இசாவின் கீழ் எனது 500 நாட்கள்

>> Monday, April 27, 2009

பி உதயகுமார் ஏப்ரல் 26

* எனது சுதந்திரத்துக்காக வாடுகிறேன்
* ஆனால் வருந்தவில்லை

இன்று ஏப்ரல் 26, 2009ஆம் ஆண்டு. இந்த நாள், ஒரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாமல், விசாரணை செய்யப்படாமல், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படாமல் அம்னோவின் தடுப்புக் காவலில் நான் வைக்கப்பட்டு 500 வது நாளை, குறிப்பிடுகிறது. இது, கடந்த 18 ஆண்டுகளாக மனித உரிமைகள் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த, சிறுபான்மை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தஎனக்குக் கிடைத்துள்ள நீதிஎன்று நான் கருதுகிறேன்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தொடர்ச்சியான, தன்மூப்பான ஆணையின்படி, ஈராண்டுகளுக்கு நான் சிறைவாசம் புரிந்து, அவரது ஆட்சியின் கீழ், காலவரம்பின்றி சிறையில் இருக்கவேண்டும் போலும். தைப்பிங்கில் உள்ள இந்த கெம்தா கமுந்திங்கில், இசா தண்டனையின் கீழ், எட்டாண்டு காலமாக சிறைவாசம் புரியும் கைதிகளும் உள்ளனர்.

ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனது சிறைவாசத்தின் ஒவ்வொரு நாளும், மலேசியாவில், தேசிய மேம்பாட்டின் நீரோட்டத்திலிருந்து இந்தியர்களை பிரித்து, ஓரங்கட்டி, பாகுபாடு காட்டி, அடக்கி ஒடுக்குவதில் அம்னோ புரிந்த அட்டூழியங்களுக்கும் அநீதிகளுக்கும் எதிராக, ஆயிரக்கணக்கான புதிய இதயங்களை திறக்கும் என்பதை நான் மனப்பூர்வமாக உணருகிறேன்.

இன்று நான், 500 நாட்களை கடந்து வந்துள்ளேன். எனது மதிப்புமிக்க சுதந்திரத்தில் 500 நாட்களை நான் இழந்துள்ளேன். எனது இசா தடுப்புக் காவலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, நான் முகச் சவரம் செய்து அல்லது தலை சீவி 500 நாட்களாகி விட்டன.

அதே கருநீல காற்சட்டையும். வெண்ணிற சீருடையும் நான் அணியத் தொடங்கி இன்றுடன் 500 நாட்கள் ஆகியுள்ளன.

எனது இடது கால்

2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி, தற்செயலாக, எனது இடது பாத பெருவிரலில் காயமேற்பட்டது. நீண்ட காலமாக நீரிழிவு நோயால் நான் சிரமப்பட்டு வருவதால், அந்த காயம் மேலும் மோசமடைந்தது. காயமுற்ற முதல் நாளிலிருந்தே, கிளனிகல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு பலமுறை நான் கேட்டுக் கொண்டேன்.
அரசுச் சேவை மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதே இதற்குக் காரணம். அரசு மருத்துவர்களின் சுதந்திரம், உள்த்துறை அமைச்சு மற்றும் போலீஸ் சிறப்புப் புலன்விசாரணை பிரிவுக்கு உட்பட்டுள்ளது என நான் கருதுறேன்.

நான் ஆட்சேபித்தபோதிலும், 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் திகதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு நான் ஒப்புக் கொண்டேன். நான் எதிர்பார்த்ததைப் போன்று, எனது இடது பாதம் வீக்கமுற்று கறுத்து போனாலும், என்னை வார்டில் அனுமதிக்க மறுத்து விட்டார் அங்குள்ள மருத்துவர்.

மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்று கூறிய அந்த பெண் மருத்துவர், எலும்பு மருத்துவ நிபுணரிடம் அல்லது இசா காவலின்போது எனக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு இருதய சிகிச்சை நிபுணரிடம் அனுப்பவும் இல்லை.

எனது பாதத்தில் பிளாஸ்டர் பத்து ஏதும் போடப்படவில்லை. எந்த மருந்துவ ஆலோசனையும் வழங்கப்படவில்லை. எனது கால் தானாகவே மாறிவிடும் என்று அந்த மருத்துவர் என்னிடம் தெரிவித்தார். போலீஸ் கோப்பில் எனது மருத்துவ குறிப்புகளை எழுதி, என்னுடன் வந்த போலீஸ் அதிகாரிகளிடமே அவற்றை அந்த மருத்துவர் கொடுத்தபோது எனது சந்தேகம் ஊர்ஜிதமானது.

இரண்டாவது வாரத்துக்குள், எனது கால் மோசமடைந்தது. பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதிலும், அரசு மருத்துவமனைக்குக்கூட கொண்டு செல்வதற்கு (ஆட்சேபத்தின்பேரில் நான் ஒப்புக் கொண்டாலும்) சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்து விட்டனர். நான்கு போலீஸ் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனது போலீஸ் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

நிலைமை மோசமடைந்தால், எனது இடது பாதம் துண்டிக்கப்படலாம் என்ற எண்ணமும் ஓடியது. ஒரு வழக்குரைஞர் என்ற முறையில், என்னையே என்னால் காப்பாற்றமுடியவில்லை என்பதை முதல்முறையாக நான் உணர்ந்தேன். ஒரு கைதியாக இருப்பதால் என்னால் எதையும் செய்யமுடியவில்லை.

அப்படி மோசமாக ஏதும் நிகழ்ந்தாலும்கூட, செயற்கை காலை பொருத்தி, நடக்கலாம் என்றும் நான் நினைத்துக் கொண்டேன். இறுதியாக, மக்கள் சக்தி ஆதரவாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் நடத்திய பிராத்தனைகள்தான் எனது காலைக் காப்பாற்றியது. சிறைச்சாலையில் எனது நலனையும் உறுதி செய்தது.

ரொட்டி, பிஸ்கட்டுகளை சாப்பிட்டு வருகிறேன்

2009ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி, எனக்கு பரிமாறப்பட்ட கோழிக் கறியில் மாட்டிறைச்சி துண்டுகள் இருக்கக் கண்டேன். கோழியும் மாட்டிறைச்சியும் ஒரே சட்டியில் சமைக்கப்பட்டு, பிறகு கோழிக் கறி தனியாக எடுக்கப்பட்டு பரிமாறப்பட்டதாக சிறைக்கூட சமையல் அறையில் பணியாற்றிய ஒரு பாகிஸ்தானியரான மொகமட், இலங்கை நாட்டவரான அப்துல் சார்ஜோன், சக கைதிகள் ஆகியோர் உறுதிப்படுத்துனர்.

நான் உடனடியாக போலீஸ் புகார் செய்தேன். ஆனால் வழக்கம்போல் எதுவும் செய்யப்படவில்லை. இது வேறுவிதமாக இருந்திருந்தால் - ஒரு மலாய் முஸ்லீம் பாதிக்கப்பட்டிருந்தால் - வேறு புதிய விதி முறைகளை அம்னோ அமல்செய்திருக்கும்.

ஆனால், அதுதான் பிரதமர் நஜிப்பின்ஒரே மலேசியாகொள்கையாகும். ஒரே மலேசியா - இரண்டு முறைகள். கூட்டரசு அரசமைப்பின் 11 விதிக்கு முரணாக, எனது சமய உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சிறைச்சாலை சமையலறையில் சமைக்கப்படும் உணவை உண்பதற்கு நான் மறுத்து விட்டேன். ஓர் இந்து என்ற முறையில், நான் மாட்டிறைச்சி உண்பதில்லை. இப்போது பெரும்பாலும் ரொட்டி, பிஸ்கட்டுகளை உண்டு வருகிறேன்.

500 நாள் முழுவதும், இந்த போராட்டத்தை தொடக்கியதற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை. மலேசியாவில் சிறுபான்மை இந்தியர்களுக்கும் உட்பட நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த 500 நாட்களில், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கொரு முறை, கைதிகளைச் சந்திப்பதற்கு வரும் போலீஸ் சிறப்பு புலன்விசாரணை அதிகாரிகளைப் பார்த்து, ‘எனது விடுதலைக்கு மனு செய்வததற்கும்நான் மறுத்து விட்டேன்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆக, என்னை விடுவிக்கும்படி கெஞ்சுவதற்கு நான் தாயாராக இல்லை.
மேலும் இதற்கு முன்னர், இதே காரணத்துக்காக, அம்னோவின் உள்த்துறை அமைச்சரைச் சந்திப்பதற்கும் நான் மறுத்து விட்டேன். எனது விடுதலை, அவரது கைகளில்தான் உள்ளதென்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இண்ட்ராப் மக்கள் சக்தி வாயிலாக மேற்கொள்ளப்படும் உண்மையான, நேர்மையான போராட்டம்தான் எனக்கு மிகப் பெரிய ஆத்ம திருப்தியை தருகிறது. இந்த நினைவில்தான் எனது சிறைவாழ்க்கையும் கழிக்கிறேன்.

கலகத் தடுப்புப் போலீஸ்காரர்கள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, குழாய்களைக் கொண்டு நீரை பீய்ச்சி அடித்ததையும் பொருட்படுத்தாமல், இண்ட்ராப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டது கண்டு நான் நெகிழ்ந்து போனேன். அவர்கள் போலீசாரால் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, நீதிமன்றத்துக்க்கு கொண்டு செல்லப்பட்டனர். சாத்திய சிறைத்தண்டனையை எதிர்கொள்வதற்கு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு, வேலைகளை இழந்தபோது, அவர்களது மனைவி, மக்களும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

அம்னோவின் இனவாதத்துக்கும், சமய தீவிரவாதத்துக்கும் மற்றும் தேசிய மேம்பாட்டின் முக்கிய நீரோட்டத்திலிருந்து இந்தியர்கள் நீக்கப்பட்டதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, பொது நோக்கத்துக்காக, புரியப்பட்ட இந்த தியாகங்களுக்காக உங்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். வாழ்க மக்கள் சக்தி.

எனது சுதந்திரத்துக்காக வாடுகிறேன்

அன்றாடம் இந்த சிறைவாழ்க்கையில் வாடுகிறேன். எனது சுதந்திரத்துக்காக வாடுகிறேன், குடும்பம், மனைவி மக்களுக்காக வாடுகிறேன்.

ஆனால், மேலும் மோசமானதொரு சூழ்நிலையை எதிர்கொள்ளவும் நான் தயார். அது மற்றுமொரு 500 நாளாக அல்லது சிறைவாசமாகவும் இருக்கட்டும். அதை இண்ட்ராப் நோக்கத்துக்காகச் செய்வேன். அம்னோ என்னை சிறையிலடைக்கலாம். ஆனால் இண்டாராப் மக்கள் சக்தியின் வலிமையை அவர்களால் சிறைப்படுத்த முடியாது.

2008ஆம் ஆண்டு மார்ச் 8, பொதுத் தேர்தலில், மக்கள் சக்தி, ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அம்னோ/தேமு , நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் நான்கு மேற்குக் கரை மாநிலங்களில் அரசியல் அதிகாரத்தையும் இழப்பதற்கு அது ஓர் உந்து சக்தியாக இருந்தது.

மேலும் புக்கிட் செலம்பாவ் மற்றும் புக்கிட் கந்தாங் இடைத் தேர்தல்களில், மக்கள் சக்தி மீண்டும் தனது வலிமையை புலப்படுத்தியது. மக்கள்சக்தி வலிமை இந்த அளவுக்கு இருக்குமென எனது கனவிலும் நான் எண்ணவில்லை.

நான், மகாத்மா காந்தியோ, நெல்சன் மண்டேலாவோ அல்ல. ஆனால் மக்களின் உண்மையான குறைபாடுகள்தான் - அடக்கிவைக்கப்பட்ட வலி, சித்ரவதை, துயரங்கள் மற்றும் இதய வேதனைகள் - 2007ஆம் ஆண்டு நவம்பர் 25ல், முன்னெப்போதும் இல்லாத அளவில் திரண்ட 100,000 பேர் இண்ட்ராப் பேரணிக்கு வழிகோலியது.

பொறுமை காக்க வேண்டும். அம்னோ மாறாது. ஆனால் 2012/ 2013 ஆண்டு பொதுத் தேர்தலில், அம்னோவை நாங்கள் மாற்றுவோம். அம்னோவின் முரட்டுத்தனமான உத்திகளுக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் ஆட்சிமுறைக்கும் நாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். 52 ஆண்டுகள் நாம் காத்திருந்து விட்டோம்.

பொறுமையுடன் இருங்கள். இன்னும் மூன்று அல்லது நான்காண்டுகளில், ஒரு புதிய தொடக்கம், புதிய அரசியல் முறை, இந்தியர்களுக்கும் உட்பட, சமத்துவமும் சம வாய்ப்புகளையும் கொண்ட ஒரு மலேசியா உருவாகுமென நாம் நம்புகிறோம். தேசிய மேம்பாட்டின் முக்கிய நீரோட்டத்தில் இந்தியர்களும் அங்கம் வகிக்கும் மலேசியா அமையும்.

எனது சிறைவாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், எனது சிந்தனையும், பிரார்த்தனையும் மக்கள் சக்தியுடன்தான். மேலும் போராடுவதற்கு நான் திட்டம் வரைந்துள்ளேன். எனது விடுதலைக்காகவும் அம்னோவின் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து காலப்போக்கில் நீதி தழைத்திடவும் பிரார்த்தியுங்கள்.

இந்த 500 நாள் சிறைவாசத்துடன் அம்னோ என்னை தண்டித்திருக்கலாம், ஆனால் மக்கள் சக்தியாகிய நீங்கள் அம்னோவையும் தேசிய முன்னணியையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் - வாக்குப் பெட்டிகள் வழி.

ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பாராக

பி உதயகுமார்
பேரா, கமுந்திங் தடுப்புக் காவல் முகாம்

நன்றி :- மலேசியா இன்று

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Anonymous May 12, 2009 at 10:11 AM  

மனதில் உறுதி ,தளராத தன்னம்பிக்கை ,எங்களின் வேண்டுதல்கள் எல்லாம் கண்டிப்பான வெற்றியைத் தரும்.வாழ்த்துக்கள்.
we are from our own nation
http://jeevaflora.blogspot.com
Jeeavaflora

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP