’மலேசிய வரலாறு’ பாடம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்! மின்னொப்பம் இடுங்கள்!

>> Friday, April 22, 2011


பள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் பயன்படுத்தப்படும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் உடனடியாக மீளாய்வு செய்யக்கோரும் விண்ணப்பம்.

அக்கறையுள்ள பெற்றோர்களாகவும், இந்நாட்டின் குடிமக்களாகவும் அங்கம் வகிக்கும் நாங்கள், நம் நாட்டின் வரலாறு பாடப்புத்தங்களில் உள்ள வரலாற்றுப் பிழைகளையும் மற்றும் அதன் பலவீனங்களையும் மிகுந்த சிரத்தையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அவைகளாவன :-

a) வரலாறு பாடநூல்களில் நிறைய வரலாற்று பிழைகளும், பாதி உண்மைகளுமே அடங்கியிருக்கின்றன;

b) நாட்டின் வளர்ச்சிக்கு பல்லின மக்களும் ஆற்றிய பங்கினை அது பிரதிபலிக்கவில்லை; மற்றும்

c) குறுகியப் பார்வையோடு, குறிப்பிட்ட சமய நாகரீகங்களையும் நம்பிக்கைகளையும் புறக்கணிக்கும் வகையில் பாராபட்சமாக எழுதப்பட்டுள்ளது.

நம் இளைய மாணவ சமுதாயத்தின் சிந்தனைகளைப் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் வரலாறு பாடத்திட்டங்களிலும், பாடநூல்களிலும் அடங்கியுள்ளதால், உடனடி நடவடிக்கையாக பள்ளிகளிலும் மற்றும் பிற கல்விசார் கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வரலாறு பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் விரிவான மீளாய்வுக்கு உட்படுத்தி, புதிய பாடத்திட்டத்தினை வரைய வேண்டும் என அரசாங்கத்தையும், சம்பந்தப்பட்ட பொறுப்பிலுள்ள தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.

பாடத்திட்டங்கள் மற்றும் பாடநூல்கள் மீளாய்வையும், மறுவரைவையும் செய்யக்கூடிய நிபுணத்துவக்குழுவில் நாட்டின் முக்கிய இனங்களை பிரதிநிதிக்கும் தகுதியுள்ளவர்கள் இடம்பெற வேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

இந்த மீளாய்வின் நோக்கமானது, ஒரு பரந்த கொள்கை மற்றும் முற்போக்கான அம்சங்கள் கொண்ட வரலாறு பாடத்திட்டங்களையும் பாடநூல்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், அவற்றில் :-

1) குறிப்பிட்ட நாகரிகத்தையும் சமயத்தையுமே அதிகம் வலியுறுத்தாது, உலக வரலாற்றில் பல முக்கியமான நாகரிங்கங்களையும் நிகழ்வுகளையும் பற்றிய ஒரு விரிவான மற்றும் சமமான பார்வையை நம் மாணவர்களுக்கு ஏற்படுத்த முடியும்.

2) துல்லிதமான ஆய்வு செய்து வரலாற்றுச் சம்பவங்களின் ஆதாரங்களை பாராபட்சமின்றி பதிவு செய்ய வேண்டும்.

3) வரலாற்றைப் பின்ணனியாகக் கொண்ட நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்ட பல்லின மக்களின் பங்களிப்பினை நியாயமாக அங்கீகரிக்க வேண்டும்.

4) மாணாக்கர்களின் சிந்தனைகளில் குறிப்பிட்ட சமயத்தின் மீதோ அல்லது அரசியல் கொள்கையின் மீதோ பிடிப்பு ஏற்படுத்துவதற்கான பாதிப்பு அம்சங்கள் நீங்கப்பெற்ற, முற்றிலும் வரலாற்று உண்மைத் தகவல்களின் மீதும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளின் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP