அனுவார் கைது...!!!!
>> Wednesday, July 16, 2008
இன்று மதியம் 12.55 மணியளவில் அனுவார் இபுராகிம் சிகாம்பூட்டில் அமைந்திருக்கும் அவரது வீட்டின் வெளியே காவல்த் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஊழல் தடுப்பு நிறுவனத்தில் விசாரணையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய வேளையில் காவல் துறையினர் அவரைக் கைது செய்ததாகத் தெரிய வருகிறது.
ஓரிணப்புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அனுவார் இபுராகிமை, நேற்று காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்திருந்தும் அவர் வர மறுத்திருந்தார். இருப்பினும் இன்று மதியம் 2 மணி வரை காவல்த்துறையினர் அனுவாருக்கு கெடு விதித்திருந்தனர். கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனுவார் கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு வரவில்லையென்றால் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று அவர் மதியம் 12.55க்கு கைதான மர்மம் என்னவோ?
கைது செய்யவேண்டும் என திட்டம் தீட்டி விட்டனர், எத்தனை மணிக்கு கைது செய்தால் என்ன...
மேலும் தகவல்களுக்காக காத்திருப்போம்..
சற்றுமுன் கிடைத்த தகவல்..
அனுவார் வீடு திரும்புகையில் காவல்த் துறையினர் அனுவாரின் வீட்டின் வெளியே காத்திருந்ததாக வழக்கறிஞர் சிவராசா தெரிவித்தார்.
15 காவல்த்துறை வாகனங்கள் பின்தொடர அனுவார் இபுராகிம் கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மதியம் 1.15 மணியளவில் அவர்கள் தலைமையகத்தைச் சென்றடைந்தனர்.
இக்கைது நடவடிக்கையில் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து பிரத்தியேக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதியம் 1.40 மணி தொடங்கி சுமார் 200 அனுவாரின் ஆதரவளார்களும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் காவல்த்துறை தலைமையகத்தின் வெளியே கூடியுள்ளனர், அவர்களுள் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான கர்பால் சிங்கும் அடங்குவார்.
நாடாளுமன்றத்தில் காணப்பட்ட வான் அசிசா, தமக்கு அனுவாரிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்ததாகவும், உடனடியாக வீட்டிற்குச் சென்று பிள்ளைகளைச் சமாதானப்படுத்திவிட்டு பின் காவல்த்துறை தலைமையகத்திற்கு வருமாறு அனுவார் தம்மைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அனுவார் உடல்நிலை பாதிக்கப்படிருப்பதாகவும், அடிக்கடி முதுகெலும்பு வலியால் அவதிப்படுபவர் எனவும் வான் அசிசா கூறினார். தன் கணவரோடு உரையாடுகையில், காவல் துறையினர் தம்மிடம் மிகவும் முரட்டுத் தனமாக நடந்துக் கொள்வதாக அனுவார் கூறியதாக வான் அசிசா தெரிவித்தார்.
அனுவார் இபுராகிற்கு எதிராக, இயற்கைக்கு புறம்பான முறையில் உடலுறவு கொள்பவர்களுக்கு பயன்படுத்தப்படும் 377C சட்டப்பிரிவின் கீழ் அவர்மீதான வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.
இயற்கைக்குப் புறம்பான முறையில் ஒருவர் எந்த ஒரு பொருளைக் கொண்டோ அல்லது மர்ம உறுப்பையோ இன்னொருவரின் மர்ம உறுப்பில் செலுத்தினால் அவருக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகால சிறை தண்டனையும் பிரம்படியையும் கொடுத்திட இச்சட்டம் வழிவகுக்கிறது.
காவல்த்துறை அலுவகக் கட்டிடத்தில் சற்றுமுன் காணப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வீ சூ கியோங்கை அணுகியபொழுது, வான் அசிசாவும் அவரது இரு மகள்களும் அனுவாரை ஏழாவது மாடியில் 2 மணியளவில் சந்திப்பதற்கு காவல்த்துறையினர் அனுமதித்ததாகக் கூறினார்.
மதியம் 2.35
வான் அசிசாவும் அவரது இரு மகள்களும், அனுவாரின் வழக்கறிஞர் திரு.சங்கர நாயர் தலைமையக கட்டிடத்தைவிட்டு வெளியே வந்தனர்.
மதியம் 2.40
சனநாயகச் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லிம் கிட் சியாங், தான் கோக் வேய், ஃபோங் கூய் லுன் மற்றும் அந்தோணி லோக் தலைமையக கட்டிடத்தைவிட்டு வெளியேறினர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்ல்லை.
மதியம் 2.50
மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சம்சூல் இஸ்கந்தார், அனுவாரை காவல்த் துறையினர் விசாரிக்கத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார்.
அனுவாரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததாகவும், தற்போது குற்றச்செயல் பிரிவு 112-இன் கீழ் அனுவார் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வழக்கறிஞர் லத்திபா கோயா தெரிவித்தார்.
அனுவாரின் வழக்கறிஞர்களான சுலைமான் அப்துல்லாவும் பராம் குமாரசுவாமியும் தலைமையகக் கட்டிடத்தினுள் சென்றிருப்பதாகவும், அனுவாரை பிரதிநிதித்து மூன்று வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள் எனவும் அவர் கூறினார்.
அனுவாரின் மகள் நூருல் இசா, தன்னுடைய வலைத்தளத்தில் அனுவார் கைது தொடர்பாக விவரிக்கையில், காவல்த் துறையினர் தமது தந்தையைக் கைது செய்யும் வேளையில் முகமூடி அணிந்திருந்ததாகக் கூறினார். முகமூடி அணிந்து கைது செய்ய வேண்டிய அவசியம் காவல்த்துறையினருக்கு ஏன் வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தகவல்கள் பின்தொடரும்..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment