யார் இந்த குகன்?

>> Thursday, January 29, 2009


குகனின் அகால மரணத்திற்கு காவல்த்துறையினரே முழு பொறுப்பு என்பது சவப் பரிசோதனை, வழக்கு விசாரணை, சாட்சியம் , ஆதாரம் கொண்டுதான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சிறு குழந்தைக்குக் கூட இவ்வுண்மை அப்பட்டமாகத் தெரியும், யார் பொறுப்பென்று! குகனின் இறப்பிற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய தரப்பினரை ஐயந்திரிபற நாம் அடையாளம் காண முடிந்தாலும், அவரை அடித்துக் கொன்றதற்கான காரணங்கள் மட்டும் மர்மமாகவே இருந்து வருகின்றன.

அம்னோவின் கீழ் செயல்பட்டுவரும் ஊடகங்கள், அம்னோ அரசியல்வாதிகள், காவல்த்துறை உயர் அதிகாரிகள் போன்றோர் கூறுவது போல, உண்மையிலேயே குகன் ஒரு சொகுசுக் கார் திருடனா? அவர் கைது செய்யப்படுவதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்?

நமக்குத் தெரிந்த தகவலின்படி, ஒரு தனியார் நிதி நிறுவனத்தின்கீழ் மாத கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்திற்கும் காரணமாகியுள்ளார். குகனின் மரணத்தில் தைப்பான், சுபாங் செயா காவல்நிலையத்தில் பணிப்புரியும் 10 காவல்த்துறை அதிகாரிகளும் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தவிர்த்து இக்கொலையில் சில பெரும்புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சொகுசு கார்கள் திருட்டை நடத்தும் பெரிய கும்பல்களை அக்காவல்த்துறையினர் நன்கு அறிந்திருக்க வேண்டும் என சில தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்சமயம், பாதுகாப்பு கருதி இவர்கள் வேறொரு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இலகுவான பணிகளை ஆற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

தற்சமயம், குகனை ஒரு சொகுசுக் கார் திருடன் என்பதுபோல உள்நாட்டு ஊடகங்கள் சில சித்தரித்து வருகின்றன. அவரை அப்படிச் சித்தரிப்பதற்கு ஊடகங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனத் தெரியவில்லை. மலேசிய இந்தியர்கள் என்றாலே இதுபோன்ற காரியங்களைச் செய்வதற்குத்தான் அருகதை உடையவர்கள் என்பதுபோலவும் சித்தரிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில், உள்துறை அமைச்சர் சாயிட் அமீட் அல்பார் " குற்றம் புரிபவர்களை கதாநாயகர்களாக்கிப் பார்க்க வேண்டாம்!" என அறிக்கை விட்டுள்ளார். இவ்விடயம் குறித்து யார் பக்கம் உண்மை இருக்கிறது?

காவல்த்துறையினரைக் கேட்டால், குகனை சொகுசுக் கார்கள் திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக அறிக்கை விடுகின்றனர். குகனின் குடும்பத்தினரோ அதனை மறுக்கின்றனர். யார் சொலவது உண்மை??

இதற்கிடையில், குகனின் மரணம் குறித்த செய்திகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இரு துணை அமைச்சர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. சில அரசியல்வாதிகளும் ஏட்டிக்குப் போட்டியாக ஊடகங்களில் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், காவல்த்துறையினர் சமுதாயத்தின் பால் கொள்ள வேண்டிய பொறுப்புணர்ச்சி, காவல்த்துறையினரின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு சுயேட்சை விசாரணை குழு (Independent Police Complaints and Misconduct Commission), காவல்த்துறை பணி தேர்வுக்கு ஏற்ற தகுதிகள் குறித்து எந்தவொரு தேசிய முன்னணி அரசியல்வாதியும் பேசியதாகத் தெரியவில்லை. இவற்றை மக்களே முன்வந்து நினைவூட்டினாலும், அரசு எந்திரங்களைக் கொண்டு பொதுமக்களின் கருத்து சுதந்திரம் அடக்கி ஒடுக்கப்பட்டு விடுகிறது.

ஓர் இளைஞனின் உயிரை பறித்ததாக நம்பப்படும் காவல்த்துறை அதிகாரிகளை, சந்தேகத்தின்பேரில் கூட கைது செய்யாமல் விட்டிருப்பது நம் மலேசிய நாட்டின் மனித உரிமை குறித்து நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. இங்கு ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மலேசியாவில் மனித உரிமைகள் மடிந்து வருவதற்கு பொதுமக்களும் ஒரு காரணம். நமக்கு ஏன் இந்த வம்பு என ஒதுங்கிப் போவதும், நம்மால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைக் கண்டு நாமே அஞ்சுவதும், நீதி கிடைப்பதில் கடைசிவரை நின்று போராடி வென்றெடுப்பத்தில் இல்லாத முனைப்புமே நம்மை பின்தள்ளி விடுகின்றன. இக்கூற்று ஒட்டுமொத்த மலேசியர்களையும் சாரும் என்பதில் ஐயமில்லை.

'மக்கள் சக்தி' , 'மக்கள் சக்தி' என வாயாறக் கூறுவதிலில்லை உண்மைப் பயன். செயலில் காட்டப்படும்பொழுதுதான் அதன் மகத்துவம் அநீதிகளை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகிறது. இவ்வேளையில் குகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மனித உரிமைக்காக குரல் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, காவல்த்துறையின் அராஜகச் செயலின் எதிரொலியாக மக்கள் வெகுண்டு எழுந்ததனால் இன்று அரசு எந்திரங்கள் சற்று ஆட்டம் கண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்கலாம் எனும் அரசியல்வாதிகளின் பகற்கனவுகள் தவிடுபொடியாகி வருகின்றன. கடந்த ஓராண்டில் மக்களிடையே நல்லதொரு அரசியல், சமூக, சட்ட, மனித உரிமை குறித்த விழிப்புணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன. இது மேலும் தொடர வேண்டும்!

குகனுக்கு நேர்ந்தது நாளை நமக்கு ஏற்படாமல் இருக்க...

உரிமைக்காக ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்!

போராட்டம் தொடரும்...


மலேசியா
கினி படச்சுருள்


Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Anonymous January 30, 2009 at 7:11 AM  

தயவு செய்து இந்த விவரத்தை மற்ற தமிழ், ஆங்கில மற்றும் மலாய் இணைய தளத்தினர்களுக்கு தெரிவு படுத்துமாறு வேண்டுகிறேன்...
நன்றி

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP