மழலைகளுக்குக் கல்வித் தடையா?

>> Thursday, June 19, 2008

மலேசியா கினி படச்சுருள்

இலண்டனிலிருந்து திரு.வேதமூர்த்தி

காப்பார் மெதடிஸ்ட் தேசிய ஆரம்பத் தமிழ்ப் பள்ளியிலிருந்து பத்து ஏழை மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாததனால், அம்னோவினால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிட அம்னோ மறுத்தும் உள்ளது. (தமிழ் நேசன் 13/06/08முதல் பக்கம்)

அம்னோவின் தலைவரும் நாட்டின் பிரதமருமான அப்துல்லா அகமது படாவி மீண்டும் ஒருமுறை, "நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் யாவரும் பின்தங்கிவிடாமல் இருப்பதற்கு (அம்னோ)அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்" என பொய்யுரைத்துள்ளார். (என்.எசு.டி 13/06/2008, இரண்டாம் பக்கம்).

சொல்லிலும் செயலிலும் முரண்பாடுகளை பிரதிபலிக்கும் இவ்விரு செய்திகளும் ஒரே நாளில் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு பிரதமர் கூறுகிறார், " நாட்டின் பொருளதார வளர்ச்சியில் எந்த ஒரு இனமும், சமயமும் அல்லது மாநிலமும் (அம்னோ) அரசாங்கத்தால் ஒடுக்கப்படாது". ஆனால் ஏழை குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையான பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் அரசாங்கம் தனது கையாலாகத்தனத்தைக் காட்டுவதால், எப்படி நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் ஏழை மக்கள் பின்தங்காமல் இருக்க முடியும்?

பள்ளிப் பருவம் அடைந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்கிறது அரசாங்கம். ஆனால் பிறப்புச் சான்றிதழ் இல்லாதக் காரணத்தால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டக் குழந்தைகள் எப்படி கல்வி பயில முடியும்? இத்தகு நடவடிக்கைகள் அம்னோ அரசாங்கம் அமல்படுத்தும் இனம் மற்றும் மதவாதக் கொள்கைகளை பறைச்சாற்றுவதாக உள்ளது.

நாட்டின் வளப்பத்தை இன வாரியாக சம பங்கீடு செய்வதிலும், ஏழைகளின் அடிப்படை உரிமைகளை தற்காப்பதிலும் அம்னோ அரசாங்கம் கடந்த 50 ஆண்டுகளாக மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததனால், இன்று இந்திய சமுதாயம் போராடும் நிலைமை வந்துள்ளது.

மூன்றாம் நான்காம் தலைமுறையைக் கண்டிருக்கும் மலேசிய இந்திய சமுதாயம் அம்னோவின் மிரட்டல்களுக்கு இனியும் அடிபணியாது. இன்றைய தலைமுறையினர் தங்களது உரிமைகளைத் தட்டிக் கேட்கத் துணிந்துவிட்டனர். கொட்டக் கொட்டக் குனிந்துக் கொண்டிருந்த சமுதாயம் இன்று நிமிர்ந்து விட்டது. போராட்டக் களத்தில் குதித்துவிட்ட இந்திய சமுதாயம் தொடர்ந்து போராடித்தான் உரிமைகளைப் பெறவேண்டும்.

அரசியல் ரீதியில் வலுவான ஒரு இடத்தை இந்தியர்களுக்கு ஏற்படுத்தினால்தான், சிறந்த மாற்றத்தைக் எதிர்காலத்தில் காண முடியும்.

"இந்நவநாகரீக உலகத்தில் சிறுபான்மையினரை பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமையாகும்"

- வேதமூர்த்தி, இலண்டன்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP