மலேசியாவின் மூத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான கர்பால் சிங் கார் விபத்தில் மரணம்!
>> Thursday, April 17, 2014
மூத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான கர்பால் சிங் இன்று (17-04-2014) காலை 1 மணியளவில் தாப்பா , பேராக் அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலை கிலோ மீட்டர் 301.6-ல் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார் .
காரில் உடன் சென்ற அவரின் நீண்ட கால உதவியாளர் மைக்கேல் கொர்ணேலியசும் உடன் கொல்லப்பட்டார் .
அதுபோக காரில் பயணித்த அவருடைய வாகனமோட்டி, அவரது மகன் ராம் கர்பால் மற்றும் வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.வி ரக காரில் கோலாலம்பூரிலிருந்து பினாங்கு நோக்கி செல்லும் வழியில், முன் சென்றுகொண்டிருந்த லாரியொன்று இடப்பாதையிலிருந்து வலப்பாதையை நோக்கி திடீரென்று திரும்பியதால் இந்த கோர விபத்து நடந்ததாக நம்பப்படுகிறது.
ஏற்கனவே, கர்பால் , 74 , 2005-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் சிக்கி உடல் பாதி செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியை பயன்படுத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008-ல் நடந்த பேராக் அரசு மாற்ற சர்ச்சையில் பேராக் சுல்தான் ஆணைக்கு கர்பால் மறுப்பு கருத்தை தெரிவித்ததாக தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சுமத்தப்பட்டு, ரி.ம 4000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டார். இதனால் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டதால் அண்மையில் டி.ஏ.பி கட்சியின் தேசியத் தலைவர் பதவியை அவர் துறந்தார்.
அதுபோக 2009-ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தின் கடைசி இந்திய பாரம்பரிய கிரமமான புவா பாலாவை தற்காக்கத் தவறியதால் மலேசிய இந்தியர்களின் கடுஞ்சினத்திற்கும் ஆளானார்.
அதே சமயம் இசுலாமிய ஹுடுட் சட்டம் மலேசியாவில் அமுல்படுத்தவதை தொடர்ந்து பலமாக எதிர்த்தும் வந்தார். மலேசியா என்றும் மதசார்பற்ற நாடு எனும் கொள்கையில் அவர் உறுதியாக இருந்தது பல்லின மலேசியர்களின் ஆதரவை அவருக்குப் பெற்று தந்தது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைமையை இறைஞ்சுவோமாக.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment