துவான், தவுக்கே அதிகாரத்தில் கட்டுண்டுகிடக்கும் இந்திய மண்டூர்கள் பதவி விலகட்டும்!

>> Tuesday, March 9, 2010

அங்கொன்றும் இங்கொன்றுமாக ரொட்டித் துண்டுகளைக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பக்காதான் அரசாங்கம் ஆட்சி செலுத்தும் நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிரந்தர நிலப்பட்டா உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்!

தொடர்ந்து மண்டூர்களிடம் கையேந்தி நிற்கும் சூழல்கள் வேலைக்காகாது!

யாரை அதிகமாக நம்பி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட்டார்களோ, அவர்களைத்தான் நாம் வலியுறுத்திக் கேட்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

ஏன், அம்னோவைக் கேட்கவில்லை, மஇகாவைக் கேட்கவில்லை என்று கதையை திசைத்திருப்புவதை விடுத்து, முதலில் மக்கள் கூட்டணி ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களின் தேவைகளையும் உரிமைகளையும் புரிந்து கொண்டு அதற்கானத் தீர்வை கொண்டுவர வேண்டும்.

அதன் முதல்கட்டமாக, பக்காதான் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிரந்தர நிலப்பட்டாவை மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும்.

இதோ நிலம் என்று கைக்காட்டுவது, ரொட்டித் துண்டுகளைப் போட்டுவிட்டு நாளிகைகளில் விளம்பரப்படுத்துவது, புதிய தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று வெற்று அறிக்கை விடுவது போன்ற மக்களைக் குழப்பும் நடவடிக்கைகளில் இனியும் மக்கள் கூட்டணி அம்னோவைப்போல் செயல்படக் கூடாது.

நில விவகாரங்கள் அனைத்தும் முற்றிலும் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தமிழ்ப்பள்ளிகளின் நில விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளோடு மக்கள் கூட்டணி அம்னோவைப்போல் இனியும் விளையாடக்கூடாது!

அடுத்த பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றியவுடன் இதற்கான தீர்வைக் காண்கிறோம் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்! அடுத்தப் பொதுத்தேர்தலில் கையில் இருக்கும் நான்கு மாநிலங்களும் உருப்படியாக நிலைத்து நிற்குமா என்று உறுதி கூறமுடியாத நிலையில், உடனடியாக 53 வருடங்களாக இந்திய மலேசியர்கள் எதிர்ப்பார்த்த தமிழ்ப்பள்ளி நில விவகாரங்கள் முழுமையாக தீர்க்கப்பட்டுவிட வேண்டும் என்பதே இந்தியர்களின் கோரிக்கை!

இதனை மக்கள் கூட்டணி தலைவர்களிடம் அமர்ந்து பேசுவதற்கு ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு முறையான கடிதம் வழங்கிய மனித உரிமைகள் கட்சி / இண்ட்ராஃப் இயக்கத்திற்கு எந்தவொரு மறுகடிதமும் கிடைக்காத பட்சத்தில், கடந்த 7/03/2010 அன்று இண்ட்ராஃப் கெஅடிலான் தலைமையகத்தின் முன்பு அமைதி மறியலை மேற்கொண்டது. இவர்களின் முயற்சியை மேலும் களங்கப்படுத்தும்வகையில், சில மண்டூர்களை கெஅடிலான் தலைமையகத்தின் முன்பு நிறுத்தி வைத்தது கண்டிக்கத்தக்கதாகும். ஓர் இந்தியனைக் கொண்டு மற்றொரு இந்தியனை சமாதானப்படுத்துவது, மோதவிடுவது, சமரசம் பேசுவது போன்ற அம்னோ வழியை மக்கள் கூட்டணியும் கையாண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்!



போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP