"வீடு" - குறும்படம்

>> Monday, August 24, 2009

சுதந்திர மாதத்தை முன்னிட்டு "15 மலேசியா" எனப்படும் 15 குறும்படங்கள் வெளியீட்டின் வரிசையில், "வீடு" எனும் இக்குறும்படம் தற்கால இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளில் ஒன்றினை அழகாக நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இக்குறும்படத்தைப் பார்த்ததும் உங்களது மனக்கண்களில் 'சட்டென' நிழலாடும் அந்த விடயம் என்னவென்று யூகிக்க வேண்டிய அவசியமில்லை!

Read more...

புவா பாலா கிராம வழக்கு - நீதிமன்றத்திலிருந்து நேரடியாக..

>> Friday, August 21, 2009

Read more...

புவா பாலாவில் மனிதச் சங்கிலி!

>> Friday, August 14, 2009

இன்று வருவானோ, நாளை வருவானோ என்று அனுதினமும் மன உளைச்சலுடன் வாழ்க்கையைக் ஓட்டிக் கொண்டிருக்கும் புவா பாலா கிராம மக்களுக்கு நேற்றுமொரு பலப்பரிட்சை ஏற்பட்டது. புலி வருது, புலி வருது என்கிற கதையாக அக்கிராம மக்களை அனுதினமும் மிரட்டிக் கொண்டிருந்த நுஸ்மெட்ரோ நில மேம்பாட்டாளர்கள், நேற்று காலை 7 மணியளவில் புல்டோசர்களுடன் கிராமத்தினுள் நுழைய, மக்களனைவரும் கொதித்தெழுந்துவிட்டனர். இச்செய்தி காட்டுத் தீப்போல் பரவ, சற்று நேரத்திற்கெல்லாம் பொதுமக்கள் ஒன்றுதிரளத் தொடங்கிவிட்டனர்.

புல்டோசர்களை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் மனித சங்கிலி அமைத்து நில மேம்பாட்டாளர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆண்கள் வேளைக்குச் செல்லவில்லை! குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை! வீட்டில் உலை கொதிக்கவில்லை. காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மக்களுக்கெதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் நில மேம்பாட்டாளர்கள் பின் வாங்கினார். ஆனால், இரவு நேரங்களில் அங்குள்ள கிராம மக்கள் நிம்மதியான உறக்கத்தினைக் காண இயலவில்லை. கனவுகளிலும் புல்டோசர்களின் சத்தம்!

இன்னும் எத்தனை முறை இம்மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வேடிக்கை பார்க்கப்போகிறார்களோ??



போராட்டம் தொடரும்...

Read more...

புவா பாலா மக்களே! கொடுக்கறத வாங்கிட்டு போங்க..!

>> Thursday, August 13, 2009

இன்று பாமரர் முதல் படித்தவர்வரை புவா பாலா கிராம நில விவகாரம் குறித்து பெரும்பான்மையினர் கேட்கும் கேள்வி "கொடுக்கறத வாயமூடிக்கிட்டு வாங்கிட்டு போக வேண்டியதானே?"

சில நாட்களுக்குமுன், நான் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் மின் தூக்கியில் நுழைந்த சமயம் என் அண்டை வீட்டுக்காரைப் பார்க்க நேர்ந்தது.

நான் கைகளில் தமிழ் நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர் என்னிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்.

"என்னையா இது அநியாயமா இருக்கு!"

அவர் எதைப்பற்றி கூறுகிறார் என்பதனை யூகித்தவனாய், ஏதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு நாளிதழைப் புரட்டத் தொடங்கினேன்.

"சும்மா கொடுக்கறத வாங்கிட்டு போக வேண்டியதானே இவனுங்க..."

அவரை நிமிர்ந்துப் பார்த்தேன்.

சில நிமிடங்களில் மின் தூக்கி கீழ் மாடியை வந்தடைந்தது.

மின் தூக்கியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க என் அண்டை வீட்டுக்காரர் வெளியேறியக் காட்சியைக் கண்டு புன்னகைத்தவாரே மீண்டும் நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தேன்.

அவர் ஒருவேளை மனதில் நினைத்திருக்கக் கூடும்.

"இந்த சனியன் கிட்ட இப்படியொரு கேள்விய கேட்டு மாட்டிகிட்டோமே...!"

அவரிடம் அப்படி என்ன பேசினேன் என்று நான் கூற ஆரம்பித்தால் நிறைய தணிக்கைகள் செய்ய வேண்டும் என்பதனால், கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பேட்டியைக் கேட்டு புரியாத சில விடயங்களை அறிந்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடிய விரைவில் ஆங்கில மொழிப் பேட்டியும் வெளியிடப்படும்..

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. ( குறள் எண் : 423)

போராட்டம் தொடரும்...

Read more...

புவா பாலா நிலமோசடி - சில கேள்விகள்

>> Sunday, August 9, 2009


மாநில முதல்வர் லிம் குவான் எங் அவர்களே,
எங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.

பினாங்கு மாநில அதிகாரிகள் கூட்டுறவுக் கழகத்திற்கு உங்கள் அரசு செய்த எங்கள் கிராம நில விற்பனை.

தேர்தல் தேதி : 8 மார்ச் 2008

கிராம செயற்குழு உங்களைச் சந்தித்த தேதி : 13 மார்ச் 2008
இந்தத் தேதியில் இன்னும் நில விற்பனை பூர்த்தி அடையாமல் இருந்தால், இந்த நில விற்பனையைத் தடுத்து நிறுத்துவதாக கிரமச் செயற்குழுவிடம் உறுதிக் கூறியுள்ளீர்கள்.

கேள்வி 1

ஏன் 14 மார்ச் 2008-ல், உங்கள் அரசாங்கம் ரி.ம 3.2 மில்லியனை அந்த கூட்டுறவுக் கழகத்திடமிருந்து பெற்றுக் கொண்டது?

கேள்வி 2

ஏன் 27 மார்ச் 2008-ல், உங்கள் அரசு அந்த கூட்டுறவின் பெயரில் புவா பாலா கிராம நிலத்தை பதிவு செய்தது?


கேள்வி 3

ஏன் 14 ஏப்ரல் 2008-ல், நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் எனும் மேம்பாட்டாளர் இந்த நிலத்தை கேவியட் செய்துக் கொள்ள உங்கள அரசு உடந்தையாக இருந்தது?

தேசிய நிலச் சட்டப்பிரிவு 320

உங்கள அரசு, புவா பாலா கிராம நில பரிவர்த்தனையில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளது. கிராம நிர்வாகத்தினரும் இந்தப் புகாரை இரண்டு முறை செய்துள்ளனர்.

கேள்வி 4

உங்கள் அரசு புவா பாலா நில விற்பனையில் நிறைய தவறுகளைக் கண்டுபிடித்துள்ளதாகப் புகார் செய்துள்ளது. அப்படியானால் ஏன் இந்த நிலப் பரிவர்த்தனையை முழுமைப் படுத்தி, நிலத்தை விற்று முடித்தீர்கள்?

தேசிய நிலச் சட்டப்பிரிவு 320-ன் படி, ஒரு நிலப் பரிவர்த்தனையில் தில்லுமுல்லு (FRAUD) கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலப் பட்டா மூலம் செய்யப்பட்ட நில உரிமை மாற்றம் தடுத்து நிறுத்த முடியும்.

கேள்வி 5

ஏன் உங்கள் அரசு, ஊழல் தடுப்பு ஆணையம், (MACC), தன் விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்கக் கூடாது? MACC பின்னர் தில்லு முல்லு நடந்திருப்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் அந்த கூட்டுறவுக்குக் கொடுத்த நிலத்தை மீட்டுக் கொள்ள வேண்டி வரும். இது கிராம மக்களுக்கு நன்மையாக முடியும். பின்னர் உங்கள் அரசு தலைவர்களான இராமசாமி, கர்பால் சிங், மற்றும் சனீசுவர நேதாஜி இராயர் ஆகியோர் கொடுத்த வாக்கிற்கிணங்க, இக்கிராமத்தை இந்திய பாரம்பரிய கிராமமாக அறிவிக்கலாம். ஏன், MACC விசாரணை முடிவிற்குக் காத்திருக்கக் கூடாது?


நிலப் பட்டாவில் கட்டுப்பாடுகள்

கேள்வி 6

நிலப்பட்டாவில் சில கட்டுப்பாடு சரத்துகள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?
இந்த நிலம் எந்த வியாபார நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது. அந்தக் கோப்பராசி எந்த தரப்பினரோடும் கூட்டு முயற்சியில் ( JOINT VENTURE ) நிலத்தை மேம்படுத்த அனுமதியில்லை.

கேள்வி 7

உங்கள் அரசு எப்படி தொடர்ந்து இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை அனுமதித்து வருகின்றது?

கேள்வி 8

உங்களுக்குப் பின் வரும் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு தெரியுமா?

"கோ ஹீ சிங் Vs வில் ராஜா மற்றும் அனூர், உயர் நீதிமன்ற நீதிபதி சங்கர் மகாதேவ் (1993) வழங்கிய தீர்ப்பு"

மேற்கண்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலத்தை எவரும் கேவியட் செய்து கொள்ள முடியாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

கேள்வி 9

உங்கள் அரசாங்கம் எப்படி இந்த சட்டத்திற்குப் புறம்பான நில கேவிட்டை அனுமதித்தது? நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் இந்த புவா பாலா நில விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளது, சட்டத்திற்குப் புறம்பானது என்பதை தாங்கள் அறியவில்லையா?

கேள்வி 10

இன்று வரை, அந்த நிலப்பட்டாவில் உள்ள கட்டுப்பாடுகள் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா?

சிறி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் 3-8-2009 தேதியன்று, நீதிமன்றத்தில் தேசிய நிலச் சட்டம் பிரிவு 116(1)(d)-யைப் பயன்படுத்த விண்ணப்பம் செய்தாராம். அந்தச் சட்டப்பிரிவின்படி அரசு அனுமதியில்லாமல், மேம்பாட்டாளர் கிராமத்தை வந்து உடைத்து நொறுக்க முடியாது. இராயர் செய்த விண்ணப்பம் என்ன ஆனது? ஏன் லிம் அவர்களே நீங்கள் இந்த சட்டப்பிரிவைப் பற்றி அறவே பேச மாட்டேன் என்கிறீர்கள்?

கேள்வி 11

ஒருவர் தமக்கென்று, தம் சட்ட ஆலோசனைக்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்வது பழக்கம்தானே?

நீங்கள் கிராம மக்களை ஒரு வழக்கறிஞர் பிரதிநிதித்து உங்களை சந்திப்பதை கடைசிவரை மறுத்து வந்துள்ளீர்கள்.

இது சரியா?

ஆ. திருவேங்கடம்
புவா பாலா கிராம மக்களுக்காக ..


தயவு செய்து இதனை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லவும்.

Read more...

பிரதமரின் அகப் பக்கத்தில் தமிழுக்கு இடம் வேண்டும்! - வாசகர் கடிதம்

>> Friday, August 7, 2009


வணக்கம் ,

உதட்டளவில் தேன் , உள்ளம் முழுதும் ஆலகால விசம்.
இதுதான் மலேசிய அரசு இந்நாட்டு இந்தியர்களின் பால் நடந்து கொள்ளும் விதம்!

ஓரே மலேசிய இனம் என்று அறிவித்த நாவில் எச்சில் காயும் முன் நம் பிரதமர் அறிமுகப்படுத்திய http://www.1malaysia.com.my எனும் அகப் பக்கத்தில் இந்நாட்டு மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய இனமாகிய இந்தியர்கள் பேசும் தமிழ் மொழிக்கு இடமில்லை !!!

பல்லினங்கள் வாழும் இத்திருநாட்டில் , அந்தந்த இனங்களின் மொழி , கலை , கலச்சாரம் , பண்பாடு , என அனைத்து அம்சங்களையும் மதித்து அங்கீகரிப்பதன் மூலமே ஒன்றினைந்த ஒரே மலேசிய இனத்த்தை உருவாக்க முடியும் என்பதை இந்த அரசாங்கம் பலமுறை மிக மிக சவுரியமாக மறப்பதை போல் நடித்து உரிமைகளை மறுப்பதை மக்கள் இனியும் நம்பத் தயாரில்லை !!

மொழி ஒர் இனத்தின் ஆனிவேர் , முதுகெலும்பு , அடையாளம் , எதிர் கால சந்ததியினரின் தொப்புள் கொடி என்பதை நன்கு அறிந்திருந்தும் இந்த அரசாங்கம் ஏன் இந்நாட்டு குடிமக்களாகிய இந்திய வம்சாவளியினரை கங்கனம் கட்டி வஞ்சிக்கிறது???

தமிழை ம்றுத்ததின் மூலம் இந்த அரசு நமக்கு உணர்த்துவதுதான் என்ன ? தேசிய நீரோட்டத்திற்க்கு இந்தியர்கள் தேவை இல்லையா ? அல்லது ஒரே மலேசிய இனம் இந்தியர்களின் புதைகுழியின் மீது புலரப்போகிறதா ???

ஆங்கிலம் , மலாய் , சீனம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட பிரதமரின் அகப் பக்கத்தில் தமிழை மட்டும் குழித் தோண்டி புதைத்த காரணத்தை மலேசிய பிரதமர் இந்நாட்டு இந்தியர்களுக்கு விளக்கியே ஆக வேண்டும் !!

தெருவுக்கு ஓர் அரசு சாரா இந்தியர் இயக்கமும் , விகிதா சாரத்தை விஞ்சும் அரசியல் கட்சிகளும் இனம் புதைக்கப் படுவதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலமும் இந்நாட்டில் அரங்கேற்றம் கண்டு கொண்டிருப்பது இந்த இனதிற்க்கு என்றும் நீங்கா சாபக்கேடோ !!!!


நன்றி ,

சம்புலிங்கம்
கோலாலம்பூர்

Read more...

புவா பாலா வெள்ளிக்கிழமை உடைக்கப்படுமாம்!

>> Tuesday, August 4, 2009


சற்று முன்பு பினாங்கு மாநில அரசுடனான புவா பாலா மக்களின் சந்திப்புக் கூட்டத்தில், லிம் குவான் எங் மீண்டும் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்.

சந்திப்புக் கூட்டத்தில் கிராம மக்களிடம் அவர் கூறியதாவது ;

புவா பாலா கிராமத்தில் 1200 சதுர அடியில் இரண்டு மாடி வீடு. மேல் மாடி 600 சதுர அடி, கீழ் மாடி 600 சதுர அடி. வீட்டிற்கு வெளியில் கூடுதல் 200 சதுர அடி நிலம்.
அதாவது 6.5 ஏக்கர் புவா பாலா கிராம நிலத்தில் 0.7 ஏக்கர் நிலம் 24 குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இவ்வீடுகளைக் கட்டி முடிக்கும்வரையில் அக்கிராம மக்கள் தங்குவதற்கு தற்காலிக இடமோ, அல்லது வாடகைப் பணமோ ஏதும் கொடுக்கப்படாது. ஒரே வீட்டில் வசிக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கு வீடோ அல்லது பணமோ கொடுக்கப்படாது.


நுஸ்மெட்ரோ அளிக்கும் இம்முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும், இல்லையெனில் நுஸ்மெட்ரோ வருகின்ற வெள்ளிக்கிழமை கிராமத்தை தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள் என லிம் குவான் எங் கிராம மக்களை வற்புறுத்தியிருக்கிறார். இதற்கிடையில் கூட்டரசு நீதிமன்றத்தில் இந்நில விவகாரம் குறித்து புவா பாலா வழக்கறிஞர் திரு.டர்சான் சிங் வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவ்வழக்கு எதிர்வரும் 18-ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும். எனவே, கிராமத்து வீடுகளை நில மேம்பாட்டாளர்கள் உடைக்கக்கூடாது என்பது சட்டம். காரணம், இவையனைத்தும் ஆதாரங்கள் என்கிற அடிப்படையில் ஒரு செங்கல்லைக் கூட அசைக்கக்கூடாது. அப்படி அசைத்தால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாகக் கருதப்படும். நுஸ்மெட்ரோ வருகின்ற வெள்ளிக்கிழமை வீடுகளைத் தரைமட்டமாக்கப்போவதாகக் கூறியுள்ளார்கள்.

இதனைச் சொல்லியே மக்களை பயமுறுத்தி, கொடுக்கும் ரொட்டித் துண்டுகளை வாங்கிக் கொண்டுச் செல்லுங்கள் என்கிறது பினாங்கு மாநில அரசு.

அவர்கள் பரிந்துரைக்கும் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவிப்பவர்கள் ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திடுமாறு லிம் குவான் எங் மக்களை கேட்டுக் கொண்டார். ஆனால், மக்கள் தங்களுடைய முடிவை ஏதும் கூறாமல் வந்துவிட்டனர். இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கிராம மக்களின் வழக்கறிஞருக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தமக்கென்று ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையை சட்டம் நமக்கு வழங்குகிறது. ஆனால், 200 ஆண்டுகாலமாக இந்நிலத்தில் வாழ்ந்துவரும் இந்த மக்களுக்கு ஒரு வழக்கறிஞரை தங்களுடைய பிரதிநிதியாக வைத்துக் கொள்ளக்கூட அனுமதியளிக்கப்படவில்லை! இவர்கள் செய்த குற்றம் என்ன? 200 ஆண்டுகாலமாய் தன்னுடைய சொந்த உழைப்பைக் கொட்டி இந்நிலத்தில் வாழ்ந்தது குற்றமா?

அம்னோ அரசாங்கம்தான் நம்மை ஏமாற்றிவிட்டது, மக்கள் கூட்டணியாவது எங்களைக் காப்பாற்றும் என நம்பியிருந்த இந்த அப்பாவி மக்களை அரசியல் இலாபத்திற்காக பகடைக் காய்களாகப் பலரும் பயன்படுத்திவிட்டனர்.

இம்மலேசிய திருநாட்டில், அதிகாரத்துவமும் முதலாளித்துவமும் எப்படியெல்லாம் ஏழை மக்களை நசுக்கிப் பிழிகிறது என்பதனைக் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். அதற்கு ஒரு நல்ல படிப்பினையான உதாரணம் கம்போங் புவா பாலா!

இன்னும் 48 மணி நேரங்களே எஞ்சியுள்ளன. நாம் என்ன செய்யப் போகிறோம்? வரலாற்றைப் புரட்டிப் போட வேண்டுமா? மாற்றைத்தை விரும்பினால் மட்டும் போதாது, அம்மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்! இந்நாட்டில் தமிழனுக்கென்று 200 ஆண்டுகால தொன்மையான கிராமம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்கள் வருகையை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நிச்சயப்படுத்துங்கள்! இன்று 1000 பேர் திரண்டதைக் கண்டு அஞ்சியவர்கள் வெள்ளிக்கிழமையன்று திரளும் மக்கள் வெள்ளத்தைக் கண்டு தங்களுடைய முடிவையே மாற்றிக் கொள்ள வேண்டும்!

உடனடியாக லிம் குவான் எங்கை தேசிய நில சட்டவிதி பிரிவு 76- (National Land Code Section 76) பயன்படுத்தி புவா பாலா நிலத்தை கையகப்படுத்தி கிராம மக்களிடமே ஒப்படைக்குமாறு நெருக்குதல் கொடுங்கள். நாட்டில் பல இயக்கங்கள், சங்கங்கள் இருக்கின்றன. அனைத்து இயக்கங்களும் அவர்களுக்கே உரித்த பாணியில் நூதன போராட்டத்தை முன்னின்று மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்...

Read more...

புவா பாலாவில் தற்போது...

>> Sunday, August 2, 2009

காலை 10:00

சிலாங்கூர், பேராக் மாநில இண்ட்ராஃபினர் மற்றும் வருகையாளர்கள் ஆரஞ்சு நிற உடைகளில் அமர்ந்திருக்கின்றனர். கிராமவாசிகள் நிகழ்வின் ஏற்பாடுகளை மும்முரமாக செய்துக்கொண்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிக்க குழுமியிருக்கின்றனர்.
காவல்த்துறையினரும் ஆங்காங்கே சாதாரண உடைகளில் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.





காலை 11:00

சிறு மழை தூறலுக்குப் பின் வேலைகள் மீண்டும் தொடர்கின்றன..





மேலும் செய்திகள் பின்தொடரும்..

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP