துன் மகாதீர் 'அம்னோ'விலிருந்து விலகல்...!
>> Monday, May 19, 2008
(மேலே காணப்படும் படம், துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுவதாக புத்ரா உலக வாணிப மையத்தில் 'அம்னோ' மாநாட்டின்போது அறிவித்தக் காட்சி)
கெடாவில் இன்று நடைப்பெற்ற ஒருக் கருத்தரங்கில் '12-வது பொதுத்தேர்தலுக்கு முன் மலாய்க்காரர்களின் நிலை' எனும் தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்த மலேசியாவின் முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தாம் 'அம்னோ'வை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவித்து வந்திருந்தோரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளார். தம்முடைய விலகல் குறித்து கருத்துரைக்கையில், இந்த விலகலானது நிரந்தரமானது அல்ல எனவும், பிரதமர் அப்துல்லா அகமது படாவி பதவி விலகினால் மட்டுமே தாம் மீண்டும் 'அம்னோ'வில் மீண்டும் இணையப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய தலைமைத்துவத்தின் மீது அதிருப்தி கொண்டிருக்கும் அம்னோ உறுப்பினர்கள் தன்னுடைய அடிச்சுவட்டை பின்பற்றி கட்சி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இவருடைய இந்த அறிவிப்பானது 'அம்னோ'வின் தீவிரத் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12-வது பொதுத் தேர்தலில் பாரிசான் அடைந்த மோசமான நிலைக்கு பிரதமர் அப்துல்லா முழுப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும், இனியும் அப்துல்லாவின் தலைமைத்துவத்தின் மீது தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையெனவும் துன் மகாதீர் மேலும் கூறினார்.
துன் மகாதீர் 1964-ஆம் ஆண்டு முதன் முதலாக 'கோத்தா சிதார்' நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் 1969-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் தனது தொகுதியை இழந்தார். அதே ஆண்டில் அவர் அன்றையப் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரகுமானை தாக்கி பேசியதற்காக 'அம்னோ'விலிருந்து வெளியேற்றப்பட்டார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ல் அப்போதைய பிரதமராக விளங்கிய துன் அப்துல் ரசாக்கின் அழைப்பின் பேரில் மகாதீர் மீண்டும் 'அம்னோ'வில் சேர்த்துக் கொள்ளப்பட்டு குபாங்கு பாசு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளடைவில் அவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அடுத்த நான்காண்டுகளில் கட்சியின் துணணத் தலைவர் பதவியை கைப்பற்றினார். 1981-ஆம் ஆண்டில் துன் மகாதீர் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.
நாளடைவில் 'அம்னோ' உறுப்பினர்களிடையே உட்பூசல் அதிகரித்து அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டபோது, துன் மகாதீர் 'அம்னோ பாரு' எனும் புதுக் கட்சியை பதிவு செய்து, அக்கட்சியின் முதல் உறுப்பினராகச் சேர்ந்தார்.
இதற்கிடையில் கட்சியின் தலைமைத்துவத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில் மகாதீருக்கு எதிராகத் தோல்வி கண்ட தெங்கு ரசாலிக்கு அம்சா 'செமாங்காட்டு 46' எனும் புதுக் கட்சியை தோற்றுவித்தார். 1996-ஆம் ஆண்டு வாக்கில் தெங்கு ரசாலிக்கு மீண்டும் 'அம்னோ'வில் இணைந்தார். இவர் தற்போது கட்சியின் தலைமத்துவத் தேர்தலை வருகின்ற திசம்பர் மாதம் நடைப்பெற வேண்டும் என 'அம்னோ'வை வற்புறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.
படச்சுருள்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment