ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை (தொடர்ச்சி)

>> Tuesday, April 20, 2010



முதல் பாகம் : ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை

பல்வகை திறன்களைக் கைவரப் பெறாத நிலையில், குறைந்த சேமிப்பை கொண்டு தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த தோட்டப்புற சமூகத்தினர், நகர்ப்புறங்களில் ஆங்காங்கே பெருமளவில் புறம்போக்கு நிலங்களிலுள்ள குடிசைகளிலும் மலிந்த விலை வீடுகளிலும் வாழத் தொடங்கினர். இச்சமூகத்தினரில் பெரும்பான்மையினர் கீழ் நிலையிலான தொழில்களில் ஈடுபட்டுவந்ததோடு மட்டுமல்லாது கிடைக்கும் குறைந்த வருமானத்திற்குக்கூட அந்நியத் தொழிலாளர்களுடன் போட்டிப் போடும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களில் இளையோர்கள் பலர் புதிய நகர் வாழ்க்கைச் சூழலிலிருந்து அந்நியப்பட்டு நிற்பதாக கருதி வந்தனர். குறைந்த கல்வி மற்றும் சரியான தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் அவர்களில் சிலர் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

ஆகமொத்தத்தில், மலேசியர்களின் சராசரி வருமான ஈட்டுத் தொகையிலிருந்து 30 சதவிகிதம் மட்டுமே வருமானமாக ஈட்டும் ஏழை இந்தியர்களை இரு வகுப்பாகப் பிரிக்கலாம். முதல் வகுப்பைச் சார்ந்தவர்கள், தோட்டப்புறங்களில் வசித்துக்கொண்டும் அங்கேயே தொழில் செய்துகொண்டும் இருப்பவர்களாவர். இந்த வகுப்பினர் எந்தவொரு அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்களிலும் இணைக்கப்படாதவர்களாவர். இரண்டாம் வகுப்பைச் சார்ந்தவர்கள், ஆரம்ப வாழ்க்கையை ரப்பர் தோட்டங்களில் தொடங்கி தற்போது நகர்ப்புறங்களில் அல்லது நகர்ப்புற அருகில் வசித்து தொழில் புரிந்து வருபவர்களாவர். இக்கட்டான சூழ்நிலையிலுள்ள ஏழை நகர்ப்புற இந்தியர்களும் மற்றும் பிற இன நகர்ப்புற ஏழைகளுமே ஒன்பதாவது மலேசிய திட்டத்தின்கீழ் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய வகுப்பினர் ஆவர்.


இவ்விரு வகுப்பினரும் எதிர்நோக்கிவரும் இக்கட்டான சமூகப் பொருளாதார பிரச்சனைகளை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருந்தபோதிலும், இச்சமூகத்தினரை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் திட்டங்களையோ அல்லது மானிய ஒதுக்கீடுகளையோ போதுமானதாக அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. இச்சமூகத்தின் எதிர்ப்பார்ப்புகள் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டியது அவசியமாகிறது. புறநகர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் சிறப்புக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணித்திட்டங்கள் ஆகியன இவர்களை இலக்காகக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும். இச்சமூகத்தினர் பலடனடையும் வகையில் புதிய திட்டங்களானது செயல்வடிவம் கொள்வதை உறுதிச் செய்தலும் திட்ட வளர்ச்சி குறித்த அளவீடும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே சமயத்தில் முறையான செயலாக்கம் மற்றும் அமுலாக்கக் கண்காணிப்பு திட்ட வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.

மலேசிய இந்திய சிறுபான்மையினரை நாட்டின் முக்கிய வளர்ச்சித் திட்டத்தில் பங்கெடுக்கவைக்கும் முக்கியத் திட்டங்களை பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம் முன்வைக்கின்றது. நாட்டின் முக்கியத் துறைகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிதி ஒதுக்கீடுகள் கொண்டுவரப்பட வேண்டும். அதோடு, அமைச்சின் நேரடிப் பார்வையில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் திட்டங்கள் பாதிக்கப்பட்ட இந்திய சமூகத்தைச் சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டும். தோட்டப்புறங்கள் அருகிலுள்ள கையிருப்பு நிலங்களை தோட்டப்புறத் தொழிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக ஒதுக்கி அவர்கள் விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்புத் தொழிலை மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும். அதோடு, தோட்டப்புற சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கூட்டு முறையிலான விவசாயத் திட்டங்கள், கால்நடை வளர்ப்புத் திட்டங்கள், உணவு உற்பத்தி, அழகுப் பூக்கள் நடவு மற்றும் விற்பனை போன்ற திட்டங்களுக்காக அரசாங்கம் சிறப்பு நிலத்திட்டங்களை கொண்டுவர வேண்டும்.

மேலும் இளையோர்கள் எதிர்நோக்கும் சமூகச் சீர்கேடுகளை குறைப்பதற்கு ஒன்பதவாது மலேசியத் திட்டத்தின்கீழ் சிறார் பராமரிப்பு மையங்களை எழுப்புவதற்கும், குறைந்த வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் இடங்களில் குறிப்பாக மலிவுவிலை மாடிக் குடியிருப்பு இடங்களில் பாலர்ப் பள்ளிகளை எழுப்புவதற்கும் அரசாங்கம் தாராள நிதி ஒதுக்கீட்டினைச் செய்ய வேண்டும். குறைந்த வருமானமுடைய குடும்பத்திலுள்ள இந்திய மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மானியம் பெறாத அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் முழு மானியம் பெறும் பள்ளிகளாக அரசாங்கம் மாற்ற வேண்டும். இவற்றைத் தவிர்த்து, நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா இயக்கங்களைப் பயன்படுத்தி சிறப்புப் பயிற்சித் திட்டங்கள், வாழ்க்கைக் கல்விகளான தொழிற்திறன் மற்றும் வியாபாரத் திறன் குறித்த பயிற்சிகளை தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்த இளையோர்களுகு வழங்க வேண்டும்.

ஏழை இந்திய சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியப் பங்காற்றுவதால், தரமான ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேற்கல்விக்கான வாய்ப்புகள் இவர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய இளையோர்களுக்கு கல்வி மேற்கொள்ள இடங்கள் மற்றும் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்திட அரசாங்கம் முறையான நிதி ஒதுகீடுகள் செய்ய வேண்டும். இதன்வழி இவர்கள் நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கு சரிசமமான பங்கை ஆற்றமுடியும். இறுதியாக தொழில் முனைவர் மேம்பாட்டிற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு மிக முக்கியமாகும். ஒதுக்கப்படும் இந்நிதியின்வழி சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவர்கள் சுலபமாக ஊக்குவிப்புக் கடன் பெற்று வியாபாரம் தொடங்கி சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிக்கோல வாய்ப்பு உள்ளது. அதே சமயம், நாட்டின் மொத்த பொருளாதார சொத்து மதிப்பில் இந்திய சமுதாயத்தின் பங்கு விழுக்காடு 3 சதவிகிதத்தை எட்டுவதற்கு இத்திட்டங்கள் உதவி புரியும்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

சுப.நற்குணன்,மலேசியா. April 22, 2010 at 8:36 AM  

சொந்தப் பிள்ளையும் உறவுக்காரப் பிள்ளையும் ஒரே வீட்டில் வளர்ந்தால் என்ன நிலைமை ஏற்படுமோ அதுவேதான் மலேசியாவில் நம் நிலையும்.

இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாறப் போகிறோம் நாட்டிலே!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP