ஒற்றன் வந்துவிட்டான்...!
>> Sunday, June 15, 2008
வணக்கம் மன்னர்களே, ஒற்றன் ஓலையை கச்சையில் முடித்துக் கொண்டு புரவியுடன் வேற்று நாட்டிற்கு வேவு பார்ப்பதற்காக சென்று விட்டதாக நினைத்து விட்டீர்களா.. ம்ம்.. நாட்டிலுள்ள சம்பவங்களை மன்னர்களுக்கு அறிவிப்பது என் கடமை என்றாலும் இம்முறை புரவியிலிருந்து கீழே விழுந்து காலையும் கையையும் உடைத்துக் கொண்டல்லவா உங்கள் முன்னால் வந்து நிற்கிறேன். நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டதற்கு முதலில் மன்னர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த நீண்ட இடைவெளியானது, வழியில் களைப்பாறி வந்ததனால் அல்ல, வைத்தியர்களிடம் அறுவைச் சிகிச்சை எடுத்துக் கொண்டு கையிலும் காலிலும் கட்டுக்களை பெற்றுக் கொண்டு வந்ததனால் இந்த தாமதம்.
முக்காலமும் உணர்ந்த வலைப்பதிவு நண்பர் விக்கினேசுவரன் (வலைப்பதிவுலக நாரதர்) அப்பொழுதே சொன்னார், எனக்கு கூடிய விரைவில் கால்கட்டு (திருமணம்) நிகழ்வு நடைப்பெறப் போகிறதென்று. இவ்வளவு பெரிய மாவுகட்டு கிடைக்கும் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை :)
சரி, எனக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பான தகவல்களை அனைவருக்கும் சொல்ல வேண்டியது என் கடமை. தசாவதாரம் படத்தில் 12-ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வதைப் போல் உங்களை 02-06 கி.பி 2008ற்கு அழைத்துச் செல்கிறேன்.
அச்சமயம் நான் பள்ளி விடுமுறையை குளுவாங்கு, சொகூரில் மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்த நேரம். அன்று மதியம் 1 மணியளவில் எனது உறவினர் ஒருவரை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு குளுவாங்கு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவ பரிசோதனைக்கு வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் உறவினர் என்னை வீட்டிற்கு முதலில் செல்லுமாறு கேட்டுக் கொண்டதால் நானும் அங்கிருந்து கிளம்பினேன். நேராக நியோர் சிவன் ஆலயத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினேன். நியோரில் ஆலய தரிசனம் செய்த பின்பு, நியோர் தமிழ்ப் பள்ளிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தேன். அச்சமயம் வானம் கறுத்திருந்தது. மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.
மதியம் 3 மணி இருக்கும், மெர்சிங் சாலை 56வது கிலோமீட்டரில் மழையில் நனைந்துக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டுச் சென்றுக் கொண்டிருந்தேன். வீட்டை அடைய இன்னும் ஒன்றரை கிலோ மீட்டர்களே எஞ்சியுள்ளன. அச்சமயம், சற்றும் எதிர்பாராத வகையில் என் முன்னே சென்றுக் கொண்டிருந்த மகிழுந்து எந்தவொரு சமிக்ஞையும் இன்றி திடீரென நின்றுவிட்டது கண்டு என் மூச்சும் ஒரு கணம் நின்று விட்டது. வண்டியை உடனே நிறுத்த வேண்டிய சூழ்நிலை, உயிருள்ள புரவியாக இருந்திருந்தால் கடிவாளத்தைப் பிடித்து புரவியின் ஓட்டத்தை நிறுத்தியிருப்பேன். இயந்திரம் கொண்டு ஓடும் புரவி என் பேச்சைக் கேட்கவில்லை, என் திகிலை அது அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிடித்தேன் பிரேக்கை..! மழைக்கு நன்றாகவே பனி சறுக்குவதுபோல் வள வளவென இருந்த சாலையில் வழுக்கிக் கொண்டே முன்னே நங்கூரமிட்டுக் கொண்டிருந்த மகிழுந்தை பின்னிருந்து வேகமாக இடித்ததில் சாலையில் தூக்கி எறியப்பட்டேன்.
அந்த கணம் விவரிக்க முடியாத ஓர் அனுபவமாக எனக்கு இருந்தது. ஒரு கணம் தலை சுற்றி உலகமே இருண்டு விட்டதுபோல் தோன்றியது. சில வினாடிகளில் என்னைச் சுற்றி கூட்டம் திரளாக கூடுவது தெரிந்தது. வலதுபக்கக் காலும் கையும் மகிழுந்தை இடித்ததில், கால் கை இருப்பதற்கான சுரணையற்று மழையில் நனைந்துக் கொண்டே படுத்திருந்தேன். உடலை அசைக்க முடியவில்லை. வலியால் "அம்மா..அம்மா.." எனும் கதறும் குரல் மட்டும் என்னை மயக்க நிலைக்குக் கொண்டுச் செல்லாமல் தடுத்தாட்கொண்டிருந்தது. கூடியிருந்த கூட்டத்தில் பாதி பேருக்குமேல் தமிழர்களாக இருந்தனர்.
"அய்யா கவல படாத, நாங்களாம் இருக்கோம், ஒன்னும் பெருசா அடி இல்ல.. இப்ப ஆம்புலன்ஸ் வந்துரும்.. கொஞ்ச நேரம் பொறுத்துக்கையா..." என சிலர் ஆறுதல் வார்த்தைகள் கூறுகையில் அந்த வலியிலும் சற்று இதமாக இருந்தது. ஒருவர் கீழே விழுந்துக் கிடந்த கைப்பேசியை எடுத்து, "ஐயா, உங்க வீட்டுல உள்ளவங்க நம்பர் இருக்கா, சொல்லுங்க.." எனக் கேட்டார். கேட்டவரின் முகம் மிகவும் பரிட்சயமான முகம். குளுவாங்கு ஹஜி மானான் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் திரு.ஆறுமுகம் எனப் பார்த்ததும் தெரிந்துக் கொண்டேன். 2006-ஆம் ஆண்டில் ஹஜி மானான் தமிழ்ப் பள்ளியில் என் நான்கு மாதக்கால பயிற்றுப் பணியின்போது அறிமுகமானவர் அவர்.
என் வீட்டிற்கு சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதற்கு அடுத்து, என் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்துச் சேர்ந்தார். பலர் என் நிலைமையைப் பார்த்து, உடனே மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லலாம் எனக் கூறி தூக்க முயன்றனர். ஆனால் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக ஒரு சிலர் சந்தேகித்ததால் மருத்துவமனை வண்டி வரும் வரையில் என்னை நகர்த்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். எனவே வெகுநேரம் மழையில் நனைந்தபடியே வலியோடு சாலையில் படுத்திருந்தேன். உடலிலிருந்து பல இடங்களிலிருந்து இரத்தம் அதிகமாக வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்களில் ஒருவர் என் தலைக்கவசத்தை மெதுவாக கழற்றி தலையில் ஏதும் காயம் ஏற்பட்டிருக்கிறதா என பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அதற்குள் மருத்துவமனை வண்டியும் வந்துவிட, அனைவரும் வழிவிட்டு நின்றார்கள். மருத்துவமனை ஊழியர்கள் என்னையும், என் உடல் நிலையைப் பற்றியும், நான் தற்போது இருக்கும் இடத்தைப் பற்றியும் கேள்விகள் பல என்னிடம் கேட்டு என் சுயநினைவை பரிசோதித்தனர். அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக பதில் கூறினேன். அடுத்தக்கட்டமாக எனது உடலை ஒவ்வொரு பாகமாக அசைத்து வலிக்கிறதா எனக் கேட்டனர். எனக்கு வலியைத் தவிற வேறொன்றுமில்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க எனது உடலை திருப்பிப் படுக்க வைத்தார்கள். உடலை நகர்த்தும்போது வலியால் கதறினேன்.
கழுத்து அசைக்க முடிகிறதா எனக் கேட்டார்கள். அசைத்துக் காட்டி முடியும் என்றேன். அதன்பின் கழுத்தை மெதுவாக தூக்கிப் பிடித்து கழுத்தைச் சுற்றி ஒரு வளையம் வைத்து கட்டினார்கள். பின் கை கால்களுக்கு பட்டைகள் வைத்து கட்டி மருத்துவமனை வண்டியில் ஏற்றினார்கள். மருத்துவமனை வண்டி அதிவேகத்தில் பறந்ததை அடுத்து எனது வலது கால் அதிக வலியைக் கொடுக்க ஆரம்பித்தது. வண்டி ஆடிய ஆட்டத்தில் வலியால் அலறினேன். மருத்துவமனை ஊழியர்கள் என்னிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தனர். ஐந்தே நிமிடங்களுக்குள் மருத்துவமனையை அடைந்தேன்.
உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அப்பொழுது மணி மதியம் மூன்றரை இருக்கும். என் உடலில் படிந்த இரத்தக் கரைகள் துடைக்கப்பட்டன. இடது கால் தோல் கிழிந்திருந்தது. வலியோடு ஏழு தையல்கள் போடப்பட்டன. அதன் பின் சுமார் 2 மணி நேரம் அந்த அறையில் வெறுமனே வேறெந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தேன். அவ்வறையில் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கத்திக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தது சங்கடமாக இருந்தது. அதற்கிடையில் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியிருந்தனர்.
இரண்டு மணி நேரம் கழித்து ஊடுகதிர் அறைக்கு என்னை படுக்கையில் வைத்து இழுத்துச் சென்றனர். சற்றும் பொறுப்பின்றி என்னை வேகமாக இழுத்துச் சென்றதில் என்னுடைய கால் மரண வலியைக் கொடுத்தது. கதவிலும், சுவரிலும் அங்கும் இங்குமாக பல இடங்களில் எனது கால் மோதிய போது ரணமாக இருந்தது. மெதுவாக இழுத்துச் செல்லுங்கள் என நானும் என் உறவினர்களும் கேட்டுக் கொண்டும் கூட, என்னை இழுத்துச் சென்ற மருத்துவமனை ஊழியர் காது கேளாதவர்போல் நடந்துக் கொண்டார்.
ஊடுகதிரறையில் கொண்டுச் செல்லப்பட்ட என்னை மீண்டும் வெறுமனே விட்டு வைத்திருந்தார்கள். அவ்வறையில் காணப்பட்ட ஊழியர்கள் கதை பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். குளிர்சாதன அறையாதலால் சற்று நேரத்தில் உடல் குளிரில் நடுங்க ஆரம்பித்து விட்டது. வலது கால் என்னை அறியாமலேயே துடிக்க ஆரம்பித்து விட்டன. வலியால் கத்தினேன். அங்குள்ள ஊழியர்களை அழைத்து போர்வை போர்த்தி விடுமாறு கேட்டேன். வழக்கம்போல் அங்கேயும் கண்டும் காணாத போக்குதான் காணப்பட்டது. அதன் பின் உரக்கக் கத்த ஆரம்பித்தேன், அதன்பின் சில ஊழியர்கள் ஊடுகதிர் படம் எடுக்க வந்தார்கள். எனது காலையும் கையையும் ஊடுகதிர் படம் எடுத்த விதம், அங்கிருந்த ஊழியர்களின் பொறுப்பின்மையையும் போதிய பயிற்சியின்மையையும் புலப்படுத்தியது. வலது காலையும் கையையும் விரும்பியவாரெல்லாம் நகர்த்தி படம் எடுத்துவிட்டு மீண்டும் ஒரு அரை மணி நேரத்திற்கு அந்த அறையிலேயே கிடத்தி வைக்கப்பட்டிருந்தேன். மீண்டும் வலியாலும் கடும் குளிராலும் கால் உதறியது. வலியால் கதறிக் கொண்டிருந்த என்னை ஒருவழியாக மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இழுத்துச் சென்றார்கள். நரகத்திலிருந்து வெளியே வந்த ஓர் உணர்வு அப்போது இருந்தது. இம்முறையும் படுக்கையை தாறுமாறாக இழுத்துச் சென்று என்னை அவசரப் பிரிவில் சேர்த்தார்கள். இன்னும் என்னென்ன வலிகளைத் தாங்க வேண்டி வருமோ என எண்ணிக் கொண்டே அந்த அறையில் படுத்திருந்தேன். திடீரென என் வலது காலின் மீது ஒரு கோப்பு வேகமாக வைக்கப்பட்டது. மீண்டும் என் படுக்கையை ஒருவர் வேகமாக இழுத்துச் சென்றார். வெளியே வந்ததும் உறவினர்கள் அந்த ஊழியரிடம் எங்கே என்னை அழைத்துச் செல்கிறார்கள் எனக் கேட்டனர். ஊடுகதிர்ப்படம் தெளிவாக இல்லை, மீண்டும் ஊடுகதிர்ப் படம் எடுக்க வேண்டும் என அவர் மறுமொழிந்ததும் எனக்கு தலையே சுத்தி விட்டது. அடிபட்ட வலியைவிட இவர்கள் கொடுக்கும் வலியை தாங்கமுடியாதவனாய் பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்.
ஏற்கனவே எப்படி ஊடுகதிர்ப் படத்தை அலட்சியமாக எடுத்தார்களோ, அதேப்போல் மீண்டும் அலட்சியமாகவும் ஆனால் இம்முறை சற்று கோபத்துடனும் அவர்கள் நடந்துக் கொண்டனர். அங்கு என் காலும் கையும் பட்டப் பாட்டை சொல்லி விவரிப்பதற்கில்லை. வழக்கம்போல படங்கள் பிடிக்கப்பட்டு அரை மணி நேரத்திற்கு அந்த அறையிலேயெ கிடத்தி வைக்கப் பட்டிருந்தேன். குளிரில் மீண்டும் கால் உதறித் தள்ளி மரண வலியைக் கொடுத்தது.
ஒருவழியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட நான், மெலோர் 3 எனும் வார்டிற்குக் கொண்டுச் செல்லப்பட்டேன். அங்குதான் வலிகளுக்கெல்லாம் பெரிய வலியை நான் சந்திக்கப் போகிறேன் என்று அப்பொழுது எனக்குத் தெரியாது.
தொடரும்..
குறிப்பு : கை வலி தொடர்ந்து இருந்து வருவதால் அதிகமாக தட்டச்சு செய்ய இயலவில்லை. மற்ற விடயங்களை அடுத்த பதிவில் இடுகிறேன். இன்றிரவிற்குள் பதிவிட முயற்சிக்கிறேன். மக்கள் சக்தி எனக்குக் கொடுத்த ஆதரவினை விரிவாக பதிவிடுகிறேன்,நன்றி.
9 கருத்து ஓலை(கள்):
//முக்காலமும் உணர்ந்த வலைப்பதிவு நண்பர் விக்கினேசுவரன் (வலைப்பதிவுலக நாரதர்) அப்பொழுதே சொன்னார், எனக்கு கூடிய விரைவில் கால்கட்டு (திருமணம்) நிகழ்வு நடைப்பெறப் போகிறதென்று. இவ்வளவு பெரிய மாவுகட்டு கிடைக்கும் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை :)//
ஆஹா....
//வலைப்பதிவுலக நாரதர்//
எதுக்குய்யா இந்தப் பட்டம்...
//அங்குதான் வலிகளுக்கெல்லாம் பெரிய வலியை நான் சந்திக்கப் போகிறேன் என்று அப்பொழுது எனக்குத் தெரியாது.//
சஸ்பெஸ்சு....
//திடீரென என் வலது காலின் மீது ஒரு கோப்பு வேகமாக வைக்கப்பட்டது.//
மேசைனு நெனைச்சு வச்சிருப்பாங்க... இதுக்கு போய் வருத்தப்படலாமா??
என் வலி உங்களுக்கு தமாசு.. ம்ம்.. நாரதருக்கு இத விட வேறென்ன வேலை.. :) இருக்கட்டும் இருக்கட்டும்...!
வாருங்கள் அன்பார்ந்த ஒற்றன் அவர்களே, மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி ஐயா! விரைவில் முழு நலம்பெற வேண்டுகிறேன்.
நன்றி ஆய்தன் ஐயா.. :)
சதீஸ் சார், வணக்கம்!நலம் அறிய ஆவல். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
நலம் விசாரித்தமைக்கு நன்றி உசா, நீங்கள் நலமா? தொடர்ந்து ஓலைச்சுவடிக்கு ஆதரவு கொடுங்கள்..
Post a Comment