பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் விளக்கக் கூட்டம்.

>> Sunday, January 18, 2009

இன்று பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 7 மணிவரை பினாங்குத் தீவு மக்கள் சக்தியினரின் தைப்பூச சமூகச் சேவை நிகழ்வை ஒட்டிய விளக்கக் கூட்டம், இந்து சபா மண்டபத்தில் இனிதே நடந்தேறியது. இச்சேவையில் கலந்துகொள்ளவிருக்கும் தன்னார்வத் தொண்டூழியர்களுக்கான விளக்கக் கூட்டத்தில் திரு.சம்புலிங்கம், திருமதி.வேதநாயகி, திரு.நரகன், சமூக நல இலாகா அதிகாரிகளான திருமதி இராசலெட்சுமி, திரு.செயராமன் போன்றோர் கலந்துகொண்டு நிகழ்வை வழிநடத்தினர்.

இந்நிகழ்வில் தைப்பூச சமூகச் சேவையில் ஈடுபடவிருக்கும் தன்னார்வத் தொண்டூழியர்களை தயார் நிலையில் வைப்பதற்குத் தேவையான விளக்கங்கள் இடம்பெற்றன. நிகழ்வில் தொடக்கவுரையாற்றிய திரு.சம்புலிங்கம் வந்திருந்தோர் அனைவரையும் தனது உணர்ச்சிமிகு உரையின்வழி நிமிர்ந்து உட்கார வைத்தார் எனக் கூறலாம். இரண்டாவதாக உரையாற்றிய திரு.நரகன் மக்கள் சேவை குறித்த நோக்கத்தினை நீர்மப் படிம உருகாட்டி துணைக் கொண்டு விரிவாக விளக்கங்கள் அளித்தார். அதனையடுத்து கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் வந்திருந்தோர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

மாலை உணவு அருந்திய பிறகு அனைவரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அமர்த்தப்பட்டனர். திருமதி இராசலெட்சுமி அவர்கள், சமூக நல இலாகாவிடமிருந்து மக்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் குறித்து விரிவாக விளக்கமும் உதவி பெறுவதற்குரிய பாரங்களின் படிவங்களையும் விநியோகித்தார். குழு உரையாடலுக்குப் பின்பு, சமூக நல இலாகாவின் முன்னால் அதிகாரி திரு.செயராமன் பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை குறித்து எழும் பிரச்சனைகளை கையாளுவதில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். பின்பு மீண்டும் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது. இவ்விளக்கக் கூட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


விளக்கக்
கூட்டம்




இந்நிகழ்வு நடத்தப்பெறுவதற்கு முதற்காரணமே திரு.உதயகுமார்தான். 2009-ஆம் ஆண்டானது மக்கள் சக்தியினர் சமூகத்திற்கு சேவைச் செய்யும் ஆண்டாக மலர வேண்டும் என்பது அவரது அவா. எனவே, இனிவருங்காலங்களில் இச்சமூகச் சேவையை நாடெங்கிலும் உள்ள மக்கள் சக்தியினர் மேற்கொள்வதற்கு எண்ணங்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 7 மணியளவில் விளக்கக் கூட்டமும் நிறைவை அடைந்தது. இந்நிகழ்வில்ராட்டினம்' வலைப்பதிவர் திரு.மது அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடைய அறிமுகம் கிடைத்த மகிழ்ச்சியில் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். இவ்விளக்கக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காகவே சிரம்பானிலிருந்து வருகை புரிந்திருக்கிறார் என்று எண்ணும் பொழுது பெருமையாக இருக்கிறது. அன்பரின் சமூகச் சிந்தனை மிகவும் போற்றுதற்குரியதாகும்.

தைப்பூசத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சக்தி சமூகச் சேவைப் பந்தலில் உதவிகள் புரிந்திட மேலும் பல தன்னார்வத் தொண்டூழியர்களை எதிர்ப்பார்க்கின்றனர். சேவைப் பந்தலுக்கு வருகைப் புரிபவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ற பாரங்களைப் பூர்த்தி செய்வது , கூட்ட நெரிசலைக் கட்டுபடுத்துவது, தேர்தல் வாக்காளர் பதிவு போன்ற சேவைகளுக்கு ஆள்பலம் தேவைப்படுகிறது.

இந்நிகழ்வைப் பற்றி அறிந்துக் கொள்ள கீழ்கண்ட எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் :

* 012 5637614 ( திரு.கலை )
* 012 7162884 ( சரஸ்வதி )
* 012 5557522 ( திரு.மாறன் )
* 019 4586587 ( திரு.சுரேசு )

கடந்த சில நாட்களாக நிறைய அனாமதேய நபர்களிடமிருந்து அலைப்பேசி அழைப்பு வருவதாகவும், சிலர் அநாகரீகமாக பேசுவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறைப்பட்டுக் கொண்டனர்.

டேய், என்னடா..! காசே கொள்ளை அடிக்கறதுக்கு பந்தல் போடுறீங்களாடா..!”

டேய்! அரசாங்கத்தையே எதிர்க்க துணிஞ்சிட்டீங்களா..!”

இந்த பந்தல எப்டி போடுறீங்கன்னு நானும் பாக்குறேண்டா..!”

மக்கள் சக்தி இன்னும் உயிரோடுதான் இருக்கா...!”

அனைத்தும் நம் தமிழர்களிடமிருந்து வந்த அழைப்புகள்.. மேலும் இருக்கின்றன.. நாகரீகம் கருதி அதனை வெளியிடவில்லை.

நல்லதொரு நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இச்சேவை குறித்து ஏன் பலருக்கு காழ்ப்புணர்ச்சி என்றுதான் தெரியவில்லை! தமிழனுக்கு தமிழனே தூக்குக் கயிறு என்பது சரியாகத்தான் இருக்கிறது. போராட்டம் என்று வந்துவிட்டாலே மிரட்டல்களை எல்லாம் கடந்துதானாக வேண்டும்!

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

து. பவனேஸ்வரி January 19, 2009 at 4:21 PM  

வணக்கம்,
தகவலுக்கு நன்றி. 'நண்டு கதை' கேள்விப்பட்டிருக்கிறேன். அது தமிழர்கள் பொருத்தமட்டில் மிகவும் உண்மை. 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்பதனை தமிழர்கள் எப்போது உணரப்போகின்றார்கள் என்றுதான் தெரியவில்லை. 'தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறு' என்பதனை இவர்கள் நிரூபித்துவிடுவார்கள் போலிருக்கிறதே!

Wayang Kulit Malaysia January 27, 2009 at 9:24 AM  

Thank you for write about me. i'm very much pleased when meeting you. i feels honoured by your writings. i'm just a beginner. you're a pioneer in tamil blogging.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP