அன்வார் இப்ராகிமுடன் ஒரு நேர்காணல் (மலேசியா கினி)
>> Saturday, July 5, 2008
அன்வார் இப்ராகிம், ஓரினப் புணர்ச்சிக்கு உள்ளாக்கியதாக தம்மீது குற்றம் சாட்டியுள்ள சைபுல் புகாரி அஸ்லானை வேலைக்கு சேர்த்தது முதல் தவறு என்கிறார்.
சைபுல், ஒரு முழுநேர ஊழியராக வேலைக்குச் சேர்க்கப்படவில்லை. அதனால் அவரது பின்னணி பற்றி ஆராயப்படவில்லை என்றவர் சொன்னார்.
கெஅடிலான் தலைமையகத்தில் மலேசியாகினி நடத்திய நேர்காணலில் அன்வார் இப்ராகிம் பல தகவல்களைத் தெரிவித்தார்.
மலேசியா கினி: ஏசிஏ,இப்போது (போலீஸ் தலைவர்) மூசா(ஹாசான்) வையும் (சட்டத் துறைத் தலைவர் அப்துல்) கனி பட்டேய்லையும் விசாரித்து வருகிறது. அதன் விசாரணையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
அன்வார்:இப்போதைய அமைப்பில் அவர்களுக்கு(ஏசிஏ) சிரமம்தான். ஏசிஏ, பிரதமரின்கீழ் செயல்படுகிறது. சட்ட நடவடிக்கை எடுப்பதை முடிவு செய்பவராக சட்டத் துறைத் தலைவர்(ஏஜி) இருக்கிறார். விசாரணை கட்டத்திலேயே ஏசிஏ பல விசயங்கள் தொடர்பாக ஏஜியுடன் அது ஆலோசனை கலக்க வேண்டியுள்ளது. அதனால், அது விசாரணை செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கும்.
(ஏசிஏ தலைமை இயக்குனர்) அகமட் சயிட் (ஹம்டான்) எனக்கு தெரிந்தவர்தான். நான் அரசாங்கத்தில் இருந்தபோது அவர் ஏசிஏ யில் இருந்தார். அப்போது ஷாபி யாக்யா அதன் தலைவராக இருந்தார்.
ஷாபி, துணிச்சல் நிரம்பியவர். அவரது குழுவினர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. யாராக இருந்தாலும் சரி - ரபிடா (அஜீஸ்), ரகிம் (தம்பி சிக்),(முகமட் முகமட்)தாயிப் - யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆனால் நடவடிக்கைக்குப் பின்னர் அதை ஏஜியின் கவனத்துக்குக் கொண்டு போகும்போது அங்கு தடுக்கப்படும். அப்போது நான் ஏசிஏக்கு ஆதரவாக இருந்தேன். யாராவது ஏசிஏ யைத் தாக்கிப் பேசினால் நான் ஏசிஏ-யைத் தற்காத்துப் பேசுவேன்.
அப்போது (அவர்களின் விசாரணைக்கு தடை போடுபவர்)
பிரதமர் அல்லது ஏஜியாக இருப்பார். இப்போது அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை.
இப்படி இருக்கையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பீர்களா?
இந்த இடத்தில் அமெரிக்க உச்சநீதி மனறத்தின் முன்னாள் நீதிபதி சண்ட்ரா டே கோன்னர் சொன்ன ஒரு கருத்தை எடுத்துக்கூற விரும்புகிறேன். அன்வாரை ஆதரித்தும் அனைத்துலக ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தும் அறிக்கை ஒன்று வெளியிடுமாறு அவரிடம் ஒருவர் சொன்னபோது,” ஒரு சிறுபிள்ளத்தனமான குற்றச்சாட்டுக்கு எதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்?”, என்றாராம்.
அரசாங்கம் உங்கள்மீது குற்றம் சுமத்துவதால் மக்களின் ஆதரவு குறையும் என்று நினைக்கிறீர்களா?
இடைவிடாது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அது மக்களின் மனத்தில் ஆழமாக பதியத் தொடங்கும். இது (நாஜிகளின் பரப்புரை தலைவர் டாக்டர் பால் ஜோசப்) கோய்ப்பல்சின் தந்திரோபாயம். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதல். அதனால்தான் அவர்கள் வேறு எதையும் தேர்ந்தெடுக்காமல் இதைத் (ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டை) தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்கு சாட்சியம் சேகரிப்பது சிரமம் என்பதால், கதை கட்டுவதற்கு ஒரு ஆளையும் தயார் பண்ணியிருக்கிறார்கள்.
ஆனால் மக்கள்மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
இடைத் தேர்தல், கட்சித் தாவல் - இவையெல்லாம் எப்படி இருக்கிறது?
இடைத் தேர்தல் (ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டு முடிவு தெரியாத நிலையில் ) சற்று தாமதப்படலாம். இன்றுகூட அதைப் பற்றி என்னால் அறிவிக்க முடியும். ஆனால் நாளையே நான் கைது செய்யப்படலாம். இப்படி ஓர் இக்கட்டு.
இது உங்களின் இடைத் தேர்தல் திட்டத்தைத் தாமதப்படுத்துகிறது…
ஆமாம். அதையும் சமாளிக்க முடியும் என்றுதான் நம்புகிறேன்.
சொன்னபடி செப்டம்பரில் உங்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது,அதனால் ஒரு கெட்டபெயர் ஏற்படுவதைத் தவிர்க்க இப்படியெல்லாம் நாடகமாடுகிறீர்கள் என்று சிலர் சொல்கிறார்களே?
பாரிசான் நேசனலுக்கு ஆதரவானவர்கள் அப்படிச் சொல்லக்கூடும். அந்த ஆள் என்னுடைய அலுவலகத்தில் “நட்டு” வைக்கப்பட்டிருக்கிறார். சாபா, சரவாக்கிலிருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன.இங்கே என்ன நடக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும்போதெல்லாம் போலீஸ் விழிப்பு நிலையில் வைக்கப்படுகிறது என்பதை நான் அறிவேன். ஏன்? அரசாங்கம் விழுந்து விடுமோ என்று உள்ளுக்குள் அச்சம். எனவே அது ஒன்றும் நடைபெற முடியாத ஒன்றல்ல. வெளியில் அவர்கள் வேறு விதமாகச் சொல்வார்கள்.
ஒரு அமைச்சர் என்னைப் பார்க்க சிங்கப்பூர் தங்கு விடுதிக்கு வந்தால் அவர்களுக்குத் தெரியாமல் போய்விடுமா?
அமைச்சர்கள் வெளிநாட்டிற்குச் சென்று உங்களைச் சந்தித்தாக கூறுகிறீர்களா?
ஆம்.
எத்தனை பேர்?
அந்த விவரம் வேண்டாமே.
உங்கள் செப்டம்பர் இலக்கு இன்னும் அப்படியே இருக்கிறதா?
இப்போதைய நிலையில் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அடுத்த சில நாள்களில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாது.
ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டு, கட்சித் தாவல் திட்டத்துக்கு இடையூறாக அமைந்து விட்டதென்று நினைக்கிறீர்களா?
இல்லை. ஆனால் அடுத்த கட்ட திட்டம் வகுக்கப்படுதை அது பாதித்துள்ளது. என்றாலும் செப்டம்பர் மாதம் என்ற இலக்கில் மாற்றமில்லை.
வெளிநாடு சென்றபோதெல்லாம் சைபுலை உடன் அழைத்துச் சென்றீர்களா?
ஆம். (உதவியாளர்கள்) இப்ராகிம் யாக்குப், காலிட் ஜாபார், சைபுல், ரகிமி இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் வருவார்கள். அது அவ்வப்போதைய நிலையைப் பொருத்தது. அது பற்றி மேல்விவரம் வேண்டாமே.
இந்த ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டை நீங்கள் அடியோடு மறுக்கிறீர்கள்?
அது அடிப்படையற்றது. பகைமை உணர்வுடன் கூறப்பட்டது.
ஊழல் போல் வேறு வகை குற்றச்சாட்டைக் கொண்டு வராமல் எதற்காக உங்கள் ஒழுக்கத்தைக் குறை சொல்லும் வகையில் ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்ப கொண்டு வர வேண்டும்?
அதற்கு (ஊழல் தொடர்பாக) அவர்களிடம் ஆதாரம் இல்லையே. ஆட்சியில் உள்ளவர்களின் செல்வத்தை, பங்குகளை, ஒப்பந்தங்களைப் பரிசோதனையிட ஆணையம் அமையுங்கள் என்று சவால் விடுத்தேன். அதை அவர்களால் செய்ய இயலவில்லை.
ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டின் காரணமாக உங்கள் ஆதரவாளர்களிடையே சந்தேக உணர்வுகள் தலைதூக்கும் என்று கவலை கொள்கிறீர்களா?
அதுதான் அவர்களின் நோக்கம். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. சொன்ன குற்றச்சாட்டைத் திரும்பச் சொல்வது. ஸ்டாலின், ஹிட்லர் எல்லாம் இதைத்தான் செய்தார்கள்.
ஆனால் ஒரு கதையை இட்டுக்கட்டினால், அது அம்பலமாகும்போது அதன் விளைவுகளை நீங்கள்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சைபுலை வேலைக்குச் சேர்த்தபோது அவரின் பின்னணியை ஆராயாதது உங்கள் அலுவலகம் செய்த தவறு.
ஆம். ஆனால் அவர் முழு நேர ஊழியராக சேர்க்கப்படவில்லை. அவர் தன்னார்வலராகத்தான் முதலில் சேர்க்கப்பட்டார். அப்போது (பாரிசானை) கடுமையாக விமர்சிப்பவராக இருந்தார். “அன்வாருக்காக உயிரை விடவும் தயார்” என்றெல்லாம் சொன்னார். அவர் எங்களைவிட்டுச் செல்லும் வரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. பகுதி நேர ஊழியருக்கான அலவன்ஸ் மட்டும்தான் கொடுத்து வந்தோம்.
ஆனால் மற்றவர்கள் அவரைப் பற்றிக் குறை சொன்னபோது நீங்கள் அதைக் காது கொடுத்து கேட்கவில்லையே?
அதுதான் என் குண இயல்பு. யுனிடென்னில் (தெனாகா நேசனல் பல்கலைக்கழகம்) இருந்தபோது மோசமாக இருந்தார், அவர் ஒரு இனவாதி, நஜிப்பின் ஆதரவாளர் என்றெல்லாம் யாராவது சொன்னால், “இரண்டாண்டுக்கு முன்னர் அப்படி இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்”, என்று கேட்பேன். அதுதான் என் இயல்பு (சிரிக்கிறார்).
இப்போது நினைத்துப் பார்க்கையில் அது ஒரு தவறு என்று தெரிகிறது. அவரின் பலகலைக்கழகத் தோழர்களும் வலைத்தளங்களும் கூறிய குறைகளை நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.
அப்போது நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால் - ஒரு நாளைக்கு முன் (கெஅடிலானில் சேர்வதற்கு) லண்டனில் உள்ள அன்வார் இப்ராகிம் மன்றத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இவருக்குமிடையில் வாக்குவாதம் நிகழ்ந்தது. இவர் (சைபுல்) அம்னோவைத் தற்காத்துப் பேசியிருக்கிறார். அதற்கு அடுத்த நாள் என் அலுவலக ஊழியரைச் (ரகிமி) சந்தித்து தாம் அன்வாரின் தீவிர ஆதரவாளர் என்று கூறினார். அதன்பின் கார் ஓட்டுனராக சேர்க்கப்பட்டார்.
சரி, என்ன செய்யப் போகின்றீர்கள்? குற்றச்சாட்டை எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?
போராடுவது என்று உறுதியுடன் இருக்கிறேன். இவர்கள் மகா மட்டமானவர்களாக இருக்கிறார்கள். நன்னெறி பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆசை.
அவர்களின் வண்டவாளங்களை அம்பலப்படுத்த வேண்டும். இதைக்(ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டை) காட்டி நிர்வாகம், பொருளாதாரம் போன்ற மையப் பிரச்னைகளை விட்டு கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார்கள். அதற்கு அனுமதிக்கக் கூடாது.
நன்றி : மலேசியா கினி (மலேசியா இன்று)
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment