மலேசியாவின் அத்திப்பட்டிக்கு வாருங்கள்!

>> Tuesday, March 10, 2009

ஒரு சமுதாயம் கடந்த 50 ஆண்டுகளாக வெளிப்படையாகவே தொடர் ஒடுக்குதலுக்கு ஆளான அவலத்தைக் காணவேண்டுமா? மலேசியாவின் அத்திப்பட்டிக்கு வாருங்கள். பலரும் அறிந்திராத ஒரு தோட்டத்து மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக மின்சாரமும் குடிநீரும் இல்லாது வாழ்க்கை நடத்தும் அவலத்தை நீங்களும் எட்டிப் பார்த்துவிட்டுப் போங்கள்!

2020-ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடு எனும் முத்திரையைப் பதிக்க துடித்துக் கொண்டிருக்கும் மலேசியாவிலும் இப்படி ஒரு தோட்டமா என்று நம்மை அதிர்ச்சிக் கொள்ள செய்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக நடைப்பெற்ற பொதுத்தேர்தலின்போது, ஒவ்வொரு தடவையும் வேட்பாளர்கள் ஓட்டு பொறுக்குவதற்கு இத்தோட்டத்திற்கு வருவார்களாம். வழக்கம்போல் மின்சாரம் குடிநீர் பிரச்சனையை தீர்த்துவைக்கிறோம் என்று சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக வாக்களித்துவிட்டுச் சென்றுவிடுவார்களாம். ஆனால் தேர்தலுக்குப் பின் இத்தோட்டத்தை , காகம்கூட ஏட்டிப் பார்க்காது என்பது இத்தோட்டத்து மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

அடிப்படை வசதிகள் கோரி மாநில மந்திரி புசார் அலுவலகம், சுல்தான் அரண்மனை முன்புறம் போராட்டம் எல்லாம் நடத்திப் பார்த்து ஓய்ந்துபோன மக்களிவர். இவர்களை பலர் பலவிதமான முறைகளில் தங்களின் சொந்த அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தியவர்களும் உண்டு. இப்படி காலங்காலமாகவே ஏமாற்றப்பட்டு வருகிறோமே என்ற விரக்தியில் "இனி எவன் வந்தாலும் ஓட்டுப் போடப்போவதில்லை" என்ற முடிவிற்கும் சென்றுள்ளனர்.

அம்மக்களின் வயிற்றெரிச்சலோ என்ன காரணமோ, இன்று அத்தொகுதியைப் பற்றி ஒவ்வொரு மலேசியனும் வாய்திறக்கிறான். காரணம் இடைத்தேர்தல்!

இந்த மக்கள் யார்? எங்கு இருக்கின்றனர்?

இன்னும் ஒருமாத காலத்தில் மலேசியாவின் பார்வையே ஒருசேரக் குவியவிருக்கும் புக்கிட் செலம்பாவ் தொகுதியில்தான் இந்த அத்திப்பட்டி அமைந்திருக்கிறது. சுங்கை கெத்தா தோட்டம் 2, அல்லது 'LADANG SUNGAI GETAH 2' என இத்தோட்டம் அழைக்கப்படுகிறது. அரசியல் வேட்டையில் இத்தோட்டத்து மக்கள் மீண்டுமொருமுறை சிக்கவிருக்கின்றனர். அதற்கான அஸ்திவாரங்கள் போடப்பட்டுவிட்டன. பலவிதமான வாக்குறுதிகளை அம்புக் கணைகளாக இவர்களை நோக்கி வீசுவதற்கு அரசியல்வாதிகள் தயாராகிவிட்டனர். இவர்களைப் பயன்படுத்திக்கொள்வதால் அக்கம் பக்கத்திலுள்ள பல தோட்டங்களில் வாக்குகளை பெருவாரியாக அள்ளலாம் என்ற வியூகத்தின் அடிப்படையில் இப்பிரச்சனை மீண்டும் பூதாகரமாக்கப்படுகிறது.

அண்மைய சிலகாலமாகவே மலேசியத் தமிழ் நாளிதழ்களில் இத்தோட்டத்தைப் பற்றி பல அரசியல்வாதிகள் பேசிவருவதை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஏன் மின்சாரம், குடிநீர் இல்லை?


ஏன் கடந்த 50 ஆண்டுகளாக இத்தோட்டத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளற்ற நிலைமை உருவானது? இந்நிலைமைக்கு யார் முக்கிய காரணம்? இந்த திட்டமிட்ட ஒடுக்குதலுக்கு பின்புலமாக விளங்கிவரும் முக்கிய நபர்கள் யாவர்? அதற்கான விடையை அத்தோட்டத்து மக்களே கூறுகின்றனர்.

ஐரோப்பியர் ஒருவருக்கு சொந்தமாக இருந்த இந்தத் தோட்டம் பல வருடங்களுக்கு முன்பு மர்மமான முறையில் கைமாறியிருக்கிறது. தோட்ட நிர்வாகத்தை சிலகாலம் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கோவிந்தன் என்பவரிடம் அந்த ஐரோப்பியர் கொடுத்துவிட்டு தாயகம் திரும்பியதாகவும், அதன்பிறகு அவர் மீண்டும் மலேசியாவிற்கு வரவேயில்லை எனவும், அவர் தன் தாயகத்திலேயே இறந்துவிட்டதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். நிர்வாகப் பொறுப்பை மட்டுமே ஏற்றுக்கொண்டிருந்த கோவிந்தன் என்பவர் எப்படியோ நாளடைவில் அந்தத் தோட்டத்திற்கே முதலாளியும் ஆகிவிட்டார். இவர் ..காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த தோட்ட நிலங்களை அபகரித்துக் கொண்ட நாளிலிருந்தே அங்கு வசிக்கும் மக்களுடன் பல தகராறுகள் எழுந்துள்ளன.

தேசிய மின்சார வாரியத்தினர் இத்தோட்டத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்த முனைந்தபொழுதெல்லாம் கோவிந்தன் என்பவர் இதற்கு இடையூறாகவே இருந்துள்ளார். தோட்ட நிலம் இவரின் பெயரில் உள்ளதால் மின்சார வாரியம் இவரின் அனுமதியின்றி தோட்டத்தில் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க சிரமப்படுகின்றனர். தோட்ட மக்கள் பலவகையில் அடிப்படை வசதிகள் கேட்டுப் போராடியும் கோவிந்தன் என்பவர் ஒரு வீட்டிற்கு தலா ரி. 2000 கேட்கிறாராம். ரி. 2000 கொடுத்தால்தான் மின்சாரம் உள்ளே வரும் எனும் நிபந்தனையும் போட்டுள்ளாராம். இத்தனைக்கும் இவரது வீடு தோட்டத்தின் நுழைவாயிலில்தான் அமைந்திருக்கிறது. அவர் வீடுவரைக்கும் மின்சார வாரியம் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

எங்கள எல்லாரையும் இங்கேர்ந்து விரட்டிவுட்டுட்டு நிலத்த டெவலப்பர்கிட்ட விக்க பாக்குறானுங்க...” என்று தோட்ட மக்கள் வெதும்புகின்றனர். கரண்டுக்கு ஜெனெரேட்டர், தண்ணிக்கு கிணறு, அதுகூட சிலபேருக்கு இல்ல.. இதுதாங்க எங்க வாழ்க்க...” என்கிறார் பாதி வாழ்க்கையை இருட்டினுள் கடந்துவந்த ஒரு மூதாட்டி.

மண்ணெண்ண விளக்குலேயே படிச்சி என் பொம்பள புள்ள இப்ப யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியால படிக்கிறா..” என்று ஒரு மாது என்னிடம் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே அத்தோட்டத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் பலர். நல்ல பணியில் அமர்ந்ததும் அருகிலுள்ள பட்டணத்தில் பலர் குடியேறிவிட்டனர்.

நாங்களும் ..காவுல நிறையப் பேர பாத்து பேசனோம்..ம்ம்.. இடத்த காலி பண்ணுன்னுதான் சொல்றானுங்க...! முந்தி 50 குடும்பத்துக்கு மேலே இங்க இருந்துச்சி, இப்ப 20 குடும்பந்தான் இருக்கு... நாங்களும் எப்படா இந்த இடத்தவுட்டு போவோம்னு காத்துகிட்டு இருக்கானுங்க.. வெள்ளக்காரன் தோட்டத்த விக்காமலேயே இவனுங்களுக்கு எப்படிங்க கைமாறுனுச்சி!..” என்று நியாயத்தைக் கேட்டார் அங்குள்ள தோட்டத் தொழிலாளி ஒருவர்.

"யார் யாரையோ பாத்தோம், எல்லாரும் எங்கள வெளியிலே வீடு வாங்கிட்டு போக சொல்றாங்க, நான் மரம் வெட்டுறேன்.. நாள் சம்பளம் ஒன்பது வெள்ளிதான்.. இதுல எங்கே போயி வீடு வாங்க முடியும் சொல்லுங்க...” என்று வருத்தப்பட்டுக் கொண்டார் ஒரு குடும்ப மாது.

இதேப்போன்று பலரிடமிருந்து பலவிதமான முராரி ராகங்கள்...

எது எப்படியோ, வருகின்ற இடைத்தேர்தலில் களம் காணவிருக்கும் கட்சிகள் இத்தோட்டத்து மக்களுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இத்தோட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு வந்த சூழலானது கடுமையான மனித உரிமை மீறல் என்றே கூறவேண்டும்.

யார் அத்தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, முதலில் இம்மக்களுக்கு மின்சாரமும் குடிநீரும் கொடு! இவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அமல்படுத்து! பிறகு ஓட்டைக் கேள்!

2004-ஆம் ஆண்டில் சுங்கை கெத்தா 2 தோட்டமானது, சுங்கை கெத்தா 2 கிராமம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்குள்ளவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. இதோ அதன் காணொளி காட்சி உங்கள் பார்வைக்கு..



போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

கிருஷ்ணா March 16, 2009 at 7:46 PM  

துன் வீ.தி. சம்பந்தன் அவர்கள் இருந்திருந்தால்.. அந்த தோட்டத்தையும் விலைக்கு வாங்கி ஆவன செய்திருப்பார்.. இப்போது இருக்கும் முதலைகளுக்கு அதற்கெல்லாம் ஏது நேரம்.. ஏது அக்கரை!

இன்னும் எதையெல்லாம் தன் பூத வயிற்றுக்குள் திணிக்கப் போகிறதோ அந்த திமிங்கலம்?! சாமி வரம் கொடுத்தாலும்.. இந்த ம.இ.கா பூசாரிகள் இருக்கும் வரை இந்தியர் முன்னேற்றம் எட்டிக்காய்தான்!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP