ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையராக தென்னாப்பிரிக்கத் தமிழர் நவநீதம் நியமனம்.
>> Sunday, July 27, 2008
ஐ.நா மனித உரிமைக் குழுவின் உயர் ஆணையராக தென்னாப்பிரிக்க நீதிபதி நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த பொறுப்புக்கு நவநீதம் பிள்ளை அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் அறிவித்தார்.
ஏற்கனவே அந்தப் பொறுப்பில் இருந்து வந்த லூயிஸ் ஆர்பர் என்பவருக்குப் பதிலாக நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளதை மேற்கத்திய நாடுகளும் மனித உரிமைக் குழுக்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளன.
நவநீதம் பிள்ளையை ஐ.நா. மனித உரிமைக் குழூவின் உயர் ஆணையராக தாம் நியமித்திருக்கும் முடிவை ஐ.நா பொதுப்பேரவையிடம் பான் கி மூன் தெரிவிப்பார் என்று ஐ.நா.வுக்கான பெண் பேச்சாளர் மைக்கலி மோண்டாசு சொன்னார்.
மனித உரிமைகள், நீதித் துறை முதலியவற்றில் மிகச் சிறந்த ஆற்றல் பெற்றவர் நவநீதம் பிள்ளை அம்மையார். அந்த வகையில் ஜெனிவாவில் அமைந்துள்ள மனித உரிமைக்க் கழகத்தில் பணியாற்றுவதன் மூலம் நவநீதம் பிள்ளை, ஐ.நா பொதுப் பேரவைக்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் இடையில் உள்ள உறவை பேணி வளர்ப்பார் என்று பான் கி மூன் எதிர்ப்பார்ப்பதாக மோண்டாசு சொன்னார்.
தற்போது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு மன்ற நீதிபதியாக நவநீதம் பிள்ளை பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழரான 67 வயதான நவநீதம் அம்மையார், டர்பனில் ஓர் ஏழை பேருந்து ஓட்டுநருக்குப் பிறந்த மகளாவார். நாத்தால் மாகாணத்தில் முதன்முறையாக வழக்கறிஞர் அலுவலகம் திறந்த வெள்ளைக்காரர் அல்லாத பெண்மணியாகத் திகழ்கிறார் நவநீதம் அம்மையார்.
தென் ஆப்பிரிக்காவில் அமல்படுத்தப்பட்ட "எப்பர்தாய்ட்" கொள்கைகளுக்கும் பெண்களுக்கு எதிராக நடைப்பெறும் கொடுமைகளை எதிர்த்தும் குரல் கொடுத்தவர் நவநீதம் அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர்த்து அம்மையார், பல மனித உரிமை இயக்கங்களில் இணைந்து குழந்தைகள், தடுப்புக் காவலில் துன்புறுத்தப்பட்டவர்கள், உள்நாட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு ஆதராவக குரல் எழுப்பியுள்ளார். வருகின்ற 1 செப்டம்பர் அன்று நவநீதம் அம்மையார் அதிகாரப்பூர்வமாக ஐ.நா மனித உரிமை உயர் ஆணையராக தமது கடமையைத் தொடங்குவார். இவரின்கீழ் ஆயிரம் ஊழியர்கள் பணிப்புரியவிருப்பதோடு, இவரின்கீழ் நடத்தப்பெறும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க டாலர் 120மில்லியனையும் ஐ.நா ஒதுக்கியுள்ளது
தமிழர்களைப் பெருமைக் கொள்ளச் செய்யும் நவநீதம் அம்மையாரின் பதவியேற்பை, நாமும் மகிழ்வுடன் வரவேற்போம். அம்மையார் தமது கடமையை இனிதே செய்திட, மனித உரிமை மேலும் மலர்ந்திட இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்வோம்.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment