இந்தியரையா அடிக்க வேண்டும்??!!! உன்னை எதனால் அடிக்கலாம்..??!!
>> Wednesday, July 2, 2008
பாம்பையும் இந்தியரையும் கண்டால் முதலில் இந்தியரை அடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறதாம். அக்கா அமிடா ஒசுமான் பேராக் மாநில அவையில் இந்தப் பழைய பஞ்சாங்கப் பழமொழியை விற்கப் பார்த்திருக்கிறார். இந்தியர்களை அதிகம் கொண்ட அந்த அவை சும்மா இருந்திருக்குமா? மாநில அவையே அதிர்ந்ததில் அக்கா வாய்ப்பொத்தி கமுக்கமாகிவிட்டார்.
21-ஆம் நூற்றாண்டிற்கு ஒவ்வாத இத்தகைய இனவெறித்தனம் இன்னும் அரசியல்வாதிகளிடையே ஊறியிருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். அதிலும் சிறுபான்மையினர் என்பதால் கண்டபடி பேசலாம், நாங்கள் வாய்பொத்திக் கொண்டு இருப்போம் என்ற எண்ணமா?!!
அக்காவுக்கு அதோடு ராகு காலம் முடிந்து விடவில்லை. ஈப்போ மக்கள் இச்செய்தி கேட்டு கொதித்தெழுந்தனர். அடுக்கடுக்காக காவல் நிலையத்தில் புகார்கள் குவிய அக்கா மலைத்து போய்விட்டார் என்றால் பாருங்களேன்.
இறுதியில் பகிரங்க மன்னிப்பு கோரும் நிலைக்கு தயாரான அக்கா, அப்பாவி முகத்தைக் காட்டி இந்தியர்களிடம் மன்னிப்புக் கோருவதாக வருத்ததோடு கூறினார். அக்கா மீது மாநில அரசாங்கம் ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஒரு வகையில் வருத்தமளிக்கிறது. கட்டொழுங்கு நடவடிக்கையின் பேரில் சில மாதங்களாவது இடைநீக்கம் செய்திருக்கலாம். இத்தகு நடவடிக்கை அனைத்து இனவெறியர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும்.
இதேப் பழமொழி ஏற்கனவே மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் கூறப்பட்டு, அப்பொழுது எதிர்கட்சியில் வீற்றிருந்த திரு.பட்டு, திரு.டேவிட் போன்றோர் கொதித்தெழுந்த கதை அனைவரும் அறிவர். கொடும்பாவி எரிக்கும் அளவிற்கு அப்போதைய சூழ்நிலை அமைந்திருந்தது. மக்கள் தற்போது இனவாதத்தை ஒதுக்கி ஒற்றுமையை அதிகம் விரும்புவதால் அக்காவின் கொடும்பாவி எரியவில்லை. இந்தியர்களின் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு.
இனிமேல், ஒரு பொறுப்பான மக்கள் பிரதிநியாக நடந்துக் கொள்ளுங்கள், என்ன?
திரு.சத்தி என்பவர் ஈப்போவிலிருந்து மின்னஞ்சலில் அனுப்பிய நிழற்படம் உங்கள் பார்வைக்கு..
ஈப்போ மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தபின், அமிடாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்கும் காட்சி..( நன்றி, திரு.சத்தி)
ஈப்போ மக்களுக்கு ஒரு சபாஷ்...!
போராட்டம் தொடரும்...!
2 கருத்து ஓலை(கள்):
நாக்கு ஒரு கூர்மையான ஆயுதம் என்பதால் தான் அதை வாய் எனும் உறையில் கடவுள் பத்திரப்படுத்தியுள்ளார்.எதை வேண்டுமானாளும் பேசிவிட கூடாது தானே. ஒரு மனிதனின் வாழ்வுக்கு மட்டுமல்லாமல் ஒரு தேசத்தின் வாழ்வும் தாழ்வும் கூட அந்நாட்டின் தலைவர்கள் பேசப்படும் பேச்சுக்களை பொருத்தே அமைகிறது. அன்று உலக போர்கள் உறுவானது கூட ஒரு சில தலைவர்களின் பேச்சுக்களால்தானே. இதையெல்லாம் மறைந்து விட்டு, அரசியலில் இருக்கிறோம் என்பதால் இப்படியெல்லாம் ஓர் இனத்தை இழிவுப் படுத்திப் பேசலாமா, சார்? நம் இனம் என்ன இவர்களுக்கெல்லாம் விளையாட்டுக் கருவியா?
கண்டிக்க பட வேண்டிய செயல் இது...
அருமையாக எடுத்துரைத்தீர்கள் உசா..
இனவெறியர்களின் மூச்சுக் காற்றுக்கூட இந்தியர்களுக்கு எதிராகத் திரும்பினாலும், அதனைத் தட்டிக் கேட்கும் துணிவு நமக்கு பிறந்துவிட்டதென்பதே ஒரு பெரிய சாதனைதான். இச்சம்பவம் இனவெறியர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்..
நன்றி உசா..
மீண்டும் வருக..
Post a Comment