மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்.. பகுதி 1
>> Thursday, July 24, 2008
நேற்று விவேகம் வலைப்பதிவர் திரு.வாசுதேவன் இலட்சுமணன் என் இல்லத்திற்கு நலம் விசாரிக்க வருகைப் புரிந்திருந்தார். அதுவே எங்களுடைய முதல் சந்திப்பும் ஆகும். கடந்த வாரம் குளுவாங் அஜி மனான் தமிழ்ப் பள்ளியில் திரு.வாசுதேவன் வலைப்பூ பயிலரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருப்பதாக அவரின் வலைப்பூவில் அறிவித்திருந்ததையடுத்து, மின்னஞ்சலின் வழி அவரைத் தொடர்புக் கொண்டேன். வலைப்பூ பயிலரங்கு தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் சில கையேடுகளையும் நேற்று உடன் கொண்டு வந்திருந்தார்.
திரு.வாசுதேவனைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால், அவர் ஒரு முன்னால் தமிழ்ப் பள்ளி ஆசிரியர், தற்போது குளுவாங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றில் தகவல் தொழிழ்நுட்பப் பாடம் பயிற்றுவித்துக் கொண்டே கல்வியல் தொழிநுட்பப் பாடத்தில் பகுதிநேர முதுகலை ஆய்வு மாணவராக மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
மலேசியாவைப் பொருத்தமட்டில், தமிழில் வலைப்பூ (2004-இல்) தொடங்கிய முதல் தமிழாசிரியராக திரு.வாசுதேவன் திகழ்கிறார். 2006-இல் ஏழாவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில், மலேசியாவைப் பிரதிநிதித்து 'தமிழ் கற்றல் கற்பித்தலில் பல்லூடகத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாடு' எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ஆம் ஆண்டு தொடங்கி சொகூர், மலாக்கா, பேராக், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகளில் வலைப்பூ பயிலரங்குகளையும் அவர் நடத்தியுள்ளார். இவரின் சேவைக்கு முத்தாய்ப்பாக கடந்த பிப்ரவரி மாதம் உலகத் தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டியான 'தமிழ்மணம்' அவரை நட்சத்திர பதிவராக கௌரவித்திருந்தது.
அவருடன் அலவலாவிக் கொண்டிருக்கையில், அவரின் முன்னனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சிலக் கேள்விகளைக் கேட்டேன். என் முதல் கேள்வியே, வலைப்பூ பயிலரங்கில் கலந்துக் கொண்ட தமிழாசிரியர்கள் மத்தியில் இதுவரை வரவேற்பு எந்த அளவில் உள்ளது என்பதே.
அவரின் பதில், தமிழாசிரியர்கள் புதிய விடயங்களைக் கேட்பதற்குத் தயாராக இருக்கின்றனர், ஆர்வமாக பயிலரங்கில் கலந்துக் கொள்கின்றனர், பயிலரங்கு முடிந்து மதிப்பீட்டு பாரங்களில் தாங்கள் மிகவும் பயனடைந்துள்ளதாக கருத்துகளை எழுதுகிறார்கள், ஆனால் செயல்பாடு என்று வரும்பொழுது பின்வாங்குகிறார்கள். தமிழாசிரியர்களின் தகவல் தொழில்நுட்பக் கையாடல் மனநிறைவை அளிக்கவில்லை என்று வருத்ததோடு கூறினார். வருத்தம் என்று கூறுவதைவிட இதெல்லாம் தமக்கு பழகிவிட்ட ஒன்று எனப் புன்னகையோடு கூறினார்.
இருப்பினும் ஒரு தடவை தாம் வலைப்பூ பயிலரங்கை ஏற்று நடத்தியதைக் கண்ட ஆசிரியர் பயிற்சிக் கழக விரிவுரைஞர் ஒருவர், அவர் பயிற்றுவிக்கும் தமிழ் மொழிப் பிரிவு பயிற்சி ஆசிரியர்களை 'தமிழ் வலைப்பூக்கள்' தொடர்பாக திரட்டேடு ஆய்வினைச் செய்து சமர்ப்பிக்குமாறு பணித்ததாகவும், தாம் என்றோ போட்ட விதைக்கான பலனாக அதைக் கருதுவதாகவும் திரு.வாசுதேவன் கூறினார். இனிவரும் காலங்களில் தமிழ் இளைஞர்களின் இணையத் தமிழ் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு, அதற்கான ஆவணங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டியது நமது கடப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் கூறியதைப்போல வருங்காலங்களில் தகவல் பறிமாற்றங்களுக்கு இணையமே முதன்மை ஊடகமாகத் திகழவிருப்பது கண்கூடாக நாம் கண்டுவரும் பரிணாம மாற்றமாகும். மலேசியாவை எடுத்துக் கொண்டால், அண்மைய காலமாக வலைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது எனலாம். அதிலும் வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்களில் இந்தியர்கள் கணிசமான தொகையில் இருக்கின்றார்கள் என்பது பெருமைப்படக் கூடிய விடயம் எனக் கருதலாம். அனைவரும் தங்களின் பட்டறிவை பிறருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என மும்முரமாய் வலையுலகில் களமிறங்கி வருகிறார்கள்.
ஆனால் இவர்களில், குறிப்பாக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எத்தனைப் பேர் இணையத்தில் தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்யத் துணிகிறார்கள்..?? தமிழில் எழுத, வாசிக்கத் தெரிந்த எத்தனை மலேசியத் தமிழர்கள் இணையத்தில் தமிழை வளர்க்கிறார்கள்...?
தமிழைவிட ஆங்கிலத்தில் அளிக்கப்படும் செய்திகளில் தமிழர்களுக்கு நாட்டம் செல்வதேன்?
இணையப் பயன்பாடு அறிந்திருந்தும், தமிழில் நல்ல புலமை இருந்தும் ஆங்கில வலைப்பதிவுலகில் கால்பதிக்கத் துடிப்பது ஏன்?
மலேசியாவில் உள்ள தமிழ் ஆர்வளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், பேச்சாளர்கள், தமிழ்ச் சங்கங்களின் வழி தமிழ் வளர்ப்பவர்கள், இப்படி பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்..... இவர்களின் பங்களிப்பு இணையத் தமிழை வளர்ப்பதில் எந்த அளவில் ஆர்வம் காட்டுகின்றனர், முயற்சி எடுக்கின்றனர்??
523 தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர்கள் இணையத் தமிழின் பயண்பாட்டை எந்த அளவிற்குத் தெரிந்து வைத்திருக்கின்றனர்??
வலைப்பூ பயிலரங்குகளில் சிறப்பாகப் பங்கேற்கும் ஆசிரியர்கள், கற்ற அறிவை முழுமையாகப் பயன்படுத்தாது ஏன்??
கேள்விகள் ஆயிரம்...
இது குறித்து சில அலசல்கள் அடுத்தப் பதிவில்...
வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன... நன்றி.
1 கருத்து ஓலை(கள்):
எல்லோரும் பலனை எதிர் பார்த்து தான் வேலை செய்கிறார்கள். இதை செய்தால் எனக்கு என்ன கிடைக்க போகிறது எனும் மனப்போக்குதான்.
பலனை எதிர்பாராமல் செய்யும் வேலையின் தன்மை சிறப்பாக அமையும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தமிழ் மக்களுக்கு நமது பங்கு என்ன என்பதை கருத வேண்டும்.
Post a Comment