தமிழன் ஊனமாக்கப்பட்டான்...!!
>> Thursday, May 22, 2008
அதிகார முறைக்கேடுகளுக்கு இச்சம்பவம் ஓர் அத்தாட்சி..! சனநாயக நாட்டில் ஓர் தமிழன் அதிகார வர்கத்தினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு இறுதியில் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளான். சஞ்சீவு குமார் என்ற தமிழனை கடந்த 28 சூலை 2007-இல் வெளிநாட்டிற்கான உளவுத்துறை அதிகாரி என குற்றம் சுமத்தி காவல் துறையினர் அவரை 55 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 நாட்களில் விசாரணை என்றப் பெயரில் சிறைச்சாலை அதிகாரிகள் சஞ்சீவு குமாரை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தியதாக, சஞ்சீவு குமாரின் மனைவி சர்மிளா உதயகுமார் கடந்த 20 மே அன்று டாங்கு வாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டப்பின், 22 செப்டம்பர் 2007-இல் சஞ்சீவு குமாரை மலேசிய மக்கள் அதிகம் வெறுக்கும் இடமான கமுந்திங்கு தடுப்புக் காவல் முகாமிற்குக் கொண்டு சென்றனர். மனித வர்க்கத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் சஞ்சீவு குமார் ஆங்கே சிறைச்சாலை அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக, ஒருக் காவலாளியாகப் பணிப்புரியும் சர்மிளா தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பலமுறை காலணி அணிந்த கால்களால் எலும்புப் பகுதிகளில் உதைக்கப்பட்டும், தலைப்பகுதியில் தாக்கப்பட்டும், மரக்கட்டைகளால் இடதுகாலும், இடது கையும் அடிக்கடி சராமரியாகத் தாக்கப்பட்டும், தண்ணீர் புட்டிகளால் அடிக்கப்பட்டும் இன்று சஞ்சீவு குமார் உருக்குலைந்து போயிருப்பதாக திருமதி சர்மிளா அவர்கள் மனவேதனையோடு கூறியுள்ளார். கடினமான பொருட்காளால் தனது கணவரின் மர்ம உறுப்பு தாக்கப்பட்டதுடன், அவருடையச் சிறுநீரை பருகக் கோரி சிறைச்சாலை அதிகாரிகள் வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 11 ஏப்ரல் 2008-இல் சஞ்சீவு குமார் இடது கால், கை வலியால் துடித்ததனால் தைப்பிங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், ஆங்கே முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமல் ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் எனவும் திருமதி சர்மிளா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சஞ்சீவு குமார் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதாகவும், இடது கை,கால் முற்றிலும் நிரந்தரமாகச் செயலிழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளுக்கு நாள் சஞ்சீவு குமார் தனது எடையை இழந்து வருவதாகவும், தினமும் வலுவிழந்து வலியோடு காணப்படுவதாகவும் சர்மிளா தனது புகாரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திருமதி சர்மிளாவோடு உடன் புகார் செய்யச் சென்ற "இ.சாவை துடைத்தொழிப்போம்" இயக்கத்தின் தலைவர் திரு. சாயிட்டு இபுராகிமை நிருபர்கள் அணுகி கேட்டதற்கு, திரு.சஞ்சீவு குமாரை வெளிநாட்டிற்காக வேவு பார்த்ததாகச் சந்தேகித்து காவல் துறையினர் கைது செய்ததாகக் குறிப்பிட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கே சட்டத்தில் தமது உரிமைகளைக் காத்துக் கொள்வதற்கு உரிமை இருக்கும் பட்சத்தில், சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களைக் கொடுமைப்படுத்த சட்டத்தில் இடமே இல்லை. ஆனால் நடப்பது என்ன...?
இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு மத்தியில்தான் உங்களுடைய வருங்கால சந்ததியினர் வாழப் போகின்றனரா? இன்று கவலையறியாது உங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு உங்களுடன் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் முகத்தை ஒரு முறைப் பாருங்கள். இக்கொடுமை இன்று தட்டிக் கேட்கப்படாவிட்டால், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள்..! சஞ்சீவு குமாருக்கு நேர்ந்த இந்த கதியானது வருங்காலங்களில் யாருக்கும் நடக்காமல் இருப்பதற்கு நாம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டம் தொடரும்...
3 கருத்து ஓலை(கள்):
இந்த மாதிரியான அராஜகங்களை தட்டி கேட்க போனவர்கள் கதியும் இருதியில் கேள்விக்குரறியாக ஆகிவிடுகிறது.naம் போராட்டம் தொடரும் பட்ச்சத்தில் இவர்களின் அராஜகங்களும் தொடர்ந்து கொண்டுதான் செல்கிறது. ஆனால் தொடந்து போராடத்தான் வேண்டும்.
வணக்கம் உசா, தமிழில் தட்டச்சு செய்ததற்காக முதலில் உங்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து உங்கள் கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்து அனுப்புங்கள். எழுத்துப் பிழைகளையும் கவனிக்கவும். எதிர்காலத்தில், நீங்களும் தமிழ் வலைப்பதிவராக இணையத்தில் உலா வர வேண்டும் என்பது எமது அவா..
வணக்கம் ஷதீஸ் சார், உங்கள் கருத்துக்களுக்கு மிக்க nandri.
Post a Comment