அனுவார் இபுராகிம் பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

>> Thursday, July 31, 2008


அனுவார் இபுராகிமின் அரசியல் பிரவேசம் எப்பொழுது.. எப்பொழுது என பலரின் கேள்விகளுக்கு இன்று விடை கொடுக்கப்பட்டது.. இன்று மதியம் நடத்தப்பட்ட நிருபர் சந்திப்பு ஒன்றில் அனுவார் இபுராகிம், பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்றத் தொகுதியில் தாம் போட்டியிடவிருப்பதாகத் அறிவித்துள்ளார்.பெர்மாத்தாங் பாவோ தொகுதியானது அனுவார் போட்டியிட்டு வெற்றி பெற்றப் பழைய தொகுதியாகும்.அத்தொகுதியில் கடந்த மார்ச் 8 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அனுவாரின் மனைவி வான் அசிசா இசுமாயில், அவரின் தொகுதியைத் தன் கணவருக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவித்தார். இன்று காலையில் தாம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மக்களவைத் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், இருப்பினும் தாம் மக்கள் நீதிக் கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் எனவும் அவர் கூறினார்.


ஏற்கனவே சிலாங்கூர் மந்திரி புசார் டான் சிறீ காலிட் (பண்டார் துன் ரசாக்), மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர் அஸ்மின் அலி (கோம்பாக்) போன்றோர் தங்களது தொகுதிகளை அனுவாருக்கு விட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 60 நாட்களுக்குள் மலேசிய தேர்தல் ஆணையம் பெர்மாத்தாங் பாவோவின் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனுவார் இபுராகிமின் அரசியல் பிரவேசம் குறித்து முன்னால் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைக்கையில், "என் மனைவியாக இருந்திருந்தால், இதே முடிவைத்தான் எடுத்திருப்பாள்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் ஓரிணப்புணர்ச்சி வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்ட அனுவார் இபுராகிம் 48 மணி நேரத்தில் கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் ஆருடம் கூறுகின்றன.

அனுவாரின் அரசியல் பிரவேசத்தைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, மீண்டும் அவர் கைதாவாரா....?

Read more...

இண்ட்ராப்பின் 'ஜாலூர் கெமிலாங்' நிகழ்வு..

>> Monday, July 28, 2008

வருகின்ற 3-ஆம் திகதி ஆகசுட்டு மாதம், நாட்டின் 51-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய நிலையில் இண்ட்ராப் 'ஜாலூர் கெமிலாங்' விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில், இண்ட்ராப்பின் நிகழ்வுகள், வருங்கால திட்டங்கள் விளக்கப்படுவதோடு இண்ட்ராப் தலைவர் திரு.வேதமூர்த்தியுடன் நேரடி தொலை கலந்துரையாடலும் நடைப்பெறும். எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்துக் கொள்ளும் இந்நிகழ்வில் இண்ட்ராப் ஆதரவாளர்கள் பங்கு பெற்று பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்ரனர்.

Read more...

அமைதியான தீபாவளி - இண்ட்ராப்பு கோரிக்கை..

>> Sunday, July 27, 2008




இண்ட்ராப்பு குரல்

பழைய வழக்கத்திற்கு மாறாக, இவ்வருட தீபாவளியை அனைவரும் தியானம், இறைவழிபாடு என அமைதியாகவும் எளிமையான முறையிலும் தத்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு கொண்டாட வேண்டும் என இண்ட்ராப்பு தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கிறது. சம உரிமை, சம வாய்ப்பு, பேச்சு சுதந்திரம் மற்றும் சமயச் சுதந்திரத்திற்காக குரல் எழுப்பிய ஐந்து இண்ட்ராப் தலைவர்களுக்காக இவ்வருட தீபாவளிக் கொண்டாட்டமானது அமைதியான முறையில் நடைப்பெற வேண்டும். இதனை ஆதரவாளர்கள் அனைவரும் அமைதிப் போராட்டமாகக் கருத வேண்டும்.

தீபாவளியானது கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றின் பொதுவான நோக்கம் என்று பார்த்தால் தீமைகள் அழிந்து நன்மை பிறக்க வேண்டும் எனும் நோக்கத்திலியே கொண்டாடப்படுகிறது. தீபாவளி பிறந்ததற்கான பல புராணக் கதைகள் இருந்தாலும், மக்கள் மத்தியில் பிரசித்திப் பெற்ற புராணக் கதை, நரகாசுரனை வதைத்த கிருஷ்ணரின் மனைவி சத்யபாமாவின் கதையே. இப்புராணக் கதையில் நரகாசுரனின் வதமானது, வாழ்வின் இருளை நீக்கி ஒளியை அளித்ததற்குச் சமமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனால், மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரையில் நாடு சுதந்திரம் அடைந்து இன்று வரையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, சமய சுதந்திரம், பேச்சு சுதந்திரம் அற்று இருளில் வாழ்ந்து வந்துள்ளனர். இண்ட்ராப்பு இதுவரை அரசாங்கத்திடம் பல மனுக்களையும் கோரிக்கைகளையும் கொடுத்து சம உரிமைக் கேட்டு போராடி வந்துள்ளது. ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல் அரசாங்கம் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. அரசாங்கத்திற்கு நம்முடைய தேவைகளைப் பல வகையில் புரிய வைத்திருந்தும், இந்திய சமூகம் இருளிலிருந்து இன்னும் வெளிப்படவில்லை.

இன்றுவரை நாம் கொண்டாடிவரும் தீபாவளியானது ஓர் அர்த்தமற்றதாகவே புலப்படுகிறது. இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எனும் தீபாவளியின் உண்மைக் கருப்பொருளை இந்திய சமுதாயம் அடைந்துவிடவில்லை. இன்றுவரையில் நாம் சம உரிமைக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதன்வழி இண்ட்ராப்பு அனைத்து ஆதரவாளர்களையும் தீபாவளியன்று அமைதியான முறையிலும், தியானம், இறை வழிபாடு என்று இறைவனிடம் உள்ளொளி வேண்டி கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வருட அமைதியான தீபாவளியின் வழி, அரசாங்கத்தின்மீது ஒட்டுமொத்த சமுதாயம் கொண்டிருக்கும் ஆதங்கத்தைப் புலப்படுத்தியாக வேண்டும். அதோடு அவர்கள் நடைமுறைப்படுத்திவரும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமானது மலேசிய மக்களால் வெறுக்கப்படும் சட்டமாக உள்ளது என்பதனையும் புலப்படுத்தவேண்டும்.

இண்ட்ராப்பு என்றும் அடுத்தவரின் உரிமைகளைக் கேட்கவில்லை, ஆனால் கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள் மறுத்தளிக்கப்படும்பொழுது அதனைத் தட்டிக் கேட்டு வாங்குவதில் என்றும் பின்வாங்குவதில்லை. போராட்டம் தொடரும்...

திரு.வேதமூர்த்தி
இண்ட்ராப் தலைவர்
இலண்டன்

Read more...

நீங்களும் நிலாவிற்குச் செல்லலாம்..


நிலாவில் கால் பதிக்க வேண்டும் எனும் ஆசை யாருக்குதான் இல்லை. நானும் சிறுவயதில் நிலாவில் கால் பதிக்க வேண்டும் எனும் ஆசையில், நண்பர்களிடம் சவால் விட்டுத் திரிந்துக் கொண்டிருந்தேன். விஞ்ஞானியாவேன், விண்வெளி வீரனாவேன் , அதைச் செய்வேன் இதைச் செய்வேன், இன்னும் என்னென்ன அடுக்கிக் கொண்டே போக முடியுமோ அவ்வளவையும் அந்த வயதில் அடுக்கி வைத்தது மறக்க முடியாத நினைவுகளாகும்.

இப்படி நீங்களும் நண்பர்களிடமோ, ஆசிரியரிடமோ சவால் விட்டிருக்கலாம். குறிப்பாக நிலாவில் கால் பதிப்பேன் என்று சவால் விட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசா' விண்வெளி வீரர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த வரலாற்றுப் பூர்வமான திட்டத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை 'நாசா'வும் கலிஃபோர்னியா பரவெளி ஆராய்ச்சிக் குழுவும் மற்றும் ஜான் ஆப்கீன்ஸ் பௌதீகவியல் ஆராய்ச்சிக் கூடமும் நமக்கு வழங்குகின்றனர்.

நம்மால் நிலாவில் கால் பதிக்க முடியாவிட்டாலும், பெயரையாவது பதிக்கலாம் அல்லவா? அதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள்.

சந்திரனுக்கு அனுப்பப்படவிருக்கும் விண்கலனும், சந்திர மண்டலத்தை படம் பிடிக்கச் செல்லும் எல்.ஆர்.ஓ எனப்படும் ஆராய்சித் துணைக்கோளும் நம் பெயரை சில்லு வடிவில் தாங்கிச் செல்லவுள்ளது. அதற்கடுத்து 2020-இல் மீண்டும் மனிதன் நிலாவில் கால்பதிக்கும் பொழுது நம் பெயர்களும் அங்கு பதியப்படும். இத்திட்டத்தில் பங்குபெரும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்குகிறார்கள். அச்சான்றிதழை மென்புத்தக வடிவில் அச்சிட்டுக் கொள்ளலாம்.

உங்கள் பெயரைப் பதிவதற்கு இறுதி நாள் 31 சூலை 2008. உங்கள் பெயரைப் பதிய இங்கே சுட்டுங்கள் : நிலாவில் பெயர் பதிப்போம்

Read more...

பேராக் மக்கள் சக்தி ஏற்பாட்டில் இன்று நல்லெண்ண விருந்து.

பேராக் மக்கள் சக்தி ஏற்பாட்டில் இன்று இரவு 7.30 மணியளவில் நல்லெண்ண விருந்து ஒன்று ஈப்போவில் நடைப்பெற உள்ளது. ஈப்போ இண்ட்ராப் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர், அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கின்றனர்.

இடம் : செஞ்சிலுவைச் சங்க மண்டபம் ( ஈப்போ விளையாட்டரங்கு எதிர்ப்புறம்) ஜாலான் காம்ப்ளேக்ஸ் சுக்கான், ஈப்போ

நேரம் : இரவு 7.30

மேலும் தொடர்புக்கு : பேராக் இண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் திரு.வேதமூர்த்தி (019-2725658)

Read more...

ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையராக தென்னாப்பிரிக்கத் தமிழர் நவநீதம் நியமனம்.


ஐ.நா மனித உரிமைக் குழுவின் உயர் ஆணையராக தென்னாப்பிரிக்க நீதிபதி நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த பொறுப்புக்கு நவநீதம் பிள்ளை அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் அறிவித்தார்.

ஏற்கனவே அந்தப் பொறுப்பில் இருந்து வந்த லூயிஸ் ஆர்பர் என்பவருக்குப் பதிலாக நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளதை மேற்கத்திய நாடுகளும் மனித உரிமைக் குழுக்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளன.

நவநீதம் பிள்ளையை ஐ.நா. மனித உரிமைக் குழூவின் உயர் ஆணையராக தாம் நியமித்திருக்கும் முடிவை ஐ.நா பொதுப்பேரவையிடம் பான் கி மூன் தெரிவிப்பார் என்று ஐ.நா.வுக்கான பெண் பேச்சாளர் மைக்கலி மோண்டாசு சொன்னார்.

மனித உரிமைகள், நீதித் துறை முதலியவற்றில் மிகச் சிறந்த ஆற்றல் பெற்றவர் நவநீதம் பிள்ளை அம்மையார். அந்த வகையில் ஜெனிவாவில் அமைந்துள்ள மனித உரிமைக்க் கழகத்தில் பணியாற்றுவதன் மூலம் நவநீதம் பிள்ளை, ஐ.நா பொதுப் பேரவைக்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் இடையில் உள்ள உறவை பேணி வளர்ப்பார் என்று பான் கி மூன் எதிர்ப்பார்ப்பதாக மோண்டாசு சொன்னார்.


தற்போது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு மன்ற நீதிபதியாக நவநீதம் பிள்ளை பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழரான 67 வயதான நவநீதம் அம்மையார், டர்பனில் ஓர் ஏழை பேருந்து ஓட்டுநருக்குப் பிறந்த மகளாவார். நாத்தால் மாகாணத்தில் முதன்முறையாக வழக்கறிஞர் அலுவலகம் திறந்த வெள்ளைக்காரர் அல்லாத பெண்மணியாகத் திகழ்கிறார் நவநீதம் அம்மையார்.

தென் ஆப்பிரிக்காவில் அமல்படுத்தப்பட்ட "எப்பர்தாய்ட்" கொள்கைகளுக்கும் பெண்களுக்கு எதிராக நடைப்பெறும் கொடுமைகளை எதிர்த்தும் குரல் கொடுத்தவர் நவநீதம் அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர்த்து அம்மையார், பல மனித உரிமை இயக்கங்களில் இணைந்து குழந்தைகள், தடுப்புக் காவலில் துன்புறுத்தப்பட்டவர்கள், உள்நாட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு ஆதராவக குரல் எழுப்பியுள்ளார். வருகின்ற 1 செப்டம்பர் அன்று நவநீதம் அம்மையார் அதிகாரப்பூர்வமாக ஐ.நா மனித உரிமை உயர் ஆணையராக தமது கடமையைத் தொடங்குவார். இவரின்கீழ் ஆயிரம் ஊழியர்கள் பணிப்புரியவிருப்பதோடு, இவரின்கீழ் நடத்தப்பெறும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க டாலர் 120மில்லியனையும் ஐ.நா ஒதுக்கியுள்ளது

தமிழர்களைப் பெருமைக் கொள்ளச் செய்யும் நவநீதம் அம்மையாரின் பதவியேற்பை, நாமும் மகிழ்வுடன் வரவேற்போம். அம்மையார் தமது கடமையை இனிதே செய்திட, மனித உரிமை மேலும் மலர்ந்திட இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்வோம்.

Read more...

இந்து ஆலயங்கள் மீண்டும் உடைபடும் அபாயம்..!!

>> Saturday, July 26, 2008

இலண்டனிலிருந்து திரு.வேதமூர்த்தி,

(இந்து) ஆலயங்கள் இனி உடைபடாது. (NST 11/07/08 Pg 13)

மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி, இனி இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவது நிறுத்தப்படும் என முதன்முறையாகவும் வெளிப்படையாகவும் மக்களுக்குத் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏன் கூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு மட்டும் உத்திரவாதம் கொடுக்கப்படுகிறது? மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் நிலை என்ன?



மலேசியா முழுவதிலுமுள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது என அவர் கூறவில்லை, இதன் வழி குற்றவியல் சட்டப் பிரிவு 294 ( வழிபாட்டுத் தளங்களை இடித்தல்), 295 (சமயக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல்), 296 (சமயங்களுக்கிடையிலான காழ்ப்புணர்ச்சியைத் தூண்டுதல்), குற்றவியல் பீனல் கோட் 441 மற்றும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 11 (சமய சுதந்திரம்) போன்றச் சட்டங்களுக்கு எதிராக உள்ளது அப்துல்லா அகமது படாவியின் அறிக்கை.

இன்றுவரையில் எதிர்கட்சி மாநில அரசாங்கம் எந்த ஒரு வழிபாட்டுத் தளத்தினையும் இடித்து தரைமட்டமாக்கியதாக வரலாறு இல்லை, ஆனால் அப்துல்லா அகமது படாவியின் ஆட்சி காலத்தில் மூன்று வாரத்திற்கு ஓர் ஆலயம் எனும் விகிதத்தில் இந்து ஆலயங்கள் உடைப்பட்டுள்ளன.

இருப்பினும், அம்னோவில் ஓர் அமைச்சருக்காவது, ஆலயங்கள் உடைபடும்வேளையில் இந்து மக்களின் மனங்கள் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பது தெரிந்திருக்கிறது. துணை அமைச்சரும், தம்பூன் தொகுதி அம்னோ தலைவருமான டத்தோ அகமது உஸ்னீ, அதிகமான எண்ணிக்கையில் இந்து ஆலயங்களை உடைத்த சிலாங்கூர் மாநில முன்னால் மந்திரி புசார் டத்தோ முகமது கீர் தோயோவை சாடும் வகையில் (NST 360/06/08 பக்கம் 10) " ஓர் ஆலயத்தை எப்படி உங்களால் உடைக்க முடிந்தது?! இதே, ஒரு மசூதி இடிக்கப்பட்டிருந்தால்?! அதன்பின் நிலைமை எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்!!? ஓர் அரசியல்வாதியாய் இருந்துக்கொண்டு இத்தகு காரியங்களில் ஈடுபடக்கூடாது. கீர் தோயோ பெரிய தப்பைப் புரிந்துள்ளார். இதனால் இந்துக்களின் மனங்கள் காயப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

நீதியானது மீண்டும் சட்டத்தின் ஓட்டைகளில் விழுந்து மறைந்து கிடக்கின்றது.. எது எப்படியிருப்பினும், உரிமையை மீட்டும்வரை இண்ட்ராப் தனது போராட்டத்தைத் தொடரும்...

நன்றி,

திரு.வேதமூர்த்தி
இண்ட்ராப் தலைவர்

Read more...

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் கண்டுபிடிப்பு!

>> Thursday, July 24, 2008


ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை, இந்தியத் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா அன்னம்புத்தூர் கிராமத்தின் வடக்கில் ஏரியையொட்டி மண்மேட்டின் மீது சிவலிங்கம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்தது. கிராம மக்கள் இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவிற்குத் தகவல் தெரிவித்தனர். கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் ராஜவேலு தலைமையில் ரகு, அழகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் அன்னம்புத்தூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவலிங்கம் இருந்த மண்மேடு, பழமையான கோவிலின் சிதைந்தப் பகுதி என்பது தெரிய வந்தது. சிதைந்திருந்தக் கோவிலின் அதிட்டானத்தின் குமுத வரியில், தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த கல்வெட்டைப் படி எடுத்து ஆய்வு செய்ததில், முதலாம் ராஜராஜ சோழனின் 23வது ஆட்சி ஆண்டில் கல்வெட்டு செதுக்கியிருப்பதும், இதன் காலம் கி.பி., 1008 என்றும் தெரிய வந்தது.

முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியுடன் துவங்கும் இந்தக் கல்வெட்டிலிருந்து, இங்குள்ள கோவில் மூலவரின் பெயர் திருநீதிஸ்வரர் என்பது தெரிய வந்துள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் கிடங்கில் நாட்டைச் சேர்ந்த அன்னம்புத்தூரில் உள்ள திருநீதிஸ்வரர் கோவிலுக்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக முதலாம் ராஜராஜ சோழன் ஊருக்கு வடக்கே நிலம் கொடையாக வழங்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலை முதலாம் ராஜராஜ சோழன் காலத்திற்கு முன்பே பல்லவர்கள் காலத்தில் கட்டியிருப்பது, இதன் அடித்தளத்தில் உள்ள பெரிய அளவிலான செங்கற்களால் தெரிய வருகிறது. கோவிலின் அதிட்டானத்தில் குமுதவரி மற்றும் தலைப்பகுதியை மட்டும் கருங்கல்லால் கட்டியுள்ளனர். இதன் மேல் செங்கற்களைக் கொண்டு கோவிலின் சுவரை அமைத்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் ஆனதால் செங்கல் சுவர் இடிந்து மண்மேடாகி உள்ளது. இந்த மண் மேட்டின் மீதே திருநீதிஸ்வரர் திறந்த வெளியில் காட்சி தருகிறார். கோவிலின் அருகில் புடைப்புச் சிற்பமாக உள்ள வினாயகர் சிலை இந்தக் கோவில் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்பதற்கு, மேலும் ஆதாரமாக விளங்குகிறது.

இக்கோவிலின் மேற்கில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஏழு கன்னியர்களின் சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் பழமை மற்றும் வரலாற்றை அறிந்து கொண்ட கிராம மக்கள் சிதைந்த நிலையிலுள்ள திருநீதிஸ்வரர் கோவிலை புனரமைக்க தெய்வநாயகம் என்பவர் தலைமையில் திருப்பணிக்குழுவை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆதார‌ம் : தின‌ம‌ல‌ர்

Read more...

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்.. பகுதி 1


நேற்று விவேகம் வலைப்பதிவர் திரு.வாசுதேவன் இலட்சுமணன் என் இல்லத்திற்கு நலம் விசாரிக்க வருகைப் புரிந்திருந்தார். அதுவே எங்களுடைய முதல் சந்திப்பும் ஆகும். கடந்த வாரம் குளுவாங் அஜி மனான் தமிழ்ப் பள்ளியில் திரு.வாசுதேவன் வலைப்பூ பயிலரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருப்பதாக அவரின் வலைப்பூவில் அறிவித்திருந்ததையடுத்து, மின்னஞ்சலின் வழி அவரைத் தொடர்புக் கொண்டேன். வலைப்பூ பயிலரங்கு தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் சில கையேடுகளையும் நேற்று உடன் கொண்டு வந்திருந்தார்.

திரு.வாசுதேவனைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால், அவர் ஒரு முன்னால் தமிழ்ப் பள்ளி ஆசிரியர், தற்போது குளுவாங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றில் தகவல் தொழிழ்நுட்பப் பாடம் பயிற்றுவித்துக் கொண்டே கல்வியல் தொழிநுட்பப் பாடத்தில் பகுதிநேர முதுகலை ஆய்வு மாணவராக மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.

மலேசியாவைப் பொருத்தமட்டில், தமிழில் வலைப்பூ (2004-இல்) தொடங்கிய முதல் தமிழாசிரியராக திரு.வாசுதேவன் திகழ்கிறார். 2006-இல் ஏழாவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில், மலேசியாவைப் பிரதிநிதித்து 'தமிழ் கற்றல் கற்பித்தலில் பல்லூடகத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாடு' எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ஆம் ஆண்டு தொடங்கி சொகூர், மலாக்கா, பேராக், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகளில் வலைப்பூ பயிலரங்குகளையும் அவர் நடத்தியுள்ளார். இவரின் சேவைக்கு முத்தாய்ப்பாக கடந்த பிப்ரவரி மாதம் உலகத் தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டியான 'தமிழ்மணம்' அவரை நட்சத்திர பதிவராக கௌரவித்திருந்தது.

அவருடன் அலவலாவிக் கொண்டிருக்கையில், அவரின் முன்னனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சிலக் கேள்விகளைக் கேட்டேன். என் முதல் கேள்வியே, வலைப்பூ பயிலரங்கில் கலந்துக் கொண்ட தமிழாசிரியர்கள் மத்தியில் இதுவரை வரவேற்பு எந்த அளவில் உள்ளது என்பதே.

அவரின் பதில், தமிழாசிரியர்கள் புதிய விடயங்களைக் கேட்பதற்குத் தயாராக இருக்கின்றனர், ஆர்வமாக பயிலரங்கில் கலந்துக் கொள்கின்றனர், பயிலரங்கு முடிந்து மதிப்பீட்டு பாரங்களில் தாங்கள் மிகவும் பயனடைந்துள்ளதாக கருத்துகளை எழுதுகிறார்கள், ஆனால் செயல்பாடு என்று வரும்பொழுது பின்வாங்குகிறார்கள். தமிழாசிரியர்களின் தகவல் தொழில்நுட்பக் கையாடல் மனநிறைவை அளிக்கவில்லை என்று வருத்ததோடு கூறினார். வருத்தம் என்று கூறுவதைவிட இதெல்லாம் தமக்கு பழகிவிட்ட ஒன்று எனப் புன்னகையோடு கூறினார்.

இருப்பினும் ஒரு தடவை தாம் வலைப்பூ பயிலரங்கை ஏற்று நடத்தியதைக் கண்ட ஆசிரியர் பயிற்சிக் கழக விரிவுரைஞர் ஒருவர், அவர் பயிற்றுவிக்கும் தமிழ் மொழிப் பிரிவு பயிற்சி ஆசிரியர்களை 'தமிழ் வலைப்பூக்கள்' தொடர்பாக திரட்டேடு ஆய்வினைச் செய்து சமர்ப்பிக்குமாறு பணித்ததாகவும், தாம் என்றோ போட்ட விதைக்கான பலனாக அதைக் கருதுவதாகவும் திரு.வாசுதேவன் கூறினார். இனிவரும் காலங்களில் தமிழ் இளைஞர்களின் இணையத் தமிழ் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு, அதற்கான ஆவணங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டியது நமது கடப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் கூறியதைப்போல வருங்காலங்களில் தகவல் பறிமாற்றங்களுக்கு இணையமே முதன்மை ஊடகமாகத் திகழவிருப்பது கண்கூடாக நாம் கண்டுவரும் பரிணாம மாற்றமாகும். மலேசியாவை எடுத்துக் கொண்டால், அண்மைய காலமாக வலைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது எனலாம். அதிலும் வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்களில் இந்தியர்கள் கணிசமான தொகையில் இருக்கின்றார்கள் என்பது பெருமைப்படக் கூடிய விடயம் எனக் கருதலாம். அனைவரும் தங்களின் பட்டறிவை பிறருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என மும்முரமாய் வலையுலகில் களமிறங்கி வருகிறார்கள்.

ஆனால் இவர்களில், குறிப்பாக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எத்தனைப் பேர் இணையத்தில் தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்யத் துணிகிறார்கள்..?? தமிழில் எழுத, வாசிக்கத் தெரிந்த எத்தனை மலேசியத் தமிழர்கள் இணையத்தில் தமிழை வளர்க்கிறார்கள்...?

தமிழைவிட ஆங்கிலத்தில் அளிக்கப்படும் செய்திகளில் தமிழர்களுக்கு நாட்டம் செல்வதேன்?

இணையப் பயன்பாடு அறிந்திருந்தும், தமிழில் நல்ல புலமை இருந்தும் ஆங்கில வலைப்பதிவுலகில் கால்பதிக்கத் துடிப்பது ஏன்?

மலேசியாவில் உள்ள தமிழ் ஆர்வளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், பேச்சாளர்கள், தமிழ்ச் சங்கங்களின் வழி தமிழ் வளர்ப்பவர்கள், இப்படி பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்..... இவர்களின் பங்களிப்பு இணையத் தமிழை வளர்ப்பதில் எந்த அளவில் ஆர்வம் காட்டுகின்றனர், முயற்சி எடுக்கின்றனர்??

523 தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர்கள் இணையத் தமிழின் பயண்பாட்டை எந்த அளவிற்குத் தெரிந்து வைத்திருக்கின்றனர்??

வலைப்பூ பயிலரங்குகளில் சிறப்பாகப் பங்கேற்கும் ஆசிரியர்கள், கற்ற அறிவை முழுமையாகப் பயன்படுத்தாது ஏன்??

கேள்விகள் ஆயிரம்...

இது குறித்து சில அலசல்கள் அடுத்தப் பதிவில்...

வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன... நன்றி.

Read more...

திரு.உதயகுமாருக்கு மறுவாழ்வுப் பயிற்சியா...?

>> Monday, July 21, 2008


இது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். திரு.உதயகுமாருக்கு மறுவாழ்வு பயிற்சி வழங்க வேண்டுமா? அல்லது மூலைக்கெட்ட இனவாத அரசியலை மேற்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சி வழங்க வேண்டுமா?

மலேசிய இந்தியர்கள் இண்ட்ராப் தலைவர்களோடு சேர்ந்து உரிமைக்காகப் போராடிய போராட்டத்தை, வெறும் கேலிக்கூத்து என்றெண்ணிவிட்டார்களா அவர்கள்(அம்னோ)?

மறுவாழ்வு பயிற்சி உண்மையில் யாருக்கு வழங்க வேண்டும்? நீதிக்கூண்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிப்பவர்கள்தான் மறுவாழ்வு பயிற்சிக்கு செல்லத் தகுதியுடையவர்கள். சட்டமும் அதைத்தான் சொல்கிறது(ஐநா பொது விதிகளின் 25 வது பிரிவு). மதிகெட்டு சில சமயங்களில் தப்பு செய்து தண்டனைப் பெறுகிறவர்கள், மீண்டும் புதிய மனிதர்களாகத் திருந்தி வரவேண்டும் எனும் நோக்கில் மறுவாழ்வு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. (உண்மையில் குற்றவாளிகள் அப்பயிற்சிகளின் மூலம் மனம் திருந்தி மறுவாழ்வை நோக்கிச் செல்கிறார்களா? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்).

சரி, திரு.உதயகுமார் என்ன குற்றவாளியா? அவரை, இந்த அரசாங்கம் எந்த நீதிமன்றத்தில் நிறுத்தி எந்தக் குற்றத்திற்காக அவரை விசாரித்தது? தேசியப் பாதுகாப்புக்கு ஒரு மருட்டலாக இருப்பதாக உதயகுமாரைக் கைது செய்த காவல்த் துறையினர் ஏன் அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை?

உண்மையில் அவர் பாதுகாப்பிற்கு மருட்டலாகத்தான் இருந்தார் என்றால் அதை மறுப்பதற்கில்லை. ஏன், யார் பாதுகாப்பிற்கு அவர் மருட்டலாக இருந்தார்? தேசிய பாதுகாப்புக்கோ, இனங்களுக்கிடையிலான பாதுகாப்புக்கோ அவர் மருட்டலாக ஒருபோதும் இருந்ததில்லை. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 50 ஆண்டுகளாக இனவாதக் கொள்கைகளின் மூலம் சிறுபான்மை இந்தியர்களின் ரத்ததை உரிஞ்சிக் கொண்டிருந்த அட்டைகளின் (அம்னோவின்) பாதுகாப்பிற்குத்தான் அவர் மருட்டலாக இருந்தார்.

இவர் இண்ட்ராப்பின் மூலம் மக்களிடையே உரிமைகள் தொடர்பான விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதைக் கண்ட அம்னோ அரசாங்கத்திற்குப் பொறுக்கவில்லை. மிரட்டிப் பார்த்தார்கள், தோட்டாக்களை கடிதத்தோடு அனுப்பி வைத்துப் பார்த்தார்கள், கார் டயர்களைக் கிழித்தார்கள், பணம் கொடுக்கப் பார்த்தார்கள், காவல்த்துறையினரை ஏவி கைது செய்துப் பார்த்தார்கள், கெஞ்சியும் பார்த்தார்கள், கொஞ்சியும் பார்த்தார்கள், நயவஞ்சகத்தோடு பேரமும் பேசிப் பார்த்தார்கள், இதற்கெல்லாம் அசையாத சிங்கமாய் நாடுதழுவிய நிலையில் மக்களைச் சென்று சந்தித்து, விழிப்பை ஏற்படுத்தி வீரத்தை விதைத்து அனைவரையும் 25 நவம்பர் அன்று ஒன்று திரட்டி கர்ஜிக்க வைத்தவர் உதயகுமார் எனும் சிங்கம்!

இக்காலத்தில், பதவி, பணம், பட்டத்திற்கு விலைப்போகும் மாந்தர்களிடையே கரைபடியாது விளைந்த மாணிக்கமாய், சேற்றில் முளைத்த செந்தாமரையாய் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் அழுக்குகளை நீக்கி, காலங்காலமாய் அடிமைப்பட்டுக்கிடக்கும் இந்திய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியை ஏற்படுத்திட துணிந்தவர் திரு.உதயகுமார். அவர் மனிதருள் மாணிக்கம், சமுதாயம் பெற்றெடுத்த வரம்..!

ஒளிமங்கா மாணிக்கத்தைப் பட்டைத் தீட்டிப் பார்க்க எத்தனித்திருக்கும் காவல்த்துறையின் சிறப்புப் பிரிவினரை என்னவென்றுச் சொல்வது? அவர்களின் செயல் நகைப்பிற்குரியதாயும், அதே வேளையில் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை மீறுவதைக் கண்டு வேதனையும் கொள்ள வேண்டியதாயுள்ளது..!

மேலும், அவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, முறையான நீதிமன்ற விசாரணையின்றி, சரியான உணவின்றி, தேவையான மருந்துகளின்றி, உரிய சிகிச்சையின்றி வைத்துவிட்டு, இப்பொழுது அவருக்கு மறுவாழ்வுப் பயிற்சிக் கொடுக்க அழைப்பது ஏனோ, சொல் அம்னோ..!!

வேண்டுமென்றால், உரிமைக் குரலுக்கு விலங்கிடும் கூட்டங்களுக்கு மறுவாழ்வு பயிற்சி நடத்தலாமே.. அதற்கு இனவாத அரசியல் குள்ளநரிகள் தகுதி வாய்ந்தவர்களாக நிறையப் பேர்கள் இருக்கிறார்கள்.. திரு.உதயாவைப் பொறுத்தமட்டில் மறுவாழ்வு எனும் பேச்சிற்கு மறுபதில் "இல்லை..!" என்பதுதான்.

உங்கள் மறுவாழ்வுத் திட்டம் எங்களுக்குத் தேவை இல்லை. எங்களுக்குத் தேவை மறுக்கப்படாத உரிமை..!

மறுக்கப்படாத 18 உரிமைக் கோரிக்கைகள்..!

மறுபுத்தி என்றொன்றிருந்தால் யோசித்துப் பார்...!!!

போராட்டம் தொடரும்...

Read more...

பொன்னி யாருக்குச் சொந்தம்?

>> Friday, July 18, 2008


பாசுமதி அரிசிக்கு அமெரிக்காவில் காப்புரிமை வழங்கப்பட்டது போல, மலேசியாவில் பொன்னி அரிசி என்ற பெயரை தன்னுடையது போல பதிவு செய்து கொண்டுள்ளது ஓர் இறக்குமதி நிறுவனம். இதற்கு தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில்தான் பொன்னி அரிசி அதிகம் விளைகிறது. இந்நிலையில் பொன்னி என்ற பெயரை பதிவு செய்து கொண்டுள்ளது சரிகாட் ஃபாயிசா என்ற நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்து பொன்னி அரிசியை இறக்குமதி செய்து வருகிறது.

ஆனால் பொன்னி என்ற பெயரை மலேசிய வர்த்தக முத்திரை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, பிற இறக்குமதி நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

இது மற்ற இறக்குமதி நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சரிகாட் ஃபாயிசா நிறுவனத்துக்கு பொன்னி என்ற பெயரை பதிவு செய்ததை எதிர்த்து வர்த்தக முத்திரை துறையை அவை அணுகி உள்ளன. இதையடுத்து பொன்னி என்ற பெயரை பதிவு செய்தது ரத்து செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை.

``பொன்னி என்ற பெயரை பதிவு செய்ய முடியாது. பாசுமதியை போலத்தான் இதுவும். பொன்னி அரிசி இந்தியாவுக்குத்தான் சொந்தம். மலேசியாவில் அதை பதிவு செய்ய முடியாது‘‘ என வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்தார். இவர், சரிகாட் ஃபாயிசா நிறுவனத்தால் அறிக்கை அனுப்பப்பட்ட ஒரு நிறுவனத்துக்காக வாதாடி வருகிறார்.
வெண்ணிற பொன்னி அரிசியை தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் 1986ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள்.

ஆகவே பொன்னி என்ற பெயருக்கு மலேசியாவில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என விவசாயப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திரன் எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ராஜசேகருக்கு ஆதரவாக கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய நாட்டின் குறிப்பாக தமிழ் நாட்டின் பல மூலிகைச் செல்வங்கள் கடந்த நூற்றாண்டில் காப்புரிமை எனும் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களால் திருடப்பட்டு சொந்தம் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த அவலம் இன்றுவரை தொடர்ந்துக் கொண்டுதான் வருகிறது.

ஒரு ஜீரணிக்க முடியாத உதாரணம் கொடுக்கின்றேன்.

நீங்கள் மஞ்சளை வைத்து ஒரு புதிய மருத்துவமுறையையோ, அல்லது அதனை வைத்து தினசரி பயன்படுத்தக்கூடியப் பொருளையோ கண்டுபிடித்திருந்தீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மஞ்சளின் மகிமையைத் திருடி காப்புரிமையைப் பெற்றுவிட்ட அமெரிக்க நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் நீங்கள் உங்கள் பொருளை யாருக்கும் அறிமுகப்படுத்த முடியாது. மீறி அப்பொருளை நீங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தால், அவ்விஷயம் அந்த நிறுவனத்திற்குத் தெரிந்தால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

என்ன கொடுமைங்க இது...?

இன்னும் துளசி, வேப்பிலை என அமெரிக்க நிறுவனங்களால் திருடப்பட்ட மூலிகைகளின் பட்டியல் நீண்டுக் கொண்டேச் செல்கிறது.

இப்பொழுது பொன்னியை மலேசிய நிறுவனம் சொந்தம் கொண்டாட எத்தனிக்கிறது. பொன்னி என்ற பெயரே தமிழன் காவேரி ஆற்றிற்குச் செல்லமாக வைத்தப் பெயரல்லவா அது. அப்பொன்னி கரைபுரண்டோடும் நிலங்களில் பயிரிடப்படும் நெற்கதிர்களில் பொன்னியும் அடங்கும் அல்லவா.. தமிழனுக்கு உரிமையானதை பிறர் உரிமைக் கொண்டாடுவது எவ்வளவு மடத்தனம்..?

Read more...

வலைப்பதிவர் ராஜா பெட்ராவிற்கு கைது ஆணை..!!!

>> Wednesday, July 16, 2008


பிரபல வலைப்பதிவரான ராஜா பெட்ராவிற்கு அவதூறு பரப்பியக் குற்றத்திற்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அல்தான்துயா கொலைவழக்கில் மலேசியத் துணைப்பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு தொடர்பு இருப்பதாக தம்முடைய சத்திய பிரமாணத்தில் அறிவித்திருந்ததையடுத்து இன்று அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜா பெட்ராவின் மனைவி மரினா லீ அப்துல்லா நிருபர்களிடம், இன்று காலையில் தாம் கைது ஆணையை தமது வழக்கறிஞரின் மூலம் பெற்றதாகவும், நாளைக் காலை 10 மணியளவில் கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகத்தில் ராஜா பெட்ரா சரணடைய கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜா பெட்ரா தமது சத்திய பிரமாணத்தில் கொலனல் அசீஸ் பூயோங் (வெடிமருந்து நிபுணர்), அசீசின் மனைவி நூர் அயாத்தி ரோஸ்மா மன்சூருக்கு உதவியாளர்களாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.

அல்தான்துயா கொலைத் தொடர்பாக பிரதமர் அப்துல்லாவிடம் இராணுவ உளவுத்துறை எழுத்துப்பூர்வமாக ஒரு முழுமையான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை தனது மருமகனான கைரி ஜமாலூதினிடம் அப்துல்லா கொடுத்து பத்திரப்படுத்தி வைக்கச் சொல்லி இருப்பதாகவும், ராஜா பெட்ரா தமது சத்திய பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாளை ராஜா பெட்ரா காலை 10 மணிக்கு சரணடைவாரா? இல்லை கொடுத்த காலக்கெடு முடிவதற்குள் காவல்த் துறையினர் அவரை கைது செய்வார்களா?

அரசியல் நாடகத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்..

Read more...

கோலாலம்பூர் காவத்துறை தலைமையகத்தில் மக்கள் கூட்டம் திரள்கிறது..!!

அங் துவா சாலையில் அமைந்திருக்கும் கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகக் கட்டிடம் வெளியே தற்சமயம் சுமார் 250 அனுவார் ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் "ரீஃபோர்மாசி" என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஏந்தியுள்ள பதாகைகளில் "அனுவார் கைதை எதிர்ப்போம்" என்று எழுதப்பட்டுள்ளது. ஆதரவாளர்கள் கூட்டம் மேலும் பெருகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கட்டிடத்தின் வெளியே வெளிநாட்டு நிருபர்கள் பலர் செய்தி திரட்டுவதற்கு காத்துக் கொண்டிருப்பதாகவும், அனுவாரின் கைது தொடர்பான செய்திகள் பல முக்கிய வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

அனுவாரின் அரசியல் பிரவேசத்தைத் தடுப்பதற்கான, பாரிசானின் சதித்திட்டம் இது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா கூறினார். ஓரிணப்புணர்ச்சி என அனுவார் மீது அடிப்படையற்ற குற்றஞ்சாட்டி அரைத்த மாவையே அரைக்கப்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரை மேலும் கைது செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பதால், கட்டிடத்தின் வெளியே திரளும் ஆதரவாளர்கள் கூட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் தாங்கள் வைத்திருப்பதாக தியான் சுவா கூறினார்.

Read more...

அனுவார் கைது...!!!!


இன்று மதியம் 12.55 மணியளவில் அனுவார் இபுராகிம் சிகாம்பூட்டில் அமைந்திருக்கும் அவரது வீட்டின் வெளியே காவல்த் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஊழல் தடுப்பு நிறுவனத்தில் விசாரணையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய வேளையில் காவல் துறையினர் அவரைக் கைது செய்ததாகத் தெரிய வருகிறது.

ஓரிணப்புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அனுவார் இபுராகிமை, நேற்று காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்திருந்தும் அவர் வர மறுத்திருந்தார். இருப்பினும் இன்று மதியம் 2 மணி வரை காவல்த்துறையினர் அனுவாருக்கு கெடு விதித்திருந்தனர். கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனுவார் கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு வரவில்லையென்றால் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று அவர் மதியம் 12.55க்கு கைதான மர்மம் என்னவோ?

கைது செய்யவேண்டும் என திட்டம் தீட்டி விட்டனர், எத்தனை மணிக்கு கைது செய்தால் என்ன...

மேலும் தகவல்களுக்காக காத்திருப்போம்..

சற்றுமுன் கிடைத்த தகவல்..


அனுவார் வீடு திரும்புகையில் காவல்த் துறையினர் அனுவாரின் வீட்டின் வெளியே காத்திருந்ததாக வழக்கறிஞர் சிவராசா தெரிவித்தார்.

15 காவல்த்துறை வாகனங்கள் பின்தொடர அனுவார் இபுராகிம் கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மதியம் 1.15 மணியளவில் அவர்கள் தலைமையகத்தைச் சென்றடைந்தனர்.

இக்கைது நடவடிக்கையில் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து பிரத்தியேக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதியம் 1.40 மணி தொடங்கி சுமார் 200 அனுவாரின் ஆதரவளார்களும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் காவல்த்துறை தலைமையகத்தின் வெளியே கூடியுள்ளனர், அவர்களுள் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான கர்பால் சிங்கும் அடங்குவார்.



நாடாளுமன்றத்தில் காணப்பட்ட வான் அசிசா, தமக்கு அனுவாரிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்ததாகவும், உடனடியாக வீட்டிற்குச் சென்று பிள்ளைகளைச் சமாதானப்படுத்திவிட்டு பின் காவல்த்துறை தலைமையகத்திற்கு வருமாறு அனுவார் தம்மைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அனுவார் உடல்நிலை பாதிக்கப்படிருப்பதாகவும், அடிக்கடி முதுகெலும்பு வலியால் அவதிப்படுபவர் எனவும் வான் அசிசா கூறினார். தன் கணவரோடு உரையாடுகையில், காவல் துறையினர் தம்மிடம் மிகவும் முரட்டுத் தனமாக நடந்துக் கொள்வதாக அனுவார் கூறியதாக வான் அசிசா தெரிவித்தார்.

அனுவார் இபுராகிற்கு எதிராக, இயற்கைக்கு புறம்பான முறையில் உடலுறவு கொள்பவர்களுக்கு பயன்படுத்தப்படும் 377C சட்டப்பிரிவின் கீழ் அவர்மீதான வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.

இயற்கைக்குப் புறம்பான முறையில் ஒருவர் எந்த ஒரு பொருளைக் கொண்டோ அல்லது மர்ம உறுப்பையோ இன்னொருவரின் மர்ம உறுப்பில் செலுத்தினால் அவருக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகால சிறை தண்டனையும் பிரம்படியையும் கொடுத்திட இச்சட்டம் வழிவகுக்கிறது.

காவல்த்துறை அலுவகக் கட்டிடத்தில் சற்றுமுன் காணப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வீ சூ கியோங்கை அணுகியபொழுது, வான் அசிசாவும் அவரது இரு மகள்களும் அனுவாரை ஏழாவது மாடியில் 2 மணியளவில் சந்திப்பதற்கு காவல்த்துறையினர் அனுமதித்ததாகக் கூறினார்.

மதியம் 2.35

வான் அசிசாவும் அவரது இரு மகள்களும், அனுவாரின் வழக்கறிஞர் திரு.சங்கர நாயர் தலைமையக கட்டிடத்தைவிட்டு வெளியே வந்தனர்.

மதியம் 2.40

சனநாயகச் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லிம் கிட் சியாங், தான் கோக் வேய், ஃபோங் கூய் லுன் மற்றும் அந்தோணி லோக் தலைமையக கட்டிடத்தைவிட்டு வெளியேறினர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்ல்லை.

மதியம் 2.50

மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சம்சூல் இஸ்கந்தார், அனுவாரை காவல்த் துறையினர் விசாரிக்கத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார்.

அனுவாரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததாகவும், தற்போது குற்றச்செயல் பிரிவு 112-இன் கீழ் அனுவார் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வழக்கறிஞர் லத்திபா கோயா தெரிவித்தார்.

அனுவாரின் வழக்கறிஞர்களான சுலைமான் அப்துல்லாவும் பராம் குமாரசுவாமியும் தலைமையகக் கட்டிடத்தினுள் சென்றிருப்பதாகவும், அனுவாரை பிரதிநிதித்து மூன்று வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள் எனவும் அவர் கூறினார்.

அனுவாரின் மகள் நூருல் இசா, தன்னுடைய வலைத்தளத்தில் அனுவார் கைது தொடர்பாக விவரிக்கையில், காவல்த் துறையினர் தமது தந்தையைக் கைது செய்யும் வேளையில் முகமூடி அணிந்திருந்ததாகக் கூறினார். முகமூடி அணிந்து கைது செய்ய வேண்டிய அவசியம் காவல்த்துறையினருக்கு ஏன் வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தகவல்கள் பின்தொடரும்..

Read more...

அனுவார் இபுராகிம், தகவல் அமைச்சர் அகமது சப்ரி சீக் நேரடி விவாதம்..!


“ஆட்சி அமைப்பு இன்று, எரிபொருள் விலை குறைப்பு நாளை” எனும் கருப்பொருளில் அனுவார் இபுராகிமுக்கும் மலேசியத் தகவல் அமைச்சர் அகமது சப்ரி சீக்கிற்கும் இடையிலான நேரடி விவாதம் நேற்று இரவு 9 மணியிலிருந்து 10 மணிவரை தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பானது.

அச்சூடான விவாதத்தை காணத் தவறியவர்களுக்கு கீழ்காணும் படச்சுருள் தயாராக இருக்கிறது.

இவ்விவாதம் தொடர்பான கருத்துகள் ஏதுவாயினும் வாசகர்கள் தெரிவிக்கலாம்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



பகுதி 5



பகுதி 6



பகுதி 7



பகுதி 8

Read more...

கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் இன்று சுவீடன் பயணம்..




கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸை வாசகர்களனைவரும் மறந்திருக்க மாட்டீர்கள், அண்மையில் அவருடைய "சாசனம்" கவிதை நூல் தொடர்பாக ஓலைச்சுவடியில் பதிவிட்டிருந்தேன். "சாசனம்" பதிவைக் காண, கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்குங்கள்.

http://olaichuvadi.blogspot.com/2008/04/blog-post_1251.html

கவிஞர் பிரான்சிஸ், இண்ட்ராஃப் போராட்டங்கள் குறித்து எழுதிய கவிதைகள் அனைத்துமே ஆழ்கடல் பெற்றெடுத்த முத்துக்களைப் போன்றவை. "சாசனம்", "மக்கள் சக்தி" ஆகிய தலைப்புகளில் வெளிவந்த அவரின் கவிதை நூல்கள் ஒவ்வொரு இண்ராஃப் உறுப்பினர் கையிலும் தவழ வேண்டிய ஒன்று. கவிதைகளின் ஒவ்வொரு வரிகளும் காயடிக்கப்பட்ட சமுதாயத்தின் எதிரிகளை சம்மட்டி கொண்டு அடிப்பதுபோல் அமைந்திருப்பது நூலின் சிறப்பு எனலாம். இவருடைய படைப்புகள் வாசகனை வீறுகொண்டு எழச் செய்யும் என்பது திண்ணம்.

இன்று புதன்கிழமை கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் சுவீடன் நாட்டிற்கு பயணமாகவுள்ளார். கவிஞர் அவர்கள் மூன்று மாத காலங்கள் ஸ்காண்டிநேவியா நாடுகளுக்குச் சென்று ஆங்கு வசிக்கும் தமிழ் இலக்கிய ஆர்வளர்களைச் சந்தித்து இலக்கிய விருந்தைப் பரிமாறிக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

வெளிநாட்டு தமிழ் இலக்கிய பேரறிஞர் பெருமக்கள், இலக்கிய ஆர்வளர்கள் கவிஞரைச் சந்திக்க எண்ணம் கொண்டால், அவரைப் பின்வரும் முகவரியோடு அல்லது தொலைப்பேசி எண்களோடுத் தொடர்புக் கொள்ளலாம்.

கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ்
சுவீடன் முகவரி :

Serenadgatan 50.
21572 Malmo, Sweden.

தொலைப்பேசி எண்கள் : 8011182170


கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் தமது இலக்கியச் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிவர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

Read more...

சிறப்பு பௌர்ணமி பூசையும் 108 மகா மிருத்தியுஞ்சய மந்திர செபமும்..

>> Tuesday, July 15, 2008

வருகின்ற 17-7-2008 வியாழக்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் செரண்டா, உலு சிலாங்கூரில் அமைந்துள்ள சிறீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இந்துராப்பு தலைவர்களின் விடுதலைக்காக சிறப்பு பௌர்ணமி வழிபாடும், 108 மகா மிருத்தியுஞ்சய மந்திர செபமும் நடைப்பெறவுள்ளது.

இந்துராப்பு தலைவர்களின் நலனுக்காக நடத்தப்படும் இச்சிறப்பு வழிப்பாட்டில், சுற்றுவட்டார மக்கள் திரளாக வந்துக் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Read more...

பேராக் இண்ட்ராப் ஏற்பாட்டில் மகிழுந்து ஊர்வலம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-07-2008) பேராக் மாநில அளவில் 'இ.சா வை துடைத்தொழிப்போம்' எனும் கருப்பொருளில் மகிழுந்து ஊர்வல நிகழ்வு ஒன்று பேராக் இண்ட்ராப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஈப்போ கல்லுமலை அருள்மிகு சிறீ சுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து இந்த ஊர்வலம் தொடங்கி ஈப்போ மாநகரை ஆதரவாளர்கள் வலம் வந்தனர்.

ஈப்போவிலிருந்து திரு.சத்தி கிருஷ்ணன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு.. (நன்றி)

Read more...

எங்கள் போராட்டத்திற்கு மூடுவிழா கிடையாது..!

>> Sunday, July 13, 2008


இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களில் ஒருவரான திரு.உதயகுமாரின் பங்சார் அலுவலகம் நேற்று மூடப்பட்டது குறித்து இண்ட்ராப் ஆதரவாளர்கள் அனைவரையும் வருத்தத்திற்குள்ளாக்கியது. சில காலமாகவே பொருளாதார ரீதியில் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளினால், அலுவலகத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைப்பெற இயலாத நிலையில் மூடப்படுவதாக திரு.உதயகுமாரின் சகோதரி வேதநாயகி குறிப்பிட்டார். அதோடு இங்குதான் அனைத்துமே தொடங்கியது, என்று இண்ட்ராப்பின் ஆரம்பக்கால போராட்டங்களை நினைவுக் கூர்ந்தார்.

திரு.உதயகுமார் விடுதலையாகும் வரை அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு ஒருசிலர் பொருளாதார ரீதியில் உதவ முன்வந்தபோதிலும், திரு.உதயகுமார் "மக்கள் பணம் மக்களிடமே இருக்கட்டும், சொந்த பயன்பாட்டுக்கு இருக்கக்கூடாது, அலுவலகம் மூடப்படட்டும்" எனக் கூறியதாக சகோதரி வேதநாயகி கூறினார்.


பங்சார் அலுவலகத்தில் பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த திரு.உதயகுமாரின் அண்ணி கே.சாந்தி அவர்களை வினவியதற்கு, திரு.உதயகுமார் தற்போது உடல் நலத்தில் தேறி வருவதாகவும், உலகத் தலைவர்களின் குறிப்பாக லீ குவான் யூ, நெல்சன் மண்டேலா போன்றோரின் சுதந்திரப் போராட்டங்களைச் சித்தரிக்கக்கூடிய நூல்களை அதிகம் வாசிப்பதில் திரு.உதயகுமார் தன்னுடைய நேரங்களைச் செலவிடுவதாக அவர் கூறினார்.

அவர் தனிமையில் சிந்திக்க அதிக நேரங்கள் இருப்பதாகவும், இண்ட்ராப் இயக்கத்தை மேலும் வலுவூட்ட அடிக்கடி புதிய புதிய கருத்துகளை அவர் கூறிவருவதாகவும், இவரின் கருத்துகள் பல இண்ட்ராப்பின் இணையத்தளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இண்ட்ராப் இயக்கத்தின் ஆதரவாளர்களின் சார்பில் திரு.உதயகுமாருக்கு ஒன்றுக் கூறிக்கொள்கிறோம். அலுவலகம் மூடுவிழா காணலாம், ஆனால் உங்களோடு இணைந்த எங்களின் உரிமைப் போராட்டத்திற்கு என்றுமே திறப்பு விழாதான். வெற்றி நமக்கே..! வாழ்க இண்ட்ராப்!

போராட்டம் தொடரும்...

Read more...

இன்றைய பதிவிறக்கம்...

>> Saturday, July 12, 2008

ஒரு தீவு, இரு நாடு..

இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களின் அராஜகத்தில் எப்படி காயடிக்கப்படுகிறார்கள் என்பதனைச் சித்தரிக்கும் 'பவர் பாயிண்ட்' திரைகள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்...
இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்க்கும்பொழுது கண்களில் நீர் துளிர்க்கின்றன..

பதிவிறக்கம் செய்திட இணைய இணைப்பைச் சுட்டுங்கள்.. ஒரு தீவு, இரு நாடு..

Read more...

60 இந்தியர்களுக்கு உராட்சிமன்ற உறுப்பினர் பதவி - பேராக் இண்ட்ராப் கோரிக்கை.

>> Thursday, July 10, 2008



10-ஆம் திகதி சூலையன்று காலை 10 மணியளவில் பேராக் மாநில இண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் திரு.வேதமூர்த்தி தலைமையேற்ற 15 பேர்கள் அடங்கிய குழு ஒன்று, பேராக் மாநில மந்திரி புசார் அலுவலகத்தில் இந்தியர்களின் பிரச்சனைகளைக் கண்டறிய பிரத்தியேகமாக மந்திரி புசாரால் நியமிக்கப்பட்ட அதிகாரி எம்.நடராசாவைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.

அக்கோரிக்கையில், பேராக் மாநில ஊராட்சி மன்றங்களில் இந்தியர்களுக்கு குறைந்த பட்சம் 60உறுப்பினர் பதவிகள் அளிக்கப்பட வேண்டும் என மாநில அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அக்கோரிக்கையின் முழு விவரம் பின்வருமாறு :

மதிப்பிற்குரிய,

பேராக் மாநில மந்திரி புசார்

மலேசியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்நாட்டில் சிறுபான்மையினர் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக ஒடுக்கப்படும் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. சிறுபான்மையினரான இந்தியர்களின் ஏழ்மைச் சூழலினாலும் பொருளாதார சீர்க்குலைவினாலும், கடந்த மார்ச் 8-ஆம் திகதி மக்கள் சக்தி சுனாமிபோல் வந்து அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

அண்மையில் பேராக் மாநில அரசாங்கத்தால் இந்தியர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர் பதவி எண்ணிக்கை கீழ்காணும் புள்ளிவிவரக் கணக்கறிக்கையோடு ஒப்பிடுகையில் மனநிறைவு அளிக்கும் வகையில் அமையவில்லை.

ஆய்வின் கூற்றுப்படி 79.7 சதவிகிதம் இந்தியர்கள் நகர்ப்புறங்களிலும், 20.3 சதவிகிதம் இந்தியர்கள் வெளிநகர்ப் பகுதிகளிலும் வசித்து வருகிறார்கள். மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7.7 சதவிகிதமாக அல்லது 1,680,132 மக்கள் எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும், 5 மாநிலங்களில் இந்தியர்கள் கணிசமான தொகையில் வசிக்கின்றனர்.
அவை முறையே சிலாங்கூர் (14.6% - 585,368) ; பேராக் (13% - 262,121) ; கோலாலம்பூர் (11.4% - 146,621) ; பினாங்கு ( 10.6% - 133,899) மற்றும் நெகிரி செம்பிலான் (16% - 132,754). மலேசியாவில் அதிகமாக நகர்ப்புறங்களுக்கு குடிப்பெயர்ந்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.

கீழ்காணும் பட்டியலில் பேராக் மாநிலத்தில் 20,000 மேற்பட்ட இந்தியர்கள் வாழும் மாவட்டங்களும், எண்ணிக்கைத் தொடர்பான புள்ளி விவரங்களும் பின்வருமாறு :-

மாவட்டம் - பாத்தாங் பாடாங்
மக்கள் தொகை - 154,944
இந்தியர் எண்ணிக்கை - 23,416
சதவிகிதம் - 15.1

மாவட்டம் - மஞ்சோங்
மக்கள் தொகை - 194,640
இந்தியர் எண்ணிக்கை - 28,416
சதவிகிதம் - 14.5

மாவட்டம் - கிந்தா
மக்கள் தொகை - 716,724
இந்தியர் எண்ணிகை - 104,471
சதவிகிதம் - 14.6

மாவட்டம் - கோலாகங்சார்
மக்கள் தொகை - 148,219
இந்தியர் எண்ணிக்கை - 20,550
சதவிகிதம் - 13.9

மாவட்டம் - லாருட் மாத்தாங்
மக்கள் தொகை - 281,040
இந்தியர் எண்ணிக்கை - 32,394
சதவிகிதம் - 11.5

மாவட்டம் - தென்(இலீர்)பேராக்
மக்கள் தொகை - 192,585
இந்தியர் எண்ணிக்கை - 35,892
சதவிகிதம் - 18.6

தகவல் - புள்ளிவிவர இலாகா

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மாநில அரசாங்கம் தேவையான வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்தித் தரக் கூடிய நடைமுறை செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். இன்னும் இரட்டைக் குடியுரிமைக் கொண்ட சமுதாயமாக எங்களை நடத்தினால், நாங்கள் இந்நாட்டில் இன பாகுபாட்டோடுதான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும், அதோடு இனவாரியான விதைகள் தூவப்பட்டு ஒதுக்கிவிடப்பட்ட சமுதாயமாக மீண்டும் நாங்கள் வாழ நேரிடும். மற்ற இனத்தவரைவிட இன்னொரு இனம் ஒருபடி உயர்நிலையில் இருப்பதாகக் கருதும் நிலை தொடர்ந்தால், வருங்கால சந்ததியினர் மற்றவரை அடக்கி ஆளும் போக்கையே கடைப்பிடிப்பர்.

இறுதியாக, இந்தியர்களுக்கென ஒதுக்கப்பட்ட 48 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை மறுஆய்வு செய்து குறைந்தபட்சம் 60-ஆக எண்ணிக்கையை உயர்த்துமாறு பேராக் மாநில அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

வேதமூர்த்தி
பேராக் மாநில இண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர்





Read more...

மலேசிய இந்தியர்கள் ஓராய்வு - நூல் வெளியீடு

ஈப்போ வட்டார மக்களுக்கு ஓரு நற்செய்தி. வருகின்ற 27-ஆம் திகதி சூலை மாதமன்று மாலை 4 மணியளவில் ஈப்போ சுல்தான் யூசுப் சாலையில் அமைந்திருக்கும் 'காயிங் சங்க மண்டபத்தில்' எழுத்தாளர் க.கலைமுத்து எழுதிய 'மலேசிய இந்தியர்கள் ஓராய்வு' எனும் நூல் டத்தோ சிறீ செல்வமணி அவர்களின் தலைமையில் வெளியீடு காணவுள்ளது. இந்நூல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியீடு காணவுள்ளது.

இந்நூல் விலை ரி.ம 40 வெள்ளிக்கு சந்தையில் விற்பனைக் காணவுள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் இந்நூல் அமெரிக்க டாலர் 20க்கு விற்கப்படும். நிகழ்வின் அன்று இந்நூலை வாங்க விரும்புபவர்கள் ரி.ம 30 வெள்ளிக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

மலேசிய இந்தியர்களைப் பற்றிய ஆய்வு அடங்கிய இவ்வரிய நூல் அனைவரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய, படிக்க வேண்டிய ஒரு நூல். இந்நிகழ்வில் கலந்துக் கொள்ள விரும்பும் அன்பர்கள், கீழ்காணும் அழைப்பிதழை அச்சு அல்லது நகல் எடுத்துச் செல்லவும். நிகழ்வைத் தவற விடாதீர்கள், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துங்கள், உள்நாட்டு எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள்.



http://www.malaysiatamilsangam.com

Read more...

25 நவம்பர் போராட்டத்தின் பின்னணி - மலேசியாகினியின் ஆவணப்படம்.

>> Tuesday, July 8, 2008

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



போராட்டம் தொடரும்...

Read more...

தனியார் துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம் எங்கே?


கடந்த சூலை மாதம் 1-ஆம் திகதி தனியார் துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம், கொலையுண்ட மொங்கோலிய அழகி அல்தான்துயாவிற்கும் துணைப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கும் தொடர்பு இருந்ததற்கான ஆவணங்களை தமது சத்திய பிரமாணத்தின் வழி குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனையடுத்து மறுநாள் சூலை 2-ஆம் திகதியன்று, (முதல் சத்திய பிரமாணம் செய்து 24 மணி நேரங்கள் கூட பூர்த்தியாகாத வேளையில்) தாம் வெளியிட்ட சத்திய பிரமாணத்தை உடனடியாக மீட்டுக் கொள்வதாகக் கூறி, புதியதொரு சத்திய பிரமாணத்தை வெளியிட்டார். அதில் நஜீப் துன் ரசாக்கின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் தரப்பினரிடமிருந்து தமக்கு நெருக்குதல் ஏற்பட்டதாலேயே முதல் சத்திய பிரமாணத்தை வெளியிட்டதாகக் கூறி, அதனை மீட்டுக் கொண்டது அரசியல் வட்டாரங்களில் மேலும் குழப்பத்தை விளைவித்தது.

இதுப்போன்ற திடீர் திருப்பங்களால், நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ள விவகாரம் தொடர்பான வதந்திகள் மக்களின் பல நாள் சந்தேகங்களை வலுவாக்கின. இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தனியார் துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டச் சம்பவம், சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகின்றன.

அல்தான்துயா கொலை நடந்தப்பிறகு உள்நாட்டு ஊடகங்களில் அச்செய்தி காட்டுத் தீப்போல் பலவித அனுமானங்களோடு மறுநாள் பரவத்தொடங்கிய போது, முதன்முதலாக தொலைக்காட்சியில் தலையைக் காட்டி, விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம், ஊடகங்கள் பல அனுமானங்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், அனைத்தையும் காவல்த்துறையினரின் விசாரணைக்கு விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்ட முதல் மனிதர் நஜீப் துன் ரசாக்தான் என்று நினைவுக்கு வருகிறது. நாட்டில் பல கொலைச் சம்பவங்கள் நடந்தாலும், துணைப்பிரதமரே தலையிட்டு பேசவைத்த கொலைச் சம்பவம் என்றால் அது அல்தான்துயா கொலைச்சம்பவம்தான். அச்சமயம் அல்தான்துயாவோடு நஜீப்பை இணைத்து யாரும் பேசாத காலம்.

அல்தான்துயா கொலை வழக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைப்பெற்று முற்று பெற்றுவிட்ட நிலையில், நஜீப்பை இவ்வழக்கில் தொடர்புப்படுத்தும் எந்த ஒரு ஆதாரமும் சாட்சியமும் இடம்பெறவில்லை. குறிப்பிட்டு சொல்லப்போனால் நஜீப்பின் பெயர் வழக்கில் சம்பந்தப்படவில்லை என்பதுதான் உண்மை. பாலசுப்பிரமணியத்தின் முதல் சத்திய பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல், நஜீப் துன் ரசாக் அல்தான்துயாவோடு சிங்கப்பூர் வைர கண்காட்சி நிகழ்விலும், பாரிஸ் நகரில் நடைப்பெற்ற விருந்து நிகழ்விலும் ஒன்றாகவே காணப்பட்டதாகக் கூறப்படும் தகவல் ஆதாரம் ஏதுமின்றி கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பிடப்பட்ட இவ்விரு நிகழ்வுகளிலும் பாதுகாப்பு ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பது நிச்சயம். அவ்வொளிப்படக்காட்சிகள் யாருடைய கையிலாவது சிக்கியதா என்பது மற்றுமொரு கேள்விக்குறி.


நஜீப்பை அல்தான்துயாவோடு தொடர்புப்படுத்தும் முயற்சியில், அனுவாரால் துருப்புச் சீட்டாக கையாளப்பட்ட பாலசுப்பிரமணியம் ஏன் திடீர் மனமாற்றம் கொள்ள வேண்டும்? தமது முதல் சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொள்வதற்கு முதல் நாள் மாலை 5.45 மணியளவில் காவல்த்துறையினரிடமிருந்து பாலாவிற்கு கைப்பேசி அழைப்பு வந்துள்ளது. பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்திற்குச் சென்று வந்த பாலசுப்பிரமணியம் மறுநாள் சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொண்டார். முதல் சத்திய பிரமாணத்தில் கையெழுத்திடும் வேளையில் அவரிடம் காணப்பட்ட தெளிவும் அமைதியும் இரண்டாவது சத்திய பிரமாணத்தை வெளியிடும்போது முகத்தில் கலவரம் தெரிந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் என்ன நடந்தது? சுயவிருப்பத்தோடு கையெழுத்திடப்பட்ட சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொள்ளும் அளவிற்கு அப்படி அங்கு என்ன நடந்தது?


இப்போது குடும்பத்தோடு காணாமல் போய்விட்ட பாலசுப்பிரமணியம் எங்கே? காவல்த்துறை தலைவர் முசா பாலசுப்பிரமணியத்தைக் கண்டு பிடிப்பதில் எந்த வகையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்? அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டனரா, அல்லது கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா? அவர்களின் உறவினர்கள் கேட்கிறார்கள்!!

அரசாங்கம் கூறும் பதில் என்ன?

Read more...

திரு.உதயகுமாரின் கொள்கைப் பிடிப்பு பாராட்டுதற்குரியது..

>> Monday, July 7, 2008


கடந்த சனிக்கிழமையன்று உள்நாட்டு விவகார மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்
சயீது அமீது அல்பார், இந்துராப்பு தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கமுந்திங்கு தடுப்புக் காவல் முகாமிற்கு வருகை மேற்கொண்டுள்ளார்.

இந்துராப்பு தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அவ்வருகையின்போது, திரு.உதயகுமார் அமைச்சரைச் சந்திக்க மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்துராப்பு தரப்பில் திரு.வேதமூர்த்தி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், திரு.உதயகுமார் அமைச்சரை சந்திக்க மறுத்ததற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த வார இறுதியில் திரு.உதயகுமாரைச் சந்திக்கச் சென்ற குடும்ப உறுப்பினர்களிடம் தாம் அமைச்சரைச் சந்திக்க மறுத்ததற்கான காரணத்தை மக்களுக்கு அறியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக திரு.வேதமூர்த்தி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திரு.உதயகுமார் உள்நாட்டு விவகார மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சரைச் சந்திக்க மறுத்ததற்கான காரணங்கள் :

1) அமைச்சரின் இவ்வருகையின் காரணம், இந்துராப்பு தலைவர்கள் தடுப்புக் காவலில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கூறி விரைவில் விடுதலை வேண்டும் என அவரிடம் கோருவர் எனும் எதிர்ப்பார்ப்பை மையப்படுத்தியது.

2) இந்துராப்பு போராட்டத்தின் மீதும் கொள்கைகளின் மீதும் தமக்கு உள்ள நம்பிக்கையினால், தாம் பட்டு வரும் துன்பங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை.

3) இந்துராப்பு இயக்கம், நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலை விளைவிக்கும் ஓர் இயக்கம் என மலேசிய மக்கள் மத்தியில் உள்நாட்டு விவகார மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஓர் தவறான முத்திரையைக் குத்தியது.

4) தம்முடைய போராட்டமானது, கடந்த 51 ஆண்டுகளாக அம்னோவின் காலனித்துவ ஆட்சியில் ஒடுக்கப்பட்ட இந்திய சமுதாயத்திற்கு நிரந்தரமான சுதந்திரமும் விடிவெள்ளியும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவே.

அறிக்கையில் மேலும், திரு.உதயகுமார் தாம் மலேசிய இந்திய மக்களுக்காக போராடுவதையும், அதற்காக சிறைச் சென்றதையும் பெருமையாகக் கருதுவதாகவும், தமக்கு இங்கு இழைக்கப்படும் கொடுமைகள் மலேசிய இந்தியர்கள் ஒடுக்கப்படுவதற்கான அத்தாட்சிகளாக அவை விளங்கட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்துராப்பு இயக்கத்தை விலைக்கு வாங்கி, இந்தியர்களின் பிரச்சனையை மூடி மறைக்க நினைக்கும் அம்னோவிற்கு சரியான பாடம் கற்பித்த சமுதாயச்சுடர் திரு.உதயகுமாருக்கு என்றும் தோல் கொடுக்க இந்திய சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. நமது 18 கோரிக்கைகள் நிறைவேறும் வரை,

போராட்டம் தொடரும்...

Read more...

அன்வார் இப்ராகிமுடன் ஒரு நேர்காணல் (மலேசியா கினி)

>> Saturday, July 5, 2008


அன்வார் இப்ராகிம், ஓரினப் புணர்ச்சிக்கு உள்ளாக்கியதாக தம்மீது குற்றம் சாட்டியுள்ள சைபுல் புகாரி அஸ்லானை வேலைக்கு சேர்த்தது முதல் தவறு என்கிறார்.

சைபுல், ஒரு முழுநேர ஊழியராக வேலைக்குச் சேர்க்கப்படவில்லை. அதனால் அவரது பின்னணி பற்றி ஆராயப்படவில்லை என்றவர் சொன்னார்.

கெஅடிலான் தலைமையகத்தில் மலேசியாகினி நடத்திய நேர்காணலில் அன்வார் இப்ராகிம் பல தகவல்களைத் தெரிவித்தார்.

மலேசியா கினி: ஏசிஏ,இப்போது (போலீஸ் தலைவர்) மூசா(ஹாசான்) வையும் (சட்டத் துறைத் தலைவர் அப்துல்) கனி பட்டேய்லையும் விசாரித்து வருகிறது. அதன் விசாரணையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?


அன்வார்:இப்போதைய அமைப்பில் அவர்களுக்கு(ஏசிஏ) சிரமம்தான். ஏசிஏ, பிரதமரின்கீழ் செயல்படுகிறது. சட்ட நடவடிக்கை எடுப்பதை முடிவு செய்பவராக சட்டத் துறைத் தலைவர்(ஏஜி) இருக்கிறார். விசாரணை கட்டத்திலேயே ஏசிஏ பல விசயங்கள் தொடர்பாக ஏஜியுடன் அது ஆலோசனை கலக்க வேண்டியுள்ளது. அதனால், அது விசாரணை செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கும்.

(ஏசிஏ தலைமை இயக்குனர்) அகமட் சயிட் (ஹம்டான்) எனக்கு தெரிந்தவர்தான். நான் அரசாங்கத்தில் இருந்தபோது அவர் ஏசிஏ யில் இருந்தார். அப்போது ஷாபி யாக்யா அதன் தலைவராக இருந்தார்.

ஷாபி, துணிச்சல் நிரம்பியவர். அவரது குழுவினர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. யாராக இருந்தாலும் சரி - ரபிடா (அஜீஸ்), ரகிம் (தம்பி சிக்),(முகமட் முகமட்)தாயிப் - யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆனால் நடவடிக்கைக்குப் பின்னர் அதை ஏஜியின் கவனத்துக்குக் கொண்டு போகும்போது அங்கு தடுக்கப்படும். அப்போது நான் ஏசிஏக்கு ஆதரவாக இருந்தேன். யாராவது ஏசிஏ யைத் தாக்கிப் பேசினால் நான் ஏசிஏ-யைத் தற்காத்துப் பேசுவேன்.

அப்போது (அவர்களின் விசாரணைக்கு தடை போடுபவர்)
பிரதமர் அல்லது ஏஜியாக இருப்பார். இப்போது அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை.

இப்படி இருக்கையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பீர்களா?

இந்த இடத்தில் அமெரிக்க உச்சநீதி மனறத்தின் முன்னாள் நீதிபதி சண்ட்ரா டே கோன்னர் சொன்ன ஒரு கருத்தை எடுத்துக்கூற விரும்புகிறேன். அன்வாரை ஆதரித்தும் அனைத்துலக ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தும் அறிக்கை ஒன்று வெளியிடுமாறு அவரிடம் ஒருவர் சொன்னபோது,” ஒரு சிறுபிள்ளத்தனமான குற்றச்சாட்டுக்கு எதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்?”, என்றாராம்.

அரசாங்கம் உங்கள்மீது குற்றம் சுமத்துவதால் மக்களின் ஆதரவு குறையும் என்று நினைக்கிறீர்களா?


இடைவிடாது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அது மக்களின் மனத்தில் ஆழமாக பதியத் தொடங்கும். இது (நாஜிகளின் பரப்புரை தலைவர் டாக்டர் பால் ஜோசப்) கோய்ப்பல்சின் தந்திரோபாயம். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதல். அதனால்தான் அவர்கள் வேறு எதையும் தேர்ந்தெடுக்காமல் இதைத் (ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டை) தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்கு சாட்சியம் சேகரிப்பது சிரமம் என்பதால், கதை கட்டுவதற்கு ஒரு ஆளையும் தயார் பண்ணியிருக்கிறார்கள்.

ஆனால் மக்கள்மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

இடைத் தேர்தல், கட்சித் தாவல் - இவையெல்லாம் எப்படி இருக்கிறது?

இடைத் தேர்தல் (ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டு முடிவு தெரியாத நிலையில் ) சற்று தாமதப்படலாம். இன்றுகூட அதைப் பற்றி என்னால் அறிவிக்க முடியும். ஆனால் நாளையே நான் கைது செய்யப்படலாம். இப்படி ஓர் இக்கட்டு.

இது உங்களின் இடைத் தேர்தல் திட்டத்தைத் தாமதப்படுத்துகிறது…

ஆமாம். அதையும் சமாளிக்க முடியும் என்றுதான் நம்புகிறேன்.

சொன்னபடி செப்டம்பரில் உங்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது,அதனால் ஒரு கெட்டபெயர் ஏற்படுவதைத் தவிர்க்க இப்படியெல்லாம் நாடகமாடுகிறீர்கள் என்று சிலர் சொல்கிறார்களே?

பாரிசான் நேசனலுக்கு ஆதரவானவர்கள் அப்படிச் சொல்லக்கூடும். அந்த ஆள் என்னுடைய அலுவலகத்தில் “நட்டு” வைக்கப்பட்டிருக்கிறார். சாபா, சரவாக்கிலிருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன.இங்கே என்ன நடக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும்போதெல்லாம் போலீஸ் விழிப்பு நிலையில் வைக்கப்படுகிறது என்பதை நான் அறிவேன். ஏன்? அரசாங்கம் விழுந்து விடுமோ என்று உள்ளுக்குள் அச்சம். எனவே அது ஒன்றும் நடைபெற முடியாத ஒன்றல்ல. வெளியில் அவர்கள் வேறு விதமாகச் சொல்வார்கள்.

ஒரு அமைச்சர் என்னைப் பார்க்க சிங்கப்பூர் தங்கு விடுதிக்கு வந்தால் அவர்களுக்குத் தெரியாமல் போய்விடுமா?

அமைச்சர்கள் வெளிநாட்டிற்குச் சென்று உங்களைச் சந்தித்தாக கூறுகிறீர்களா?

ஆம்.

எத்தனை பேர்?

அந்த விவரம் வேண்டாமே.

உங்கள் செப்டம்பர் இலக்கு இன்னும் அப்படியே இருக்கிறதா?

இப்போதைய நிலையில் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அடுத்த சில நாள்களில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாது.

ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டு, கட்சித் தாவல் திட்டத்துக்கு இடையூறாக அமைந்து விட்டதென்று நினைக்கிறீர்களா?

இல்லை. ஆனால் அடுத்த கட்ட திட்டம் வகுக்கப்படுதை அது பாதித்துள்ளது. என்றாலும் செப்டம்பர் மாதம் என்ற இலக்கில் மாற்றமில்லை.

வெளிநாடு சென்றபோதெல்லாம் சைபுலை உடன் அழைத்துச் சென்றீர்களா?

ஆம். (உதவியாளர்கள்) இப்ராகிம் யாக்குப், காலிட் ஜாபார், சைபுல், ரகிமி இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் வருவார்கள். அது அவ்வப்போதைய நிலையைப் பொருத்தது. அது பற்றி மேல்விவரம் வேண்டாமே.

இந்த ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டை நீங்கள் அடியோடு மறுக்கிறீர்கள்?

அது அடிப்படையற்றது. பகைமை உணர்வுடன் கூறப்பட்டது.

ஊழல் போல் வேறு வகை குற்றச்சாட்டைக் கொண்டு வராமல் எதற்காக உங்கள் ஒழுக்கத்தைக் குறை சொல்லும் வகையில் ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்ப கொண்டு வர வேண்டும்?


அதற்கு (ஊழல் தொடர்பாக) அவர்களிடம் ஆதாரம் இல்லையே. ஆட்சியில் உள்ளவர்களின் செல்வத்தை, பங்குகளை, ஒப்பந்தங்களைப் பரிசோதனையிட ஆணையம் அமையுங்கள் என்று சவால் விடுத்தேன். அதை அவர்களால் செய்ய இயலவில்லை.

ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டின் காரணமாக உங்கள் ஆதரவாளர்களிடையே சந்தேக உணர்வுகள் தலைதூக்கும் என்று கவலை கொள்கிறீர்களா?

அதுதான் அவர்களின் நோக்கம். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. சொன்ன குற்றச்சாட்டைத் திரும்பச் சொல்வது. ஸ்டாலின், ஹிட்லர் எல்லாம் இதைத்தான் செய்தார்கள்.

ஆனால் ஒரு கதையை இட்டுக்கட்டினால், அது அம்பலமாகும்போது அதன் விளைவுகளை நீங்கள்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சைபுலை வேலைக்குச் சேர்த்தபோது அவரின் பின்னணியை ஆராயாதது உங்கள் அலுவலகம் செய்த தவறு.


ஆம். ஆனால் அவர் முழு நேர ஊழியராக சேர்க்கப்படவில்லை. அவர் தன்னார்வலராகத்தான் முதலில் சேர்க்கப்பட்டார். அப்போது (பாரிசானை) கடுமையாக விமர்சிப்பவராக இருந்தார். “அன்வாருக்காக உயிரை விடவும் தயார்” என்றெல்லாம் சொன்னார். அவர் எங்களைவிட்டுச் செல்லும் வரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. பகுதி நேர ஊழியருக்கான அலவன்ஸ் மட்டும்தான் கொடுத்து வந்தோம்.

ஆனால் மற்றவர்கள் அவரைப் பற்றிக் குறை சொன்னபோது நீங்கள் அதைக் காது கொடுத்து கேட்கவில்லையே?

அதுதான் என் குண இயல்பு. யுனிடென்னில் (தெனாகா நேசனல் பல்கலைக்கழகம்) இருந்தபோது மோசமாக இருந்தார், அவர் ஒரு இனவாதி, நஜிப்பின் ஆதரவாளர் என்றெல்லாம் யாராவது சொன்னால், “இரண்டாண்டுக்கு முன்னர் அப்படி இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்”, என்று கேட்பேன். அதுதான் என் இயல்பு (சிரிக்கிறார்).

இப்போது நினைத்துப் பார்க்கையில் அது ஒரு தவறு என்று தெரிகிறது. அவரின் பலகலைக்கழகத் தோழர்களும் வலைத்தளங்களும் கூறிய குறைகளை நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.

அப்போது நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால் - ஒரு நாளைக்கு முன் (கெஅடிலானில் சேர்வதற்கு) லண்டனில் உள்ள அன்வார் இப்ராகிம் மன்றத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இவருக்குமிடையில் வாக்குவாதம் நிகழ்ந்தது. இவர் (சைபுல்) அம்னோவைத் தற்காத்துப் பேசியிருக்கிறார். அதற்கு அடுத்த நாள் என் அலுவலக ஊழியரைச் (ரகிமி) சந்தித்து தாம் அன்வாரின் தீவிர ஆதரவாளர் என்று கூறினார். அதன்பின் கார் ஓட்டுனராக சேர்க்கப்பட்டார்.

சரி, என்ன செய்யப் போகின்றீர்கள்? குற்றச்சாட்டை எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?

போராடுவது என்று உறுதியுடன் இருக்கிறேன். இவர்கள் மகா மட்டமானவர்களாக இருக்கிறார்கள். நன்னெறி பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆசை.

அவர்களின் வண்டவாளங்களை அம்பலப்படுத்த வேண்டும். இதைக்(ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டை) காட்டி நிர்வாகம், பொருளாதாரம் போன்ற மையப் பிரச்னைகளை விட்டு கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார்கள். அதற்கு அனுமதிக்கக் கூடாது.

நன்றி : மலேசியா கினி (மலேசியா இன்று)

Read more...

பாலாவின் புதிய சத்திய பிரமாணத்தில் நஜீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது..!

>> Friday, July 4, 2008


பாலாவின் புதிய சத்திய பிரமாணம் பின்வருமாறு :

நான் பாலசுப்பிரமணியம் த/பெ பெருமாள் கீழ்காணும் சத்தியப் பிரமாணத்தில் தகவல்களை நேர்மைக்குப் புறம்பின்றி அறிவிக்கிறேன்.

1. நான் இதற்கு முன்பு அரச மலேசிய போலீஸ் படையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. போலீஸ் படையில் 'கான்ஸ்டெபலாக' 1981ஆம் ஆண்டு இணைந்து பின் 'லேன்ஸ் காப்பரலாக' பதவி உயர்வு பெற்று இறுதியாக 1998-ஆம் ஆண்டில் சிறப்புக் காவல்த்துறைப்படையில் பணியாற்றி வேலையை இராஜினாமா செய்தேன்.

2.போலீஸ் வேலையை துறந்தவுடன் தனிப்பட்ட துப்பறிவாளராக இன்று வரை வேலை செய்து வருகிறேன்.

3. சூலை மாதம் 1-ஆம் திகதியன்று நான் வெளியிட்ட சத்திய பிரமாணத்தில், பத்தி 8, 25, 28, 49 மற்றும் 50லிருந்து 52 வரை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

அ. 8. அல்தான்துயாவைப் பற்றி நான் அப்துல் ரசாக்கிடம் விசாரித்த பொழுது, அல்தான்துயா தமது தோழி எனவும், அவளை ஒரு முக்கியப் புள்ளி ஒருவர் தமக்கு அறிமுகப்படுத்தி வைத்து, பொருளாதார ரீதியில் அவளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆ. 25. இக்கலந்துரையாடல் நடைப்பெற்றச் சமயம், நான் தொடர்ந்து அப்துல் ரசாக்கிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அப்துல் ரசாக் என்னிடம் கூறியதாவது :

1) சிங்கப்பூரில் நடைப்பெற்ற வைர கண்காட்சி நிகழ்வு ஒன்றில், அல்தான்துயாவை தம்மிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர் நஜீப் துன் ரசாக்.

2) அல்தான்துயாவோடு தமக்கு உடலுறவு அனுபவங்கள் உள்ளதாக நஜீப் துன் ரசாக், அப்துல் ரசாக்கிடம் தெரிவித்தார்.

3) தற்போது தாம் வகிக்கும் துணைப் பிரதமர் பதவிக்கு பங்கம் ஏற்படும் என்ற அச்சத்தினாலும், அல்தான்துயாவிடமிருந்து தமக்கு ஏதும் மிரட்டல்கள் வந்துவிடக்கூடாது என்பதாலும், அவளை கவனிக்கும் பொறுப்பை அப்துல் ரசாக்கிடம், நஜீப் துன் ரசாக் ஒப்படைத்தார்.

4) நஜிப் துன் ரசாக்கும், அப்துல் ரசாக் பகிண்டாவும், அமீனாவும் பாரிஸ் நகரில் நடைப்பெற்ற விருந்து நிகழ்வில் ஒன்றாகவே இருந்துள்ளனர்.

5) நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் குத்தகை கிடைத்திட அல்தான்துயா பேருதவி புரிந்துள்ளதால், அமெரிக்க டாலர் 500,000ஐ தமக்குரிய பங்காகக் கொடுக்கும்படி அல்தான்துயா கேட்டுள்ளார்.

இ. 28. அமீனாவுடன் நான் பேசிக் கொண்டிருந்த பொழுது, அமீனா என்னிடம் கூறியதாவது :

1) அப்துல் ரசாக்கை தாம் நஜீப் துன் ராசாக்வுடன் சிங்கப்பூரில் சந்தித்ததாக கூறினார்.

2) அப்துல் ரசாக்கையும், நஜீப் துன் ரசாக்கையும் தாம் பாரிஸ் நகரில் விருந்து நிகழ்வு ஒன்றில் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

3) பாரிஸ் நகரில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் குத்தகையைப் பெற்றுத் தர உதவியதற்காக அல்தான்துயாவிற்கு அமெரிக்க டாலர் 500,000 பங்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டது.

4) அப்துல் ரசாக் தமக்கு மொங்கோலியாவில் வீடு வாங்கிக் கொடுத்ததாகவும், அதனை தமது அண்ணன் வங்கியீல் அடகு வைத்து விட்டதால் அதனை திரும்பப் பெறுவதற்கு பணம் தேவைப்படுகிறது எனக் கூறினார்.

5) தனது தாயார் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

6) அப்துல் ரசாக் தம்மை கொரியாவில் திருமணம் புரிந்துக் கொண்டதாகவும், தனது தாயார் கொரியா நாட்டைச் சார்ந்தவர் என்றும், தனது தந்தை மொங்கோலிய சீன கலப்புடையவர் என்றும் அவர் கூறினார்.

7) நான் அவளை அப்துல் ரசாக்கை சந்திக்க விடாமல் தடுத்தால், நஜீப் துன் ரசாக்கை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தர முடியுமா என என்னிடம் கேட்டாள்.

ஈ. 49. அதன் பின் என்னுடைய வாக்குமூலத்தை ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு வாங்கிக் கொண்டனர். எனக்குத் தெரிந்த அனைத்தையும், குறிப்பாக நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ளத் தொடர்பு உட்பட எல்லாவற்றையும் கூறினேன். ஆனால் இறுதியாக அறிக்கையில் கையொப்பமிடும் போது நான் நஜீப்பைப் பற்றிக் கூறிய விஷயங்கள் அங்கு இடம் பெற வில்லை. அவை நீக்கப்பட்டுவிட்டன.

50. ஷா ஆலாம் நீதிமன்றத்தில் அசீலா, சிருல், அப்துல் ரசாக் போன்றோரின் வழக்கு நடைப்பெற்ற பொழுது எனக்கு கிடைத்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தேன். ஆனால், நீதிமன்றத்தில் யாரும் நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பவில்லை.

51. அப்துல் ரசாக் கைதாகும் சமயம் நான் அவருடன் காலை 6.30 மணியளவில் அவரின் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்தேன். அப்பொழுது அப்துல் ரசாக் முந்தையா நாள் நஜீப்பிற்கு குறுந்தகவல் அனுப்பி தாம் கைதாகும் சூழ்நிலையில் இருப்பதை நம்பமுடியவில்லை என தெரிவித்ததாகவும், அதற்கு மறுபதில் ஏதும் வரவில்லை எனவும் அவர் கூறினார்.

52. காலை 7.30 மணியளவில் அப்துல் ரசாக்கிற்கு நஜீப்பிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அக்குறுந்தகவலை என்னிடமும், அப்துல் ரசாக்கின் வழக்கறிஞரிடமும் அப்துல் ரசாக் காட்டினார். அக்குறுந்தகவலில் "நான் போலீஸ் படைத் தலைவரை இன்று காலை 11 மணிக்கு சந்திக்கிறேன். பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும். சமாதானமாக இரு" என்று இருந்தது.



சூலை 1-ஆம் திகதியில் வெளியிடப்பட்ட சத்திய பிரமாணத்தில், 8, 25, 28, 49 மற்றும் 50லிருந்து 52 வரையிலான பத்திகளில் அடங்கிய தகவல்களை நான் மீட்டுக் கொள்கிறேன். அத்தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ. அப்துல் ரசாக் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னைச் சந்தித்து, அல்தான்துயாவை தமக்கு முக்கியப்புள்ளி ஒருவர் அறிமுகப்படுத்தியதாக கூறவில்லை.

ஆ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்துல் ரசாக், நஜீப் துன் ரசாக் அல்தான்துயாவோடு உடலுறவு வைத்துக் கொண்டதாக அவரிடம் கூறியதாக என்னிடம் கூறவில்லை.

இ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், நஜீப் துன் ரசாக் அல்தான்துயாவை பொருளாதார ரீதியில் கவனித்துக் கொள்ளுமாறு அப்துல் ரசாக்கிடம் கூறியதாக, அப்துல் ரசாக் என்னிடம் கூறவில்லை.

ஈ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்துல் ரசாக்கும், அல்தான்துயாவும் நஜீப்போடு பாரிஸ் நகரில் நடைப்பெற்ற விருந்து நிகழ்வில் ஒன்றாக இருந்ததாக என்னிடம் கூறவில்லை.

உ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அல்தான்துயா நீர்மூழ்கிக் குத்தகைக் கிடைத்திட உதவி புரிந்தமைக்காக அமெரிக்க டாலர் 500,000 கேட்பதாக என்னிடம் கூறவில்லை.

ஊ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்துல் ரசாக்கும்/ அல்தான்துயாவும் நஜீப்பை சிங்கப்பூரில் சந்தித்ததாக என்னிடம் கூறவில்லை.

எ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், நஜீப்பை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு அல்தான்துயா என்னிடம் கேட்கவில்லை.

ஏ. போலீஸ் விசாரணையின் போது நான் ஒருபோது நஜீப் துன் ரசாக் பெயரை பயன்படுத்தவில்லை. விசாரணை அறிக்கையில் கையொப்பமிடும்வேளையில் நான் கூறிய அனைத்து தகவல்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

ஐ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், அப்துல் ரசாக் கைதாவதற்கு முதல் நாள் நஜீப்பிற்கு குறுந்தகவல் அனுப்பியதாக என்னிடம் கூறவில்லை.

ஒ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்துல் ரசாக் நஜீப்பிற்கு குறுந்தகவல் அனுப்பியதாகவும், நஜீப் போலீஸ் படைத் தலைவரைச் சந்திக்கப்போவதாகவும், அதுவரையில் சமாதானமாக இருக்கக் கோரியதாக நஜீப் தன்னிடம் தெரிவித்ததாக அப்துல் ரசாக் என்னிடம் கூறவில்லை.

5. இதுபோக, நான் சூலை மாதம் 1-ஆம் திகதி வெளியிட்ட சத்திய பிராமாணம் முழுவதையும் மீட்டுக் கொள்கிறேன். காரணம், சூலை 1-ஆம் திகதியிடப்பட்ட சத்திய பிரமாணத்தை வெளியிட வற்புறுத்தப்பட்டேன்.

55) Statutory Declaration Act 1960. எனும் சட்டத்தின் கீழ் நான் சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மை என அறிவிக்கிறேன்.

பாலசுப்பிரமணியம் த/பெ பெருமாள்
சூலை 1,2008

பாலா முதலாவது சத்திய பிரமாணம் செய்வதற்கு வற்புறுத்தப்பட்டாரா, அல்லது புதிய சத்திய பிரமாணம் செய்வதற்கு மிரட்டப்பட்டாரா என்பது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்..!!!

Read more...

துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம் திடீர் பல்டி..!

நேற்று நடைப்பெற்ற நிருபர் கூட்டத்தில் பாலசுப்பிரமணியத்தின் சத்திய பிரமாணத்தை அன்வார் இபுராகிம் வெளியிட்டதைத் தொடர்ந்து இன்று அச்சத்திய பிரமாணத்தை தாம் மீட்டுக் கொள்வதாக பாலசுப்பிரமணியம் திடீர் பல்டி அடித்தார்.

அச்சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொள்வதை அடுத்து தாம் இன்னொரு சத்திய பிரமாணத்தை முக்கிய விடயங்களோடு வெளியிடவிருப்பதாக பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். கடந்த சூலை மாதம் 1-ஆம் திகதி வெளியான சத்திய பிரமாணப் பத்திரத்தை சிலரின் வற்புறுத்தலுக்கு ஆளானப் பிறகே தாம் வெளியிட்டதாக அவர் அறிவித்தார். யார் அவரை வற்புறுத்தியது என்பதனை அவர் குறிப்பிடவில்லை.

இவ்விடயம் தொடர்பாக இன்று அன்வார் இபுராகிம் நிருபர் கூட்டம் ஒன்றைக் கூட்டி விளக்கமளிப்பார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

பாலசுப்பிரமணியத்தின் இரண்டாவது சத்திய பிரமாணத்தில் நஜீப் துன் ரசாக் பெயர் இடம் பெறுமா? இல்லை என்பதுதான் பதில்...!!!

Read more...

"அல்தான்துயாவை அப்துல் ரசாக்கிற்கு அறிமுகப்படுத்தியவர் நஜீப் துன் ரசாக்!!!! - தனிப்பட்ட துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம் சத்தியப் பிரமாணம்..!!!

>> Thursday, July 3, 2008

மலேசியாக் கினி படச்சுருள்





நான் பாலசுப்பிரமணியம் /பெ பெருமாள் கீழ்காணும் சத்தியப் பிரமாணத்தில் தகவல்களை நேர்மைக்குப் புறம்பின்றி அறிவிக்கிறேன்.

1. நான் இதற்கு முன்பு அரச மலேசிய போலீஸ் படையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. போலீஸ் படையில் 'கான்ஸ்டெபலாக' 1981ஆம் ஆண்டு இணைந்து பின் 'லேன்ஸ் காப்பரலாக' பதவி உயர்வு பெற்று இறுதியாக 1998-ஆம் ஆண்டில் சிறப்புக் காவல்த்துறைப்படையில் பணியாற்றி வேலையை இராஜினாமா செய்தேன்.

2.போலீஸ் வேலையை துறந்தவுடன் தனிப்பட்ட துப்பறிவாளராக இன்று வரை வேலை செய்து வருகிறேன்.

3. 2006ஆம் ஆண்டில் சூன் மாதத்திற்கும் சூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அப்துல் ரசாக் பகிண்டா, அவர் பணி புரியும் 'பங்குனான் கெத்தா அஸ்லி' ஜாலான் அம்பாங்கில் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அவரை சில அனாமதேயர்களின் தொந்தரவிலிருந்து பாதுகாக்க என்னை 10 நாட்கள் நியமித்தார்.

4. 2 1/2 நாட்கள் கழித்து அப்துல் ரசாக்கிடமிருந்து முறையான கட்டளைகள் ஏதும் எனக்கு பிறப்பிக்கப்படாததால், அவருடனான வேலையை விட்டு விட்டேன்.

5. இருப்பினும் அக்டோபர் 5-ஆம் திகதி 2006-ல் என்னை மீண்டும் பாதுகாப்புப் பணியில் அப்துல் ரசாக் நியமித்தார். அடிக்கடி .எஸ்.பி தான் எனக் கூறிக் கொண்டு ஒரு சீனர் என நம்பப்படும் அனாமதேயப் பேர்வழி ரசாக்கிற்கு கைப்பேசியின் மூலம் பணம் கேட்டு மிரட்டி வருவதால் நான் மீண்டும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டேன். பின்னாளில் அந்த அனாமதேயப் பேர்வழி மொங்கோலிய அழகி அல்தான்துயாவினால் பணியில் அமர்த்தப்பட்ட ஆங் என அழைக்கப்படும் தனிப்பட்ட துப்பறிவாளர் எனத் தெரிந்துக் கொண்டேன்.

6. இதுப்போன்ற மிரட்டல் அழைப்புகள் வருவதற்குக் காரணம் அல்தான்துயாதான் என்பதனை அப்துல் ரசாக் அறிந்து வைத்திருந்ததாகவும், கூடிய விரைவில் அல்தான்துயா மலேசியாவிற்கு வந்து தம்மை தொடர்புக் கொள்வதற்குச் சாத்தியம் இருப்பதாகவும் அவர் என்னிடம் கூறியிருந்தார்.

7. மொங்கோலிய மந்திரவாதியால் அல்தான்துயாவிற்கு சக்தி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்துல் ரசாக்கினால் அல்தான்துயா முகத்தைக் காண இயலாது எனவும் அவரிடம் கூறப்பட்டதாக என்னிடம் கூறினார்.

8. அல்தான்துயாவைப் பற்றி நான் அப்துல் ரசாக்கிடம் விசாரித்த பொழுது, அல்தான்துயா தமது தோழி எனவும், அவளை ஒரு முக்கியப் புள்ளி ஒருவர் தமக்கு அறிமுகப்படுத்தி வைத்து, பொருளாதார ரீதியில் அவளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

9. .எஸ்.பி தான் எனும் அனாமதேயப் பேர்வழியின் மிரட்டல் அழைப்புகள் தொடர்பாக உடனடியாக காவல் நிலையத்தில் புகார் ஒன்று செய்யுமாறு அப்துல் ரசாக்கை கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்த விடயத்தில் பல முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் புகார் கொடுக்க வேண்டாம் எனக் கூறி அப்துல் ரசாக் மறுத்து விட்டார்.

10. அல்தான்துயா ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்றும் பிறரை வசீகரப்படுத்துவதில் அவள் மிகவும் கெட்டிக்காரி என்றும் அப்துல் ரசாக் என்னிடம் கூறினார். அல்தான்துயா பண விஷயத்தில் மிகவும் கராராக நடந்துக் கொள்வாள் என்றும், தாம் அவளுக்கு மொங்கோலியாவில் சொத்துகள் வாங்கிக் கொடுத்ததாக அப்துல் ரசாக் என்னிடம் மேலும் கூறினார்.

11. அதனையடுத்து அப்துல் ரசாக் என்னிடம் கைப்பேசியைக் கொடுத்து, பண மிரட்டல் தொடர்பான சில ஒலிப்பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை (voice mail) என்னைக் கேட்கச் சொன்னார். கொடுக்கவேண்டியப் பணம் வராவிடில், அப்துல் ரசாக் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அப்துல் ரசாக்கின் மகள் ரொவேனாவை கடத்திவிடுவேன் என்றும் அந்த பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் அச்சுறுத்தின.

12. அதனால் அப்துல் ரசாக் பகிண்டாவின் மகள் ரொவேனாவையும் நான் பாதுகாக்க நேரிட்டது.

13. அக்டோபர் 9-ஆம் திகதி 2006-ல் காலை மணி 9.30க்கு, அப்துல் ரசாக்கிடமிருந்து எனக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. அல்தான்துயா தற்போது தமது அலுவலகத்தில் இருப்பதாகவும், உடனடியாக என்னை அங்கு வருமாறும் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டார். அச்சமயம் நான் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததால், என்னுடைய உதவியாளர் சுராஸ் என்பவரை அப்துல் ரசாக்கின் அலுவலகத்திற்குச் செல்லுமாறு பணித்துவிட்டு நான் சற்று தாமதமாகச் சென்றேன். அப்துல் ரசாக்கின் அலுவலகத்தில் காணப்பட்ட அல்தான்துயா மற்றும் அவளுடைய இரு மொங்கோலிய தோழிகளையும் கண்ட சுராஸ் நிலைமையை சமாளித்து அம்மூவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு செய்துவிட்டார். ஆனால் வெளியேறுவதற்கு முன் அல்தான்துயா 'மலாயா தங்கும் விடுதியின்' பெயர் பொறிக்கப்பட்ட துண்டுச் சீட்டில் தம்மை உடனடியாக கைப்பேசியின்வழி தொடர்புக் கொள்ளுமாறு ( கைப்பேசி எண்கள் எழுதப்பட்டிருந்தது) தங்கும் விடுதியின் அறை எண் எழுதி அப்துல் ரசாக்கின் அலுவலகத்தில் அக்குறிப்பை விட்டுச் சென்றுள்ளார்.

14. அன்றைய தினம் சுராஸை சந்தித்த அல்தான்துயா தம்மை 'அமீனா' என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், அவள் தனது காதலன் அப்துல் ரசாக்கை சந்திக்க வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறாள்.

15. இருப்பினும் மறுநாள் மதியம் 12 மணியளவில் இம்மூன்று மொங்கோலிய பெண்களும் அப்துல் ரசாக் பணிபுரியும் 'பங்குனான் கெத்தா அஸ்லீ' ஜாலான் அம்பாங்கிற்கு மீண்டும் வந்து விட்டார்கள். அவர்கள் கட்டிடத்தினுள் நுழையவில்லை, ஆனால் மீண்டும் சுராஸிடம் தாங்கள் அமீனாவின் காதலன் அப்துல் ரசாக்கை சந்திக்க வந்திருப்பதாகக் கூறினார்கள்.

16. அக்டோபர் 11-ஆம் திகதி 2006-ல் அமீனா அப்துல் ரசாக்கின் அலுவலகத்திற்கு தனியாளாக வந்து என்னிடம் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து அப்துல் ரசாக்கிடம் கொடுத்து விடுமாறு கேட்டுக் கொண்டார். நானும் அப்படியே செய்தேன். அப்துல் ரசாக் என்னிடம் அத்துண்டுச் சீட்டில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை என்னிடம் காட்டினார். உடனடியாக தம்மை தொடர்புக் கொள்ளுமாறு அத்துண்டுச் சீட்டில் அமீனா எழுதியிருந்தார்.


17. தொடர்ச்சியான மிரட்டல், தொந்தரவு வராமல் இருப்பதற்கு, அப்துல் ரசாக்கை நான் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்து விடுமாறு மீண்டும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கு அவர், அல்தான்துயாவிடம் நிச்சயம் பணம் தட்டுப்பாடு நிலவும் என்றும், கூடிய விரைவில் அவள் மொங்கோலியா சென்றுவிடுவாள் என்றும் கூறினார்.

18. இதற்கிடையில் சுராஸை நான் மலாயா தங்கும் விடுதியின் வெளியே அல்தான்துயாவையும் அவளது தோழிகளையும் கண்காணிப்பதற்கு ரோந்துப் பணியில் அமர்த்தினேன். ஆனால், விரைவில் சுராஸை அடையாளம் கண்டு விட்ட அம்மூவரும் சுராஸிடம் நெருங்கிப் பழகி நண்பர்களாகிவிட்டனர். இதனால், சுராஸும் அவர்களுடைய தங்கும் விடுதி அறையில் சில இரவுகளை கழித்துள்ளான்.

19. சுராஸ் அல்தான்துயாவிடம் நெருங்கிப் பழகும் விவகாரம் அறிந்த அப்துல் ரசாக், உடனடியாக சுராஸை அத்தங்கும் விடுதியிலிருந்து வெளியேற்றுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்.

20. அக்டோபர் 14-ஆம் திகதி 2006ல், அமீனா மீண்டும் அப்துல் ரசாக்கை சந்திக்க டாமான்சாரா ஹைட்ஸ்சில் அமைந்திருக்கும் அவரது இல்லத்திற்கு வந்துவிட்டாள். அச்சமயம் நான் அங்கு இல்லை. அப்துல் ரசாக் என்னை கைப்பேசியின்வழி தொடர்புக் கொண்டு விஷயத்தைச் சொல்லவும் நான் அவர் இல்லத்திற்கு விரைந்தேன். நான் அங்கு சென்றடைந்த சமயம், அமீனா அப்துல் ரசாக் இல்லத்தின் வெளிக்கதவினருகே நின்றுக் கொண்டு "ரசாக்! பாஸ்டர்ட்! வெளியே வா..!" என கத்திக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவளை நான் சமாதானப்படுத்த முயன்றும் அவள் விடுவதாய் இல்லை, எனவே நான் போலீசுக்கு தகவல் கொடுத்ததும், போலீசாரின் இரு ரோந்து வாகனம் அங்கு வந்தது. நான் நடந்தவற்றை காவல்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததும், அவர்கள் அமீனாவை 'பிரிக்ஃபீல்ட்ஸ்' காவல் நிலையத்திற்குக் கொண்டுச் சென்றனர்.

21. நான் போலீசாரின் ரோந்து வாகனத்தை வாடகைக் காரின் மூலம் பின்தொடர்ந்துச் சென்றேன். அதற்கிடையில் அப்துல் ரசாக்கையும் அவரது குடும்ப வழக்கறிஞர் டிரானையும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் செய்யுமாறு கேட்டேன், அவர்களிருவரும் மறுத்துவிட்டனர்.

22. நான் 'பிரிக்ஃபீல்ட்ஸ்' காவல் நிலையத்தில் இருந்தபோது, அமீனா நியமித்த தனிப்பட்ட துப்பறிவாளர் ஆங் அங்கு வந்துச் சேர்ந்தார். அதன்பின் நானும் அவரும் கலந்துரையாடினோம். பாரிஸ் நகரில் குத்தகை ஒன்று கிடைத்திட உதவி புரிந்த அல்தான்துயாவிற்காக, அப்துல் ரசாக் அமெரிக்க டாலர் 500,000.00, மற்றும் மொங்கோலியாவிற்கான விமானப் பயணச் சீட்டு மூன்றையும் ஏற்பாடு செய்து தருமாறு ஆங் கேட்டுக் கொண்டார்.

23. அச்சமயம் அமீனா சமாதானமடைந்திருந்தார். 'பிரிக்ஃபீல்ட்ஸ்' காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவல்த்துறை அதிகாரி, இப்பிரச்சனையை வெளியில் சுமூகமாகப் பேசித் தீர்வுக் கண்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

24. அதன்பின் ஆங் என்னிடம் தெரிவித்த விஷயத்தை அப்துல் ரசாக்கிடம் தெரிவித்தேன், அதோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க எனக்கு யாரும் உதவ முன்வராததைக் குறித்து மனவேதனை அடைவதாகவும் அப்துல் ரசாக்கிடம் தெரிவித்தேன். அதன்பின் வெகுநேரமாக அப்துல் ரசாக்கோடு கலந்துரையாடிவிட்டு, இப்பணியிலிருந்து நான் வெளியேறுவதாக அவரிடம் தெரிவித்தேன்.

25. இக்கலந்துரையாடல் நடைப்பெற்றச் சமயம், நான் தொடர்ந்து அப்துல் ரசாக்கிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அப்துல் ரசாக் என்னிடம் கூறியதாவது :

1) சிங்கப்பூரில் நடைப்பெற்ற வைர கண்காட்சி நிகழ்வு ஒன்றில், அல்தான்துயாவை தம்மிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர் நஜீப் துன் ரசாக்.

2) அல்தான்துயாவோடு தமக்கு உடலுறவு அனுபவங்கள் உள்ளதாக நஜீப் துன் ரசாக், அப்துல் ரசாக்கிடம் தெரிவித்தார்.

3) தற்போது தாம் வகிக்கும் துணைப் பிரதமர் பதவிக்கு பங்கம் ஏற்படும் என்ற அச்சத்தினாலும், அல்தான்துயாவிடமிருந்து தமக்கு ஏதும் மிரட்டல்கள் வந்துவிடக்கூடாது என்பதாலும், அவளை கவனிக்கும் பொறுப்பை அப்துல் ரசாக்கிடம், நஜீப் துன் ரசாக் ஒப்படைத்தார்.

4) நஜிப் துன் ரசாக்கும், அப்துல் ரசாக் பகிண்டாவும், அமீனாவும் பாரிஸ் நகரில் நடைப்பெற்ற விருந்து நிகழ்வில் ஒன்றாகவே இருந்துள்ளனர்.

5) நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் குத்தகை கிடைத்திட அல்தான்துயா பேருதவி புரிந்துள்ளதால், அமெரிக்க டாலர் 500,000ஐ தமக்குரிய பங்காகக் கொடுக்கும்படி அல்தான்துயா கேட்டுள்ளார்.

26. அக்டோபர் 19, 2006ல், நான் அப்துல் ரசாக்கின் இல்லத்திற்கு இரவு நேரப் பணிக்காகச் சென்றிருந்தேன். என்னுடைய காரை வழக்கம்போல் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்தேன். அச்சமயம் ஒரு மஞ்சள் நிற பெர்டானா வாடகைக் கார் என் முன்னால் கடந்துச் சென்றது. காரினுள் 3 பெண்கள் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது, அவர்களில் ஒருத்தி அமீனா. வாடகைக்கார் சுற்றி வளைத்து நேராக வீட்டின் முன் வந்து நின்றது. காரின் கண்ணாடி இறக்கப்பட்டது, அம்மூன்றுப் பெண்மணிகளும் என்னிடம் "ஹேப்பி தீபாவளி" என்றனர். அதன்பின் வாடகைக் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.

27. 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே வாடகைக் கார் வீட்டின் முன் வந்து நின்றது. இம்முறை அமீனா மட்டும் வாடகைக் காரினுள் அமர்ந்திருந்தாள். வாடகைக் காரினிலிருந்து இறங்கிய அமீனா நேரே என்னிடம் வந்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால். நான் அப்துல் ரசாக்கிற்கு "அமீனா இங்கே இருக்கிறாள்" என்று குறுந்தகவல் அனுப்பினேன். மறுமொழியாக அப்துல் ரசாக்கின் குறுந்தகவல் " என் ஆட்கள் வரும்வரை அவளுடன் சற்று நேரம் காலம் கடத்து" என வந்தது.

28. அமீனாவுடன் நான் பேசிக் கொண்டிருந்த பொழுது, அமீனா என்னிடம் கூறியதாவது :

1) அப்துல் ரசாக்கை தாம் நஜீப் துன் ராசாக்வுடன் சிங்கப்பூரில் சந்தித்ததாக கூறினார்.

2) அப்துல் ரசாக்கையும், நஜீப் துன் ரசாக்கையும் தாம் பாரிஸ் நகரில் விருந்து நிகழ்வு ஒன்றில் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

3) பாரிஸ் நகரில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் குத்தகையைப் பெற்றுத் தர உதவியதற்காக அல்தான்துயாவிற்கு அமெரிக்க டாலர் 500,000 பங்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டது.

4) அப்துல் ரசாக் தமக்கு மொங்கோலியாவில் வீடு வாங்கிக் கொடுத்ததாகவும், அதனை தமது அண்ணன் வங்கியீல் அடகு வைத்து விட்டதால் அதனை திரும்பப் பெறுவதற்கு பணம் தேவைப்படுகிறது எனக் கூறினார்.

5) தனது தாயார் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

6) அப்துல் ரசாக் தம்மை கொரியாவில் திருமணம் புரிந்துக் கொண்டதாகவும், தனது தாயார் கொரியா நாட்டைச் சார்ந்தவர் என்றும், தனது தந்தை மொங்கோலிய சீன கலப்புடையவர் என்றும் அவர் கூறினார்.

7) நான் அவளை அப்துல் ரசாக்கை சந்திக்க விடாமல் தடுத்தால், நஜீப் துன் ரசாக்கை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தர முடியுமா என என்னிடம் கேட்டாள்.

29. சுமார் 15 நிமிடங்கள் அமீனாவோடு பேசிய பிறகு, சிவப்பு நிற 'புரோட்டோன் ஏரோபேக்' கார் ஒன்று வந்தது. அக்காரில் ஒரு பெண்மணி இரண்டு ஆண்கள் தென்பட்டார்கள். எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது வந்தவர்கள் லேன்ஸ் காப்பரல் ரோஹானிசா, அசீலா அட்ரீ மற்றும் சிருல் அஸஹார் என்று. அம்மூவரும் சாதாரண உடையில் காணப்பட்டார்கள். அசீலா என்னை நோக்கி வந்தார், மற்ற இருவரும் காரில் அமர்ந்திருந்தனர்.

30. அசிலா என்னிடம், அல்தான்துயாவைக் காட்டி "இவள்தான் அமீனாவா?" எனக் கேட்டதற்கு நான் "ஆம்" என்றேன். அதன்பின் அவர் அங்கிருந்து சற்று தூரமாக நடந்துச் சென்று கைப்பேசியில் சில அழைப்புகளைச் செய்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
10 நிமிடங்கள் கழித்து ஒரு மலாய்க்காரர் ஓட்டி வந்த நீல நிற புரோட்டோன் சாகா எங்களை கடந்துச் சென்றது. கடக்கும் வேளை கார் கண்ணாடி இறக்கப்பட்டு, அவ்வோட்டுநர் எங்களை பார்த்த வண்ணம் சென்றார்.

31. அதன் பின் அசிலா என்னிடம், "அமீனாவை நாங்கள் இங்கிருந்து கொண்டுச் செல்கிறோம்" எனக் கூறினார். நான் அமீனாவிடம், அவளைக் கைது செய்வதற்கு போலீஸ் அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினேன். சிவப்பு நிற புரோட்டோன் காரில் அமர்ந்திருந்த இருவரும் பின் வெளியேறி இருக்கைகளை மாற்றிக் கொண்டனர். ரொஹானிசாவும் அமினாவும் பின் இருக்கையில் அமர இரு ஆண்களும் முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். அவர்கள் அங்கிருந்துச் சென்றனர். அதுவே நான் அமீனாவைக் கடைசியாகப் பார்த்த தருணம்.

32. இச்சம்பவம் நடக்கையில் அப்துல் ரசாக் தமது இல்லத்தில் இல்லை.

33. அக்டோபர் 19,2006ற்குப் பிறகு நான் தொடர்ந்து அப்துல் ரசாக்கின் டாமான்சாரா ஹைட்ஸ் இல்லத்தில் இரவு 7 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணிவரை பணியில் இருந்தேன். அக்டோபர் 20-ஆம் திகதி காலையில் அப்துல் ரசாக்கிற்கு அமினாவின் உறவினர்ப் பெண்ணான ஏமி மிரட்டல் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார்.

34. அக்டோபர் 20-ஆம் திகதி இரவு, அமீனாவின் மொங்கோலிய தோழிகளிருவரும் அப்துல் ரசாக்கின் வீட்டிற்கு வந்து அமீனாவைப் பற்றி விசாரித்தனர். நான் அமீனாவை காவல்த்துறையினர் கைது செய்து விட்டதாகக் கூறினேன்.

35. இச்சம்பவம் நடந்து சில நாட்களுக்குப்பின் அமீனாவின் மொங்கோலிய தோழிகளிருவரும், திரு.ஆங் மற்றும் ஏமி என்றழைக்கப்படும் அமீனாவின் உறவினர்ப் பெண்ணுடன், அப்துல் ரசாக்கின் வீட்டிற்கு வந்தனர். அமீனா எங்கே என்றுக் கேட்டவர்கள், அமீனா அப்துல் ரசாக்கீன் வீட்டில்தான் இருக்க வேண்டும் எனவும் சந்தேகித்தனர்.

36. அச்சமயம் வாக்குவாதம் நடைப்பெற, நான் போலீசாரை அழைத்தேன். சற்று நேரத்தில் அங்கே ரோந்து வாகனத்தில் போலீசார் வந்திறங்கினர். அதனையடுத்து மற்றொரு போலீஸ் ரோந்து வாகனமும் அங்கே வந்தது. அக்காரில் 'டாங் வாங்கி' காவல் நிலைய போலீஸ் அதிகாரி வந்திருந்தார். அமீனா காணாமல் போனதற்கு அடுத்து ஏமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், அப்புகாரை விசாரிக்கும் பொறுப்பதிகாரி வந்திருந்தார்.

37. நான் அப்துல் ரசாக்கிற்கு கைப்பேசியின்வழி தொடர்புக் கொண்டு, அவரின் வீட்டின் முன் நடக்கும் சம்பவங்களை தெரியப்படுத்தினேன். அவர் உடனே டி.சி.பி மூசா சஃப்ரியத் தொடர்புக் கொண்டு, பின் மீண்டும் என்னை கைப்பேசியின்வழி அழைத்தார். சற்று நேரத்தில் டி.சி.பி சஃப்ரி என்னை கைப்பேசியின்வழி தொடர்பு கொள்வார் என்றும், கைப்பேசியை 'டாங் வாங்கி' காவல் நிலைய போலீஸ் அதிகாரியிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

38. அதன் பின் டி.சி.பி சஃப்ரியிடமிருந்து எனக்கு கைப்பேசி அழைப்பு வந்தது. கைப்பேசியை 'டாங் வாங்கி' போலீஸ் அதிகாரியிடம் நீட்டினேன். அவர்களிருவரும் 3-4 நிமிடங்களுக்கு கலந்துரையாடினர். அதன்பின், 'டாங் வாங்கி' போலீஸ் அதிகாரி மொங்கோலியப் பெண்களை அங்கிருந்து கலைந்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். நாளை தம்மை காவல் நிலையத்தில் வந்து சந்திக்குமாறு அப்பெண்களைப் பணித்தார்.

39. அக்டோபர் 24-ஆம் திகதி 2006ல், மொங்கோலிய பெண்களின் தொடர்ச்சியான மிரட்டல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், சில ஆலோசனைகளுக்குப் பிறகு அப்துல் ரசாக் பகிண்டா என்னை அவருடன் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு அழைத்தார்.

40. இதற்குமுன் ஏமி எனக்கு குறுஞ்செய்தியின் மூலம், அவள் தாய்லாந்து செல்லவிருப்பதாகவும், அங்குள்ள மொங்கோலிய தூதரகத்தில் அமீனா காணாமல் போன விவகாரம் தொடர்பாக புகார் கொடுக்கப் போவதாகவும் கூறியிருந்தாள். இதேப் போன்றதொரு குறுந்தகவலையும் அப்துல் ரசாக்கிற்கு அவள் அனுப்பியிருந்தாள். இதன் அடிப்படையீல்தான் போலீஸ் புகார் ஒன்றைச் செய்ய அறிவுரைக்கப்பட்டதாக அப்துல் ரசாக் என்னிடம் கூறினார்.

41. அப்துல் ரசாக் என்னிடம், டி.எஸ்.பி மூசா சஃப்ரி, பிரிக்ஃபீல்ட்ஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி டி.எஸ்.பி இட்ரீஸை தமக்கு அறிமுகப்படுத்தியதாகவும், டி.எஸ்.பி இட்ரீஸ் தமக்கு .எஸ்.பி தோனியை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

42. அப்துல் ரசாக் பகிண்டா பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையத்தில் .எச்.பி தோனி முன்னிலையில் புகார் அளிக்கும் பொழுது, இவ்விஷயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தயார் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அப்துல் ரசாக் தாம் வெளிநாட்டிற்குச் செல்ல விருப்பதால் மறுத்துவிட்டார். ஆனால் தாம் அறிக்கை ஒன்றைத் தயார் செய்து 'பேன் டிரவில்' சேமித்துக் கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் அப்படீ செய்யவில்லை என்பது .எஸ்.பி தோனி சொல்லி எனக்குத் தெரிந்தது.

43. இருப்பினும் .எஸ்.பி தோனி மறுநாள் என்னுடைய வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டார்.

44. நான் அப்துல் ரசாக்கின் கீழ் வேலை செய்வதை அக்டோபர் 26-ஆம் திகதியோடு நிறுத்திக் கொண்டேன். அவர் அன்றைய தினம் தனியாக ஹாங் காங்கிற்கு சென்றுவிட்டார்.

45. நவம்பர் மாத மத்தியில், எனக்கு ஜாலான் ஹங் துவா மத்திய காவல்த்துறை அலுவலகத்திலிருந்து .எஸ்.பி தோனியின் அழைப்பு வந்தது. அவர் அமீனா வழக்குத் தொடர்பாக என்னை சந்திக்க வேண்டும் எனக் கூறினார். அங்கு நான் சென்றதும் உடனடியாக குற்றத் தடுப்புச் சட்டம் 506ன் கீழ் கைது செய்யப்பட்டேன்.

46. கைதாகி தடுப்புக் காவலில் 5 நாட்கள் வைக்கப்படுவதாக அறிவித்தார்கள். ஆனால் மூன்றாவது நாள் நான் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

47. 2006ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், D9 என அழைக்கப்படும் மத்திய காவல்த்துறை அலுவலகத்தின் ஒரு பிரிவில் இருந்து, துப்பறிவாளர் ஒருவர் என்னை ஹங் துவா மத்திய காவல்த்துறை அலுவலகத்திற்கு அழைத்துவரப் பணிக்கப்பட்டார்.

48. அதன் பின் புக்கிட் அமானுக்கு என்னை மாற்றம் செய்தனர். அங்கே என்னை விசாரிக்கத் தொடங்கினர். அப்துல் ரசாக்கின் கைப்பேசியிலிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தியான " என் ஆட்கள் வரும்வரை அவளுடன் சற்று நேரம் காலம் கடத்து" எனும் குறுந்தகவல் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டனர். இந்தக் குறுந்தகவல் அப்துல் ரசாக்கின் கைப்பேசியின்வழி பெறப்பட்டதைத் தெரிந்துக் கொண்டேன்.

49. அதன் பின் என்னுடைய வாக்குமூலத்தை ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு வாங்கிக் கொண்டனர். எனக்குத் தெரிந்த அனைத்தையும், குறிப்பாக நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ளத் தொடர்பு உட்பட எல்லாவற்றையும் கூறினேன். ஆனால் இறுதியாக அறிக்கையில் கையொப்பமிடும் போது நான் நஜீப்பைப் பற்றிக் கூறிய விஷயங்கள் அங்கு இடம் பெற வில்லை. அவை நீக்கப்பட்டுவிட்டன.

50. ஷா ஆலாம் நீதிமன்றத்தில் அசீலா, சிருல், அப்துல் ரசாக் போன்றோரின் வழக்கு நடைப்பெற்ற பொழுது எனக்கு கிடைத்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தேன். ஆனால், நீதிமன்றத்தில் யாரும் நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பவில்லை.

51. அப்துல் ரசாக் கைதாகும் சமயம் நான் அவருடன் காலை 6.30 மணியளவில் அவரின் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்தேன். அப்பொழுது அப்துல் ரசாக் முந்தையா நாள் நஜீப்பிற்கு குறுந்தகவல் அனுப்பி தாம் கைதாகும் சூழ்நிலையில் இருப்பதை நம்பமுடியவில்லை என தெரிவித்ததாகவும், அதற்கு மறுபதில் ஏதும் வரவில்லை எனவும் அவர் கூறினார்.

52. காலை 7.30 மணியளவில் அப்துல் ரசாக்கிற்கு நஜீப்பிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அக்குறுந்தகவலை என்னிடமும், அப்துல் ரசாக்கின் வழக்கறிஞரிடமும் அப்துல் ரசாக் காட்டினார். அக்குறுந்தகவலில் "நான் போலீஸ் படைத் தலைவரை இன்று காலை 11 மணிக்கு சந்திக்கிறேன். பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும். சமாதானமாக இரு" என்று இருந்தது.

53. அதன்பின், அன்றைய தினமே காலையில் அப்துல் ரசாக் பகிண்டா தமது அலுவலகம் அமைந்துள்ள 'பங்குனான் கெத்தா அஸ்லி' ஜாலான் அம்பாங்கில் கைதாகிய விஷயம் எனக்குத் தெரிய வந்தது.

54. நான் செய்த சட்டப்பூர்வமான அறிவிப்பின் காரணம் :

1) அல்தான்துயா கொலை வழக்கின் விசாரணையை அதிகாரத்துவத்தில் உள்ளவர்கள் முறையாக செயல்படுத்தாது இருப்பது கண்டு வேதனை அடைவதால்.

2) கைக்கூலிகளை மட்டும் மையமாக வைத்து கொலை வழக்கை திசைத்திருப்பப் பார்க்கும் இவ்வழக்கில், முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதற்காக.

3) மீண்டும் இவ்வழக்கு தொடர்பாக மூடப்பட்ட கோப்புகளை தூசி தட்டி எடுத்து புதிய ஆதாரங்களோடு முறையான விசாரணையை அதிகாரத்தில் உள்ளவர்கள் நடத்த வேண்டும் என்பதற்காக.

4) கடந்த 17 வருடங்களாக அரச மலேசியப் போலீஸ் படையில் பணிப்புரிந்த அனுபவத்தின் பேரில் என்னால் கூறிப்பிட்டு ஒன்றைச் சொல்ல முடியும். மேலிடத்தின் பிரத்தியேஎக உத்தரவின்றி, எந்த ஒரு போலிஸ் அதிகாரியும் ஒருவரின் தலையை துப்பாக்கியால் சுட்டு, உடலில் வெடிமருந்து வைத்து வெடித்துவிடக் கூடிய அதிகாரம் கிடையாது என்பதனால்.

5) குற்றம் சுமத்தப்பட்டவர்கள், குறிப்பாக அசிலாவும் சீருலும் வழக்கு மன்றத்தில் சத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். காரணம் சத்தியம் யார் முன்னிலையில் செய்கிறார்களே அவர்களே, குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்களுக்கு பேச வேண்டியதைக் கற்றுக் கொடுப்பதால்.

55) Statutory Declaration Act 1960. எனும் சட்டத்தின் கீழ் நான் சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மை என அறிவிக்கிறேன்.

பாலசுப்பிரமணியம் த/பெ பெருமாள்
சூலை 1,2008

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP