திரு.உதயகுமாரின் கொள்கைப் பிடிப்பு பாராட்டுதற்குரியது..
>> Monday, July 7, 2008
கடந்த சனிக்கிழமையன்று உள்நாட்டு விவகார மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்
சயீது அமீது அல்பார், இந்துராப்பு தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கமுந்திங்கு தடுப்புக் காவல் முகாமிற்கு வருகை மேற்கொண்டுள்ளார்.
இந்துராப்பு தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அவ்வருகையின்போது, திரு.உதயகுமார் அமைச்சரைச் சந்திக்க மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்துராப்பு தரப்பில் திரு.வேதமூர்த்தி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், திரு.உதயகுமார் அமைச்சரை சந்திக்க மறுத்ததற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த வார இறுதியில் திரு.உதயகுமாரைச் சந்திக்கச் சென்ற குடும்ப உறுப்பினர்களிடம் தாம் அமைச்சரைச் சந்திக்க மறுத்ததற்கான காரணத்தை மக்களுக்கு அறியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக திரு.வேதமூர்த்தி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திரு.உதயகுமார் உள்நாட்டு விவகார மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சரைச் சந்திக்க மறுத்ததற்கான காரணங்கள் :
1) அமைச்சரின் இவ்வருகையின் காரணம், இந்துராப்பு தலைவர்கள் தடுப்புக் காவலில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கூறி விரைவில் விடுதலை வேண்டும் என அவரிடம் கோருவர் எனும் எதிர்ப்பார்ப்பை மையப்படுத்தியது.
2) இந்துராப்பு போராட்டத்தின் மீதும் கொள்கைகளின் மீதும் தமக்கு உள்ள நம்பிக்கையினால், தாம் பட்டு வரும் துன்பங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை.
3) இந்துராப்பு இயக்கம், நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலை விளைவிக்கும் ஓர் இயக்கம் என மலேசிய மக்கள் மத்தியில் உள்நாட்டு விவகார மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஓர் தவறான முத்திரையைக் குத்தியது.
4) தம்முடைய போராட்டமானது, கடந்த 51 ஆண்டுகளாக அம்னோவின் காலனித்துவ ஆட்சியில் ஒடுக்கப்பட்ட இந்திய சமுதாயத்திற்கு நிரந்தரமான சுதந்திரமும் விடிவெள்ளியும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவே.
அறிக்கையில் மேலும், திரு.உதயகுமார் தாம் மலேசிய இந்திய மக்களுக்காக போராடுவதையும், அதற்காக சிறைச் சென்றதையும் பெருமையாகக் கருதுவதாகவும், தமக்கு இங்கு இழைக்கப்படும் கொடுமைகள் மலேசிய இந்தியர்கள் ஒடுக்கப்படுவதற்கான அத்தாட்சிகளாக அவை விளங்கட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்துராப்பு இயக்கத்தை விலைக்கு வாங்கி, இந்தியர்களின் பிரச்சனையை மூடி மறைக்க நினைக்கும் அம்னோவிற்கு சரியான பாடம் கற்பித்த சமுதாயச்சுடர் திரு.உதயகுமாருக்கு என்றும் தோல் கொடுக்க இந்திய சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. நமது 18 கோரிக்கைகள் நிறைவேறும் வரை,
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment