நடந்து பாருங்கள், உலகமே உங்களுக்கு அடிமை..
>> Thursday, June 26, 2008
"தனது நடைப்பயணம் பற்றி சதீசு குமார் பெட்ரெண்டு ரஸ்ஸலுக்கு ஒரு கடிதம் எழுதி தெரிவித்தார். உடனே ரஸ்ஸல் உலக அமைதிக்காக நடைபயணம் செய்யும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் எனக்கு 90 வயதாகிறது. உலகம் மிகப்பெரியது. எப்படியாவது என் சாவிற்கு முன்னால் உன்னை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வேகமாக நடந்து வா" என்று பதில் எழுதியிருந்தார். அது சதீசு குமார் மனதில் இன்னும் ஆர்வத்தை அதிகமாக்கியது.
ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர் கையில் விசா, கடப்பிதழ் எதுவுமில்லை. அத்தோடு இந்தியா பாகிஸ்தான் இரண்டும் யுத்த நெருக்கடியில் இருந்த நாட்கள் அவை. பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கும் முன்பாக அவரது நண்பர்களில் ஒருவர் நாலைந்து பொட்டலங்கள் சாப்பாடு தந்து நீங்கள் பாகிஸ்தானிற்குள் போகிறீர்கள். அது எதிரியின் தேசம் உங்களுக்கு சாப்பாடு கூட கிடைக்காது இதைக் கொண்டு செல்லுங்கள் என்று தந்திருக்கிறார்.
சதீசு குமார் அதை மறுத்தபடியே இந்த சாப்பாட்டை வாங்கிக் கொண்டால் இன்னொரு மனிதன் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை என்றாகிவிடும். ஆகவே எனக்கு வேண்டாம். பட்டினியால் சாவதாக இருந்தால் கூட பரவாயில்லை பாகிஸ்தானில் செத்துப் போகிறேன் என்று நடக்கத் துவங்கினார்.
எல்லை காவலர்கள் அவரைப் பற்றி நாளிதழில் வெளியான செய்தியால் தடை செய்யாமல் அனுமதி தந்தார்கள். பயமும் தயக்கமுமாக பாகிஸ்தானினுள் நடக்க துவங்கிய போது ஒரு கார் அருகில் வந்து நின்று பாகிஸ்தானியர் ஒருவர் இறங்கி வந்து நீங்கள்தானா சதீசு குமார் என்று கேட்டிருக்கிறார்.
ஆமாம் என்றதும் உங்களைப் பற்றி ஒரு மாலை செய்தியேட்டில் வாசித்தேன். அப்போது இருந்து நீங்கள் பாகிஸ்தான் வருவதற்காக காத்திருந்தேன். மிக நியாயமான காரணத்திற்காக நடைபயணம் செல்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்னோடு காரில் வாருங்கள் என்று அழைத்தார்.
அறியாத உலகில் எதிர்படும் முதல்மனிதனே இவ்வளவு அன்பாக நடத்துகிறானே என்று வியந்தபடியே தாங்கள் காரில் வர முடியாது, முகவரியை தாருங்கள் வீட்டிற்கு வந்து சேர்கிறோம் என்றார்கள். அவரோ விடாப்பிடியாக, இல்லை வழியில் யாராவது அழைத்தால் போய்விடுவீர்கள் அதனால் உங்கள் பைகளை என்னிடம் தாருங்கள். அதை மட்டுமாவது நான் கொண்டு செல்கிறேன் என்று அவரது உடைமைகளை வாங்கி கொண்டு சென்றுவிட்டார்.
அன்றிரவு அந்த பாகிஸ்தானியர் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கியிருக்கிறார்கள். அப்போது சதீசு குமாருக்கு தோன்றியது. நண்பர் தன்மீதான அக்கறையில் தந்த பொட்டலத்தில் இருந்தது உணவு அல்ல பயம். அடுத்த மனிதனை நம்பமுடியாமல் போன பயம் தான் சாப்பாட்டை கட்டி கொண்டு போகச் செல்கிறது என்ற உண்மை புரிந்திருக்கிறது"
-இப்படியாகச் செல்லுகின்றது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "நடையால் வென்ற உலகம்" என்ற கட்டுரை.அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு பதிவு.முழுக்கட்டுரையையும் கீழ்கண்ட சுட்டியில் படிக்கலாம்.
நன்றி: http://sramakrishnan.com/deep_story.asp?id=88&page=
அந்த பெரிய மனிதர் சதீசு குமார் பற்றிய ஆவணப்படம் கீழே வீடியோ வடிவில்
இப்பதிவானது என்னுடைய முன்னூறாவது பதிவாக அமைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 70 வயதைக் கடந்தும் உலகத்தை கால்களாலேயே சுற்றி வந்த ஐயா சதீசு குமாரின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும், தற்போது கால் உடைந்து படுத்துக் கிடக்கும் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் விரைவில் நடக்க வேண்டும் என்கிற ஆர்வம் இவரைப் பற்றி படித்ததும் மேலோங்கியிருக்கிறது.
இவ்வேளையில் ஐயா சதீசு குமார் அவர்களைப் பற்றிய பதிவினைக் கொடுத்த திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இவரின் பதிவை எனக்கு அறியப்படுத்திய பி.கே.பி அண்ணா அவர்களுக்கும் எனது நன்றிகள்.
2 கருத்து ஓலை(கள்):
உங்களின் முன்னூறாவது பதிவிற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே... ஓலைச் சுவடி மென்மேலும் சாதனைப் புரியட்டும்...
வாழ்க வளர்க...
தங்களின் வாழ்த்துகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் நண்பரே.. வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து வெற்றியோடு பயணிக்கட்டும்..
Post a Comment