60 இந்தியர்களுக்கு உராட்சிமன்ற உறுப்பினர் பதவி - பேராக் இண்ட்ராப் கோரிக்கை.
>> Thursday, July 10, 2008
10-ஆம் திகதி சூலையன்று காலை 10 மணியளவில் பேராக் மாநில இண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் திரு.வேதமூர்த்தி தலைமையேற்ற 15 பேர்கள் அடங்கிய குழு ஒன்று, பேராக் மாநில மந்திரி புசார் அலுவலகத்தில் இந்தியர்களின் பிரச்சனைகளைக் கண்டறிய பிரத்தியேகமாக மந்திரி புசாரால் நியமிக்கப்பட்ட அதிகாரி எம்.நடராசாவைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.
அக்கோரிக்கையில், பேராக் மாநில ஊராட்சி மன்றங்களில் இந்தியர்களுக்கு குறைந்த பட்சம் 60உறுப்பினர் பதவிகள் அளிக்கப்பட வேண்டும் என மாநில அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அக்கோரிக்கையின் முழு விவரம் பின்வருமாறு :
மதிப்பிற்குரிய,
பேராக் மாநில மந்திரி புசார்
மலேசியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்நாட்டில் சிறுபான்மையினர் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக ஒடுக்கப்படும் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. சிறுபான்மையினரான இந்தியர்களின் ஏழ்மைச் சூழலினாலும் பொருளாதார சீர்க்குலைவினாலும், கடந்த மார்ச் 8-ஆம் திகதி மக்கள் சக்தி சுனாமிபோல் வந்து அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.
அண்மையில் பேராக் மாநில அரசாங்கத்தால் இந்தியர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர் பதவி எண்ணிக்கை கீழ்காணும் புள்ளிவிவரக் கணக்கறிக்கையோடு ஒப்பிடுகையில் மனநிறைவு அளிக்கும் வகையில் அமையவில்லை.
ஆய்வின் கூற்றுப்படி 79.7 சதவிகிதம் இந்தியர்கள் நகர்ப்புறங்களிலும், 20.3 சதவிகிதம் இந்தியர்கள் வெளிநகர்ப் பகுதிகளிலும் வசித்து வருகிறார்கள். மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7.7 சதவிகிதமாக அல்லது 1,680,132 மக்கள் எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும், 5 மாநிலங்களில் இந்தியர்கள் கணிசமான தொகையில் வசிக்கின்றனர்.
அவை முறையே சிலாங்கூர் (14.6% - 585,368) ; பேராக் (13% - 262,121) ; கோலாலம்பூர் (11.4% - 146,621) ; பினாங்கு ( 10.6% - 133,899) மற்றும் நெகிரி செம்பிலான் (16% - 132,754). மலேசியாவில் அதிகமாக நகர்ப்புறங்களுக்கு குடிப்பெயர்ந்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.
கீழ்காணும் பட்டியலில் பேராக் மாநிலத்தில் 20,000 மேற்பட்ட இந்தியர்கள் வாழும் மாவட்டங்களும், எண்ணிக்கைத் தொடர்பான புள்ளி விவரங்களும் பின்வருமாறு :-
மாவட்டம் - பாத்தாங் பாடாங்
மக்கள் தொகை - 154,944
இந்தியர் எண்ணிக்கை - 23,416
சதவிகிதம் - 15.1
மாவட்டம் - மஞ்சோங்
மக்கள் தொகை - 194,640
இந்தியர் எண்ணிக்கை - 28,416
சதவிகிதம் - 14.5
மாவட்டம் - கிந்தா
மக்கள் தொகை - 716,724
இந்தியர் எண்ணிகை - 104,471
சதவிகிதம் - 14.6
மாவட்டம் - கோலாகங்சார்
மக்கள் தொகை - 148,219
இந்தியர் எண்ணிக்கை - 20,550
சதவிகிதம் - 13.9
மாவட்டம் - லாருட் மாத்தாங்
மக்கள் தொகை - 281,040
இந்தியர் எண்ணிக்கை - 32,394
சதவிகிதம் - 11.5
மாவட்டம் - தென்(இலீர்)பேராக்
மக்கள் தொகை - 192,585
இந்தியர் எண்ணிக்கை - 35,892
சதவிகிதம் - 18.6
தகவல் - புள்ளிவிவர இலாகா
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மாநில அரசாங்கம் தேவையான வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்தித் தரக் கூடிய நடைமுறை செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். இன்னும் இரட்டைக் குடியுரிமைக் கொண்ட சமுதாயமாக எங்களை நடத்தினால், நாங்கள் இந்நாட்டில் இன பாகுபாட்டோடுதான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும், அதோடு இனவாரியான விதைகள் தூவப்பட்டு ஒதுக்கிவிடப்பட்ட சமுதாயமாக மீண்டும் நாங்கள் வாழ நேரிடும். மற்ற இனத்தவரைவிட இன்னொரு இனம் ஒருபடி உயர்நிலையில் இருப்பதாகக் கருதும் நிலை தொடர்ந்தால், வருங்கால சந்ததியினர் மற்றவரை அடக்கி ஆளும் போக்கையே கடைப்பிடிப்பர்.
இறுதியாக, இந்தியர்களுக்கென ஒதுக்கப்பட்ட 48 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை மறுஆய்வு செய்து குறைந்தபட்சம் 60-ஆக எண்ணிக்கையை உயர்த்துமாறு பேராக் மாநில அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
வேதமூர்த்தி
பேராக் மாநில இண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment