புவா பாலா மாட்டுக் கொட்டகை, கிணறு உடைப்பு ! - பி.ப சங்கம் கேள்வி எழுப்புகிறது

>> Tuesday, October 20, 2009பத்திரிகை செய்தி (1)
15.10.2009

கம்போங் புவா பாலா

புவா பாலா கிராமத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் தாங்கள் தினமும் பினாங்கு மாநிலத்தில் உள்ள பசும்பால் குடிக்கும் பயனீட்டாளர்களுக்கு வழங்கிவந்த பசும்பாலை தொடர்ந்து வழங்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இந்த புவா பாலா கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மிகப்பெரிய மாட்டுக்கொட்டகையை வைத்திருக்கின்ற இந்த 3 சகோதரர்களான சிவானந்தம், முருகன், சுப்பிரமணியம் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை புவா பாலா கிராமத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டாளர் உடைத்ததன் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருப்பதாக பி..சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.கடந்த புதன்கிழமை வரை இந்த சகோதரர்களுக்குச் சொந்தமான 150 மாடுகள் தினமும் 300 லிட்டர் பசும்பாலை கொடுத்து வந்தன. ஆனால் நேற்று மேம்பாட்டாளர் திடீரென்று மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை உடைத்துத் தரைமட்டமாக்கியதால் திகிலும் பயமும் அடைந்த கறவைமாடுகள் 300 லிட்டர் பால் கொடுப்பதற்குப் பதிலாக 140 லிட்டர் பாலையே கொடுத்ததாக சிவானந்தம் பி..சங்கத்திடம் தனது மனக்குமுறலைக் கொட்டியதாக சுப்பாராவ் மேலும் கூறினார்.

ஏற்கெனவே வீடுகளை உடைத்த மேம்பாட்டாளர் இப்பொழுது திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மாட்டுக்கொட்டகையை உடைத்தது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார்.

திரு சிவாவும் அவருடைய சகோதரர்களும் பிரிதொரு இடத்தில் மாட்டுக்கொட்டகையை கட்டிக்கொள்வதற்கு இரண்டு வாரம் காலக்கெட்டு கேட்டிருந்தார்கள். ஆனால் அதற்கும் மேம்பாட்டாளர் சம்மதிக்காமல் திடீரென்று மாட்டுக்கொட்டகையை உடைத்தது இந்தக் கால்நடைகள் மீது கருணை இல்லாததையே காட்டுகின்றது என்றார் அவர்.

இப்பொழுது இந்த மாட்டுக்கொட்டகையிலிருக்கும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் கறவை மாடுகள் கொடுக்கின்ற 300 லிட்டர் பால் இப்பொழுது 150 லிட்டர் பாலாக குறைந்திருக்கின்றது. இது மேலும் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அச்சகோதரர்கள் பி..சங்கத்திடம் கூறியதாக சுப்பாராவ் கூறினார்.

தங்களின் வருமானத்தை இழந்துள்ள இச்சகோதரர்களுக்கு மாநில அரசாங்கம் கட்டாயமாக நிதி உதவி செய்து தர வேண்டும் என்றும் என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.பத்திரிகை செய்தி (2)
15.10.2009

200 ஆண்டு கால கிணறு மூடப்படுகின்றது

படத்தில் காணப்படும் கிணறுதான் சுமார் 200 ஆண்டு காலமாக இந்த கம்போங் புவா பாலா கிராமத்தில் இருக்கின்றது. ஒரு காலத்தில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இக்கிராமத்தில் இருக்கும் சுமார் இதே போன்ற 10 கிணறுகளிலிருந்துதான் பினாங்கு மக்களுக்கு இக்கிராமத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டிருக்கின்றது.

கே.டி.சிவானந்தம் என்பவரின் மாட்டுக் கொட்டகையிலிருக்கும் இந்தக் கிணறு இப்பொழுது மேம்பாட்டாளரின் அராஜகப் போக்கினால் எந்த நேரத்திலும் மூடப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றது. சிவானந்தம் தன் மாட்டுக் கொட்டகையில் இருக்கும் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் இந்தக் கிணற்றிலிருந்தான் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறார்.இந்தக் கிணற்றிலிருந்து சுமார் 50 லிட்டர் தண்ணீர் ஒரு தடவை எடுக்கப்பட்ட அடுத்த ஐந்தே நிமிடங்களிலேயே அந்தக் கிணற்றில் 50 லிட்டர் தண்ணீர் ஊறிவிடும். இந்தக் காட்சியை நாம் நேரடியாகப் பார்க்கும்பொழுதுதான் இந்த புவா பலா கிராமத்தில் எவ்வாறு கிணறுகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்ற உண்மை தெரிகிறது.

இந்த நீரின் சுவையே வித்தியாசமாக இருக்கிறது. இப்பொழுது இந்தக் கிணற்றை மேம்பாட்டாளர் மூடவிருப்பதால் சிவானந்தத்தின் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் எங்கேயிருந்து அவர் தண்ணீர் எடுக்கப்போகின்றார் என்பதுதான் பெரிய கேள்வி.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திலும் தனது மனக்குறையை திரு சிவானந்தம் பகிர்ந்துகொண்டார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP