பிறப்பு பத்திரம் இல்லையென்றால் பள்ளிக்கூட நுழைவு இல்லை!

>> Friday, January 1, 2010


டத்தோ நஜிப் ரசாக்
மலேசிய பிரதமர்
Perdana Menteri Malaysia
Blok Utama Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

டான் ஸ்ரீ முயிடின் யாசின்
மலேசிய துணைப் பிரதமர்
Perdana Menteri Malaysia
Blok Utama Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

பிறப்பு பத்திரம் இல்லையென்றால் பள்ளிக்கூட நுழைவு இல்லை

மதிப்பிற்குரிய பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் அவர்களுக்கு,

மேலே குறிப்பிட்டது போல,

ஒரு தமிழ் நாளிதழில் 2007ஆம் ஆண்டின் இறுதியி¢ல், கல்வி அமைச்சால் தமிழ்ப்பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் 2008ஆம் ஆண்டு முதல் பிறப்பு பத்திரம் கிடைக்கப்பெறாத மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தது. அதையடுத்து வந்த நாளிதழ்களில் பிறப்புப் பத்திரம் இல்லாத மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என்றும் முக்கியமாக தமிழ்ப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்க மறுக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதையொட்டி நாங்கள் தங்களுக்கு தெரிவிக்க விரும்பும் கருத்து என்னவென்றால் இப்படி பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தால் பள்ளி நுழைவு மறுக்கப்படும் மாணவர்களின் நிலை எதிர்காலத்தில் ஒரு கேள்விக்குறியாகிவிடும். இந்நிலை நீடித்து வந்தால் ஆரம்பப் பள்ளியைத் தொடர்ந்து, இடைநிலைப்பள்ளி, தொழில்கல்வி கல்லூரிகள், மேற்படிப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றுமின்றி அவர்களுக்கு கல்வி உதவிக்கடன் மற்றும் உபகாரச்சம்பளம் பெறுவதிலிருந்து நிராகரிக்கப்படுகிறார்கள். அதோடு மட்டுமின்றி அவர்கள் மோட்டார் சைக்கிள், வேன், பேருந்து மற்றும் லாரி ஓட்டுவதற்கு லைசன்ஸ் மறுக்கப்பட்டு வேலை தேடி சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழப்பார்கள். இதுமட்டுமின்றி அவர்கள் ஒரு தொழில் செய்வதற்குக் கூட லைசன்ஸ் (அனுமதி) கிடைக்காது. ஒரு சாப்பாட்டுக் கடையைக் கூட அவர்களால் திறக்க இயலாது. பிறப்புப் பத்திரமின்றி அவர்கள் எவ்வித திறனும் தேவைப்படாத காவலாளி, தொழிற்சாலை பணியாளர் மற்றும் அலுவலகத்தில் சுத்தம் செய்யும் வேலைக்குக் கூட ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.

இறுதியில் அவர்கள் திருமணத் தடையை எதிர்நோக்குவார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் அடுத்த சந்ததியினர் இதே பிரச்சனையில் மூழ்கி இவர்கள் அனுபவித்த துயரங்கள் மீண்டும் ஒரு சுழற்சியாக உழன்று கொண்டிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளை எதிர்நோக்கும் இந்திய இளைஞர்கள் வேறு வழியின்றி குண்டர் கும்பல் மற்றும் சமூகச்சீர்கேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் அரசாங்கம் 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் RM 1 மில்லியன் ரிங்கிட்டை தேசிய காவல் துறை, பாதுகாப்பு மற்றும் குற்றங்களை கையாள்வதற்கென ஒதுக்கியுள்ளது. இதில் கிள்ளான் நகரில் கடந்த 8/11/09ஆம் நாளன்று ஒரே நாளில் ஐந்து இந்திய இளைஞர்களை சுட்டு கொன்றது. அதிலும் ஒரு இளைஞனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்கிற விஷயம் மிகுந்த வேதனையளிக்கிறது.

ஏறக்குறைய 150,000 இந்தியக் குழந்தைகள் மலேசியாவில் பிறந்திருந்தாலும் மூன்றாம், நான்காம், ஐந்தாம் தலைமுறையை எட்டியவர்களானாலும் இன்னமும் அவர்களின் பிறப்புப் பத்திரம் 1,016,799 பீரோ தாதா நெகாராவின் பட்டாதாரிகள் சிலரால் சின்ன- சின்ன காரணங்களால் வெறுமனே மறுக்கப்பட்டுவருகின்றன என்று 21-6-09 யூ.எம். புலெட்டின் (UM Buletin) 19ஆம் ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மத வேறுபாடு காரணத்தினால் இவர்களுக்கு பிறப்புப் பத்திரம் வழங்கவே கூடாது என்று அவர்கள் தீர்மானித்திருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம். மேலும் விண்ணப்பதாரர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் அவர்கள் விண்ணப்பம் அறவே ஏற்றுக் கொள்ளப்பட மறுக்கப்படுகிறது.

ஆகவே இதற்கான தீர்வை குறுகிய மற்றும் நீண்ட கால திட்டத்தில் விரைவில் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

1) 2007ஆம் ஆண்டிறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை தடை செய்யப்பட்டு 2010க்கான புதியதொரு அறிக்கையில் முக்கியமாக தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வி இலாகாவினர் எந்தவொரு இந்திய மாணவரின் நுழைவையும் தடை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்படவேண்டும்.
2) தேசிய உள்துறை தலைமை செயலாளர் புதியதொரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் பிறப்புப் பத்திரம் நிராகரிக்கப்பட்ட அனைத்து இந்திய குழந்தைகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து அவர்களுக்கு இன்றிலிருந்து 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் கிடைக்கும்படி வழி செய்ய வேண்டும்.

உங்களின் உடனடி பதில் மற்றும் நடவடிக்கையை பெரிதும் மதிக்கிறோம்.

நன்றி,
இப்படிக்கு,

________________
பி. உதயகுமார்
(பொது செயலாளர்)

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

4 கருத்து ஓலை(கள்):

கிருஷ்ணா January 4, 2010 at 11:17 PM  

இதைவிட ஒரு இனப்படுகொலை இருக்க முடியுமா..? கல்விக் கண்களை குத்தி விட்டால்.. அந்த சமுதாயம் குருட்டுச் சமுதாயம் ஆகிவிடும்.. படிப்பறிவில்லாதவர்கள் பிறகு திருடவும் குண்டர்களாகவும் மாறிவிடுவார்கள்.. பிறகு, அவர்களின் சாவு நிச்சயம்தானே! இதற்கு பெயர் இனப்படுகொலை இல்லாமல் வேறென்ன?

தமிழா..! இன்னமுமா பிரப்புப் பத்திரம் கூட எடுக்காமல் காலம் கடத்துகிறாய்!!! யாரை நொந்து என்ன பயன்???!!!

Sathis Kumar January 5, 2010 at 12:03 AM  

அன்பின் கிருஷ்ணா,

நீண்ட இடைவெளிக்குப் பின்பு உங்களை இணையத்தில் சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

பிறப்புப் பத்திரம் குறித்த பிரச்சனைகள் ஏழை இந்தியர்கள் மத்தியில்தான் பரவலாகக் காணக் கிடக்கிறது. படிப்பறிவு அற்றவர்கள் பெரும்பாலும் அரசாங்க அதிகாரிகளால் மிகவும் கேவலமாக நடத்தப்பெறுவதாகவும், அலைக்கழிக்கப்படுவதாயும் குற்றச்சாட்டுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. உண்மை நிலவரத்தை களநிலை ஆய்வு செய்து பார்க்கையில் அது உண்மைதான் எனப் புலப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டவிதியின்படி இந்நாட்டில் ஒருவர் பிறந்துவிட்டாலே சட்ட ரீதியில் குடியுரிமையைப் பெற்றவராகிறார் என வரையறுத்துள்ளது. ‘சட்ட ரீதியில்’ எனும்பொழுது குடியுரிமைக்கு அத்தாட்சியாக பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மறுப்பேதுமின்றி குடிமகனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இன்று நடைமுறையில் இம்மக்கள் அரசாங்க ஊழியர்களாலும், தேசிய இனவாதக் கொள்கைகளாலும் மிகவும் அல்லபட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதை நாம் மறுத்துவிட முடியாது. அதனாலேயே அடிப்படை உரிமையை தொலைத்தவர்களாக, சொந்த நாட்டிலேயே கள்ளக்குடியேறிகளைப்போல் பலர் வாழ்க்கை நடத்துகின்றனர். பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை விண்ணப்ப அணுகுமுறைகள் சட்டரீதியில் இலகுவாக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய நம்முடைய கோரிக்கை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக..

கிருஷ்ணா January 5, 2010 at 9:26 AM  

உங்கள் கூற்றை ஒப்புக் கொள்கிறேன் நண்பா.. இருந்தாலும்.. நம் பக்கமும் தவறு இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. எனக்கு நன்கு அறிமுகமான ஒரு சிலர் (இப்போதல்ல.. என் பள்ளிப் பருவத்தில்) தனக்கு குழந்தை பிறந்ததும் பிறப்புப் பத்திரம் எடுக்க வேண்டும் என்று தெரிந்தும் 'இறுமாப்பாக' நான் ஏன் எடுக்க வேண்டும்..? என்ன செய்துவிடுவார்கள்? என்றும்.. அது கிடக்குது.. அதை வைச்சி என்ன செய்ய முடியும் என்றும் இன்னும் சிலர்.. அந்த சாமிவேலு வந்து எடுத்துக் கொடுக்கட்டும் என்றெல்லாம் பேசக் கேட்டிருக்கிறேன். என் தாயார் ஒரு தோட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். இலவசமாக அவர்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் பரிதாபப் பட்டு கொண்டு போய் கொடுத்து விட்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், பிள்ளை பெற்றவர்களோ, கவலையே இல்லாமல் சுற்றுவதையும் பர்த்திருக்கீறோம்.இதற்கு யரை நோவது?

*இந்த கரருத்து என் தனிப்பட்ட கருத்து. ஏற்புடையதாயின் வெளியிடுக. சமுடதாய நலன் கருதி மறைக்கப்பட வேண்டும் என்றால், மறைத்து விடுக..

Sathis Kumar January 6, 2010 at 1:06 AM  

அன்பின் கிருஷ்ணா,

உங்களுடைய கூற்றை நான் ஏற்கிறேன். பல ஏழை இந்தியர்கள் பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை எடுக்காததற்கு சில அடிப்படைக் காரணங்கள் உண்டு.

முதலாவது அறியாமை. அறியாமையின் பலனாக பலருக்கு பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை எடுப்பதில் அக்கறை இருப்பதில்லை. அதன் முக்கியத்துவத்தையும் உணர்வதில்லை. ஒரு சிலர் இரண்டாவது மனைவியின் குழந்தைக்கு பிறப்புப் பத்திரம் எடுப்பதற்கு பயப்படுகின்றனர். முதல் மனைவிக்குத் தெரியாமல் திருமணம் புரிந்தவர்கள் வெளி உலகிற்கு தெரிந்துவிடுமோ என்கிற பயம். முதல் மனைவிக்கு தெரிந்து இரண்டாவது திருமணம் புரிந்திருந்தவர்களுக்கு சட்டச் சிக்கல் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்கிற பயம்.

பெரும்பாலும் பதிவுத் திருமணம் செய்யாதவர்களும் தங்களின் குழந்தைக்கு பிறப்புப் பத்திரம் எடுப்பதில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். இவர்களிருவரும் கணவன் மனைவி என்று நிரூபிப்பதற்கு அங்கும் இங்கும் அலைந்து சாட்சி கையெழுத்துகளை வாங்கிக் கொண்டு வரவேண்டும். ஆனால், ஓடிப்போய் திருமணம் புரிந்து கொண்டவர்கள் சாட்சி கையெழுத்துகளைப் பெறுவதற்கு சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

மற்றும் சிலர், ஜாதகம் பார்த்து பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே பிறப்புப் பத்திரம் எடுப்பதற்குரிய காலத்தவணையை தவறவிட்டுவிடுகின்றனர்.

இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், தற்போது நாட்டில் 150,000 இந்தியர்களுக்கு பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை இல்லை. இவர்களின் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதுதான் கேள்வி. விழிப்புணர்வு ஊட்டப்பெற்றவர்கள் மீண்டும் பிறப்புப் பத்திரம் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யும்போது எழும் பிரச்சனைகள்தான் அனைத்திற்கும் முட்டுக் கட்டையாக இருக்கின்றன. பெரும்பாலும் அரசாங்கத்தின் கெடுபிடிகள் இம்மக்களை மீண்டும் பழைய நிலைமைக்கே கொண்டு தள்ளி விடுகின்றன. அலைக்கழித்தல், நிராகரித்தல், ஏளனமாக நடத்தப்பெறுதல், கெடுபிடிகளோடு கூடிய விதிமுறைகள் போன்றவை நிறுத்தப்பட வேண்டும். இதற்கு அரசியல் ரீதியிலான தீர்வு மட்டுமே நமக்குத் தேவை. அரசாங்கம் குடியுரிமைக் குறித்த விடயத்தில் பாராபட்சமாக நடந்துகொள்ளாமல் இருந்தாலே பிரச்சனைக்கு பாதி தீர்வினை உடனடியாக கொண்டு வந்துவிட முடியும்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP