9/11
>> Thursday, September 11, 2008
இன்றைய தினம் அமெரிக்க சரித்திரத்தில் ஒரு கருப்பு தினம். 2,998 உயிர்களைக் குடித்த கோர நினைவுகளின் பிடியிலிருந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்பும், அமெரிக்கா அதனின்று மீள முடியவில்லை.
சதா என்னேரமும் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் எந்த ரூபத்தில் படையெடுக்கும் என்று அமெரிக்காவை குழம்பிப்போக வைத்த ஒசாமா பின் லேடன் ஒவ்வொருதடவையும் அதன் கழுகுப் பார்வையில் மிளகாய்ப் பிடியைத் தூவி விட்டு பிடிபடாமல் தப்பித்துவிடுவது அமெரிக்காவின் பயத்தை மேலும் மேலும் அதிகரிக்கவேச் செய்கிறது.
நியூ யார்க்கின் இரட்டை கோபுரம் சாய்ந்த போது உலக மக்களின் பாதுகாப்பு எனும் கவசம் சரிந்தது. அதனைத் தூக்கி நிறுத்த இன்றுவரை திக்கு முக்காட வேண்டியிருக்கிறது.
மன்னர்கள் அடித்துக் கொண்ட காலம்போய், மக்களாட்சியில் சர்வதிகாரம் தலைதூக்கி அரசியல் சண்டையும் உலகப் போராய் வெடித்து இன்று நம் தலையை உருட்டுவதற்கு 'பயங்கரவாதம்' எனும் புது அசுர சக்தி 21-ஆம் நூற்றாண்டின் 'சனியனாக' உருவெடுத்துள்ளது.
இன்றுவரையில் பல லட்சம் பொதுமக்களின் உயிரைக் குடித்துவிட்ட 'பயங்கரவாதம்' பசி தீர்ந்ததற்கான அறிகுறி தென்படுவதாக இல்லை, மாற்றாக அடுத்து எந்த உயிரின் சுவையை ருசிக்கலாம் என்று திட்டம் தீட்டுவதும், அதனை முறியடிக்க ஒவ்வொரு நாட்டின் அரசியல்கட்சிகளும் சொந்த லாபநஷ்டங்களைக் கணக்கில் கொண்டு அதனை ஆதரிப்பதும் எதிர்ப்பதுமாக நாடகம் ஆடுவதும், பொதுமக்கள் இதற்கு பலிகடாவாவதையும் இன்னும் எத்தனைக் காலங்கள்தான் பார்த்துக் கொண்டிருப்போமோ தெரியவில்லை..
இன்று செப்டம்பர் 11 தினத்தையொட்டி 'பொறியில் அகப்பட்ட தேசம்' எனும் கவிதை மென்நூலை இணைத்துள்ளேன். இணைய இணைப்பைச் சுட்டி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
'பொறியில் அகப்பட்ட தேசம்'
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment