புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை!!!
>> Tuesday, October 30, 2007
புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால், கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை மிகவும் வெப்பமாகின்றன. இயற்கைக்கு எதிராக நடக்கும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாடு உலகளவில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புவி வெப்பமடைந்து வருகிறது; பனி மலைகள் வேகமாக உருகுகின்றன; கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் வறட்சியும் மிரட்டுகிறது.
இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 பாகை சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.
நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால்தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும். அதே போல் மலேசியாவிலும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மூலம் : நம் பூமி (நன்றி)
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment