இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் ஒரு கானல்நீரா?
>> Monday, February 9, 2009
நேற்று பினாங்கு மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலுக்கு இடைநிலைப் பள்ளி பெண் ஆசிரியை ஒருவர் வருகை புரிந்திருந்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடினேன். அரசாங்க கொள்கைகளாலும், பொறுப்பற்ற அரசு அதிகாரிகளாலும், சமுதாயத்தின் மெத்தனப் போக்காலும் தமிழ் மொழி எவ்வாறெல்லாம் மெல்ல மெல்ல சாகடிக்கப்படுகிறது என்பதனை மிகுந்த வருத்தத்துடன் கூறிவிட்டு ஒரு புகாரையும் கொடுத்துவிட்டுச் சென்றார். பினாங்குத் தீவிலுள்ள ஏழு தமிழ் மொழிப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு தேர்வுப் பாடமாக பயிலுவதற்கு வாய்ப்புகள் மலிந்து வருவதாக அவருடைய புகார் கூறுகிறது.
அவருடைய புகாரை படிக்க கீழ்கண்ட படங்களைச் சுட்டுங்கள்.
அவருடைய புகாரை படிக்க கீழ்கண்ட படங்களைச் சுட்டுங்கள்.
அப்பெண் ஆசிரியரைப் போன்று மற்ற தமிழாசிரியர்களுக்கும் மொழி உணர்வும், சமுதாயத்தின்பால் அக்கறையும் இருத்தல் வேண்டும். தன் தாய்மொழியைக் கற்பது என்பது ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால், இன்று பல பள்ளிகளில் அவ்வுரிமை மறுக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும்! எந்தெந்த சூழ்நிலைகளில் தமிழ் மொழி சாகடிக்கப்படுகிறதோ, அச்சூழ்நிலைகளைக் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வைக் காண வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் நம்மிடையே இருக்க வேண்டும். தயவு செய்து, புகாரைப் படித்துவிட்டு அதற்கான நடவடிக்கையை வாசகர்கள் முடிந்தால் பரிந்துரைக்கவும். தீர ஆலோசனையின் பிறகு இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சி எடுக்கப்படும்.
போராட்டம் தொடரும்...
போராட்டம் தொடரும்...
5 கருத்து ஓலை(கள்):
நண்பர்களே,
இது காலங்காலமாக நடந்து வரும் விடயந்தான். நானும் ஐந்தாம் படிவம் ஆறாம் படிவம் என அனைத்து காலக்கட்டத்திலேயும் தமிழ் எடுத்த மாணவன்தான். இதிலே இரண்டு விடயங்களை நாம் ஆராய வேண்டும்..
1. தமிழ் சோறு போடாது எனும் தவறான கூற்று. தமிழ் மட்டும் அல்ல, எந்த ஒரு மொழியையும் அறைகுரையாக தெரிந்து வைத்திருந்தால், அது எப்படி சோறு போடும். இந்த விடயத்தில் ஆங்கிலம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. அதற்கும் காரணம் உண்டு. இன்று உலகம் முழுவதும் ஆங்கிலத்தை அண்டி இருக்க வேண்டிய ஒரு நிர்பந்தம். அதற்காக நாம் ஆங்கிலேயர்களை பார்த்து வருத்தப் படக்கூடாது. எந்த ஒரு இனம் மேன்மை அடைகின்றதோ, அந்த இனத்தின் மொழி, பிறராலும் விரும்பி கற்கப் படும். அதற்கு உதாரணம் : சப்பான் மொழி, செர்மானியம், ரஷ்யம் போன்றவை. ஆக, தமிழை வாணிப மொழியாக நாம் உருவாக்க வேண்டும். நம் நாட்டில் கூட தமிழ் தெரிந்தவர்களுக்கென எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. போதிப்பது மட்டும் அல்ல.. தமிழினால், சில வேளைகளில் ஒரு நாளைக்கு ஈராயிரம் ரிங்கிட் கூட ஈட்டியிருக்கிறேன். இன்னமும் ஈட்டிக்கொண்டிருக்கிறேன். அப்படியென்றால், மாதம்? தமிழ் சோறு போடாதா? எவன் சொன்னது?
2. தமிழ் மொழியை, அதன் சோதனைத் தாட்களை மிகக் கடுமையாக ஆக்கி வைத்திருப்பது!
மலாய் மாணவர்களை சுலபமாக பல்கலைக்கழகத்தில் சேர்க்க, அரசாங்கம் பல இஸ்லாமிய பாடத்திட்டங்களை வகுத்து வைத்திருக்கின்றனர். அதில் சுலபமாக தேர்ச்சி பெற்று விடுவதால், அதிகம் மாணவர்கள் அந்த பாடங்களை எடுத்து படிக்கின்றனர். ஆனால், தமிழின் நிலை அப்படியா? ஆறாம் படிவ மலாய் மொழித் தாளையும் தமிழ்த் தாளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.. உண்மை புரியும். மலாய் மொழியில், 6 மணி நேரத்தில் இரண்டு பிரிவாக எழுதும் அதே தேர்வை தமிழில் ஒரே தேர்வாக 3 மணி நேரத்தில் எழுத வேண்டும். அப்படி எழுதினாலும், உங்களுக்கு அதிகமான புள்ளிகள் கிடைக்குமா? இன்னும் எத்தனை எத்தனை தமிழாசிரியர்கள் தமிழில் ஆறாம் படிவத்தில் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கின்றன்ர் தெரியுமா? கணக்கிட்டுப் பாருங்கள்... இத்தனைக்கும் இந்த தாட்களைத் திருத்துபவர்கள் தமிழர்கட்தாம்! இப்பொழுது சொல்லுங்கள், பிரச்சனை எங்கே என்று...
உச்சானிக்கொம்பாக இருக்கும் தமிழைப் பாடமாக எடுக்க எந்த மாணவனுக்கு ஆர்வம் வரும்? அதிலும், தமிழ் சோறு போடாது என்று அனைவரும் கூறுகின்றனரே! தமிழ் படித்த நல்லுங்களும் இதையே சொல்லிக் கொண்டிருப்பதுதான் அதனிலும் கொடுமை!!!
தங்களின் கருத்துகளில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது நண்பரே..
விரிவான கருத்துகளுக்கு நன்றி..
ஒவ்வொரு வட்டார பகுதிகளிலும் தமிழ் மொழி சார்ந்த இயக்கங்கள் நன்முறையில் இயங்க வேண்டும். தமிழ்ப் பள்ளி மற்றும் மொழி சார்ந்த பிரச்சனைகளை முன்னிருத்துவதை இந்த இயக்கங்கள் முன்னின்று செய்ய வேண்டும்.
வணக்கம். அய்யா.. நான் உங்கள் வலைப்பதிவின் நீண்ட நாள் வாசகன். ஆனால், இதுதான் நான் எழுதும் முதல் மறுமொழி.
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழிக் கல்வி நயவஞ்சகமாக மலேசிய கல்வி அமைச்சால், வட்டார கல்வி இலாகாக்களால் புறக்கணிக்கப்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.
இதனை களைய எனது ஆலோசனைகள் :
1). தமிழ்ப் பள்ளி & இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர் நலன், மொழி நலன் பேணும் வகையில் பொது அமைப்பு ஒன்று (கிளைகள்) மாநிலங்கள் தோறும் நிறுவப்பட வேண்டும். இது அரசு சார்பற்ற அமைப்பாக (NGO) இருப்பது முக்கியமாகும் (அரசு சார்புடைய இயக்கமாக இருந்தால், கல்வி அமைச்சின் ஆணைக்கு எப்போதும் தலைவணங்கியே செயலிழந்து போகும்).
தமிழ் மாணவர் நலன் தவிர்த்து தமிழ்ப்பள்ளி / இடைநிலைப் பள்ளிகளில் காணப்படும் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் (நீண்ட நாட்கள்) நியமிக்கப்படாத காரணங்கள், இருநிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் பற்றாகுறை, இடைநிலைப் பள்ளியில் பாட நேரங்களில் தமிழ் போதிக்கப்படாமல் தவிர்க்கப்படுவது, தமிழ்ப்பள்ளி முடித்த மாணவர்களை வேண்டுமென்றே அருகாமையிலிருக்கும் இடைநிலைப் பள்ளிகளுக்கு மாற்றிவிடுவது (அதிக தமிழ் மாணவர்களாக ஒரே பள்ளியில் இல்லாதவாறு செய்தல்)போன்ற குறைபாடுகளைக் களைய இது உதவும்.
2. இன உணர்வு, மொழி உணர்வு நம் இனத்தாரிடையே வளர்க்கும் வழிவகைகளை அடையாளம் காணவேண்டும்; ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அ). தமிழர்களே நடத்தும் கூட்டங்களுக்கு தமிழே மூலமொழியாக இருக்க வேண்டும். பிற மொழிகள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
ஆ). பெற்றோர்கள் நிறைய தமிழில் படிக்க, பேச அடிக்கடி நினைவுறுத்தப்பட வேண்டும்.
இ). இடைநிலைப் பள்ளிகளில் நமது இனப் பெற்றோர்களது பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். நம் மாணவர்களுக்கு இழைக்கப்படும் சதிவேலைகளை உடனே தட்டிக் கேட்கும் மனப்பான்மையை வளர்க்க / தேவையை விளங்கச் செய்ய வேண்டும்.
3. மக்கள் சக்தி.. மக்கள் சக்தி என்று உணர்ச்சி வசப்பட்டு போராட்டங்களில் பங்கெடுப்பது மட்டும் நம் இனத்தையும் மொழியையும் காக்காது. அதை செயல்படுத்த வெண்டும். நமது 18 கோரிக்கைகளில் தமிழ்ப்பள்ளியும் முக்கிய ஒன்று என்பதை முதலில் உணர வேண்டும்.
மக்கள் சக்தியினரின் நிகழ்வுகளில் தமிழ் ஓரங்கட்டப்படுவது பரவலாகவே நடப்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அண்ணன் உதயக்குமாருக்கு சிறைக்குச் செல்லும் வரை தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. மிகவும் வருத்தம் கொண்ட அவர் ஏறக்குறைய ஆறு/ஏழு மாதங்களில் தமிழை எழுத, படிக்கத் தெரிந்து கொண்டதாக தனது கடிதத்தின் வழி கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தார். தெரியாது என்பது குற்றமல்ல; தெரிந்து கொள்ளாமல் காரணங்கள் அடுக்கிக் கொண்டிருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றம்.
பிறருக்கும் வாய்ப்பு வழங்க வழிவிடுகிறேன். நன்றி.
விக்கினேசுவரன், குமரன் உங்களிருவரின் கருத்துகளுக்கு நன்றி. ஓலைச்சுவடியின் நீண்ட நாள் வாசகரான குமரன், தனது வலைப்பதிவில் சிறப்பாக எழுதி வருகிறார். வாழ்த்துகள்.
தொடரட்டும் உங்கள் நல்ல முயற்சி.
Post a Comment