என்ன சாமி இது?!!
>> Tuesday, September 9, 2008
டாமான்சாரா உத்தாமாவிலுள்ள எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கர் ம.இ.கா கைமாறியது எப்படி? தன்னை தமிழ்ப் பள்ளிக் காவலன் என்று கூறிக் கொள்ளும் ம.இ.கா தலைவர் ச.சாமிவேலு, எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் மூன்று ஏக்கர் நிலத்தை சூரையாடிவிட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் அறிவித்துள்ளார்.
இப்பள்ளியின் மூன்று ஏக்கர் நிலம் ம.இ.காவிற்கு ஒதுக்கப்பட்ட போது, அமைச்சர் பதவியில் இருந்த சாமிவேலு தனது பதவியை துஷ்பிரயோகம் செய்திருக்கக் கூடுமா என்பது பற்றி ஊழல் தடுப்பு நிறுவனம் முழுமையான விசாரணையைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எம்.குலசேகரன் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் மைக்கா ஓல்டிங்ஸ் பங்குதாரர்களின் முதலீட்டு பணங்கள், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக நிதி வசூல் போன்றவற்றின் மீதும் முழுமையான விசாரணையை ஊழல் தடுப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில். பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு மேம்பாட்டாளரிடமிருந்து இப்பள்ளிக்குப் பெறப்பட்ட நிலத்தை துண்டாடல் செய்து, அதில் ஒரு பகுதியை ம.இ.கா எடுத்துக் கொண்டது நியாயமா என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மருத்துவர் சேவியர் செயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலத்தை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் யாருடைய பணம்? அரசு நிதியா? பொதுமக்கள் பணமா? என்பதை சாமிவேலு விளக்க வேண்டும் என்று சேவியர் வலியுறுத்தினார். இவ்விவகாரம் குறித்து விரிவான அலசல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தாம் தமது வழக்கறிஞர்களை பணித்திருப்பதாக சேவியர் தெரிவித்தார். பொதுமக்களுக்காக நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டதை நம்பிக்கை மோசடி என்று வர்ணிக்கும் அளவிலான இந்த விவகாரத்தைப் போல் மற்ற மாநிலங்களிலும் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் கொள்வதாக அவர் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக சாமிவேலு கூறுவதாவது :-
"பாரமவுண்டு கார்டன் அமைத்துக் கொடுத்த 4 அல்லது 5 வகுப்பறைகளுடன்தான் எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளிகூடத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று எண்ணி, நானும் ஈசோக் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் டத்தோ க.சிவலிங்கமும் பாரமவுண்டு நிறுவனத்தார் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து ஒரு கூட்டம் நடத்தினோம்.
அதனைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநில முன்னால் மந்திரி புசார் டத்தோசிறீ அபு அசான் ஒமாரை எப்பிங்காம் தமிழ்ப்பள்ளிக்கு வரவழைத்தோம். பள்ளியின் நிலைமையை நேரில் கண்டறிந்த அவர், அதன் வசதியை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 3 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக கூறினார். மூன்று ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதும் யார் அப்பள்ளியை மறுசீரமைத்தது? பாரமவுண்டு நிறுவத்தினர் 5 லட்சம் வெள்ளி வழங்கினார்கள், நான் 9 லட்சம் வெள்ளி கொண்டு வந்தேன். அப்பள்ளியின் கட்டட வரை படத்தை நானே வரைந்து, மறுசீரமைத்தும் கொடுத்தேன்.
ம.இ.காவின் தலைமைகயக் கட்டடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டதுதான் அப்பள்ளிக்கு அருகிலுள்ள 3 ஏக்கர் நிலம். அந்த நிலத்திற்கு பதிவு பத்திரம் எடுக்கும் பட்சத்தில் 4 டிரஸ்டிகளின் பெயர்களைக் கொண்டு மனு செய்தோம். அந்தச் சொத்துக்கு யார் உரிமையாளர் என்பதை மலாய் மொழியில் விவரிக்கும் போது 'டத்தோசிறீ டாக்டர் ச.சாமிவேலுவின் சார்பில் ம.இ.காவின் சொத்துடைமைப் பிரிவே அந்நிலத்திற்கு உரிமையாளர்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நில அலுவலகம் செய்த தவறாகும். அந்த நிலத்திற்கு டிரஸ்டியாக நான், டத்தோ ஜி.பழநிவேல், டத்தோ சுப்பிரமணியம் மற்றும் டான்சிறீ மகாலிங்கம் ஆகியோர் இருக்கிறோம். அந்த நில அதிகாரி செய்த தவறுக்கு நானா குற்றவாளி? இவ்விளக்கத்தை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்ல முடியும்" என்று சாமிவேலு கூறினார்.
தன்மீது குர்றஞ்சாட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறிய சாமிவேலுவை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக சேவியர் கூறியுள்ளார்.
பூதாகரமாக வெடித்துவிட்ட இவ்விவகாரம், மற்ற அரசியல் சண்டைகளைப்போல் காலத்தால் மறக்கடிக்கப்பட்டு போய்விடாதபடி, இறுதிவரைப் போராடி எப்பிங்காம் தமிழ்ப் பள்ளிக்கும், இதேப் போன்று நிலப் பிரச்சனைகளில் சிக்குண்டு கிடக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கு உரிய நீதி கிடைத்திட அனைவரும் ஆவண செய்ய வேண்டும்!
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment