புவா பாலா முருகன் யுனேசுகோவிற்குப் பயணம்!

>> Tuesday, July 28, 2009


புவா பாலா கிராமத்தில் மாடுகள் வளர்த்து வரும் கே.முருகன்(வயது 46) என்பவர் நேற்று (திங்கட்கிழமை) மாலை (பிரிட்டன் நேரப்படி) லண்டன் மாநகரைச் சென்றடைந்தார். அங்கு அவரைச் சந்தித்து வரவேற்ற இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி புவா பாலா கிராம விவகாரத்தை பாரிசு மாநகரில் அமைந்துள்ள யுனேசுகோவின் உலக பாரம்பரிய தலைமையகத்தின் பார்வைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார். பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் உதவியோடு பாரிசு நகரில் யுனேசுகோ அதிகாரிகளுடன் சந்திப்பு கூட்டம் நடத்த திரு.வேதமூர்த்தி ஏற்பாடு செய்திருக்கிறார்.

நாளை அவ்விருவரும் பாரிசு நகருக்கு பயணமாகின்றனர்.


இத்தகு நடவடிக்கையின்வழி அனைத்துலக ரீதியில் சம்பந்தப்பட்டவர்களின் மீது குறிப்பாக பினாங்கு மாநில முதல்வரிடம் புவா பாலா கிராமத்தை பாரம்பரிய கிராமமாக அறிவிக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கக்கோரி நெருக்குதல் அளிக்கலாம்.

முருகனின் இம்முயற்சி அனைத்துலக பார்வையை 6.5 ஏக்கர் புவா பால நிலத்தின் மீது விழ வைப்பதோடு, யுனேசுகோவின் நெருக்குதல்களின்வழி புவா பாலா கிராமத்தை காப்பாற்றி, அதனை தமிழர் பாரம்பரிய கிராமமாக நிலைப்பெறச் செய்ய முடியும் எனும் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

இதற்கிடையில், பினாங்கு மாநில அரசு நுஸ்மெட்ரோ வெஞ்சூர்சின் மேம்பாட்டு திட்டத்தை ரத்து செய்திருப்பினும் கூட்டரசு நீதிமன்றத்தின் ஆணையின்கீழ் புவா பாலா நிலத்தை இடித்துத் தள்ளுவதற்கு அந்நில மேம்பாட்டாளர்களுக்கு இன்னும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயத்தில், மேலும் சில ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

கிராம மக்களின் வீடுகளை உடைத்துவிட்டு, பிறகு பேரம் பேசினால் மக்கள் அடிபணிந்துபோகக் கூடும், நட்ட ஈடை வாங்கிக் கொண்டு நிலத்தை விட்டுக் கொடுக்கக்கூடும் என்பது மேம்பாட்டாளர்களின் திட்டங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என ஐயுறப்படுகிறது.

கிராம நிலத்தில் சிறுபகுதியை மட்டும் பாரம்பரிய நிலமாக ஒதுக்கீடு செய்து, பெறும்பகுதி நிலத்தில் நுஸ்மெட்ரோவின் ஆடம்பர அடுக்குமாடி திட்டத்தை செயல்படுத்த பினாங்கு மாநில அரசு நில மேம்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் வெற்றியளிக்கும் தீர்வாக பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் இதனை வழிமொழிந்தாலும், பாரம்பரிய நிலம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்!

முறையே செயல்படுத்துவன வேண்டியவற்றை காலந்தாழ்த்தி செயலாற்றிவரும் பினாங்கு மாநில அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

பொறுத்திருந்து பார்ப்போம்...

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

மனோவியம் July 29, 2009 at 12:01 PM  

போரட்டம் தான் தமிழர்களுக்கு வாழ்க்கையாகி போனது.சமுதாய மேன்மைக்கு போராடும் உங்களை போன்ற இளைஞர்கள் சேவவை அற்புதமானது.வாழ்த்துக்கள்.

Sathis Kumar July 29, 2009 at 6:22 PM  

மேலும் பல இளைஞர்கள் போராடுவதற்கு முன்வர வேண்டும் என்பதே நமது அவா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ..

sivanes July 31, 2009 at 9:45 AM  

//பினாங்கில் 200 வருடங்களாக நிலைப்பெற்றிருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இனி இருக்குமா என்பது கேள்விக்குறியே! இந்நிகழ்வானது அக்கிராமத்தின் கடைசி நிகழ்வாகக் கூட இருக்கலாம்.//

வருத்ததை வரவழைத்த வரிகள்! :(

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP