திருவெம்பாவை – பாடல் 5

>> Monday, January 12, 2009



திருவெம்பாவை – பாடல் 4

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
றோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

அரிவையர் கூட்டம் வேறு ஒரு வீட்டிற்குச் செல்கிறது. அந்த வீட்டு அஞ்சுகம் மஞ்சத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. அவளைப் பார்த்து மங்கையர் தலைவி கேட்கின்றாள்:

மால்அறியா நான்முகனும் காணா, மலையினைநாம்
போல்அறிவோம் என்றுஉள்ள பொக்கங்க ளபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ, கடைதிறவாய்.”

திருமால் அறியாத திருவடியை , நான்முகன் அறியாத திருவடியை , மலை உருவாய்மாமலை போல் மேனி உடையராய், ஓங்கி உலகளந்த உத்தமனைநாம் உணர்வோம் என்று பொய்யுரைக்கும் பெண்ணே, சுரக்கின்ற பாலையும், தேனையும் போல் இனிமையாகப் பேசுகின்ற வஞ்சகியே, கொஞ்சம் கதவைத் திறப்பாய்!” என்று சொன்ன போது, அவள் வாயில் பாலும் தேனும் ஊறியது போல் வந்தவர்கள் நினைத்தார்கள். ஆனால், “நாம் போல் அறிவோம்என்று சொன்னவுடன், அவள் வஞ்சக நெஞ்சினள் என்பதை உணர்ந்தார்கள்.

மால்அறியா நான்முகனும் காணா மலை.” நான்முகன், மால் என்ற இருவரும் இறைவன் ஒளிமலையாகத் தோன்றியும் முறையே முடியையும் அடியையும் காண முடியாதுப் போயினர்.

மேலும் தலைவி பாடுகிறாள் :

ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டு அருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே, சிவனேஎன்று
ஓலம் இடினும்

நாங்கள் உன் வாசலில் வந்து பாடுகிறோம். யாரைப்பற்றி?
மண்ணுலகத்தார் அறிய முடியாத அந்த அருட்பெரும் கடவுளை, விண்ணுலகத்தார் அறிய முடியாத அந்தப் பேரருளை, பிற உலகத்தார் அறிய முடியாத அந்த அரும் பொருளை நாம் பாடுகிறோம். அவர் அழகுத் திருக்கோலம், நம் கருமேனி கழிக்க வந்த திருக்கோலம். எளியவர்களாகிய நம்மை ஆட்கொள்ளும் பெருங்குணத்தை புகழ்ந்து பாடுகிறோம். அவன் சீலத்தையும் சிறப்பையும் பாடுகிறோம். அது மட்டுமா? சிவனே, சிவபெருமானே என்று ஓலமிட்டுக் கூவுகின்றோம். ஒருமுறைசிவனேஎன்றாலே, உறக்கம் கலையவேண்டும். இரண்டாம் முறையாக ஓலமிடுகிறோம். ஆனால் நீயோ,

“……………………… உணராய் உணராய்காண்
ஏலக் குழலி, பரிசுஏலோர் எம்பாவாய்

ஓலங்கேட்டும், ஓய்வு நீங்காது உன்னையே இன்னும் நீ அறிந்திலையே, விழித்து எழுந்தாய் இல்லை. மயிர்ச்சாந்தணிந்த கூந்தலாய், இது என்ன உன் தன்மை? உன்னை மயிர்ச்சாந்தால் அலங்கரித்துக் கொண்டு அக்கோலத்தைக் கண்டு மகிழ்கின்றாயே தவிர, அப்பெருமானைக்கோலமே நீ வா!’ என்று கூவி அழைத்தால் குறைந்திடுமோ? அவன் கோலமன்றோ திருக்கோலம். அழியாக் கோலம். நீயே உணர்ந்திருக்க வேண்டும். நாங்கள் பகர்ந்துமா பகற்கனவு நீங்கவில்லை?”

-மாணிக்கத்தேன்-

இறைமையின் வல்லமை அறியாத / அறிய விரும்பாத மாந்தர்கள் இப்படித்தான் அடிக்கடி நொண்டிச் சாக்குகள் கூறிக் கொண்டு உறக்கத்தில் இருப்பர்! சமயங்களின்வழிதான் இறைமையை அறிய முயற்சிக்க வேண்டுமென்பதில்லை. முதலில் உன் மனசாட்சிக்கு கட்டுப்படு. அற வழியில் நடக்க முயற்சி செய். இயற்கையே இறைமையை உனக்கு ஆசானாக இருந்து உணர்த்தும்!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

மு.வேலன் January 12, 2009 at 9:18 AM  

நன்றி. வாழ்த்துக்கள்! தொடரட்டும்...

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP