பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் நடவடிக்கைக் குழு - நிகழ்நிலை அறிக்கை

>> Monday, August 30, 2010

கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதியன்று பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடந்தேறியது. பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பொருத்தமட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்நோக்கிவரும் புதிய கட்டிட நிர்மாணம் குறித்த பிரச்சனையை மையமாக வைத்து அன்றைய நிகழ்வில் பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன.

சரியாக மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் பத்து கவானைச் சார்ந்த இண்ட்ராஃப் அதரவாளரும் மனித உரிமைக் கட்சியின் உறுப்பினருமான திரு.அண்ணாதுரை சிறு உரையாற்றினார். தற்போது பத்து கவான் மக்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படை பிரச்சனைகளைத் தொட்டு அவர் உணர்ச்சிப்பொங்க கருத்துரைத்தார். அவரையடுத்து பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலைசெல்வம் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இலக்கு குறித்து ஒளியிழையின்வழி காண்பித்து வந்திருந்த பொதுமக்களுக்கு அவர் விளக்கங்களையும் கொடுத்தார்.

அடுத்த அங்கமாக, நிகழ்வின் கருப்பொருளான ‘பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?’ எனும் தலைப்பில் திரு.கலைச்செல்வம் அப்பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடலைத் தொடக்கி வைத்து வழிநடத்திச் சென்றார். மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் கடந்தகால மற்றும் தற்போதைய நிலை குறித்து ஒளியிழையின்வழி சிறப்பாக எடுத்துக் காட்டி உரையாற்றினார்.

பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் எழுவதற்கான அறிகுறிகள் இதுவரையில் தென்படவில்லை என பல பெற்றோர்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தினர். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு அறியப்படுத்தாமலேயே பள்ளியின் நிருவாகமும் ம.இ.காவினரும் சொந்தமாக கட்டிடக் குழுவினைத் தோற்றுவித்துக் கொண்டு இந்நாள்வரை மக்களை ஏமாற்றி வருவதாக அச்சங்கத்தின் முன்னால் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டினார். புதிய கட்டிட நிர்மாணிப்பிற்காக மத்திய அரசாங்கம் வழங்கிய இரண்டு லட்ச வெள்ளியை கட்டிடக் குழு என்ன செய்தார்கள் என ஒரு கேள்வியையும் எழுப்பினார். ’இனியும் நாங்கள் ஏமாறப்போவதில்லை’ என அனைவரும் ஒரு குரலாக முடிவெடுத்தனர்.

சுமார் 40 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்திய பின், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகரான திரு.நா.கணேசன் கலந்துரையாடலின் அடுத்த கட்ட அங்கத்தை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார். பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த பெற்றோர்களின் உரிமைகளைத் தொட்டு அவர் விளக்கமளித்தார். அவ்வுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் எவ்வாறு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உதவ முடியும் எனவும் எடுத்துக் கூறினார். உட்பூசல்களில் கவனத்தை சிதறடிக்காது நாம் திட்டமிட்டு வேலைகளைச் செய்து அடுத்தாண்டு சூன் மாத்த்திற்குள் அப்பள்ளியின் கட்டிட நிர்மாணிப்பு பணி தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 ஏக்கர் நிலத்தின் நிலப்பட்டாவையும் மற்ற முக்கியமான கோப்புகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும், 2 ஏக்கர் நிலத்தை 5 ஏக்கராக மாநில அரசாங்கத்திடமிருந்து கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக, பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் ’நடவடிக்கை குழு’ ஒன்றினை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படியே 10 பேர் கொண்ட பெற்றோர் நடவடிக்கை குழு ஒன்று திரு.அண்ணாதுரையின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அதோடு பத்து கவான்வாழ் பொதுமக்களாகிய 6 பேர் அக்குழுவிற்கு துணையாக இருந்து செயல்பட இணைக்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட நடவடிக்கை குழு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஆதரவையும் உதவியையும் முழுமையாக ஏற்பதாகவும், வற்றாத ஆதரவினை தொடர்ந்து இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சிக்கு வழங்கப்போவதாகவும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நடவடிக்கைக் குழு கையொப்பமிட்ட அவ்வுறுதிமொழிக் கடிதத்தை பெற்றோர்களிடமிருந்து திரு.நா.கணேசன் பெற்றுக் கொண்டார்.
இந்த ‘நடவடிக்கை குழு’ எதிர்வரும் ஆகஸ்ட் 26-ஆம் திகதியன்று பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவோடு ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக முடிவெடுக்கப்பட்டது.

இறுதியாக இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு சுமார் 9 மணியளவில் இக்கலந்துரையாடல் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.


இதனிடையே திட்டமிட்டப்படி கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாளன்று காலை 8.45 மணியளவில் ‘பெற்றோர் நடவடிக்கைக் குழு’ இண்ட்ராஃபைச் சார்ந்த திரு.அண்ணாதுரையின் தலைமையில் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் அவர்களைச் சந்தித்து ஒரு விண்ணப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தனர். இக்கடிதம் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கப்படும்போது பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் திரு.கணேசன் அவர்களும் உடனிருந்தார்.


அக்கடிதத்தில் நடவடிக்கைக் குழுவிற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவிற்கும் மத்தியில் ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்தினை இரண்டு வாரத்திற்குள் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அச்சந்திப்புக் கூட்டம் நடைப்பெறுவதற்கு ஆவண செய்வதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 3-ஆம் நாளன்று திட்டமிட்டப்படி, திரு.அண்ணாதுரை தலைமையில் ‘நடவடிக்கைக் குழுவினர்’ மீண்டும் தலைமையாசிரியரைச் சந்தித்து தற்போதைய நிலவரங்களைப் பெற்றுக் கொள்ள செல்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.








போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP