ஈப்போ, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய இடங்களில் அமைதி மறியல்..

>> Saturday, May 10, 2008


இருதய நோயால் அவதிபட்டு வரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் பி.உதயகுமார் அவர்களை உடனடியாக தேசிய இருதய சிகிச்சைக் கழகத்திற்கு அனுப்பி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்தைக் கோரும் வகையில், நாடுதழுவிய நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களான ஈப்போ, பினாங்கு, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(11-05-2008) மக்கள் சக்தியினர் அமைதி மறியல் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இருதய நோயால் அவதிபட்டு வந்த திரு.உதயகுமார் கடந்த திங்கட்கிழமையன்று தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப்பின் அம்மருத்துவமனையால் தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் அவருக்கு உடனடி சிகிச்சை வழங்க வேண்டும் என பரிந்துரைக் கடிதம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் கடந்த ஒரு மாத காலமாக பிரதமர் துறைக்கும், உள்நாட்டு விவகார அமைச்சிற்கும் திரு.உதயகுமார் அவர்களுடைய குடும்பத்தினர் கோரிக்கை மனுக்கள் சமர்ப்பித்திருந்தனர். ஆனால், இன்றுவரை அவர்களுக்கு பதில் ஏதும் கிடைக்காததாலும், மருத்துவமனை பரிந்துரைக் கடிதம் கொடுத்தும் திரு.உதயகுமாரை தேசிய இருதய சிகிச்சைக் கழகத்திற்கு இன்றுவரை அழைத்துச் செல்லாததனாலும் இவ்வமைதி மறியல் நாளை நடைப்பெறவுள்ளது.

கீழ்காணும் இடங்களில் நாளை அமைதி மறியல் நடைப்பெறவுள்ளது.

1. ஈப்போ சசுக்கோ (JUSCO Area)
2. பினாங்கு கர்னி டிரைவு (Gurney Drive Roundabout)
3.கோலாலம்பூர் கே.எல்.சி.சி முற்புற நுழைவாசல் (KLCC Front Entrance)


நேரம் : காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை (From 11am to 1pm)

இந்திய குமுகாயத்தின் நலனில் அக்கறைக் கொண்டு போராடிய மாமனிதர் திரு.உதயகுமார் இன்று தடுப்பு முகாமில் பல அவதிகளை சந்தித்து வருகின்றார். அவருக்கு விரைவில் தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் முறையான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என நினைக்கும் அன்பர்கள் இவ்வமைதி மறியலில் கலந்துக் கொண்டு நிச்சயம் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். நம்முள் இருந்த தீயை மெல்ல மெல்ல அழிக்க நினைக்கும் அம்னோ அரசாங்கத்திற்கு மீண்டும் நம்முடைய சக்தி என்ன என்று காட்டவேண்டிய தருணம் இது.

வாழ்க இந்துராப்பு மக்கள் சக்தி!!

* முடிந்த மட்டும் இந்நிகழ்வு தொடர்பான தகவல்களை நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவோ மின்னஞ்சல் வழியாகவோ தெரிவியுங்கள்.


வழக்கம்போல ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கு, அனைவரும் அமைதியான முறையில் மறியலில் கலந்துக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறோம். சாலைவிதிமுறைகளை மீறாமல் நடந்துக் கொள்வதோடு, தங்களுடைய வாகனங்களை வாகனம் நிறுத்துமிடத்தில் மட்டுமே நிறுத்தி வையுங்கள். காவல் துறையினரும், கலகத் தடுப்புக்காரர்களும் கூட்டத்தைக் களைப்பதற்கு கண்ணீர் புகை குண்டுகளையும், அமிலம் கலந்த நீரைப் பாய்ச்சுவதற்கும் தயாராக இருக்கலாம். எனவே, கைவசம் முகமூடி, மாற்று உடைகள், அருந்துவதற்கு நீர், உப்பு கொண்டு வந்தால் சிறப்பு.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP