தமிழ் இலக்கியமும் மலாய் மேலாண்மைக் கோட்பாடும்

>> Monday, December 7, 2009

அண்மையகாலமாக மிக நேர்த்தியான முறையில் அம்னோ அரசாங்கத்தினால் நடத்தப்பெறும் ஒரு புழுத்துப்போன நாடகத்தை, மலேசிய இந்திய சமூகம் அலுத்துப்போய் எதிர்கொண்டு பேச்சுவார்த்தை, கண்டனக் கூட்டம், ஊடக அறிக்கை, கையெழுத்து வேட்டை என பலவகையில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருவதை அனைவரும் அறிவர்.

2010-ஆம் ஆண்டு தொடங்கி எசு.பி.எம் தேர்வில் 10 பாடங்களையே தேர்வாக எழுத முடியும் என கல்வி அமைச்சு இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதுனால் வரை தமிழ் இலக்கியத்தை ஒரு தேர்வு பாடமாக எடுத்து மொத்தம் 11 தேர்வு பாடங்களை எழுதி வந்த நடைமுறைபோய், இனிவருங்காலங்களில் 10 பாடங்களே எடுக்க முடியும் என்ற அறிவிப்பு வழக்கம்போல் சமூக அரசியல் இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தன. அதனைத் தொடர்ந்து இந்திய சமூக இயக்கங்களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் தொடர்ச்சியாக எழுந்த கண்டனங்கள், பின்பு கல்வி அமைச்சு தேர்வில் 12 பாடங்களை எடுக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதித்ததையும் நாம் அறிவோம். கூடுதலாக தேர்தெடுக்கப்படும் தேர்வுப் பாடங்களின் புள்ளிகள் கூட்டு மதிப்பெண்களில் இடம்பெறாது எனவும், கல்விக் கடனுதவிகள், உபகாரச் சம்பளங்கள் பெறுவதற்கு இக்கூடுதல் தேர்வுப் பாடங்களின் அடைவுநிலைகள் கணக்கிற் கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. கல்வி அமைச்சின் இந்த முடிவைக் கண்டு சிலர் அரசாங்கத்தை பாராட்டி அறிக்கைகளும் வெளியிட்டனர், சில தரப்பினர் தங்களின் அதிருப்தியையும் வெளியிட்டனர். எதிர்வரும் திசம்பர் 12-ஆம் தேதியன்று திட்டமிட்டப்படியே தோட்ட மாளிகையில்தமிழைக் காப்போம்இலக்கியத்தை மீட்போம்எனும் கண்டனக் கூட்டம் நடைப்பெறப்போவதாயும் அறிவிப்புகள் வந்துள்ளன.

இந்தக் கட்டுரையின்வழி, அம்னோ அரசாங்கத்தின் முடிவு சரியானதா, அதற்கேற்றாற்போல் நமது சமூக அரசியல் இயக்கங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் சரியானதா என்பதனைப் பற்றி அலசுவது எனது நோக்கம் அல்ல. ஒவ்வொரு தடவையும் இதுபோன்ற இழுப்பறிகள் நடைப்பெறும்போதெல்லாம் நம் சமூகத்தின் நிலைப்பாடும் அரசாங்கத்தின் முடிவுகளும், ஊடகங்களின் பங்கும் எப்படி இருக்கும் என்பதனைப் பற்றிய சில உண்மைகளை விளக்கி மீட்டுணர்வதற்கும், யாரும் பார்க்க, பேச மறந்த ஒரு விடயத்தை இங்கு துணிந்து கூறுவதற்குமே இந்த பதிவு.

முதலில் மொழி என்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய, கிடைக்கப்பெற வேண்டிய அடிப்படை உரிமையாகும். அச்சமூகமானது சிறுபான்மை இனத்தைச் சார்ந்து இருந்தாலும், மொழி உரிமையை ஒருபோதும் அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கலாகாது என்று .நா மன்றம் வரையறுத்திருக்கிறது. எனவே, எசு.பி.எம் தமிழ் இலக்கிய தேர்வு பாடத்தைப் பற்றி அணுகுவதற்கு முன்பாக, முதலில் தேசிய, இன மொழிச் சமய சிறுபான்மையினருக்கான ஐக்கிய நாட்டவையின் உரிமைப் பிரகடனத்தில் வரையப்பட்டுள்ள உடன்படிக்கைகள் சிலவற்றை இங்கு நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

பிரிவு 1

. தன் நாட்டு பூகோள எல்லையுள் வாழும் சமய, இன, மொழிச் சிறுபான்மையினரின் தனித்த அடையாளங்களை அரசுகள் பாதுகாப்பதோடு, அவர்களின் தனித்த அடையாள வளர்ச்சிக்கான சூழல்களையும் உருவாக்க வேண்டும்.

. இவ்வுரிமைகளை நிறைவேற்ற அரசுகள் உரிய சட்டங்களை இயற்ற வேண்டும்.

பிரிவு 2

. தேசிய, இன, மொழி, சமயஞ்சார்ந்த சிறுபான்மையினர் தங்களின் கலாச்சாரத்தை அனுபவிக்கவும் ஒரு சமயத்தைத் தழுவவும், கடைப்பிடிக்கவும், தாய்மொழியைப் பயன்படுத்தவும் பொதுவிடங்களிலும், தனியாகவும், எவ்வித பாகுபாடுமின்றி அனுபவிக்கவும் உரிமையுண்டு.

பிரிவு 4

. சிறுபான்மையோர் தம் தனித்த பண்புகளை வெளிப்படுத்தவும், கலாச்சாரம், மொழி, பாரம்பரியம், பழக்க வழக்கங்களை வளப்படுத்தவும் உரிமையுண்டு.

. தாய்மொழியைக் கற்கவும், தாய்மொழியில் கல்வி கற்கவும் சிறுபான்மையோரின் உரிமைகளைப் பேண அரசு உரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

. சிறுபான்மையினர் தம் வரலாறு, பாரம்பரியம், மொழி, கலாச்சாரம் என்பன பற்றிய ஆழமான அறிவை கல்வி மூலம் பெறுகின்ற வாய்ப்பைப் பெற அரசு வழி வகை செய்ய வேண்டும். அதேவேளை, ஒட்டுமொத்த சமூகம் பற்றிய அறிவையும் அவர்கள் பெற வழிவகை செய்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாட்டவையின் உரிமைப் பிரகடனத்தில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மொழிக்கு எவவளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் கவனிக்க வேண்டும். இப்போழுது நம் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையப்பட்டுள்ள ஒரு சட்டப்பிரிவைAlign Left இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

வரைவு எண் 152

மலாய் மொழியானது மலேசிய நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகும். அதிகாரப்பூர்வ மொழி மலாய் மொழி என எழுத்துப்பூர்வமாக சட்டங்களின்வழி பாராளுமன்றம் வரையறுத்திருக்க வேண்டும். இருப்பினும் மலாய் மொழியின் அங்கீகாரமானது பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக்கொண்டு அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், இத்தனைக்கும் பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடையாக ஒருபோதும் இருக்கக்கூடாது.

உள்ளடக்கம்

வரைவு எண் 152(1)(a)

பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்

வரைவு எண் 152(1)(b)

கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூட்டரசு அரசியலமைப்புச் சட்டவரைவுகள் மிகத் தெளிவாகவே பிற மொழிகளைப் பயன்படுத்தவோ, கற்கவோ, கற்பிக்கவோ, அதற்காக பொது மானியங்களை ஒதுக்கீடு செய்யவோ எந்தவொரு தடையும் இல்லை எனத் தெரிகிறது.

எனவே, மொழி என்பது நமக்கும் சரி பிற இனத்தவருக்கும் சரி அதுவொரு அடிப்படை உரிமை என்று சட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட ஒரு விடயமாகும். அடிப்படை உரிமை என்றாலே அதனை மறுக்கவோ, நம்மிடமிருந்து பறித்துக் கொள்ளவோ யாருக்கும் உரிமை இல்லை என்று பொருளாகிறது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து, அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 52 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்நாட்டில் குறிப்பாக இந்திய/தமிழ் சமூகம் மட்டும் தொடர்ந்து அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கே போராடி வருவதை நாம் முதலில் உணர வேண்டும். அடிப்படை உரிமைக்கே 52 ஆண்டுகளாகியும் போராட வேண்டியிருக்கிறது என்றால், நம் சமூகம் கேவலமாக நடத்தப்பெறுகிறது என்றுதானே அர்த்தம். குறிப்பிட்டுச் சொன்னால்ஓரங்கட்டுதலின்மற்றுமொரு அத்தியாயம் இது என்று அறுதியிட்டுக் கூறலாம்.

அண்மையில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை, தெற்காசிய ஆய்வுத் துறையாக பெயர் மாற்றம் பெறவிருப்பதாக அம்னோ அரசாங்கம் இந்திய சமூகத்தை பயமுறுத்தியது. உடனுக்குடன் நம் சமூக அமைப்புகளின் எதிர்வினையால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பிரச்சனை மீண்டும் எழாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதனைத் தொடர்ந்து எசு.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கிய பாடத்தை தேர்வு பாடமாக எடுப்பதை தடைசெய்யும் வகையில் அதிகபட்ச 10 பாடங்களை அறிவித்து பின்பு அரைகுறையாக நம்முடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டதுபோல் நாடகம் ஆடுகிறது. இந்த ஆண்டை மட்டும் ஆய்விற்கு எடுத்துக் கொண்டு, நமது அடிப்படை உரிமைகள் விடயத்தில் எத்தனை முறை அம்னோ அரசாங்கம் கைவைத்துவிட்டது என்று ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள்.

இதற்கெல்லாம் பின்னணி என்னவாயிருக்கும்?

முதலில் அம்னோ அரசாங்கமானது பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் குறித்த நிலைப்பாட்டினை எவ்வாறு கொண்டுள்ளது என்பதனை கவனிக்க வேண்டும்.

ஐக்கிய நாட்டவையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான மலேசியா, .நா வரையறுத்துள்ள உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள எட்டு மாநாடுகளின் உடன்படிக்கைகளில், இதுவரை இரண்டில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய நாட்டவையின் மனித உரிமை ஆணையத்தின் எட்டு உடன்படிக்கைகள் :

1) குடிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1976

2) பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1976

3) தஞ்சமடைந்த அகதிகளின் பாதுகாப்பு குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1951 மற்றும் 1967

4) இனப்பாகுபாடு ஒழிப்பு குறித்தான அனைத்துலக உடன்படிக்கை 1969

5) பெண்கள் மீதான அனைத்துவித பாகுபாட்டிற்கெதிரான அனைத்துலக உடன்படிக்கை 1981

6) சித்தரவதை மற்றும் பிற வகையான கொடுமைகள், மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான நடவடிக்கைகள் அல்லது தண்டனைகளுக்கெதிரான அனைத்துலக உடன்படிக்கை 1987

7) சிறார் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1990

8) உடல் அங்கவீனர்களின் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 2008

மேற்குறிப்பிட்ட எட்டுவிதமான உடன்படிக்கைகளில், மலேசியா ஐந்தாவது மற்றும் ஏழாவது உடன்படிக்கைகளை மட்டுமே கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. பிற மொழி பாதுகாப்பு குறித்த இரண்டாவது உடன்படிக்கையில் இதுவரை மலேசியா கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நம் நாட்டின் சில மனித உரிமை இயக்கங்கள் இரண்டாவது உடன்படிக்கையில் கையெழுத்திட அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் அம்னோ அரசாங்கம் திட்டமிட்டு மௌனம் சாதித்து வருகிறது.

ஒருவேளை இரண்டாவது உடன்படிக்கையில் கையெழுத்திட்டால் அம்னோ அரசாங்கம் எதிர்நோக்கவிருக்கும் பாதிப்பு என்ன? புதிய பொருளாதாரக் கொள்கையின்வழி அம்னோ அரசாங்கம் அமுல்படுத்திவரும் பக்கச்சார்பான தேசியக் கொள்கைகளையும், மலாய் மேலாண்மைக் கோட்பாட்டையும் பிற இனங்களுக்கெதிரான பாராபட்சமானக் கொள்கைகள் என .நா மன்றம் கருதி, மலேசியாவை இனவாத நாடு என முத்திரை குத்தி அழுத்தம் கொடுக்கும் அபாயத்தை அறிந்தே அம்னோ அரசாங்கம் அவ்வுடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.

இனவாதக் கொள்கைகளை வெளிப்படையாகவே திட்டமிட்டு அரங்கேற்றிவரும் அம்னோ அரசாங்கத்திடமிருந்து தாய்மொழியைப் பாதுகாப்பது எப்படி? உண்மையிலேயே இந்த சூழ்நிலையில் தாய்மொழியை நிரந்தரமாகப் பாதுகாக்க முடியுமா?

மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை விவகாரமாகட்டும், .சு.பி.எம் தமிழ் இலக்கிய தேர்வு பாட விவகாரமாகட்டும் இந்திய சமூக,அரசியல் இயக்கங்களிடமிருந்து நிச்சயமாக கண்டனங்கள் எழும் என்பதனை அம்னோ அரசாங்கம் அறிந்தே வைத்திருக்கின்றது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், சமூக, அரசியல் இயக்கங்கள் எதிர்வினைகளை தாம் நினைத்ததுபோலவே ஆற்ற வேண்டும் என்பதுதான் அம்னோவின் திட்டம். வழக்கம்போலவே அடிப்படை உரிமைகள் விவகாரங்களில் அனைத்து சமூக, அரசியல் இயக்கங்களும் தத்தம் போராட்டங்களை அம்னோ அரசாங்கம் எதிர்ப்பார்த்ததைப்போலத்தான் நடத்தி வருகிறார்கள், இனியும் வருவார்கள் என்பதுதான் அம்னோ அரசாங்கத்தின் நம்பிக்கை.

உதாரணத்திற்கு இந்திய ஆய்வியல் துறையை எடுத்துக் கொள்வோம். அத்துறையில் ஏற்பட்ட உட்பூசலை மையப்படுத்தி, துறையின் பெயரையும் நோக்கத்தினையும் மாற்றப் போவதாய் ஒரு நாடகம் காட்டியது அம்னோ அரசாங்கம். உடனே, இந்திய சமூக, அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து குரலெழுப்பியதும் அத்துறை பழைய நிலைமையிலேயே விடப்பட்டது. நிச்சயமாக காப்பாற்றப்படவில்லை! மீண்டும் அதே நிலைமையிலேயேதான் விடப்பட்டுள்ளது. ஆனால், மறுநாளே ஊடகங்களில் இந்திய ஆய்வியல் துறை காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும், சமூக அரசியல் கட்சிகளின் ஒருமித்த வெற்றி எனவும் தம்பட்டம் அடித்ததை படித்திருக்கிறோம். 53 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்திய ஆய்வியல் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில், கூடுதல் மானியங்களை கொடுத்து மொழி,சமூக,சமய ஆராய்ச்சிகள் போன்றவற்றை மேற்கொள்ள வைத்து, அதன்வழி அடிமட்ட சமுதாய அங்கத்தினர் பலனடையும் வகையில் முயற்சிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதனை வெற்றி, முன்னேற்றம் என்று கூறலாம். ஆனால், பிடுங்குவதைப் போல் பிடுங்கி, பின் மீண்டும் அதே நிலைமையில் நம் கையில் இந்திய ஆய்வியல் துறையை ஒப்படைத்திருக்கிறார்கள். அதைத்தான் வெற்றி என்று நீங்கள் கூற விரும்புகிறீர்களா?

எசு.பி.எம் தேர்வில் 10 பாடங்களை குறைப்பதன் மூலம் தமிழ் இலக்கியம் பாதிக்கப்படும் என்று அரசாங்கத்திற்குத் தெரியாதா என்ன? நிச்சயமாகத் தெரியும்! அவர்கள் எதிர்ப்பார்ப்பது நம்முடைய எதிர்வினையையும், அதன்பின் மக்களிடம் தோன்றும் தற்காலிக திருப்தியும்தான். அதற்காகவே தன் பிடியில் இருக்கும் சில அங்கத்துவ அரசியல் கட்சிகளை கைப்பாவையாகப் பயன்படுத்தி இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றுகிறது அம்னோ அரசாங்கம். இதன்வழி அக்கட்சிகளுக்கு சுயவிளம்பரம் ஊடகங்களின்வழி கிடைக்கிறது. தினசரி நாளிதழ்களில் இந்த கைப்பாவைகளின் அறிக்கைகளைப் படித்துப் பார்த்தாலே நமக்குத் தெரியும். இருந்ததை இருந்த இடத்திலேயே வைத்ததற்கு சமுதாயத் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலருக்கு பாராட்டு மழைகள் பொழியும். மலேசிய இந்திய சமுதாயம் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி சிந்திக்காமல், தொடர்ந்து அடிப்படை பிரச்சனைகள் குறித்தே தனது நேரத்தையும், சக்தியையும் செலவழிக்க வேண்டும் என்பதே அம்னோ அரசாங்கத்தின் விருப்பமுமாகும். ஆங்கிலத்தில் கூறினால், "They keep on making us busy on the ground level". இதனை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை! சமூக, அரசியல் இயக்கங்கள் சிந்தித்து பார்க்க விடுவதுமில்லை.

அடிப்படையில் அம்னோ அரசாங்கத்தின் இனவாதக் கொள்கைகளை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு நம் சமுதாயத்திடம் அரசியல் பலம் இல்லை என்பதுதான் உண்மை.

நாம் செய்ய வேண்டியது என்ன?

நம் சமுதாயம் எதிர்நோக்கிவரும் அடிப்படை உரிமைப் பிரச்சனைகள் களைய வேண்டுமென்றால், நாட்டின் திட்டமிட்ட இனவாத தேசியக் கொள்கைகள் மற்றும் மலாய் மேலாண்மை கோட்பாட்டைப் பற்றி நம் சமூக இயக்கங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். வெறுமனே ஒவ்வொரு பிரச்சனைக்கும் தற்காலிக தீர்வு காண்பதிலேயே நமது சக்தியையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருந்தால் வேர் அங்குதான் இருக்கும் ; கிளைகளைத்தான் நாம் நிரந்தரமாக மேய்ந்துக் கொண்டிருப்போம். இதற்கு ஒரு தீர்வு என்றுமே கிடைக்காது. எனவே ஆணிவேரை நோக்கி சமூக அரசியல் இயக்கங்கள் தைரியமாக குரலெழுப்ப வேண்டும். அரசு ஊடகங்களை விடுத்து நாமே மாற்று ஊடகமாக மாற வேண்டும்.

எதிர்வரும் 12-ஆம் தேதி திசம்பரன்று தோட்ட மாளிகையில் நடைப்பெறும் கண்டனக் கூட்டத்தில் பங்கு பெறும் அனைத்து சமூக அரசியல் இயக்கங்களும் தற்காலிக தீர்வுகளுக்கு வழி காணாமல், அடிப்படை உரிமைகள் இனி பறிக்கப்படாது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சிந்தித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவது முக்கியம்.

மலேசிய இந்திய சமுதாயம் தனது அடுத்தக் கட்ட நகர்வினைப் பற்றி சிந்தித்து, இழந்த உரிமைகளையும், கிடைக்கவேண்டிய உரிமைகளையும் தட்டிக் கேட்பதற்கான திராணியை வளர்த்துக் கொள்ளாதவரை நாடகம் தொடர்ந்து அரங்கேறி வரும். ஆனால், தீர்வுதான் பிறக்காது!

வாழ்க தமிழ் மொழி...

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

கே.பாலமுருகன் December 8, 2009 at 5:26 PM  

இதற்கு முன் வரையறை இல்லாத ரீதியில் அவரவர் விருப்பத்திற்கேற்ப எஸ்.பி.எம் தேர்வில் கூடுதல் பாடங்களைத் தேர்வில் எடுத்து, அதில் சாதித்துக் காட்டியும், அவர்களின் எதிர்க்கால கல்வி வாய்ப்பை பரந்தப்பட்ட சூழலில் அமைத்துக் கொண்டு சாகச பிம்பங்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். இது ஒரு தனிநபரின் கல்வி சுதந்திரமாகும். இந்தச் சுதந்திரம் வரையறுக்கப்படுவதன் மூலம், கல்வி ஒரு அதிகார மையத்தின் உற்பத்தி போல அடையாளப்படுத்தப்படவும், மாணவர்கள் இந்தக் கல்வி அமைப்பின் மீதான விரக்தியையும் சலிப்பையும் வெளிப்படுத்தக்கூடும்.

ஒரு நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க எந்த அளவிலான முன்னேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு கையாளப்பட்டுள்ளன என்பதன் ஆய்வும் அதனையொட்டிய விமர்சனமும் மிக முக்கியமானவை. ஆனால் இங்கு அரசாங்க சார்பற்ற இயக்கங்களே தமிழ் இலக்கியத்தை வளர்க்க பல திட்டங்களை முன்னெடுக்கின்றன. குறைந்தபட்சம் கல்வி ரீதியிலாவது தமிழ் இலக்கியத்தைப் பயிற்றுவிக்க கற்பிக்க அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு தடையும் வரையறையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.தமிழ் இலக்கிய அறிவும் மொழியறிவும் சிறந்த மொழி ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்க துணைப்புரியும் என்பதை உணர்ந்து தேசிய ரீதியில் தமிழ் இலக்கியத்தையும் மொழியையும் அங்கீகரிக்கவும் அதன் தொடர்பான உயர் கல்வி மதிப்பீடுகளுக்கு அந்தப் பாடங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதையும் கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் கோறிக்கைகளாகும்.

தமிழ் மொழி (நீக்குதல் - நீங்காமை) பின்விளைவுகள்
http://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-post_07.html

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP