'மக்கள் சக்தி' எனக்கு உந்துதல் சக்தி...!
>> Wednesday, June 18, 2008
மெலோர் 3 சிகிச்சை அறையில் சுமார் 4 மணி நேரங்கள் வைக்கப்பட்டிருந்தேன். சிகிச்சை அறையில் எனது உடைந்த கால் இழுத்து வைத்து கட்டப்பட்டபோது அனுபவித்த வலியைப் போல் வேறெங்கும் அனுபவித்ததில்லை. பெரிய மாவு கட்டு ஒன்றைக் கட்டிவிட்டு இனி அடுத்த வாரம் திங்கட்கிழமைதான் அறுவை சிகிச்சை செய்யமுடியும். நிபுணத்துவ மருத்துவர் தற்போது இல்லை, எனவே காத்திருக்க வேண்டும் என ஒரு இடியைப் போட்டு விட்டனர் மருத்துவமனை ஊழியர்கள்.
இச்செய்தியை எனது உறவினர்களிடம் தெரிவித்ததும், அவர்கள் மருத்துவமனை ஊழியர்களை கண்டித்தனர். வலியோடு கால் உடைந்திருக்கும் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை ஒரு வாரம் கழித்தா என கேட்டதற்கு, இந்த அறையில் இரண்டு வாரமாக கால் உடைந்து அறுவை சிகிச்சைக்கு காத்துக் கிடப்பவர்கள்கூட உண்டு, ஆக ஒரு வாரம் என்பது பெரிய பிரச்சனையாகாது என அலட்சியமாக அவர்களிடமிருந்து பதில் வந்தது.
இனியும் காத்துக் கிடப்பது உசிதமல்ல என முடிவெடுத்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல உறவினர்கள் முடிவெடுத்தனர். இரவு மணி ஒன்பது வரை மருத்துவமனை வண்டிக்காக காத்திருந்தேன். அச்சமயம் இந்துராப் ஆதரவாளர் திரு.பிரான்சிஸ் என்னை வந்துச் சந்தித்தார். மருத்துமனை உயர் அதிகாரியை அழைத்து உடனடி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம் எனக் கூறினார். உயர் அதிகாரிகளைத் தொடர்புக் கொண்டு ஒரு பயனும் இல்லாது இறுதியில் குளுவாங்கு உத்தாமா நிபுணத்துவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
பினாங்கிலிருந்து குமாரி சரஸ்வதி கைபேசியின் வழி தொடர்புக் கொண்டு அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் பண உதவியை 'மக்கள் சக்தி'யின் வழி தாம் பெற்றுத் தருவதாகவும், கவலைப்படாமல் தனியார் மருத்துவமனையில் உடனடி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு பணித்தார்.
இரவு மணி 9.15க்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஊடு கதிர் படங்கள் எடுக்கப்பட்டன. அதன்பின் நள்ளிரவு மணி 12.30க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு படுக்கையில் சேர்க்கப்பட்டேன்.
அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் இரவு ஓலைச்சுவடியின் நிருபர் திரு.கலையரசு மற்றும் மலாக்கா மாநில மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் ஆகிய இருவரும் அழகிய பூக்கூடையோடு என்னை வந்துச் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்றாவது நாள் இரவு (04-06-2008) ம.இ.கா புத்ராவிலிருந்து இரு இளைஞர்கள் என்னைச் சந்திக்க வந்தனர். ம.இ.கா புத்ராவின் தலைவர் திரு.கமலநாதன் அனுப்பி வைத்ததாகக் கூறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். நலம் விசாரித்தப்பின் அறுவை சிகிச்சைக்கான பண உதவி மற்றும் தேவைப்படும் உதவிகளைச் செய்ய தாங்கள் முன்வந்திருப்பதாகக் கூறினர்.
அரசியல் கட்சியிடமிருந்து உதவி பெறுவதை நான் விரும்பாததால் போதிய பண உதவியை மக்கள் சக்தியிடமிருந்து நன்கொடையாக பெற்றுவிட்டென் எனக் கூறினேன். வேறேதாவது உதவி தேவைப்படுகிறதா எனக் கேட்டனர். நான் இல்லை எனக் கூறினேன். போக்குவரத்து உதவி தேவை என்றாலும் தங்களைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். எனது கைப்பேசி எண்களை வாங்கிக் கொண்டனர். திரு.கமலநாதன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். உதவி செய்ய முன் வந்ததற்கு அவ்விருவர்களுக்கு நன்றி கூறிக் கொண்டேன்.
(ம.இ.கா புத்ராவினர் உதவிப் புரிய வந்த நோக்கம் எதுவாயினும், ஓலைச்சுவடியில் பலமுறை நான் ம.இ.காவை தாக்கி எழுதி இருந்தும் அவர்கள் உதவி செய்ய வந்ததற்கு மிக்க நன்றி. இருப்பினும் கொள்கை பிடிப்புள்ள நான் அவர்களின் உதவியை மறுத்து விடுவதுதான் சிறந்தது என்று என் மனதிற்குப்பட்டது. ம.இ.கா புத்ராவினர் என்னிடம் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். ம.இ.கா புத்ராவின் உதவியை நான் மறுத்ததை அறிந்த சில நண்பர்கள் என்னை கைப்பேசியின் வழி அழைத்து கடிந்துக் கொண்டனர். உதவியைப் பெற்றுக் கொள்ள வற்புறுத்தினர், ஆனால் எந்த ஒரு அரசியல் அமைப்பிடமிருந்தும் நான் உதவிப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதே எனது பதில்.
ம.இ.கா புத்ரா சமுதாய ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பல புதிய புரட்சிகளை முன்நின்று செய்து வருவதை நான் அறிவேன். துடிப்புடன் இவர்கள் எவ்வளவுதான் காரியம் ஆற்றினாலும் ம.இ.காவின் தலைமைத்துவத்தில் மாறுதல் ஏற்படுத்துவதில் எந்த ஒரு வெற்றியையும் காணாது நிற்பது வேதனைக்குரியது. இதற்குக் காரணம் இவர்களின் செயல்பாடுகள் ஒரு வரைமுறைக்குட்பட்டே இருப்பதுதான். மனதில் என்றும் மறையாத ஒரு வடுவாக சில அரசியல்வாதிகளின் பெயர்கள் பதிந்திருப்பதால், அவர்கள் தலைமையேற்று நடத்தும் கட்சி மக்கள் மனதில் வேரூன்றி நிற்பதற்கு வலுவில்லாமல், மக்களின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அது சாபமாக வாங்கிக் கொண்டுள்ளது.
நேற்று சபாவில் ஓர் அரசியல் கட்சி பிரதமரின் மீது தனது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வெளியிட்டதன் பிரதிபலிப்பதாக ம.இ.கா கட்சியின் தலைமைத்துவம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்றும் இனி என்றும் தாம் பிரதமர் அப்துல்லாவின் தலைமைத்துவத்திற்கு விசுவாசமாக இருக்கப்போவதாக ம.இ.கா கட்சியின் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 50ஆண்டுகளாக மலேசிய இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலைமையை தூக்கி நிறுத்தத் தவறிய அம்னோ தலைமை ஏற்கும் கூட்டணிக்கு இன்னும் ஆதரவு கொடுப்பேன் என்று அறிக்கை விடுவது அவரது சுயநலத்தையே பிரதிபலிக்கிறது. தனது அரசியல் வாழ்க்கையைத் தற்காத்துக் கொள்வதற்கு அவ்வப்போது இது போன்ற அறிக்கைகள் அவருக்கு கைகொடுத்து வந்துள்ளன. விசுவாசம் என்றும் விவேகமாக இருக்க வேண்டும், சுயநலமாக அல்லாமல் பொதுநலத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
அப்துல்லாவின் தலைமைத்துவம் அப்படி என்னதான் மக்களுக்கு நல்லதைச் செய்து விட்டது? விலைவாசி ஏற்றமும் எண்ணெய் விலையேற்றமுமே இவர் மக்களுக்காக செய்த சாதனை. பில்லியன் கணக்கான வருவாயில் தன்னுடைய பங்காளிகளை சுகபோக வாழ்க்கையில் திளைக்கவிட்டு, நடுத்தர வர்கத்தினரையும், ஏழை மக்களையும் கசக்கி பிழிந்து அவர்கள் அரை வயிற்றோடு வாழ்க்கை நடத்தும் நிலமைக்கு கொண்டு வந்து விட்டது நடப்பு அரசாங்கம். இன்றைய காலக்கட்டத்தில் வெளியே எங்கு செல்வது என்றாலும் ஒரு தடவைக்குப் பல தடவை யோசித்துப் பார்த்துச் செல்ல வேண்டியதாயிருக்கிறது.
எண்ணேய் விலை ஏறுவதற்கு அரசியல் நோக்கமே முன் நிற்கிறது. பிரதமராக இருந்துக் கொண்டு, உனக்கு மக்கள் வேண்டுமா ஆட்சி வேண்டுமா எனக் கேட்டால் முதலில் தேர்ந்தெடுப்பது ஆட்சிதான் என்ற தோரணம் இங்கு நிகழ்கிறது. அதற்காகத்தான் மக்களின் கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, வருகின்ற 16 செப்டம்பர் ஆட்சி மாறிடும் சூழ்நிலை ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாதென்றும், தன்னுடைய ஆட்சியே நீடிக்க வேண்டும் எனவும் பாரிசான் அரசாங்கம் இத்தகைய விலையேற்றத்தை அனுமதித்துள்ளது. விலையை ஏற்றினால்தான் மக்கள் கூட்டணி திணறக்கூடும், விலைவாசி குறைப்பு போன்ற தேர்தல் வாக்குகள் சிதறக் கூடும் என்பது அப்துல்லாவின் எண்ணம்.
'பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது' பாரிசானுக்கு கைவந்தக் கலை. எண்ணெயையை ஏற்றுமதி செய்யும் நாடான மலேசியா எண்ணெய் விலையேற்றத்தை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் இனி வரும் காலங்களில் ஏற்றிய விலையையை இவர்களே மீண்டும் குறைத்துக் காட்டி மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கலாம், அல்லது ஆட்சி மாறினால், அனுவார் இபுராகிம் தலைமைத்துவம் தற்போது இருக்கும் ரிங்கிட் மலேசியா2.70 சென் இருக்கும் ஒரு லிட்டர் எண்ணெய் விலையை 10 சென் குறைத்து மக்களின் நற்பெயரை பெறக்கூடும். ஆனால் தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குகளின் படி எண்ணெய் விலையை ரிங்கிட் மலேசியா 1.90 சென்னுக்கும் குறைவாக கொண்டு வருவது சந்தேகம்தான். )
என் அனுபவத்தைக் கூறப்போய் விலைவாசி ஏற்றத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் விலைவாசி ஏற்றத்திற்கும் என் அனுபவத்திற்கும் ஒருவகையில் தொடர்பு இருக்கிறது. நான் விபத்திற்குள்ளான நேரம் விலைவாசி ஏற்றம் கண்டிருந்தும், எனக்கு பல நல்ல உள்ளங்கள் நன்கொடைகள் கொடுத்து உதவியதை நினைத்தால் மனம் நெகிழ்கிறது. 'மக்கள் சக்தி'யின் உந்துதல் சக்தியே என்னை விரைவில் குணமடையச் செய்கிறது என்றால் அது மிகையாகாது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எமது அறுவை சிகிச்சைக்கு நன்கொடை திரட்டிய குமாரி சரஸ்வதி, இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி, எனக்கு நன்கொடைகள் கொடுத்துதவ கேட்டுக் கொண்ட வலைப்பதிவுலக நண்பர்கள், மற்றும் திரட்டிய நன்கொடைகளின் கணக்கை மக்களுக்கு தெளிவாக தமது வலைத்தளத்தின் வழி வெளியிட்ட அருமை நண்பர் கோபி, பினாங்கிலிருந்து திரு.நரகன் மற்றும் அவர்தம் குழுவினருக்கும், மற்றும் என்னை மருத்துவமனையில் வந்து நலம் விசாரித்த மலாக்கா மாநில மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன், ஓலைச்சுவடி நிருபர் திரு.கலையரசு, மருத்துவமனையில் என்னைச் சந்தித்து திரட்டிய நன்கொடை ரிங்கிட் மலேசியா 500 வெள்ளியைக் கொடுத்த மக்கள் சக்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன் மற்றும் குளுவாங்கு வட்டார மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.சந்திரன், குளுவாங்கு சுகாதார இலாகாவின் அதிகாரி திரு. செல்வம், உதவி புரிய முன்வந்த புத்ரா ம.இ.கா, ஓலைச்சுவடியில் எனது விபத்து தொடர்பான தகவல்களை பதிப்பிட்ட வலைப்பதிவாளர் திரு.விக்னேசுவரன் மற்றும் இன்னும் பெயர்க் குறிப்பிட விரும்பாத பல உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன். நான் மருத்துவமனையில் தங்கியிருந்த நாட்களிலிருந்து இன்றுவரை என்னை நன்றாக கவனித்து எனக்குத் தேவையானவைகளைச் செய்து கொடுக்கும் குமாரி ராதாவிற்கும் என் தங்கைக்கும் நன்றிகள் பல உரித்தாகட்டும். என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கும் எனது நன்றி.
எனக்காக திரட்டப்பட்ட நன்கொடை விவரங்கள் 'மக்கள் குரல்' வலைத்தளத்தில் காணவும். கூடிய விரைவில் காப்புறுதி மற்றும் சிகிச்சை அட்டையை பெற்றுவிடுவேன் என உறுதிக் கூறுகிறேன். காப்புறுதிக்கான படிவங்களில் கடந்த மாதம் கையொப்பமிட்டு இன்றைய மாதத்தின் சம்பளத்தில் பணத்தைக் கட்டுவதற்கு இருந்தேன். அதற்குள் இப்படியொரு சம்பவம் நிகழும் என்று நினைத்து பார்க்கவில்லை. காப்புறுதி எடுக்க வேண்டியதற்கான அவசியத்தை எனது அனுபவம், இன்னும் காப்புறுதி எடுக்காதவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கும் என நினைக்கிறேன்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment