இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க மனு - நீதிமன்றம் தள்ளுபடி!

>> Tuesday, September 9, 2008


உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியுள்ள ஐந்து இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்கக் கோரும் ஆட்கொணர் மனுவை, நேற்று ஈப்போ உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இண்ட்ராஃப் தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்கு எதிர்மறையானது என்ற நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரும் ஆட்கொணர் மனுவை வழக்கறிஞர் கர்பால் சிங் ஈப்போ உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அம்மனுவில் புலன் விசாரணை அதிகாரியை விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், தன் கட்சிக்காரர்களுக்கு நியாயமான விசாரணை நடைப்பெறவில்லை என்று குறிப்பிட்டு இவர்கள் ஐவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

ஈப்போ உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை செவிமடுக்க திரு.மனோகரனின் துணைவியார் திருமதி புஷ்பநீலா மனோகரன், திருமதி புவனேஷ்வரி கணபதிராவ், திருமதி கலைவாணி கங்காதரன் ஆகியோர் வந்திருந்தனர். இண்ட்ராஃப் தலைவர்கள் விடுதலை குறித்த மனு தள்ளுபடியானதில் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

"இண்ட்ராஃ தலைவர்கள் ஐவரை விடுவிக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் நாங்கள் ஏமாற்றமடைந்தாலும், மனம் தளரவில்லை. கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்" என்று அவர்கள் கூறினார்கள்.


இதற்கிடையில் நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைப்பெற்ற மற்றுமொரு வழக்கில், இந்து உரிமைப் பணிப்படையின் சட்ட ஆலோசகரான திரு.உதயகுமார் இணையதளத்தில் தேச நிந்தனைக்குரிய கடிதத்தை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததன் அடிப்படையில், அவரை வருகின்ற அக்டோபர் 20-ஆம் திகதியன்று அந்நீதிமன்றத்திற்குக் கொண்டு வரும்படி நீதிபது உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவினால் அனைவரும் மகிழ்ச்சி அடைவதாக வழக்கறிஞர் திரு.சுரேந்திரன் குறிப்பிட்டார். வழக்கறிஞர் உதயகுமார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் அவருக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களைத் தேடுவதற்கு தங்களுக்கு வசதியாக இருக்கும் என்பதுடன் உதயகுமாரிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்றார் அவர்.



25 நவம்பர் 2007 இண்ட்ராஃப் போராட்டத்தில் கைதான 54 போராட்டவாதிகள் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறுத்து விசாரணை கோரியிருந்ததன் அடிப்படையில், இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று முதன் முறையாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைப்பெற்றது.

நீதிமன்றத்தில் வரத் தவறியதற்காகக் கலைவாணருக்கும் அவரின் புதல்வர் திரிசூல்வாணனுக்கும் எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாததால் லட்சுமணன் த/பெ சுப்பிரமணியம் என்பவர் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை.

இந்த வழக்கில் முதல் சாட்சியாக காவல்த்துறையின் புகைப்படக்காரரான சார்ஜண்ட் மஹாடி சாட்சியம் அளித்தார். கடந்தாண்டு நவம்பர் 25-ஆம் திகதி சாலான் அம்பாங், சாலான் துன் ரசாக்கில் இண்ட்ராஃப் பேரணியில் திரண்டவர்களைப் படம் பிடித்ததாக அவர் கூறினார். காவல்த்துறை மேலதிகாரியின் உத்தரவுக்கேற்ப 81 படங்களைப் பிடித்து, பின்னர் அதனை அதிகாரியிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.

இவரைக் குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் டத்தோ எஸ்.சிவனந்தன், "நீங்கள் பிடித்த படங்களில் எல்லாரும் நிற்கிறார்கள்" என்றபோது, பலர் நின்றனர், பலர் நடந்தனர் என்றார் அவர்.

"நீங்கள் படம் பிடித்த இடம் பொது இடம்தானே. அங்கு யார் வேண்டுமானாலும் வரலாம்-போகலாம்தானே?" என்ற கேள்விக்கு அவர் "ஆமாம்" என ஒப்புக் கொண்டார்.

பின்னர் இந்த வழக்கில் காவல்த்துறை புகைப்படக்காரர் சார்ஜண்ட் ரோசுமான் சாட்சியம் அளித்தார். அவர் தமது சாட்சியத்தில் இண்ட்ராஃப் பேரணியில் பங்கேற்றவர்களையும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களையும், காவல்த்துறையினரால் கைது செய்யப்படுபவர்களையும் படம் எடுக்கும்படி தமக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் கூறினார்.

பின்னர் அவரை எதிர்த்தரப்பு வழக்கறிஞர் டத்தோ சிவனந்தன், குறுக்கு விசாரணை செய்து மடக்கினார். "பதாகைகளையும் போசுடர்களையும் ஏந்தி வந்த இண்ட்ராஃப் ஆதரவாளர்களைப் படம் பிடித்ததாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் பிடித்த படங்களில் இண்ட்ராஃப் பதாகை இருக்கிறதா?" என கேட்டபோது, "ஆமாம், காந்தி படம் உள்ளது" என்றார்.

"காந்தி திருவுருவப்படம் ஒரு போசுடர் அல்ல. அது படம். நான் கேட்பது இண்ட்ராஃப் என்ற வார்த்தை அடங்கப்பட்ட பதாகைகளை நீங்கள் படமெடுத்தீர்களா?" என்று கேட்டபோது "இல்லை" என பதிலளித்தார்.

"பேரணியில் கலந்துக் கொண்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அதனைப் படமெடுத்தீர்களா?" என்று கேட்டபோது, "ஆம்" என்று அவர் பதிலளித்தார்.

வழக்கு விசாரணை இன்றும் காலை 9.00 மணிக்கு மீண்டும் தொடங்கியிருக்கும்...

தகவல்கள் : தமிழ் நாளிதழ்கள் (நன்றி)

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP