நிழற்படங்கள் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டேன்...
>> Monday, May 12, 2008
நேற்று (11-05-2008) காலை 11 மணியளவில் பினாங்கில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துபோகும் இடமான கர்னி டிரைவு எனுமிடத்தில் அமைதி மறியலில் ஈடுபடுவதற்காக சுமார் 30 பேர்கள் திரண்டிருந்தனர். பலரும் பலவகையான வாசகங்களைக் கொண்ட பதாகைகளைத் தாங்கிக் கொண்டு "இ.சா சட்டத்தை ஒழிப்போம்", "இந்துராப்பு வாழ்க", "மக்கள் சக்தி வாழ்க", "உதயாவிற்கு உரிய சிகிச்சைக் கொடு" என பலவகையான முழக்கங்களையிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் நான் என் நிழற்படக்கருவியுடன் அங்கு நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்துக் கொண்டிருந்தேன்.
மறியல் நடக்கும் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் காவல்துறையின் ரோந்து வாகனம் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அமைதி மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோரை ரோந்து வாகனத்தில் அமர்ந்திருந்த காவல் துறையினர் 15 நிமிடத்திற்கு நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அதன் பிறகு காவல் துறையின் ரோந்து வாகனம் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது. "இ.சா சட்டத்தை துடைத்தொழிப்போம்" இயக்கத்தின் அங்கத்தினர்கள், சுவாராம் மற்றும் இந்து உரிமைப் பணிப்படையின் ஆதரவாளர்கள் சாலையில் செல்லும் வாகனமோட்டிகளுக்கு அறிக்கைகளை விநியோகித்துக் கொண்டிருந்தனர். அச்சாலையைக் கடந்த பொதுமக்கள் நிறைய பேர் ஆதரவு தெரிவித்து அறிக்கையைப் பெற்றுக் கொண்டனர். ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாகனமோட்டிகள் ஒலி சமிஞ்சை செய்து கையசைத்துச் சென்றனர். வாகன நெரிசல் ஏதும் இல்லாமல் இந்நிகழ்வு அமைதியாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், மணி 11.30 அளவில் திடீரென காவல் துறையின் இரு வாகனங்கள் பாதுகாப்பு கவசம் அணிந்த 20 காவல் துறையினரைக் கொண்டு வந்து இறக்கின. அவர்கள் கையில் தடி, கண்ணீர்ப் புகை குண்டு எய்தும் துப்பாக்கி போன்றவைக் காணப்பட்டன.
காவல் துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பி.கே வோங் எனும் மனித உரிமைப் போராளி சென்றார், அவரோடு சிலரும் அப்பேச்சு வார்த்தையில் கலந்துக் கொண்டனர். ஆனால் காவல் துறையினர் அனைவரையும் உடனடியாக கலைந்துவிடும் படி எச்சரிக்கை கொடுத்துவிட்டு அனைவரும் தடுப்புக் கவசம், துப்பாக்கி, தடி போன்றவற்றோடு தயாராகினர்.
இதனைக் கண்ட இந்துராப்பு, சுவாராம், சி.எம்.ஐ உறுப்பினர்கள் அங்கிருந்து நடப்பதென்று முடிவெடுத்து, பதாகைகளை ஏந்திக் கொண்டு கர்னி பேரங்காடியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். காவல்துறையினரும் அவர்களைப் பின்தொடர்ந்து வர மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் செல்லும் வாகனமோட்டிகளுக்கு அறிக்கைகளை விநியோகித்துக் கொண்டு வந்தனர். கர்னி பேரங்காடியை நெருங்கியதும் காவல் துறை அதிகாரியொருவர் ஒலிப்பெருக்கியின் வழி அனைவரையும் கலைந்துச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கர்னி பேரங்காடிக்குள் நுழைய ஆரம்பித்தனர். கர்னி பேரங்காடி வளாகத்தில் நுழைந்த நிறிது நேரத்தில் அனைவரும் கும்பல் கும்பலாக பிரிந்து சென்றுவிட்டனர். இவர்களைப் பின் தொடர்ந்த காவல் துறைப் படையினர் கர்னி பேரங்காடி வெளியே சாலையோரத்தில் குவிக்கப்பட்டனர். மனித உரிமை போராளி பி.கே வோங் பேரங்காடியின் முன் வளாகத்தில் சுவாரம் உறுப்பினர்களுடன் நின்றுக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவ்வேளை ஒரு சில காவல் துறையினர் பேரங்காடியினுள் நுழைந்தனர்.
பேரங்காடியின் வெளியே நின்றுக் கொண்டிருந்த சில காவல்துறை அதிகாரிகள் பி.கே வோங்கை மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் சில கேள்விகளைக் கேட்டப் பின்னர் அவரை விசாரணைக்கு உதவுமாறுக் கூறி அவரை காவல் துறையின் வாகனம் ஒன்றின் அருகே அழைத்துச் சென்றனர். அவரை அங்கே நிறுத்தி வைத்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. திரு வோங் மிகவும் சாந்தமான முறையில் பதிலளித்துக் கொண்டிருந்தார். மறியல் ஒரு முடிவுக்கு வந்ததாகவும் அனைவரும் கலைந்து சென்றுவிட்டதாகவும் கூறிய வோங்கின் பதிலை ஏற்றுக் கொள்ளாத காவல் துறையினர், அவரை மேல்விசாரணைக்குக் கொண்டு செல்லப்போவதாகக் கூறி அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றிக் கொண்டுச் சென்றனர்.
இச்சம்பவங்களை நிழற்படத்தில் பதிவு செய்து கொண்டிருந்த என்னை சில காவல் துறை அதிகாரிகள் நோட்டமிடுவது எனக்கு புலப்பட்டது. அடுத்த படியாக பேரங்காடியின் உள்ளே என்ன நடக்கின்றது எனப் பார்க்கச் சென்றபோது, ஆங்கே மறியலில் ஈடுபட்டவர்கள் முகங்கள் தென்படவில்லை. காவல் துறை அதிகாரிகள் சிலர் மட்டும் பேரங்காடியின் உள்ளே நின்றுக் கொண்டிருந்தனர். நான் அவர்களையும் நிழற்படத்தில் பதிவு செய்ய அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணி மதியம் 12.30 இருக்கும், என் தோல்பட்டையில் ஒருவர் கைவத்து அழைப்பதை உணர்ந்தேன்.
தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment