ஏன் என் பிள்ளையை தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும்?
>> Friday, October 26, 2007
வணக்கம் மன்னர்களே,
இன்று நம்மிடையே சிலத் தமிழ் பெற்றோர்கள் மழைக்குக் கூட தமிழ்ப் பள்ளிப் பக்கம் ஒதுங்குவதை அவமானமாக கருதுகிறார்களே அதற்கு என்னக் காரணம்? இவர்கள் அறியாமையை என்னவென்றுக் கூறி நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்வது?
என்னைப் பொருத்தவரை தமிழ்ப் பள்ளிகள் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வது முற்றிலும் நம் சமுதாயத்தின் குற்றமேயொழிய எந்தவொரு அரசியல் கட்சியும் இதற்கு துணைபோவதில்லை. நம் அழிவை நாமே முன்னின்று அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்.
முதலில் அனைத்து தமிழர்களும் தமிழ்ப் பள்ளிகள் தொடர்பாக ஒத்தக் கருத்துடையவர்களாக இருப்பது மிகவும் அவசியம்.அனைவரும் அவரவர்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளியில் பயில ஆவன செய்திருந்தால் தமிழ்ப் பள்ளிகள் மூடப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நாளுக்கு நாள் சாதனைப் படைத்துவருவது நம் கண்களை இன்னும் திறக்கவில்லையா? 515 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 'ஏ'க்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளனரே. நம்மாலும் வெற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா..
ஒரு வட்டாரத்தில் தமிழ்ப் பள்ளி இயங்குவதனால் சமுதாயத்திற்கு அதன்மூலம் என்னப் பயன் என்று பார்க்கலாம்.
1. மலாய் பள்ளிகளில் நம் பிள்ளைகள் குறைந்த எண்ணிக்கையில் பயின்றுவருவதனால் பிற இன மாணவர்களுடைய பழக்கவழக்கங்களில் தோய்ந்து சொந்தக் கலாச்சாரத்தை மெதுவாக இழக்கின்றனர். அவர்களுக்கு பொங்கல் பண்டிகையின் மகத்துவம் தெரியாது, சரஸ்வதி பூஜையைக் கண்டிருக்க மாட்டார்கள், ஆன்மீக கலாச்சார விஷயங்களை எடுத்துக் கூற அவர்களுக்கு யாரும் இருப்பதில்லை, தமிழ்ப் பள்ளியின் தரத்திற்கு மலாய் பள்ளிகள் இருப்பதில்லை, மலாய் மாணவர்கள் இறைவணக்கம் செய்யும்பொழுது நம் மாணவர்கள் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டிருக்கின்றேன். மலாய் பள்ளிகளில் பயிலும் முக்கால் சதவிகிதம் தமிழ் மாணவர்கள் முறையாக தன் பூர்வீகத்தை அறியாதவர்களாகவே உள்ளனர். இன்னும் பல பள்ளிகளில் உணவு பிரச்சனைகளை நம் மாணவர்கள் எதிர்நோக்குவதும் கவலையை அளிக்கிறது. தமிழ்ப் பள்ளிகளில் சண்டைப் போடச் செல்லும் வீரம் மிகுந்த பெற்றோர்கள் மலாய் பள்ளிகளில் பூனைகள்போல் குறுகி விடுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
2. எத்தனைப் பேர் நம்மின மாணவர்கள் மலாய் பள்ளிகளில் மாணவர்த் தலைவனாகவும், வகுப்புத் தலைவனாகவும், நூலக பொறுப்பாளர்களாகவும் தேர்வுச் செய்யப்படுகின்றனர்?
3. தமிழ்ப் பள்ளிகளின் பாடத்திட்டமும் மலாய் பள்ளிகளின் பாடத்திட்டமும் வித்தியாசங்கள் அதிகம் கொண்டிருப்பதில்லை, ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் கலாச்சாரம், மொழி, பண்பாடு, சமயம் போன்றப் பல நல்ல விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். இன்று பல மலாய்ப் பள்ளி மாணவர்களுக்கு பாரதியார், திருவள்ளுவர், கம்பன், அவ்வையார் போன்ற மகான்களைத் தெரிந்து வைத்திருப்பதில்லை.
4. தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருப்பதால் அரசாங்கம் தமிழர்களுக்கு வேலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தமிழ்த் துறைத் தொடர்ந்து இருக்கும்.
5. தமிழ்ப் பள்ளிகள் இயங்குவதால், எத்தனை தமிழர்கள் பயனடைகிறார்கள் தெரியுமா... பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள், சிற்றுண்டிச்சாலை நடத்துபவர்கள், தமிழ் புத்தகக் கடைகள் என பட்டியல் நீள்கிறது. இது மலாய் பள்ளிகளில் எடுபடுமா? நம்மினத்தவருக்கு இதுபோன்ற வாய்ப்புக்கள் கொடுக்கப்படுமா?
6. நம் தமிழாசிரியர்களின் மொழிப் பற்றுக் காரணமாகவும், இனப் பற்றுக் காரணமாகவும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் பயனுறும் நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பெறுகின்றன. தமிழாசிரியர்களே அதிகம் தியாக மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றனர்.
7. பலத் தமிழ்ப் பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைகளாக சமய வகுப்புகள், பரத நாட்டிய வகுப்பு, சங்கீத வகுப்பு என பாரம்பர்யத்தில் மாணவர்கள் ஊறுகின்றனர்.
8. மலாய்ப் பள்ளிகளில் உள்ள தமிழ் மொழிப் பாடத்திட்டம் உறுதியாக இல்லாமல் இருக்கிறது, வெறும் இரண்டரை மணி நேரமே ஒரு வாரத்தில் தமிழுக்காக் ஒதுக்கப்படுகிறது.
9. நம்முடைய தனித்துவம் தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே உள்ளதை யாரும் மறந்துவிட வேண்டாம். தமிழ்ப் பள்ளிகள் நம் பாரம்பர்யத்தின் அறக்காவலன்.
10. தயவு செய்து தமிழ்ப் பள்ளிகள் நமக்கு என்ன செய்தது எனக் கேட்பதை விடுத்து, நாம் தமிழ்ப் பள்ளிகளுக்கு என்ன செய்தோம் என்றுக் கேட்பதே அறிவுடைமை.
தமிழ்ப் பள்ளிகள் வளர்ந்தால் நம் சமுதாயமே வளரும் எனும் உண்மையை மனதிற்கொண்டு அனைவரும் செயல்படுவோமாக...
மலேசிய நாடாளுமன்றத்தின் முன் பல தன்னார்வ தொண்டூழிய இயக்கங்கள் தமிழ்ப் பள்ளிகளை அரசாங்க முழு உதவிப் பெறும் பள்ளிகளாக மாற்ற உரிமைக்குரல் கொடுக்கும் படக்காட்சி கீழே.. இவர்களைப் போல் அனைவரும் தைரியமாக உரிமைக்காகப் போராட தயாராக வேண்டும்!
1 கருத்து ஓலை(கள்):
TAMIL ALSO HAVE MOST KNOWLEDGE TAMIL HINDU WAS FOUND FIRST FLIGT DETAIL CLICK HERE AND CAN YOU GIVE LINK WITH ME MY SITE
http://isoorya.blogspot.com/2008/02/blog-post_8539.html
Post a Comment