நீங்களும் நிலாவிற்குச் செல்லலாம்..
>> Sunday, July 27, 2008
நிலாவில் கால் பதிக்க வேண்டும் எனும் ஆசை யாருக்குதான் இல்லை. நானும் சிறுவயதில் நிலாவில் கால் பதிக்க வேண்டும் எனும் ஆசையில், நண்பர்களிடம் சவால் விட்டுத் திரிந்துக் கொண்டிருந்தேன். விஞ்ஞானியாவேன், விண்வெளி வீரனாவேன் , அதைச் செய்வேன் இதைச் செய்வேன், இன்னும் என்னென்ன அடுக்கிக் கொண்டே போக முடியுமோ அவ்வளவையும் அந்த வயதில் அடுக்கி வைத்தது மறக்க முடியாத நினைவுகளாகும்.
இப்படி நீங்களும் நண்பர்களிடமோ, ஆசிரியரிடமோ சவால் விட்டிருக்கலாம். குறிப்பாக நிலாவில் கால் பதிப்பேன் என்று சவால் விட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசா' விண்வெளி வீரர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த வரலாற்றுப் பூர்வமான திட்டத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை 'நாசா'வும் கலிஃபோர்னியா பரவெளி ஆராய்ச்சிக் குழுவும் மற்றும் ஜான் ஆப்கீன்ஸ் பௌதீகவியல் ஆராய்ச்சிக் கூடமும் நமக்கு வழங்குகின்றனர்.
நம்மால் நிலாவில் கால் பதிக்க முடியாவிட்டாலும், பெயரையாவது பதிக்கலாம் அல்லவா? அதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள்.
சந்திரனுக்கு அனுப்பப்படவிருக்கும் விண்கலனும், சந்திர மண்டலத்தை படம் பிடிக்கச் செல்லும் எல்.ஆர்.ஓ எனப்படும் ஆராய்சித் துணைக்கோளும் நம் பெயரை சில்லு வடிவில் தாங்கிச் செல்லவுள்ளது. அதற்கடுத்து 2020-இல் மீண்டும் மனிதன் நிலாவில் கால்பதிக்கும் பொழுது நம் பெயர்களும் அங்கு பதியப்படும். இத்திட்டத்தில் பங்குபெரும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்குகிறார்கள். அச்சான்றிதழை மென்புத்தக வடிவில் அச்சிட்டுக் கொள்ளலாம்.
உங்கள் பெயரைப் பதிவதற்கு இறுதி நாள் 31 சூலை 2008. உங்கள் பெயரைப் பதிய இங்கே சுட்டுங்கள் : நிலாவில் பெயர் பதிப்போம்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment