மீண்டும் ஒரு முறைக்கேடு...!
>> Wednesday, October 31, 2007
30-ஆம் திகதி அக்டோபர் 2007,
சிலாங்கூர், ஷா ஆலாமில் தாமான் கருப்பையா என்கிற குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சிறீ மகா மாரியம்மன் ஆலயம் நீதிமன்ற உத்தரவின்படி ஷா ஆலாம் மாநகராட்சி மன்ற அதிகாரிகளால் காவல் துறையின் பலத்த பாதுகாப்புடன் உடைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் முன்னால் தலைவராக இவ்வருட ஆரம்பத்தில் காலஞ்சென்ற டத்தோ K.சிவலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு அறிவிப்புமின்றி கோயில் உடைபடுவதைப் பார்த்துக் கொதித்தெழுந்த மக்களை காவல் துறையினர் கடுமையாக முறைகளைப் பயன்படுத்தி ஒடுக்கினார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதோடு கோயிலின் தலைமை குருக்கள் சிவ சிறீ இராமலிங்க குருக்களை காவல் துறையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவமானது மலேசிய இந்துவாழ் மக்கள அனைவருடைய உள்ளங்களையும் கண்டிப்பாகப் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இக்கோயில் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்தாலும் எந்தவொரு அதிகாரப்பூர்வக் கடிதத்தையும் கொடுக்காமல் இக்கோயில் உடைக்கப்பட்டிருக்கிறது.கோயில் உடைக்கப்படவிருக்கும் சம்பவம் மலேசிய இந்து சங்கத்திற்கு காலை மணி 10-க்கு தெரிய வந்ததும் உடனே அதன் தலைவர் டத்தோ வைத்தியலிங்கம் ஐயா அவர்கள் ம.இ.கா வின் தலைவர் டத்தோ சிறீ ச.சாமிவேலுவைத் தொடர்புக் கொண்டு பிரச்சனையை முன்வைத்திருக்கிறார். பின் டத்தோ சிறீ ச.சாமிவேலு சிலாங்கூர் மாநில முதல்வரைத் தொடர்புக்கொண்டு விளக்கம் கேட்டதற்கு மாநில முதல்வர், தமக்கு அன்று நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு வந்ததையும், அவரால் வேறெதுவும் செய்ய இயலவில்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது மலேசிய இந்து மக்கள், குறிப்பாக தாமான் கருப்பையாவில் உள்ள மக்கள் இவ்விஷயத்தில் மிகவும் கோவமடைந்துள்ளார்கள். நஷ்ட ஈடு கேட்டு அரசாங்கத்திடம் மனு செய்துளார்கள்.
இதில் என் கருத்தையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நஷ்ட ஈடிற்கு ஒருவேளை அரசாங்கத்திடமிருந்து பணம் கிடைக்கலாம், ஆனால் போன மானம், மரியாதை திரும்ப கிடைக்குமா சகோதரர்களே?
பல பேர் ஒன்று திரண்டு ஆரம்ப காலக்கட்டத்திலேயெ ஒரு நிலத்தை வாங்கி அதில் கோயில் கட்டி இருந்தால்? நாம் செய்யாமல் விட்டத் தப்பிற்கு நம் கடவுளின் சிலைகள்தான் பலிகடா.. அரசாங்கம் செய்தது முறைக்கேடே.. ஆனால் அதை வளர விட்டது நாம்தான் சகோதரர்களே... தெருவிற்கு ஒரு கோயில் இருப்பதைவிட ஊருக்கு ஒரு அழகிய பிரம்மாண்டமான கோயில் இருப்பதுதான் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி வளர்ச்சியடையச் செய்யும்.
இறைவன் இருக்குமிடம், நம் மனம் லயிக்கக்கூடிய இடம் எப்படி இருக்க வேண்டும்...நினைத்துப் பாருங்கள்... இதையெல்லாம் எடுத்துக் கூற நம் சமுதாயத்தில் சரியான தலைவர்கள் அமையவில்லை... அப்படியே ஒரு பிரச்சனையென்றால் அதனைத் தன் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தப் பட்டியலில் சமீபக்காலமாகத் தமிழ்ப் பள்ளிகளின் நிலமைப்பாடும் சேர்ந்துள்ளது.
நெஞ்சுப் பொறுக்குதில்லையே.... இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment