அமைதியான தீபாவளி - இண்ட்ராப்பு கோரிக்கை..
>> Sunday, July 27, 2008
இண்ட்ராப்பு குரல்
பழைய வழக்கத்திற்கு மாறாக, இவ்வருட தீபாவளியை அனைவரும் தியானம், இறைவழிபாடு என அமைதியாகவும் எளிமையான முறையிலும் தத்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு கொண்டாட வேண்டும் என இண்ட்ராப்பு தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கிறது. சம உரிமை, சம வாய்ப்பு, பேச்சு சுதந்திரம் மற்றும் சமயச் சுதந்திரத்திற்காக குரல் எழுப்பிய ஐந்து இண்ட்ராப் தலைவர்களுக்காக இவ்வருட தீபாவளிக் கொண்டாட்டமானது அமைதியான முறையில் நடைப்பெற வேண்டும். இதனை ஆதரவாளர்கள் அனைவரும் அமைதிப் போராட்டமாகக் கருத வேண்டும்.
தீபாவளியானது கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றின் பொதுவான நோக்கம் என்று பார்த்தால் தீமைகள் அழிந்து நன்மை பிறக்க வேண்டும் எனும் நோக்கத்திலியே கொண்டாடப்படுகிறது. தீபாவளி பிறந்ததற்கான பல புராணக் கதைகள் இருந்தாலும், மக்கள் மத்தியில் பிரசித்திப் பெற்ற புராணக் கதை, நரகாசுரனை வதைத்த கிருஷ்ணரின் மனைவி சத்யபாமாவின் கதையே. இப்புராணக் கதையில் நரகாசுரனின் வதமானது, வாழ்வின் இருளை நீக்கி ஒளியை அளித்ததற்குச் சமமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனால், மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரையில் நாடு சுதந்திரம் அடைந்து இன்று வரையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, சமய சுதந்திரம், பேச்சு சுதந்திரம் அற்று இருளில் வாழ்ந்து வந்துள்ளனர். இண்ட்ராப்பு இதுவரை அரசாங்கத்திடம் பல மனுக்களையும் கோரிக்கைகளையும் கொடுத்து சம உரிமைக் கேட்டு போராடி வந்துள்ளது. ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல் அரசாங்கம் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. அரசாங்கத்திற்கு நம்முடைய தேவைகளைப் பல வகையில் புரிய வைத்திருந்தும், இந்திய சமூகம் இருளிலிருந்து இன்னும் வெளிப்படவில்லை.
இன்றுவரை நாம் கொண்டாடிவரும் தீபாவளியானது ஓர் அர்த்தமற்றதாகவே புலப்படுகிறது. இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எனும் தீபாவளியின் உண்மைக் கருப்பொருளை இந்திய சமுதாயம் அடைந்துவிடவில்லை. இன்றுவரையில் நாம் சம உரிமைக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
இதன்வழி இண்ட்ராப்பு அனைத்து ஆதரவாளர்களையும் தீபாவளியன்று அமைதியான முறையிலும், தியானம், இறை வழிபாடு என்று இறைவனிடம் உள்ளொளி வேண்டி கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வருட அமைதியான தீபாவளியின் வழி, அரசாங்கத்தின்மீது ஒட்டுமொத்த சமுதாயம் கொண்டிருக்கும் ஆதங்கத்தைப் புலப்படுத்தியாக வேண்டும். அதோடு அவர்கள் நடைமுறைப்படுத்திவரும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமானது மலேசிய மக்களால் வெறுக்கப்படும் சட்டமாக உள்ளது என்பதனையும் புலப்படுத்தவேண்டும்.
இண்ட்ராப்பு என்றும் அடுத்தவரின் உரிமைகளைக் கேட்கவில்லை, ஆனால் கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள் மறுத்தளிக்கப்படும்பொழுது அதனைத் தட்டிக் கேட்டு வாங்குவதில் என்றும் பின்வாங்குவதில்லை. போராட்டம் தொடரும்...
திரு.வேதமூர்த்தி
இண்ட்ராப் தலைவர்
இலண்டன்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment