ம‌ட்டும் குறிவைத்து பிடிக்க‌ வேண்டும் என‌ செய‌ல்ப‌ட‌ வில்லை என்று என்னிட‌ம் கூற‌ நான்,

"ஆனால் இந்த‌ நாட்டில் இந்திய‌ர்க‌ளைத்தானே ப‌லிக்க‌டாவாக்கிறீர்க‌ள்" என‌ ப‌திலுரைத்தேன்.


ஓர் ஆசிரிய‌ராக‌ இருந்துக்கொண்டு இப்ப‌டி நீ பேச‌லாமா என்று அவ‌ர் என்னை திரும்ப‌ கேட்டார். ப‌திலுக்கு நான்,

"ஓர் ஆசிரிய‌ர் உண்மையை எடுத்துரைக்க‌ வேண்டிய‌தும் க‌ட‌மைதான்.." என்றவுட‌ன் அவ‌ர் ஒன்றும் பேச‌வில்லை. சில‌ நிமிட‌ங்க‌ள் க‌ழித்து தேவை இல்லாத‌ வெட்டிக் க‌தைக‌ளைப் பேசிக் கெண்டே வ‌ந்த‌ன‌ர். வ‌ண்டி பினாங்கு காவ‌ல்துறை த‌லைமைய‌க‌த்தை அடைந்த‌து.


என்னை இர‌ண்டாவ‌து மாடியில் அமைந்துள்ள‌ குற்ற‌ப் புல‌னாய்வுப் பிரிவின் அறைக்கு அழைத்துச் சென்ற‌ன‌ர். அந்த அறை நீள‌மாக‌ இருந்த‌து. ஆங்கே இன்னும் சில‌ அதிகாரிக‌ள் அம‌ர்ந்திருந்த‌ன‌ர். சில‌ர் உண‌வ‌ருந்திக் கொண்டும் சில‌ர் நாளித‌ழ் ப‌டித்துக் கொண்டும், ம‌ற்றும் சில‌ அதிகாரிக‌ள் க‌தைப் பேசிக் கொண்டும் இருந்த‌தைப் பார்க்க‌ முடிந்த‌து. த‌ரையில் சுமார் 20 சீன‌ர்க‌ள் ஏதோ ஒரு குற்ற‌த்திற்காக‌ப் பிடிக்க‌ப்ப‌ட்டு த‌ரையில் அம‌ர்த்த‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர். முத‌லில் நாற்காலியில் என்னை அம‌ர‌ச் சொன்னார்க‌ள். சிறிது நேர‌ம் க‌ழித்து ஒரு ம‌லாய் காவ‌ல்துறை அதிகாரி வேண்டுமென்றே என்னை எழ‌ச் சொல்லி, த‌ரையில் அம‌ர்ந்திருந்த‌ சீன‌ர்க‌ளோடு அம‌ர‌ச் சொன்னார். நான் அந்த‌ சீன‌ர்க‌ள் அம‌ர்ந்திருந்த‌ இட‌த்திற்குச் சென்று நின்றுக் கொண்டேன். அப்பொழுது பி.கே ஓங் என்ன‌ருகே வ‌ந்து,

"என‌க்கு தாக‌மாக‌ இருக்கிற‌து, த‌ண்ணீர் கிடைக்குமா?" என‌ வின‌வினார்.

"நான் காவ‌ல்துறை அதிகாரி இல்லை ஓங், என்னையும் இப்பொழுதுதான் பிடித்து வ‌ந்தார்க‌ள்!" என‌க் கூறினேன்.

"ஓ, நீங்க‌ள்தானா..ச‌ரி ச‌ரி.. என்னை சில‌ர் கைப்பேசியின் வ‌ழி அழைத்து நீங்க‌ள் பிடிப்ப‌ட்ட‌தாக‌ச் சொன்னார்க‌ள்.." என‌க் ஓங் கூறினார்.

இதுவே எங்க‌ளுடைய‌ முத‌ல் ச‌ந்திப்பு ஆத‌லின் அவ‌ருக்கு என்னை அடையாள‌ம் க‌ண்டு கொள்ள‌ இய‌ல‌வில்லை.

இருவ‌ரும் நின்றுக் கொண்டிருக்கையில், ஓங் என்னை அழைத்து அதிகாரிக‌ளின் இருக்கையில் அம‌ர்ந்துக் கொள்வோம் என‌ சைகை காட்டிய‌தும் இருவ‌ரும் இருக்கையில் அம‌ர்ந்துக் கொண்டோம். அத‌ன்பின் நீண்ட‌ நேர‌ம் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த‌ ஒர் ம‌லாய்கார‌ காவ‌ல்துறை அதிகாரியொருவ‌ர், "நாங்க‌ள் எல்லாரும் அம்னோ புத்திர‌ர்க‌ள், நாங்க‌ள் அம்னோவின் ஊழிய‌ர்க‌ள், எங்க‌ளை ஒன்றும் செய்ய‌ முடியாது என‌ திமிரோடு பேசிக் கொண்டிருந்தார். அத‌ன்பின் ம‌ற்றொரு அதிகாரி எங்க‌ளை இன்னொரு அறைக்குச் சென்று அம‌ருமாறு அறையை நோக்கி கைக்காட்டினார்.

அறையில் அம‌ர்ந்திருந்த‌ சம‌ய‌ம் திரு.ஓங், அவ‌ருக்கு வ‌ந்த‌ குறுஞ்செய்திக‌ளையும் அவ‌ர் பிடித்த‌ ப‌ட‌ங்க‌ளையும் என‌க்குக் காட்டிக் கொண்டிருந்தார். நானும் அவ‌ரிட‌ம் நிக‌ழ்வு தொட‌ர்பான‌ நிழ‌ற்ப‌ட‌ங்க‌ளை காட்டிக் கொண்டிருந்தேன். அந்த‌ ச‌ம‌ய‌ம் ஓர் அதிகாரி இரு க‌றுப்பு நிற‌ பிளாசுடிக்கு பை கொண்டு வ‌ந்து எங்க‌ள் இருவ‌ரின் கைப்பேசிக‌ளையும் நிழ‌ற்ப‌ட‌க்க‌ருவிக‌ளையும் ப‌றிமுத‌ல் செய்தார். வெளியுல‌கோடு தொட‌ர்பு அற்ற‌ நிலையில் அந்த‌ அறையில் ம‌திய‌ம் 1 ம‌ணியிலிருந்து 3 ம‌ணிவ‌ரை அம‌ர்ந்திருந்தோம், இத‌ற்கிடையில் ஒரு ம‌லாய் காவ‌ல்துறை அதிகாரி எங்க‌ளிட‌ம் க‌தைப் பேசுவ‌த‌ற்கு வ‌ந்து அம‌ர்ந்துக் கொண்டார். திரு.ஓங்கை ப‌ற்றி அக்காவ‌ல்துறை அதிகாரி ம‌ட்ட‌ந்த‌ட்டி பேசத் தொட‌ங்கினார். திரு.ஓங் அத்த‌னையையும் பொறுமையாக‌ எடுத்துக் கொண்டு அதிகாரியிட‌ம் சிரித்த‌ முக‌த்துட‌ன் ப‌தில‌டி கொடுத்துக் கொண்டிருந்தார். இடையிடையே என்னையும் கிண்ட‌ல‌டிக்கும் பாணியில் அந்த‌ அதிகாரி கேள்விக‌ளை கேட்டுக் கொண்டிருந்தார். இடையே எங்க‌ளுக்கு உண‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

இவ‌ர்க‌ள் வேலை நேர‌த்தில் இப்ப‌டி வெட்டிக் க‌தை பேசுவ‌த‌ற்கு, வாங்கும் ச‌ம்ப‌ள‌த்திற்கு ஏற்ப‌ வேறு ஏதாவ‌து வேலை செய்ய‌லாமே என‌ நினைத்துக் கொண்டேன். கையில் வெண்சுருட்டுப் பெட்டியோடு வ‌ந்த‌ அந்த‌ அதிகாரி 40 நிமிட‌ங்க‌ளுக்கு மேல் புகைத்துக் கொண்டே உரையாட‌ அந்த‌ அறையே புகை ம‌ண்ட‌ல‌மான‌து. ம‌ன‌ எரிச்ச‌லையும் க‌ண் எரிச்ச‌லையும் ஒருங்கே கொடுத்துவிட்டு அந்த‌ அதிகாரி சென்றுவிட்டார்.

இத‌ற்கிடையில் புக்கிட்டு பெண்டேரா நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் மாண்புமிகு லியூ சின் தோங் த‌லைமைய‌க‌த்திற்கு வ‌ந்து எங்களுக்கு ச‌ட்ட‌ ரீதியாக‌ உத‌வ‌ த‌யாராக‌ இருப்ப‌தாக‌க் கூறி ஆறுத‌ல் கூறினார்.

இப்ப‌டியாக‌, மாலை ஐந்து ம‌ணிவ‌ரையில் எங்க‌ளை அறையில் வைத்த‌ பின்ன‌ரே அதிகாரிக‌ள் ஒருவ‌ர்பின் ஒருவ‌ராக‌ விசார‌ணைக்கு அழைத்த‌ன‌ர். விசார‌ணை முடிவ‌த‌ற்கு ஒன்ற‌ரை ம‌ணி நேர‌ம் ஆகிவிட்ட‌து. விசார‌ணை முடிந்து வெளியே வ‌ந்த‌தும் இன்னும் ஐவ‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என‌ச் செய்தி அறிய‌ வ‌ந்த‌து. காவ‌ல் நிலைய‌த்தில் புகார் கொடுக்க‌ வ‌ந்த‌பொழுது ஐவ‌ரும் கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். எழுவ‌ரையும் விசார‌ணை செய்து முடிக்க‌ இர‌வு ம‌ணி 7.30 ஆகிவிட்ட‌து. அத‌ன்பின் நாங்க‌ள் அனைவ‌ரும் பிணையில் விடுவிக்க‌ப்ப‌டுவோம் என‌ அதிகாரிக‌ள் தெரிவித்த‌ன‌ர்.

இறுதியாக‌ எங்க‌ளை பிர‌திநிதித்து சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் எங்க‌ளுக்காக‌ பிணை கையெழுத்து இட்டு எங்க‌ளை பிணையுறுதியில் விடுவிக்க‌ப்ப‌டுவ‌தற்கு உத‌வின‌ர். இர‌வு 8 ம‌ணிய‌ள‌வில் எங்க‌ளை விடுவித்த‌ன‌ர். இருப்பினும் ஐவ‌ரை ம‌ட்டுமே பிணையில் விடுவித்த‌ன‌ர், சுவாராம் உறுப்பின‌ர்க‌ள் இருவ‌ரை அன்றிர‌வு காவ‌ல் நிலைய‌ த‌டுப்பு அறையில் வைத்திருந்து ம‌றுநாள் பிணையில் வெளிக் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

வ‌ருகின்ற‌ 26ஆம் திக‌திய‌ன்று மீண்டும் காவ‌ல் நிலைய‌த்திற்குச் சென்று அதிகாரிக‌ளைச் ச‌ந்திக்க‌க் கூறி க‌டிதம் கொடுத்துள்ள‌ன‌ர். அன்றுதான் தெரியும் எங்க‌ள் மீது வ‌ழ‌க்கு போடப்ப‌ட்டு நீதிம‌ன்ற‌த்திற்கு கொண்டுச் செல்ல‌ப்ப‌டுவோமா என்று..

இவ்வேளையில் என‌க்கு நேர‌டியாக‌வும் ம‌றைமுக‌மாக‌வும் ஆத‌ர‌வு அளித்த‌ ப‌ல‌ ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கு என‌து ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், முக்கிய‌மாக‌ என‌க்காக‌ காவ‌ல் நிலைய‌த்திற்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள், பிணை கையெழுத்திட்ட‌வ‌ர்க‌ள், கைப்பேசியின்வ‌ழி தொட‌ர்பு கொண்டு உற்சாக‌ம் ஊட்டிய‌ வ‌லைப்ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ற்றும் வெளியுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ருக்கு என‌து ந‌ன்றிக‌ள் உரித்தாக‌ட்டும். தொட‌ர்ந்து உண்மைக்காக‌ போராடுவோம்...

விரைவில் அண்ண‌ன் உத‌யா அவ‌ர்க‌ளுக்கு தேசிய‌ இருத‌ய‌ சிகிச்சைக் க‌ழ‌க‌த்தில் சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ இறைவ‌னை பிரார்த்தித்துக் கொள்வோம்..

*நிக‌ழ்வு தொட‌ர்பான‌ ஒளிப்ப‌ட‌க்காட்சிக‌ள் விரைவில் இட‌ம்பெறும்..

போராட்ட‌ம் தொட‌ரும்...