திருவெம்பாவை - பாடல் 4

>> Friday, January 9, 2009திருவெம்பாவை - பாடல் 3


ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

அடுத்த வீட்டிற்கு வருகிறார்கள். அந்தப் பெண், தூக்கத்தின்பால் விருப்பம் மிகுந்தவள் அவள், கண்ணைத் திறக்காமல் புன்னகை பூத்துக்கொண்டிருக்கின்றாள்.

ஒருவேளை, தாயுமான அடிகள் சொன்னார்களே, “தூங்கி விழித்து என்ன பயன், தூங்காமல் தூங்கும் பாங்கு கண்டால் அன்றோ பலன் பெறுவேன் பைங்கிளியேஎன்று, அதை நினைவில் கொண்டாளோ, என்னவோ? முன்பு, வெண்முகத்தைக் கண்டார்கள். இங்கே நன்முத்து, நனிமுத்தாகத் திகழ்கின்றது. அவளைப் பார்த்து, ”இன்னும் பொழுது புலரவில்லையோ?” என்று கேட்கிறார்கள் :

ஒள்நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ?”

படுக்கையில் கிடந்தவாறே அந்தப் பைங்கிளி கேட்கின்றாள் :

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

அழகிய கிளி போன்று பேசும் மங்கையர் எல்லாம் வந்துள்ளனரோ?” கூடிச் செல்கின்ற பொழுது தன் கூட்டத்தினர் அனைவரும் வந்துவிட்டார்களா என்பது இயற்கை. ‘அவர் வரட்டும். நானும் வந்துவிடுகிறேன்' என்பது பழக்கம். அந்த முறையிலேதான் இங்கே கேட்கிறாள் :

அதற்குப் பதில் உரைக்கப்படுகிறது :

வந்தவர்களைக் கணக்கிட்டுக்கொண்டா இருக்கின்றோம்? நாங்கள் எண்ணி முடிக்கும்வரை ஒரு சிறு தூக்கம் கொள்ளலாம் என்று எண்ணாதே. கண் மூடியபடி காலத்தை வீணாக்காதே.”

எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம், அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

காலம் கடக்கிறது. அந்த கடவுளைத் தொழு. அவன் புகழ் எப்படிப்பட்டது தெரியுமா? தேவர்களுக்கு எல்லாம் ஒப்பில்லாத அமிழ்தம். மறை ஆகமங்களின் விழுப்பொருள் ; கெழுதகை.

காட்சிக்கு எளியான்காண், மாட்சிமை மனம் வைத்தார்க்கு மாணிக்கத் துள்ளொளி காண்.”

அருள்எல்லாம் திரண்டுஓர் வடிவாகிய பொருள் எல்லாம் வல்ல பொற்பொதுநாதன் அவன்

விண்ணுக்கு ஒருமருந்தை, வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானை

இவனைப் பாடி உள்ளம் அசைவற நின்று, நெகிழ்ந்து, நெக்குருகி, நெஞ்சுருகாயோ?

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக

இப்போதும் அந்தப் பெண் எழுந்தபாட்டைக் காணோம். எனவே, மேலும் சொல்கின்றார்கள் :

“.......... யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயில், ஏலோர் எம்பாவாய்.”

நாங்கள் என்ணிக் கணக்குச் சொல்லப்போவதில்லை. நீ வேண்டுமானால் கணக்கிட்டுக் கொள், காரிகையே. எண்ணிக்கையில் யாராவது குறைந்தால் மீண்டும் போய்க் கண் துயில் - திரும்பவும் போய்த் தூங்கு.”

- மாணிக்கத்தேன்-


கேட்க கேட்க தீஞ்சுவைக் குன்றாத மாணிக்கத்தேனைப் பருக எண்ணம் கொண்ட அன்பர்களே, இன்று சிரம்பான், யாம் துவான் சாலையில் அமைந்துள்ள சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் திருவெம்பாவைப் பாடல் நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது. இந்து சங்க ஏற்பாட்டில் நடைப்பெறும் இந்நிகழ்வில் திருவெம்பாவைப் பாடல்களின் விளக்கம் மற்றும் நாட்டிய அபிநயத்தோடுகூடிய திருவெம்பாவை நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெறும். சுற்றுவட்டார மக்கள் தவறாமல் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு பயன்பெறவும்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

மு.வேலன் January 9, 2009 at 3:02 PM  

அருமையான பதிவுக்கு நன்றி.

//இன்று சிரம்பான், யாம் துவான் சாலையில் அமைந்துள்ள சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் திருவெம்பாவைப் பாடல் நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது.//

என்னால் செல்ல இயலாது. வருந்துகிறேன். மற்ற மாநிலத்தில் நடைபெறவுள்ளதா?

சதீசு குமார் January 9, 2009 at 6:35 PM  

வேறு மாநிலங்களில் திருவெம்பாவை நாட்டிய நிகழ்வு நடைப்பெற்றால் கண்டிப்பாக அறிவிக்கிறேன்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP