திரு.உதயகுமாருக்கு மறுவாழ்வுப் பயிற்சியா...?
>> Monday, July 21, 2008
இது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். திரு.உதயகுமாருக்கு மறுவாழ்வு பயிற்சி வழங்க வேண்டுமா? அல்லது மூலைக்கெட்ட இனவாத அரசியலை மேற்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சி வழங்க வேண்டுமா?
மலேசிய இந்தியர்கள் இண்ட்ராப் தலைவர்களோடு சேர்ந்து உரிமைக்காகப் போராடிய போராட்டத்தை, வெறும் கேலிக்கூத்து என்றெண்ணிவிட்டார்களா அவர்கள்(அம்னோ)?
மறுவாழ்வு பயிற்சி உண்மையில் யாருக்கு வழங்க வேண்டும்? நீதிக்கூண்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிப்பவர்கள்தான் மறுவாழ்வு பயிற்சிக்கு செல்லத் தகுதியுடையவர்கள். சட்டமும் அதைத்தான் சொல்கிறது(ஐநா பொது விதிகளின் 25 வது பிரிவு). மதிகெட்டு சில சமயங்களில் தப்பு செய்து தண்டனைப் பெறுகிறவர்கள், மீண்டும் புதிய மனிதர்களாகத் திருந்தி வரவேண்டும் எனும் நோக்கில் மறுவாழ்வு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. (உண்மையில் குற்றவாளிகள் அப்பயிற்சிகளின் மூலம் மனம் திருந்தி மறுவாழ்வை நோக்கிச் செல்கிறார்களா? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்).
சரி, திரு.உதயகுமார் என்ன குற்றவாளியா? அவரை, இந்த அரசாங்கம் எந்த நீதிமன்றத்தில் நிறுத்தி எந்தக் குற்றத்திற்காக அவரை விசாரித்தது? தேசியப் பாதுகாப்புக்கு ஒரு மருட்டலாக இருப்பதாக உதயகுமாரைக் கைது செய்த காவல்த் துறையினர் ஏன் அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை?
உண்மையில் அவர் பாதுகாப்பிற்கு மருட்டலாகத்தான் இருந்தார் என்றால் அதை மறுப்பதற்கில்லை. ஏன், யார் பாதுகாப்பிற்கு அவர் மருட்டலாக இருந்தார்? தேசிய பாதுகாப்புக்கோ, இனங்களுக்கிடையிலான பாதுகாப்புக்கோ அவர் மருட்டலாக ஒருபோதும் இருந்ததில்லை. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 50 ஆண்டுகளாக இனவாதக் கொள்கைகளின் மூலம் சிறுபான்மை இந்தியர்களின் ரத்ததை உரிஞ்சிக் கொண்டிருந்த அட்டைகளின் (அம்னோவின்) பாதுகாப்பிற்குத்தான் அவர் மருட்டலாக இருந்தார்.
இவர் இண்ட்ராப்பின் மூலம் மக்களிடையே உரிமைகள் தொடர்பான விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதைக் கண்ட அம்னோ அரசாங்கத்திற்குப் பொறுக்கவில்லை. மிரட்டிப் பார்த்தார்கள், தோட்டாக்களை கடிதத்தோடு அனுப்பி வைத்துப் பார்த்தார்கள், கார் டயர்களைக் கிழித்தார்கள், பணம் கொடுக்கப் பார்த்தார்கள், காவல்த்துறையினரை ஏவி கைது செய்துப் பார்த்தார்கள், கெஞ்சியும் பார்த்தார்கள், கொஞ்சியும் பார்த்தார்கள், நயவஞ்சகத்தோடு பேரமும் பேசிப் பார்த்தார்கள், இதற்கெல்லாம் அசையாத சிங்கமாய் நாடுதழுவிய நிலையில் மக்களைச் சென்று சந்தித்து, விழிப்பை ஏற்படுத்தி வீரத்தை விதைத்து அனைவரையும் 25 நவம்பர் அன்று ஒன்று திரட்டி கர்ஜிக்க வைத்தவர் உதயகுமார் எனும் சிங்கம்!
இக்காலத்தில், பதவி, பணம், பட்டத்திற்கு விலைப்போகும் மாந்தர்களிடையே கரைபடியாது விளைந்த மாணிக்கமாய், சேற்றில் முளைத்த செந்தாமரையாய் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் அழுக்குகளை நீக்கி, காலங்காலமாய் அடிமைப்பட்டுக்கிடக்கும் இந்திய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியை ஏற்படுத்திட துணிந்தவர் திரு.உதயகுமார். அவர் மனிதருள் மாணிக்கம், சமுதாயம் பெற்றெடுத்த வரம்..!
ஒளிமங்கா மாணிக்கத்தைப் பட்டைத் தீட்டிப் பார்க்க எத்தனித்திருக்கும் காவல்த்துறையின் சிறப்புப் பிரிவினரை என்னவென்றுச் சொல்வது? அவர்களின் செயல் நகைப்பிற்குரியதாயும், அதே வேளையில் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை மீறுவதைக் கண்டு வேதனையும் கொள்ள வேண்டியதாயுள்ளது..!
மேலும், அவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, முறையான நீதிமன்ற விசாரணையின்றி, சரியான உணவின்றி, தேவையான மருந்துகளின்றி, உரிய சிகிச்சையின்றி வைத்துவிட்டு, இப்பொழுது அவருக்கு மறுவாழ்வுப் பயிற்சிக் கொடுக்க அழைப்பது ஏனோ, சொல் அம்னோ..!!
வேண்டுமென்றால், உரிமைக் குரலுக்கு விலங்கிடும் கூட்டங்களுக்கு மறுவாழ்வு பயிற்சி நடத்தலாமே.. அதற்கு இனவாத அரசியல் குள்ளநரிகள் தகுதி வாய்ந்தவர்களாக நிறையப் பேர்கள் இருக்கிறார்கள்.. திரு.உதயாவைப் பொறுத்தமட்டில் மறுவாழ்வு எனும் பேச்சிற்கு மறுபதில் "இல்லை..!" என்பதுதான்.
உங்கள் மறுவாழ்வுத் திட்டம் எங்களுக்குத் தேவை இல்லை. எங்களுக்குத் தேவை மறுக்கப்படாத உரிமை..!
மறுக்கப்படாத 18 உரிமைக் கோரிக்கைகள்..!
மறுபுத்தி என்றொன்றிருந்தால் யோசித்துப் பார்...!!!
போராட்டம் தொடரும்...
1 கருத்து ஓலை(கள்):
வணக்கம் சதீஸ் சார்,
உண்மையாக தூங்கி கொண்டிருப்பவர்களை எழுப்பி விடலாம்...ஆனால் தூங்குபவர்களை போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது....
அப்படித்தான் இருக்கிறது நிலவரம்...
Post a Comment