தொழிலாளர்களின் போராட்டங்கள்.. (மே தின சிறப்புக் கட்டுரை)
>> Thursday, May 1, 2008
கணபதி தூக்கிலிடப்பட்டார் வீரசேனன் சுட்டுக் கொல்லப்பட்டார்
1950ஆம் ஆண்டு வரை மலாயாவில் தொழிலாளர்கள் வாழ்வில் பெரும் மறுமலர்ச்சி சிந்தனையை ஏற்படுத்தியவர்கள் மலாயா பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்களும் ஆவர். 1948ஆம் ஆண்டு அவசரக் காலத்தைப் பயன்படுத்தி, மலாயா கூட்டரசு ஆட்சியினர் கம்யூனிசுகளுடன் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி பலரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் புடு சிறையில் தூக்கிலிடப்பட்ட மறைந்த எசு.ஏ.கணபதி, ரவாங் காட்டுப்பகுதி சாலையில் தற்காப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரசேனன், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் ஆர்.எச்.நாதன், இந்திய தொழிலாளர்களின் தொழிற்சங்க அமைப்பாளர் ஆர்.ச.பாலன் போன்றோர் தலைமையேற்று நடத்திய போராட்டங்கள் தோட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.
1998ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வழக்கறிஞர் இரா.உதயகுமார் அவர்கள் எழுதி வெளியிட்ட மாவீரன் மலேயா கணபதி என்ற நூலுக்கு, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய அணிந்துரையின் ஒரு பகுதி :
எதிர்பாராதவிதமாக சப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டு அரசு சரணடைந்த பிறகு இந்திய தேசிய இராணுவத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது. வேறு ஒரு நாட்டிற்குத் தப்பிச் சென்று நேதாசி தனது போராட்டத்தைத் தொடர வேண்டும் என இந்திய இராணுவத் தளபதிகள் அவரை வற்புறுத்தினார்கள். அதன் விளைவாக விமானம் மூலம் புறப்பட்ட நேதாசி விபத்தில் சிக்கி மாண்டார் என்று பரப்பப்பட்ட செய்தி இந்திய தேசிய இராணுவ வீரர்களைத் திகைக்கச் செய்தது. மலேயாவில் மீண்டும் பிரிட்டிசு ஆதிக்கம் ஏற்பட்டது. இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்டது. அதிலிருந்து பெரும்பாலான வீரர்கள் மலேயா கம்யூனிசுட்டு கட்சியில் சேர்ந்தனர். இதன் தலைமையில் தொழிற்சங்க வேலைகள் விரிவுபடுத்தப்பட்டன. இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கண்பதி வலிமை வாய்ந்த தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கி அருந்தொண்டாற்றினார். அவரது அளப்பரிய தொண்டின் மூலமாக மலேயாவில் தொழிலாளர்கள் எந்த இனத்தவராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கணபதியின் தலமையில் திரண்டார்கள். பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களை அவர் நடத்தி முதலாளிகளுக்கும் பிரிட்டிசு அரசுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார். அகில மலேயா தொழிற்சங்கக் கூட்டமைப்பு உருவானது. மலேயாவில் வாழ்ந்த மலாய், சீன, தமிழ் இணையமாகவும் அது திகழ்ந்தது. மேலும் இந்த மூன்று தேசிய இன மக்களையும் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னனி ஒன்று அமைக்கும் முயற்சியிலும் அவரின் பங்கு மகத்தானது.
இதுபோன்ற நடவடிக்கைகளினால் ஆத்திரம் அடைந்த பிரிட்டிசு அரசு அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்திற்று. கடும் அடக்குமுறையை ஏவிவிட்டது. இதை எதிர்த்துப் போராட தலைமறைவு வாழ்வை கணபதியும் அவரது தோழர்களும் மேற்கொண்டார்கள். இந்தக் காலகட்டத்தில் கணப்தி ஆற்றிய அயராத தொண்டு மக்களை ஒரு புரட்சிக்குத் தயார்படுத்தியது. கணபதியை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தால்தான் மக்கள் புரட்சியை ஒடுக்க முடியும் என்பதை உணர்ந்த பிரிட்டிசு அரசு தனது போலீசு படையை அவருக்கு எதிராக ஏவிவிட்டது.
கடுமையான அடக்குமுறைகள் நடத்தப்பட்டன. எண்ணற்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இறுதியில் எதிர்பாராத விதமாக கணபதியையும் பிரிட்டிசு இராணுவம் சிறைபிடித்தது. கணபதி கைதானார் என்ற செய்தி காட்டுத் தீப் போல மக்கள் மத்தியில் பரவியது. அதன் விளைவாக மக்கள் கொதித்து எழுந்தார்கள். வெள்ளை முதலாளிகள் உயிர் தப்ப ஓடி ஒளிந்தார்கள். கணபதி உயிருடன் இருக்கும்வரை மக்கள் கிளர்ச்சியை அடக்கமுடியாது என்பதை உணர்ந்த பிரிட்டிசு அரசு போலியான விசாரணை ஒன்றினை அவசர அவசரமாக நடத்தி அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு எதிராக மலேயா நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலெல்லாம் கண்டனக்குரல் எழுந்தது. மலேயாவில் இருந்த தூதுவர். ஏ.வி.திவி அவர்கள் கணபதியைச் சிறைச்சாலையில் சந்தித்துப் பேச வேண்டிய சூழ்நிலை உருவானது.
இந்தியாவிலும் அதன் எதிரொலி கேட்டது. தமிழ்நாட்டில் கண்டனக்குரல் எழுந்தது. எனினும் கணபதியைக் காப்பாற்றக்கூடிய அளவுக்குப் பெரும் கொந்தளிப்பு தமிழ் நாட்டில் ஏற்படவில்லை. இந்திய அரசு தலையிட்டு எப்படியாவது கணபதியைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்தது. கணபதி தூக்கிலிடப்பட்டார்.
ஆதாரம் : மாவீரன் மலேயா கணபதி (பக்கம் 7-17)
ஆய்வு நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது.
(திசம்பர், 1998)
காரிருளால் சூரியன்தான்
மறைவதுண்டோ?
கறைச் சேற்றால் தாமரையின்
வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான்
இன்மை யாமோ?
பிறர் சூழ்ச்சி செந்தமிழை
அழிப்பதுண்டோ?
நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச்
சிறையிற் போட்டால்!
நிறை தொழிலாளர்களுணர்வு
மறைந்து போமோ?
-புரட்சி கவிஞர் பாரதிதாசன்-
இவர்களைப்போல் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக போராடிய முற்போக்குத் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெரும்பான்மையோர் நாடு கடத்தப்பட்டனர். இன்று செழித்தோங்கியிருக்கும் இந்த நாட்டையும், பசுமையான தோட்டங்களையும் உருவாக்குவதற்கு அடித்தளமாக இருந்த சஞ்சிக் கூலிகள் தங்களின் இரத்தத்தைக் காணிக்கையாக்கி மாண்டதுடன், தாங்கள் நட்ட இரப்பர் மரத்திற்கே உரமாகவும் ஆகிவிட்டதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
1909ஆம் ஆண்டு முதல் 1940 வரை இந்திய சீன தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 இலட்சமாகும். இந்தியர்களைப் பொறுத்தமட்டில் 1860 ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டுக்கு இடையில் நான்கு இலட்சம் பேர் தங்களின் தாய் நாட்டிற்கே திரும்பி சென்றுவிட்டனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைப்பெற்ற மலேசிய கவிதை மாநாட்டில் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் வே.சபாபதி அவர்கள் விடுதலைக்கு முந்திய மலேசியத் தமிழ் கவிதைகள் என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில் பத்திரிக்கைகளின் பங்கு என்ற பிரிவில் சிந்திக்கத்தக்க கவிதை ஒன்றினை மேற்கோள் காட்டியுள்ளார்.
பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள கவிதைகள் தோட்டப்புற சமுதாயத்தையும் அங்குள்ள வாழ்வியல் நிலைகளையும் நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளன. அவற்றுள் 6.1.1932ல் தமிழ் நேசனில் (புதன் கிழமை) வெளிவந்த கவிதை ஒன்று குறிப்பிடத்தக்கது. அக்கவிதை அன்றைய மலாயாவின் இரப்பர் தோட்டத் தொழிலாளியின் பரிதாபக் குரலாகவே வெளிப்பட்டுள்ளது. மலாயாவின் பொருளாதாரம் முப்பதுகளில் படுவீழ்ச்சி கண்டிருந்தது. இரப்பரின் விலை மிக மோசமாக வீழ்ச்சி கண்டிருந்ததால், அதன் உற்பத்தியை அதிகமாகவே குறைத்துவிட நேர்ந்தது. அதனால் தமிழ்த் தொழிலாளர்கள் பலர் திரும்ப இந்திய நாட்டிற்கே கட்டாயமாக அனுப்பி வைக்க நேர்ந்தது. அந்நிலையில் பால்மரம் சீவும் தொழிலாளி ஒருவன் துரையையும் கிராணியையும் கங்காணியையும் மக்களையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் சிந்துவதாக ஒரு தொழிலாளியின் நோக்கு நிலையில் ரா.சுப்பிரமணி ஐயர் என்பவர் ஒரு கவிதையை இயற்றியுள்ளார். இக்கவிதையில் தோட்டபுற பின்னனி, வாழ்வியல் கூறுகள், மண்ணின் மனம் ஆகியன சிறப்பாக வெளிபடுத்தப்பட்டுள்ளன.
போய்வாரேன் பால்மரமே போய்வாரேன் பால்மரமே
போய்வாரேன் பால்மரமே போய்வாரேன் பால்மரமே
கண்ணாடித்துரையும் போனார் கங்காணி வீரன் போனார்
பின்னாடி கிராணி போனார் தாங்காமல் நானும் போரேன்
என்னமோ பின்னாலே எப்போதூன்னை காணப்போரேன்
(போய்)
பவுனுக்கு பவுன்விலையாய் பாலுவித்தக் காலம் போச்சே
புளிவிலைக்கும் தோற்றுப் போச்சே பாலுவெட்டும் நிறுத்தலாச்சே
யார்செய்த மோசம் பாராய் எவரிட்டசாபம் கூறாய்
(போய்)
ரொட்டிப்பால் ஒருவிலையும் ஒட்டுப்பால் ஒருவிலையும்
பட்டைக்கு ஒருவிலையும் (பாலு) கொட்டைக்கு ஒருவிலையும்
தங்கம்போல் விலைதந்தாய் பங்கமாய் நிலைகுலைந்தாய்
(போய்)
தீபாவளி படியென்றும் பொங்கலுக்குப் பொடியென்றும்
சீராய்கொடுத்த எந்தன் சிரித்தமுகத்துத் துரை
கையைத்தான் விரிகிறாரே காசென்று கேட்டாலிப்போ
(போய்)
கற்பகமென்று சொல்வார் கண்டதில்லை இவ்வுலகில்
கற்பகம் என்று சொல்ல கண்கண்ட மரமும் நீயே
காலமே கோலமோ காப்பாற்றுவார் இல்லையே
(போய்)
உன்னைநம்பி வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்களுண்டு
அத்தனை பேர்களுமே அழுதுகொண்டு போகுறாரே
உயிரளவும் மறக்கமாட்டேன் ஊருக்குப் போய்வாரேன்
(போய்)
ஆதாரம் மலேசியத் தமிழ் கவிதை மாநாடு
மலர் 2000 பக்கம் 153
நன்றி : திரு.சானகிராமன் (மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை)
முற்றும்...
3 கருத்து ஓலை(கள்):
நான் இக்கவிதையை எழுத்தாளர் ஜானகிராமனின் மலேசிய இந்தியர்களின் இக்கட்டான சூழ்நிலை எனனும் புத்தகத்தில் படித்தேன். ஒரு கனம் என்னை கலங்க வைத்துவிட்டது. எவ்வளவு மனம் உருகி எழுதியிருக்க வேண்டும் இக்கவிதையை.
KAVITHAI manathai negilha vaikirathu..ariyaamal kangalil kannerum kottugirathu vaasikum poluhu....
ஒரு தோட்டப்பாட்டாளி வேலையில்லை என வஞ்சிக்கப்பட்டு, தனது புதிய சொந்தங்களை விட்டுப் பிரிக்கப்படும் இவ்வேதனை நம் மனதிலும் வேரூன்றுவதற்கு இக்கவிதை இயற்றப்பட்டுள்ளது.அன்றைய இயல்பான நடைமுறை வாழ்க்கையை, இயல்பான நடையில் சித்தரித்து, நமக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இக்கவிதையின் சிறப்பு எனலாம்.
Post a Comment