தனியார் துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம் எங்கே?
>> Tuesday, July 8, 2008
கடந்த சூலை மாதம் 1-ஆம் திகதி தனியார் துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம், கொலையுண்ட மொங்கோலிய அழகி அல்தான்துயாவிற்கும் துணைப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கும் தொடர்பு இருந்ததற்கான ஆவணங்களை தமது சத்திய பிரமாணத்தின் வழி குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதனையடுத்து மறுநாள் சூலை 2-ஆம் திகதியன்று, (முதல் சத்திய பிரமாணம் செய்து 24 மணி நேரங்கள் கூட பூர்த்தியாகாத வேளையில்) தாம் வெளியிட்ட சத்திய பிரமாணத்தை உடனடியாக மீட்டுக் கொள்வதாகக் கூறி, புதியதொரு சத்திய பிரமாணத்தை வெளியிட்டார். அதில் நஜீப் துன் ரசாக்கின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் தரப்பினரிடமிருந்து தமக்கு நெருக்குதல் ஏற்பட்டதாலேயே முதல் சத்திய பிரமாணத்தை வெளியிட்டதாகக் கூறி, அதனை மீட்டுக் கொண்டது அரசியல் வட்டாரங்களில் மேலும் குழப்பத்தை விளைவித்தது.
இதுப்போன்ற திடீர் திருப்பங்களால், நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ள விவகாரம் தொடர்பான வதந்திகள் மக்களின் பல நாள் சந்தேகங்களை வலுவாக்கின. இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தனியார் துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டச் சம்பவம், சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகின்றன.
அல்தான்துயா கொலை நடந்தப்பிறகு உள்நாட்டு ஊடகங்களில் அச்செய்தி காட்டுத் தீப்போல் பலவித அனுமானங்களோடு மறுநாள் பரவத்தொடங்கிய போது, முதன்முதலாக தொலைக்காட்சியில் தலையைக் காட்டி, விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம், ஊடகங்கள் பல அனுமானங்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், அனைத்தையும் காவல்த்துறையினரின் விசாரணைக்கு விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்ட முதல் மனிதர் நஜீப் துன் ரசாக்தான் என்று நினைவுக்கு வருகிறது. நாட்டில் பல கொலைச் சம்பவங்கள் நடந்தாலும், துணைப்பிரதமரே தலையிட்டு பேசவைத்த கொலைச் சம்பவம் என்றால் அது அல்தான்துயா கொலைச்சம்பவம்தான். அச்சமயம் அல்தான்துயாவோடு நஜீப்பை இணைத்து யாரும் பேசாத காலம்.
அல்தான்துயா கொலை வழக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைப்பெற்று முற்று பெற்றுவிட்ட நிலையில், நஜீப்பை இவ்வழக்கில் தொடர்புப்படுத்தும் எந்த ஒரு ஆதாரமும் சாட்சியமும் இடம்பெறவில்லை. குறிப்பிட்டு சொல்லப்போனால் நஜீப்பின் பெயர் வழக்கில் சம்பந்தப்படவில்லை என்பதுதான் உண்மை. பாலசுப்பிரமணியத்தின் முதல் சத்திய பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல், நஜீப் துன் ரசாக் அல்தான்துயாவோடு சிங்கப்பூர் வைர கண்காட்சி நிகழ்விலும், பாரிஸ் நகரில் நடைப்பெற்ற விருந்து நிகழ்விலும் ஒன்றாகவே காணப்பட்டதாகக் கூறப்படும் தகவல் ஆதாரம் ஏதுமின்றி கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பிடப்பட்ட இவ்விரு நிகழ்வுகளிலும் பாதுகாப்பு ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பது நிச்சயம். அவ்வொளிப்படக்காட்சிகள் யாருடைய கையிலாவது சிக்கியதா என்பது மற்றுமொரு கேள்விக்குறி.
நஜீப்பை அல்தான்துயாவோடு தொடர்புப்படுத்தும் முயற்சியில், அனுவாரால் துருப்புச் சீட்டாக கையாளப்பட்ட பாலசுப்பிரமணியம் ஏன் திடீர் மனமாற்றம் கொள்ள வேண்டும்? தமது முதல் சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொள்வதற்கு முதல் நாள் மாலை 5.45 மணியளவில் காவல்த்துறையினரிடமிருந்து பாலாவிற்கு கைப்பேசி அழைப்பு வந்துள்ளது. பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்திற்குச் சென்று வந்த பாலசுப்பிரமணியம் மறுநாள் சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொண்டார். முதல் சத்திய பிரமாணத்தில் கையெழுத்திடும் வேளையில் அவரிடம் காணப்பட்ட தெளிவும் அமைதியும் இரண்டாவது சத்திய பிரமாணத்தை வெளியிடும்போது முகத்தில் கலவரம் தெரிந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் என்ன நடந்தது? சுயவிருப்பத்தோடு கையெழுத்திடப்பட்ட சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொள்ளும் அளவிற்கு அப்படி அங்கு என்ன நடந்தது?
இப்போது குடும்பத்தோடு காணாமல் போய்விட்ட பாலசுப்பிரமணியம் எங்கே? காவல்த்துறை தலைவர் முசா பாலசுப்பிரமணியத்தைக் கண்டு பிடிப்பதில் எந்த வகையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்? அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டனரா, அல்லது கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா? அவர்களின் உறவினர்கள் கேட்கிறார்கள்!!
அரசாங்கம் கூறும் பதில் என்ன?
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment