எங்கள் போராட்டத்திற்கு மூடுவிழா கிடையாது..!
>> Sunday, July 13, 2008
இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களில் ஒருவரான திரு.உதயகுமாரின் பங்சார் அலுவலகம் நேற்று மூடப்பட்டது குறித்து இண்ட்ராப் ஆதரவாளர்கள் அனைவரையும் வருத்தத்திற்குள்ளாக்கியது. சில காலமாகவே பொருளாதார ரீதியில் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளினால், அலுவலகத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைப்பெற இயலாத நிலையில் மூடப்படுவதாக திரு.உதயகுமாரின் சகோதரி வேதநாயகி குறிப்பிட்டார். அதோடு இங்குதான் அனைத்துமே தொடங்கியது, என்று இண்ட்ராப்பின் ஆரம்பக்கால போராட்டங்களை நினைவுக் கூர்ந்தார்.
திரு.உதயகுமார் விடுதலையாகும் வரை அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு ஒருசிலர் பொருளாதார ரீதியில் உதவ முன்வந்தபோதிலும், திரு.உதயகுமார் "மக்கள் பணம் மக்களிடமே இருக்கட்டும், சொந்த பயன்பாட்டுக்கு இருக்கக்கூடாது, அலுவலகம் மூடப்படட்டும்" எனக் கூறியதாக சகோதரி வேதநாயகி கூறினார்.
பங்சார் அலுவலகத்தில் பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த திரு.உதயகுமாரின் அண்ணி கே.சாந்தி அவர்களை வினவியதற்கு, திரு.உதயகுமார் தற்போது உடல் நலத்தில் தேறி வருவதாகவும், உலகத் தலைவர்களின் குறிப்பாக லீ குவான் யூ, நெல்சன் மண்டேலா போன்றோரின் சுதந்திரப் போராட்டங்களைச் சித்தரிக்கக்கூடிய நூல்களை அதிகம் வாசிப்பதில் திரு.உதயகுமார் தன்னுடைய நேரங்களைச் செலவிடுவதாக அவர் கூறினார்.
அவர் தனிமையில் சிந்திக்க அதிக நேரங்கள் இருப்பதாகவும், இண்ட்ராப் இயக்கத்தை மேலும் வலுவூட்ட அடிக்கடி புதிய புதிய கருத்துகளை அவர் கூறிவருவதாகவும், இவரின் கருத்துகள் பல இண்ட்ராப்பின் இணையத்தளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இண்ட்ராப் இயக்கத்தின் ஆதரவாளர்களின் சார்பில் திரு.உதயகுமாருக்கு ஒன்றுக் கூறிக்கொள்கிறோம். அலுவலகம் மூடுவிழா காணலாம், ஆனால் உங்களோடு இணைந்த எங்களின் உரிமைப் போராட்டத்திற்கு என்றுமே திறப்பு விழாதான். வெற்றி நமக்கே..! வாழ்க இண்ட்ராப்!
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment