தமிழை தீக்கிரையாக்குவதா?
>> Thursday, July 3, 2008
அண்மையில் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் எசு.ஏ விக்கினேசுவரன் தமது பதவியிலிருந்து விலகியது நாம் அறிந்ததே. இருப்பினும், இப்பொழுது அதுவல்ல பிரச்சனை. எசு.ஏ விக்கினேசுவரனின் பதவி விலகலையொட்டி தமிழ் நேசன் நாளிதழில் முதல் பக்கச் செய்தி வந்திருந்தது.
இச்செய்தியில் எசு.ஏ விக்கினேசுவரனின் பதவி விலகல் தொடர்பாக சிற தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறி, கிள்ளான் ம.இ.கா இளைஞர் பிரிவின் அங்கத்தினர் சிலர், அச்செய்தி வெளிவந்துள்ள நாளிதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
தமிழ் நாளிதழ்கள் தீக்கிரையாகும் சம்பவம் இதுவே முதன்முறை அல்ல. கடந்த காலங்களில், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் நேசன் மற்றும் இன்னும் பல நாளிதழ்கள் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தவறான ஒரு கருத்தை, ஒரு நாளிதழ் வெளியிட்டிருந்தால் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்குறிப்பிட்ட நாளிதழின் ஆசிரியருக்கு தொலைப்பேசியின் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தங்களின் கருத்துகளைக் கூறலாம். முடியாவிட்டால் நிருபர் கூட்டமொன்றைக் கூட்டி, தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி திருத்தலாம். இன்னும் பல சிறந்த வழிகள் கையாளுவதற்கு இருந்தும், தமிழ் நாளிதழ்களை பொதுவிடங்களில் குவித்து அதனை தீக்கிரையாக்குவது இக்காலத்திற்கு முற்றிலும் பொருந்தாத ஒரு செயலாகும். தமிழின் மீது பற்று உள்ளவர்கள் நிச்சயம் தமிழை தீக்கிரையாக்கும் செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.
நாளைய தலைவர்கள் என வர்ணிக்கப்படும் இளைஞர்கள், யாருடைய தூண்டுதலுமின்றி முறையாக சிந்தித்து எந்தவொரு காரியத்தையும் ஆற்ற வேண்டும். ஒரு அரசியல் அமைப்பில் அங்கத்துவம் பெற்ற இளைஞர்கள் வழி தவறி நடக்கும்பொழுது, தலைவர்கள் அவர்களைத் திருத்த வேண்டுமேயொழிய, கண்டுங்காணாத போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது. அரசியல் இயக்கங்களில் உள்ளவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாவிடில், நாளடைவில் அவ்வியக்கமானது குண்டர் கும்பல் கலாச்சாரத்திற்குக் கொண்டுச் சென்றுவிடும் அபாயம் உள்ளது.
இதுப்போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருப்பதோடு, நாகரீகமான முறையில் கருத்து பரிமாற்றத்தை நிகழவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இனியும் தமிழ் நாளிதழ்களை தமிழர்கள் தீக்கிரையாக்கமாட்டார்கள் என நம்புகிறோம்.
இளைஞர்களே விழித்தெழுங்கள்..! தமிழை காப்பாற்றுங்கள்..!
தமிழைத் தீய்ப்பதில் உனக்கென்ன மோகம்?
தீயிட்டுக் கிடைத்ததிலென்ன லாபம்?
தமிழுணர்வை அழிக்குமோ உன் கோபம்?
நீ இட்டத் தீயால் சமுதாயத்திற்கே சாபம்!
தமிழன்னைக்கு கொடுத்திடாதே சோகம்!
அவள் வருந்திட நம்மைத் தொடரும் பாவம்! - இனி
உன்னுள் வளர வேண்டும் மொழித் தாபம்!
மொழியைக் காத்திட உன்னுள் வேண்டுமடா வேகம்!
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment