மரத்தடியில் பிறந்த மறத்தமி்ழர்கள் (தொடர் 7)
>> Thursday, May 1, 2008
யாதும் ஊரே யாவரும் கேளிர்
-பாவலர் சங்கு சண்முகம்-
சகோதரத்துவத்தை வலியுறுத்தத்தான் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் தத்துவத்தை நமக்குக் கற்பித்தனர் நமது முன்னோர்கள்!
நமது நாட்டில் பேராசிரியர் தனிநாயக அடிகளார் முன்னின்று நடத்திய முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் கருப்பொருளாக அமைந்தது இந்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' தத்துவம்தான்!
பண்டைகாலத்திலேயே தமிழர்கள் எந்த அளவுக்கு உயர்ந்த பண்பாட்டு நாகரீகம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை அக்கருப்பொருளின் அர்த்தம் கண்டு சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரகுமான் போன்ற பெரும் தலைவர்கள் வியந்தனர்.
இன சமய எல்லைகளைக் கடந்தது நம் பண்பாடு. கால ஓட்டத்தில் இனம் என்பதே ஒரு கற்பனையாகிவிடும்.
இந்திய தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் தாகூர் தென் இந்தியர்கள் அனைவரையுமே 'திராவிடர்கள்' என்ற ஓர் அடைப்புக் குறிக்குள்தான் அடக்குகிறார்.
"சன கன மனஅதி நாயக ஜெயகே,
பாரதி பாக்கிய விதாதா
பஞ்சாப சிந்து குசராட்டா மராட்டா
திராவிட உத்துகல வங்கா!" என்று!
அந்த ஒரே திராவிட இனத்துக்குள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எத்தனை இனப்பிரிவுகள்! இன்னும் எதிர்காலத்தில் இவற்றுக்குள்ளும் எத்தனை உட்பிரிவு இனங்கள் பிரியும் என்பதையும் எவரும் உறுதிபடுத்த முடியாது! குறிப்பாக பல இனமக்கள் வாழும் நம் நாட்டைப் போன்ற தேசங்களில் இனக் கலப்பு என்பது எவராலும் தவிர்க்கப்பட முடியாத ஒன்று!
திராவிடர்கள் எப்படி இருப்பார்கள் எனப் பிரிட்டானிய கலைக் களஞ்சியம் குறிப்பிடும் எல்லைக்குள்ளாகவா நாம் எல்லோரும் பிறந்திருக்கின்றோம். காங்கோ குழந்தைகளையும் ஈரானியக் குழந்தைகளையும் ஒரே குடும்பத்திற்குள் பார்க்க முடிகிறது நம்மிடையே!
நீக்குரோடிக்கு, திராவிடம், ஆரியம், மங்கோலியம் ஆகிய நான்கு இனங்களும் கலந்துதான் உலக இனங்கள் அனைத்தும் உருவாகியுள்ளன என்பது சில ஆராய்ச்சிகளின் முடிவு.
இனவாதம் எடுபடாது
எனவே, இன்னும் இனவாதம் பேசிக்கொண்டிருப்பது ஏற்புடையதன்று!
திராவிடர்கள் தமிழர்களின் பாரம்பரிய நிறம் கருப்பு! அந்த நிறத்தையே பார்த்து வெறுக்கும் முகம் சுளிக்கும் பலர் நம்மிடையே உள்ளனர்! இவர்களே இனம் என்றும் சமயம் என்றும் வீராப்புப் பேசுவது வேடிக்கையான ஒன்று!
அண்மையில் என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு துக்கக் காரியத்திற்குச் சென்றிருந்தேன். அத்ற்குக் கூட்டிவரப்பட்டிருந்த ஒரு மூன்று வயதுச் சிறுமி, ஒரு அழகான கறுப்பு நிறப் பெண்ணைப் பார்த்து "ஆன்டி நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள் எனக்கு உங்களைப் பிடிக்கலே! எனக்கு சிவப்பு நிறம்தான் பிடிக்கும்" என்றது.
இந்தச் சின்னஞ்சிறு சிறுமிக்கு தன் சொந்த இனத்திற்கே உரிய கறுப்பு நிறத்தின் மீது எப்படி வந்தது இந்த வெறுப்பு! வீடுகளில் பெரியவர்கள் கறுப்பு நிறத்தை வெறுத்துப் பேசுகிறார்கள். அதைக் கேட்டுக் கேட்டு அதையே எதிரொலிக்கிறாள் அச்சிறுமி. பெரிசுகள் திருந்தாத வரை பிள்ளைகள் திருந்தமாட்டார்கள்!
நம் பாரம்பரிய நிறமான கறுப்பையே நாம் வெறுக்கிறோம். கேலி செய்கிறோம் நகைச்சுவை என்னும் பெயரில் திரைப்படங்களில் கறுமை நிறக் கண்ணனைக் கூட கறுப்பன் என ஒப்புக்கொள்ள மறுக்கிறது நம் உள்ளம். "நீல வண்ணக் கண்ணன்" என்கிறோம் 'புளு பேபிகள்' பிழைப்பது இல்லையே!
பாட்டாளிகளிடையே பாகுபாடில்லை
தோட்டப்பாட்டாளி மக்களிடையே இத்தகைய இன,நிற மத வேறுபாடுகள் இல்லை. ஒரு தலைவர் சீனராகினும், மலாய்க்காரரானாலும் எல்லாத் தோட்டத் தொழிலாளர்களுமே அவரை ஏற்றுக் கொண்டிருந்தனர். டப்ளின் தோட்டத்து இராமசாமியின் தலைமைத்துவத்தை கிளந்தான் மாநில இசுமாயில் அலி ஏற்றுக் கொண்டிருந்தார். உண்மையான மலேசிய மலேசியர்கள் கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்னரே பின்பற்றினர் தோட்டப்பாட்டாளிகள். இந்தியர்களுக்குள்ளேயே இனவேற்றுமை கண்ட ஒருசில தொழிலாளர்கள் தலைவர்களும் தோட்டத் தொழிலாளர்களிடையே இல்லாமல் இல்லை. ஆனால் சாதாரணப் பாட்டாளி மக்கள் மலேசிய மக்கள் அத்தகைய அழுக்காறுகளைக் கொண்டிருக்கவில்லை! இதை அண்மைய அரசியல் சுனாமி நிரூபித்து விட்டது!
பல இன மக்கள் வசிக்கும் நாட்டில்தான் இத்தகைய அரசியல் சுனாமிகளால் மாபெரும் அதிர்ச்சி அலைகள் ஏற்படும். ஒரே இனமக்கள் வசிக்கும் நாடுகளில் இத்த்கைய பேரதிர்ச்சி பொங்காது என என்ண முடியாது. 90 விழுக்காடு தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் கூட யாரும் எதிர்பாராத வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்த 60ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் கூட பட்டம் பதவிக்குப் பழகிப்போன காங்கிரசுகாரர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அண்ணாதுரையும் கருணாநிதியும், நெடுஞ்செழியனும் மதியழகனும், அன்பழகனும் என்.வி நடராசனும், சி.பி சிற்றரசும், தென்னரசும் சட்ட சபைக்குப் போவதையும், அமைச்சர்களாவதையும் காங்கிரசுகாரர்களால் சீரணிக்க முடியவில்லை! முதல் தேர்தலில் 16 இடங்களைப் பிடித்து அடுத்த தேர்தலில் 50 இடங்களைப் பிடித்து அதற்கு அடுத்த தேர்தலில் ஆட்சியையும் பிடித்துவிட்டனர் தி.மு.கவினர்! அந்த அரசியல் அலையில் பெருந்தலைவர் எனப் போற்றப்பட்ட கர்மவீரர் காமராசர் கூட சாதாரண கல்லூரி மாணவர் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்டார்! "படுத்துக் கொண்டே செயிப்பேன்!" என அன்று காமராசர் அவசரப்பட்டுக் கூறிய ஒரு வார்த்தை அவர் தோலிவிக்கே காரணமானது! இதற்காகத் தான் வீராப்பு அரசியலுக்கு ஆகாது என்பது!
தமிழர் கதை தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment