தனித்தமிழ் இயக்கங்கண்ட தந்தை மறைமலையடிகள்..
>> Sunday, May 4, 2008
மறைமலையடிகளைப் பற்றிய சிறு குறிப்புகள்..
மறைமலையடிகள் (1875-1950)
" சோழ நாட்டிலே நாகப்பட்டினத்துக்கு அருகிலே காடம்பாடி என்னும் ஊரிலே தோன்றிக் கல்வியொழுக்கங்களில் தலைசிறந்து, சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராய்த் திகழ்ந்து, துறவு நிலையுற்று, பல்லாவரத்தில் பொதுநிலைக் கழகத் தலைவராய் வீற்றிருந்த சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் தமிழ்நாடு செய்த பெருந்தவவுருவினர்.
இவர் 'மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்' 'திருக்குரளாராய்ச்சி' முதலிய நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
"முகிழ்ந்து மணங்கமழ்ந்து அழகாய் மலரும் பருவத்தே ஓர் அரிய செங்கழுநீர்ப்பூ அதனருமையறியான் ஒருவனாற்கிள்ளியெறியப் பட்டு அழிந்தாற் போலவும், மறைநிலாக் காலத்தே திணிந்து பரந்த இருளின்கட் செல்லும் நெறி இதுவெனக் காட்டுதற்கு ஏற்றி வைத்த பேரொளி விளக்கு சடுதியில் வீசிய சூறைக் காற்றினால் அவிந்து மறைந்தாற் போலவும், நீண்டநாள் வறுமையால் வருந்திய ஒருவன் புதையலாய்க் கண்டெடுத்த பொன் நிறைந்த குடம் ஒன்று வன்நெஞ்சக் கள்வனொருவனாற் கவர்ந்து கொள்ளப்பட்டாற் போலவும் இத்தமிழ் நாட்டுக்கு ஒரு கல்வி மலராய் ஓர் அறிவு விளக்காய் ஓர் அருங்குணப் புதையலாய்த் தோன்றிய இவ்விளைஞர் தமது 43ஆம் ஆண்டில் கதுமெனக் கூற்றுவனாற் கவரப்பட்டது ஒரு பெருங்கொடுமையன்றோ?"
தமிழ் மொழி தனித்தியங்கும் வல்லமையற்றது. அது வடமொழி இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கடன்பெற்றுத்தான் இயங்குகிறது. தமிழர்களுக்கு அறிவில்லை. அப்படி அறிவுப்பெற்றிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆரியவழிப்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்துகள் பரவி இருந்த காலம். தமிழ்ப்புலவர்களே தமிழைத் தாழ்த்தி வடமொழியை உயர்த்திக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், தமிழ் உணர்வுமிக்க அறிஞபெருமக்கள் துடித்தெழுந்து தமிழின் பெருமையை எடுத்துக்காட்டிப் போராடினர். ஆனாலும், பிறமொழி கலவாத உரைநடை வழக்கை, பேச்சு வழக்கை செயற்படுத்திக் காட்டா நிலையே அன்று இருந்து வந்தது.
இந்த நிலையில் ஒரு மாற்றம், பெருமாற்றம் உருவானது. தித்தமிழ் இயக்கம் தோற்றம் பெற்றது. இது எப்படி நடந்தது என்பது குறித்து 1937இல் வெளிவந்த வடச்சொற்றமிழ் அகரவரிசை என்னும் தம் நூலிலே, மறைமலையடிகள் அவர்களின் மகளார் மதிப்புமிகு நீலாம்பிகையம்மையார் எடுத்துரைத்துள்ளார்.
"யான் பதின்மூன்றாண்டுச் சிறுமியாய் இருந்தபோது, 1916 ஆம் ஆண்டில் ஒருநாட் சாயுங்காலம் என் தந்தையாருடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டுவருகையில், தந்தையார் இராமலிங்க அடிகளார் அருளிச் செய்த திருவருட்பாவிலுள்ள, "பெற்ற தாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப்பெறுந் தாய்மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்..."
என்னும் பாட்டைப் பாடினார்கள். அப்பாட்டின் இரண்டாம் அடியாகிய உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் என்பதனைச் சொன்னபோது, என் தந்தையாரவர்கள் என்னை நோக்கி, "அம்மா! இப்போது நான் பாடிய பாட்டைத் தூயதமிழில் இராமலிங்க அடிகள் எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார்கள்! ஆனால், அப்பாட்டின் இரண்டாமடியிலுள்ள 'தேகம்' என்னும் வடச்சொல்லை நீக்கி, 'யாக்கை' என்னும் தனித்தமிழ்ச் சொல்லை அவர்கள் அங்கே அமைத்துப் பாடி இருந்தால் இன்னும் எவ்வளவோ நன்றாயிருக்கும்.
தமிழில் பிறமொழிச்சொற்களைச் சேர்ப்பதால், தமிழ் தன் இனிமையை இழந்துபோவதோடு, பல தமிழ்ச் சொற்களும் வழக்கில் இல்லாமல் இறந்து போகின்றன" என்றார்கள். இது கேட்ட அன்று முதல் தனித்தமிழிலேயே பேசவும் எழுதவும் தந்தையாரும் யானும் உறுதிகொண்டோம்." தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய வரலாறு இது.
சுவாமி வேதாசலம் என்னும் தம் வடமொழிப்பெயரை மறைமலையடிகளார் என்று தூயத்தமிழ்ப்பெயராக மாற்றஞ்செய்துகொண்டார்.. 'சமரச சன்மார்க்கம்' என்னும் தம் இல்லத்தின் பெயரை 'பொதுநிலைக் கழகம்' என்றும், தாம் நடத்திவந்த 'ஞானசாகரம்' திங்களிதழை 'அறிவுக்கடல்' என்றும் மாற்றிக்கொண்டதோடு தாம் முன்னம் எழுதி வெளியிட்டிருந்த நூல்களில் அமைந்திருந்த பிறமொழிச்சொற்களைப் புதிய பதிப்புகளில் தமிழாக்கி வெளியிட்டார். தம் உரையாடலில், மேடைப்பேச்சில், எழுத்தில் இலக்கிய மணங்கமழும் இலக்கணப் பிழையற்ற தூயத்தமிழ் நடையையே கடைப்பிடித்தார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மும்மொழியில் புலமைபெற்றிருந்த அடிகளார், அம்மொழி இலக்கியங்களையும் ஆராய்ந்து தமிழின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்தினார். சமய நெறிகளை அறிவுநிலையில் ஆராய்ந்து வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்தார்.
தமிழ்த் தழைத்தோங்கி நிற்பதற்கு, அப்பெருமகனார் ஆற்றிய தொண்டு, அளப்பரியது. தமிழோடு இணைந்துவாழும் பெருவாழ்வே அவர் வாழ்வு. அவர் கண்ட தனித்தமிழ் இயக்கத்தைப் போற்றி, அவரைப் பின்பற்றியவர் எண்ணிலடங்கார்.
-கம்பார் கனிமொழி-
தகவல் : ஞாயிறு நண்பன் (4.5.2008)
4 கருத்து ஓலை(கள்):
தங்களின் ஓலைச்சுவடி வலைப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது. மலேசியத் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள இன எழுச்சியை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு பயனான செய்திகளை வழங்கி தமிழர்களைக் குறிப்பாக இளைஞர்களை விழிப்புறச் செய்வதில் 'ஓலைச்சுவடி' வெற்றி பெற்றுள்ளது என துணித்து கூறலாம்.
தொடக்கத்தில், நவம்பர் 25 எழுச்சிப் பேரணி பற்றிய செய்திகளை மட்டுமே பெருமளவில் வழங்கிவந்த 'ஓலைச்சுவடி' அண்மையக் காலமாகத் தமிழ்மொழி, தமிழினம் சார்ந்த செய்திகளைச் செப்பமாக வழங்கிவருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
மலேசியாவில், தமிழை முன்னெடுத்து நடத்துகின்றவர்கள் எண்ணிக்கை பெருக வேண்டும். அப்போதுதான், தமிழர்களுக்கு நல்வாழ்வு மலரும்.
அந்தவகையில், தனித்தமிழின் தந்தை மறைமலை அடிகளார் கட்டுரையை நாளிதழிலிருந்து இனணயத்திற்கு ஏற்றி, ஓலைச்சுவடியின் அன்பர்களுக்கு வழங்கியிருக்கும் தங்களின் தமிழ் உள்ளத்தைப் போற்றுகிறேன்.
இவ்வகையான செய்திகளைத் தொடர்ந்து எழுதவேண்டும் என தங்களை வேண்டி நிறைவு செய்கிறேன்.
இனியத் தமிழை இணையத்தின் வழி
இணைந்து வளர்த்தெடுப்போம்.
அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்.
ஐயா சுப.நற்குணன் அவர்களுக்கு கனிந்த வணக்கங்கள்..
திருத்தமிழ், தமிழுயிர் எனும் வலைப்பதிவுகளின் வழி மலையகத்தில் தமிழ் மணம் பரப்பி வரும் ஐயா சுப.நற்குணன், ஐயா ஆய்தன் போன்றோர்களின் பதிவுகள் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்றால் அது மிகையாகாது. தங்களுடைய பதிவுகள் வழி தனித்தமிழின் இனிய சாற்றை அருந்தி வந்துள்ளேன், இனி வரும் காலங்களில் தமிழ் மொழி தொடர்பான தகவல்களை பதிவிடுவதற்கு தாங்கள் இருவரும் கொடுத்த ஊட்டச்சத்து பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். ஓலைச்சுவடிக்கு தாங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா..
வாழ்கத் தமிழ்..!
Sathis sir, unggal padaipukkal PIRAMAATHAM...unggal pani melum thodarnthu sirakka manamaarntha valthukal...
நன்றி உசா, தொடர்ந்து ஓலைச்சுவடிக்கு ஆதரவு அளியுங்கள்..
Post a Comment