சாசனம்....
>> Friday, April 18, 2008
கதவைத் தட்டினேன், சிறிது நேரம் கழித்து ஒரு சிவத்த மனிதர் கதவைத் திறந்தார்.
"வணக்கம் சார்!"..
பதிலுக்கு அவரும்,
"வணக்கம், என்ன வேண்டும்..?"
"சார், கவிதை புத்தகம் விக்கிறதா கேள்விப்பட்டேன்... அதான் வாங்க வந்தேன்.."
முகத்தில் புன்னகையுடன்
"ஓ, நண்பன்லே பாத்தீங்களா.."
நானும் தலையாட்டினேன்.
"இருங்க கொண்டு வரேன்.. உள்ள வரீங்கலா..?"
'பரவால சார், நான் இங்கையே நிக்கிறேன், நீங்க கொண்டு வாங்க.."
சற்று நேரம் கழித்து சாசனம் என் கையில் வந்தது. ஆம், அதுதான் கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் இயற்றிய கவிதை தொகுப்பு நூல். குறிப்பாக இந்நூலை நான் வாங்கியதற்குக் காரணம், அந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளும் மலேசிய இந்தியர்கள் தற்காலத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போராட்டத்தை உணர்ச்சிப்பூர்வமாக சித்தரிப்பதாக இருக்கின்றன.
சாசனத்தை கையில் பெற்றுக் கொண்டப் பிறகு கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் அவர்கள் 'மக்கள் சக்தி' எனும் இன்னொரு புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார். இரு புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன்.
"இந்த ரெண்டு புத்தகங்களையும் என் அன்பளிப்பா வெச்சிகுங்க.."
என்று 'கரை கடந்த கனவு' மற்றும் 'ஊசிப்போன உறவுகள்' எனும் இரு கவிதை நூல்களை அன்போடு கொடுத்தார். மகிழ்ச்சியில் பெற்றுக் கொண்டேன்.
வீட்டிற்குச் சென்றதும் புத்தகத்தை திறந்தேன்.. முகவுரை தென்பட்டது..
அதில் சாசனத்திற்கு கவிஞர் இப்படி இலக்கணம் கற்பிக்கிறார்...
" தூக்கு மேடைக்கு தந்திரமாக, செல்லமாக அழைத்துச் செல்லப்படுகிறது ஓரினம், மூக்கணாங்கயிறு மாட்டப்பட்ட காளையாக சமூகம், தனது சக்தியை, வல்லமையை அறியாது சாதுவானப் பசுவாகத் தலையாட்டி நிற்கிறது, "நல்ல உழைப்புப் பால் தரும் சமூகம்" எனச் சிரித்துக் கொண்டே தட்டிக் கொடுக்கிறார்கள் அரசியல் தலைவர்கள்.
செல்வ நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் சரிசமமாகத் தரப்படும்; நாட்டின் வளம் குடிமக்கள் அனைவருக்கும் நியாயமான வரமாகும் என்ற வாக்குறுதிகள் தன் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கின்றன.
மன்னராட்சி மணிமகுடம், மலையேறிவிட்ட பின்பு, மக்களாட்சி சிம்மாசனத்தில் அமர்ந்து மணிமகுடம் சூடியது. மக்களாட்சி அரசியல் மக்களை மந்தைகளாக ஓட்டி நடத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது. சிந்திப்பவர்களை, சிறந்த கருத்து உரைப்பவர்களைத் தனிமைச் சிறைகளில் வாழ குடியுரிமை தருகிறது.
இன்றைய நாட்டு அரசியல், குடிமக்களின் நியாயமான உரிமைகளுக்கு விலங்கிட்டு அவர்களது சுதந்திரச் சிந்தனையைத் தேயிலை இலையெனக் கிள்ளி சுடு சாதனங்களில் உலர வைக்கிறது.
ஏழைகள் பரம ஏழைகளாக இழிபடவும், பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாக எடுபடவும் இங்கே சட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. பணக்காரர்களின் சட்டைப் பையில் அமைதியாக உறக்கம் கொண்டுள்ளது சமூக நீதி.
பணமுதலை முதலாளிகளுக்கு கைககட்டி சேவகம் செய்ய, முன்வந்து பணிந்து நிற்கிறது அரசியல் சட்டங்கள்.
நாட்டில் அமைதி தவழ்கிறது; இணக்கம் வளர்கிறது; பசிக்கு சோறு இருக்கிறது; பொருளாதாரம் பீடுநடை போடுகிறது. இருந்தென்ன? மக்களின் சமதர்மப் போராட்டத் தலைகள் கொய்யாப்பழங்களாக கொய்யப்படுகின்றன.
போராட்டம்தான் மனித உரிமையை காக்கும். மனித மாண்பை மதிக்கும், சமதர்ம அரசு கோலோச்ச, எதிர்ப்பின் உச்சம்தான் போராட்டம். இது ஒதுக்கப்பாட்ட உலகம் அறிந்த ஒரே மொழி. சரித்திரம் சொல்லும் சன்மார்க்க மொழி.
போராட்ட சமூகத்தில்தான் மாற்றம்மறுமலர்ச்சி தழைத்தோங்கும். மனித சாசனம் மதிக்கப்பட, இனங்களின் உரிமைகள் காக்கப்பட தனி மனித உள்ளத்தில் எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருக்க வேண்டும் போராட்டம்..."
என்றும் அன்புடன்,
ஏ.எசஸ்.பிரான்சிஸ்
சாசனம்
செத்துக் கொண்டிருக்கும்
சமூக ஓலம்!
காயடிக்கப்பட்ட சமூகத்தின்
இறுதிக் காலம்!!
நசுக்கப்பட்ட நீதியின்
தூக்குக் கோலம்!!!
'சாசனம்', 'மக்கள் சக்தி' கவிதைகளோடு உறவாட நினைக்கும் வாசகர்கள், கீழ்கண்ட முகவரியில் கவிஞர் ஏ.எஸ்.பிரான்சிஸ் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
ஏ.எஸ்.பிரான்சிஸ்,
கவிஞர் & எழுத்தாளர்,
60b, Punchak Bukit Mutiara Satu,
Pearl Hill Villa
11200, Tanjung Bunga, Penang
H/P : 016-4892496 / 04-8900293
E-mail : khileefrancis@yahoo.com
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment